இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மாபெரும் எழுச்சியில் கிளர்ந்தெழுந்தமை, கொழும்பில் உள்ள ஆளும் வர்க்கத்தினரை மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரகலய (போராட்டம்) என்று சிங்களத்தில் பரவலாக அறியப்படும் இந்த எழுச்சி, உலகளாவிய நெருக்கடியால் ஏற்பட்ட தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்த்து, ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒரு தன்னிச்சையான இயக்கமாக வெடித்தது.
இந்தப் போராட்டம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய ஒரு நாடு தழுவிய எழுச்சியாக விரைவாக உருமாறியது. நான்கு மாதங்கள் நீடித்த இந்த எழுச்சி, இறுதியில், ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கம் கவிழ்ந்து, அவர் 2022 ஜூலை 9 அன்று நாட்டை விட்டு வெளியேறி, நான்கு நாட்களுக்குப் பின்னர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
இலங்கையின் வர்க்கப் போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த இந்த எழுச்சி, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான புரட்சிகர ஆற்றலையும், புரட்சிகரத் தலைமைத்துவத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.
நான்கு ஆண்டுகள் கடந்தும், போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு பிரச்சினை கூட தீர்க்கப்படவில்லை. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் குற்றவியல் போரினால் உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் தீவிரமடைந்து, எரிசக்தி விநியோகம் உட்பட விநியோகங்கள் தடைபட்டு, இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டையும் பாதித்துள்ளது.
போரினால் மேலும் ஆழப்படுத்தப்பட்ட நெருக்கடியின் சுமை திணிக்கப்படுவதால், தங்கள் நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் வர்க்கம் போராட்டங்களில் இறங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் எரிசக்தி விலை உயர்வுகளையும் திணிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும், 2022 வெகுஜன எழுச்சியை போன்ற ஒன்றைப் பற்றி மீண்டும் பீதியடைந்துள்ளன.
இலங்கை தொழிலாளர் வர்க்கம், வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தயாராவதற்கு 2022 வெகுஜனப் போராட்டங்களின் இன்றியமையாத படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
2022 எழுச்சியின் வெடிப்பு
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரினாலும் பூகோள பொருளாதார மந்தநிலையின் தாக்கம் மேலும் தீவிரமடைந்தது, 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இராஜபக்ஷ அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதில் தற்காலிகத் தவணைச் தவறலைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதோடு, அது பரவலான பற்றாக்குறைகள் மற்றும் நீண்ட நேர மின்வெட்டுகளுக்கு மத்தியில், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி, நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்தியமை மாபெரும் வெகுஜன எழுச்சிக்கு வித்திட்டது.
இந்த மாபெரும் வெகுஜனப் போராட்டத்திற்கு முன்னோட்டமாக, 2021 இல் விவசாயிகளின் தொடர்ச்சியான கடன் சுமையையும் வறுமையையும் மேலும் அதிகரிகும் வகையில் இரசாயன உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடைக்கு எதிராக விவசாயிகள் மத்தியில் பரவலான எதிர்ப்பு எழுந்தது. சுமார் 250,000 ஆசிரியர்கள், 2021 ஜூலை முதல் ஊதிய உயர்வு கோரி 100 நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
நாடு முழுவதும் மாபெரும் வெகுஜன கிளர்ச்சி பரவிய நிலையில், 2022 ஏப்ரலில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலை ஆக்கிரமித்து, அதனைப் போராட்டத்தின் மையமாக மாற்றினர். தொழிலாளர்களின் பெருகிவரும் கோபத்தை எதிர்கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்ட போதிலும், இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும் என்று அஞ்சி, அவற்றை ஒரு நாள் போராட்டங்களாகவே மட்டுப்படுத்தின.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்களாலும் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளாலும் தொடர்ந்து தூண்டிவிடப்பட்டு வரும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதப் பிளவுகளைக் கடந்து, தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தங்களில் இணைந்தமை, இது ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபனத்தையும் உலுக்கியது.
இந்த மாபெரும் அணிதிரள்வுகள் இராஜபக்ஷ நிர்வாகத்தின் மீதான கோபத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த முதலாளித்துவ பாராளுமன்றக் கட்டமைப்பின் மீதான ஆழ்ந்த பகைமையையும் வெளிப்படுத்தின. இது, அனைத்து நாடாளுமன்ற அரசியல் கட்சிகளையும் கண்டிக்கும் “225 ஒழிக” என்ற பிரபலமான கோஷத்திலும், அடக்குமுறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைத்த 1948 ஆம் ஆண்டு முதல் நிலவும் ஆட்சியைக் குறிக்கும் ஒரு நயமான வாக்கியமான “75 ஆண்டுகால ஆட்சியின் சாபம்” என்பதிலும் வெளிப்பட்டது.
இந்த இரண்டு பொது வேலைநிறுத்தங்களும் வெகுஜன எழுச்சியின் புரட்சிகரத் தன்மையைக் காட்டின. தொழிலாளர் வர்க்க அதிகாரத்திற்கான புறநிலை நிலைமைகள் இருந்ததோடு, முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விட தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தையும் காட்டின.
எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியினதும் வகிபாகம்.
தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தில் இரண்டு முன்நோக்குகள் செயல்பட்டன. அவற்றில் ஒன்று, இந்த இயக்கத்தை முதலாளித்துவ பாராளுமன்றக் கட்டமைப்பிற்குள் அடக்குவதற்காகத் திட்டமிட்டுச் செயல்பட்ட எதிர்க்கட்சிகளான முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புகளால் திணிக்கப்பட்ட முன்நோக்கு.
மற்றையது, சோசலிச சமத்துவக் கட்சியால் (சோ.ச.க.) முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டமாகும். அது, சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்காக, கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்தது.
முதல் முன்நோக்கு, போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) உதவியுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட 'அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு' அழைப்பு விடுத்தது.
ஜே.வி.பி./தே.ம.ச. தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக, ஏப்ரல் 7 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், பெருகிவரும் மக்கள் எதிர்ப்பினால் உருவாகிவரும் “அராஜகம்” குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) மற்றும் எதிர்க்கட்சிகளையும் எச்சரித்தார். கோட்டாபய இராஜபக்ஷ பதவி விலகினால், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தும் பொருட்டு ஒரு “இடைக்கால அரசாங்கத்தில்” பங்கேற்கத் தனது கட்சி தயாராக இருப்பதாக அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
வெகுஜன இயக்கத்தைத் தடம் புரளச் செய்வதில் முன்னிலை சோசலிசக் கட்சி வஞ்சத்தனமான பங்கை ஆற்றியது. இந்த போலி-இடது குழுவானது, 2011 இல் ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த ஒரு பிரிவால் உருவாக்கப்பட்ட போதிலும், அது, முரட்டுத் துணிச்சல் வாய்ச்சவடால்களால் மூடி மறைக்கப்பட்ட தனது இனவாத மற்றும் முதலாளித்துவ சார்பு அரசியலைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. எதிர்க்கட்சியான ஐ.ம.ச. மற்றும் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அது, பாராளுமன்றக் கட்சிகளின் இடைக்கால நிர்வாகத்தில் உள்ள நன்மைகள் குறித்து கலந்துரையாடியது.
முன்னிலை சோசலிசக் கட்சியானது காலவரையற்ற பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க மறுத்து, தொழிலாளர்களின் நடவடிக்கைகளை ஒரு நாள் போராட்டங்களுக்குள் கட்டுப்படுத்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு உதவியதன் மூலம், போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாகத் தலையிடுவதை தடுத்தது.
2022 ஜூலை 5 அன்று போராட்டத் தளத்தில் 60 பேர் கொண்ட குழுவால் வெளியிடப்பட்ட “காலிமுகத் திடல் அறிக்கை” பிரதானமாக முன்னிலை சோசலிசக் கட்சியால் தயாரிக்கப்பட்டது. அது, “மக்களின் போராட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு இணங்க” செயல்படும் எதிர் பாராளுமன்றக் கட்சிகளின் ஒரு இடைக்கால ஆட்சியை அமைக்க முன்மொழிந்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு, மக்கள் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, முன்னிலை சோசலிசக் கட்சியானது கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி, இந்த அறிக்கையை எதிர்க்கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் சமர்ப்பித்தது.
போராட்டத் தளத்தில் சில மத்தியதர வர்க்கக் குழுக்களால் பிறப்பிக்கப்பட்ட “அரசியல் வேண்டாம்” என்ற பிற்போக்கு கட்டளைக்கும் இந்தக் கட்சி ஆதரவளித்தது. இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், 2023 இல் வெளியிடப்பட்ட மாளிகைகளை உலுக்கிய போராட்டம் என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் புத்தகம், அரசியலுக்கான தடை “அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்த பரந்த மக்கள் பிரிவினர் போராட்டத்தில் இணைவதற்கான தடைகளை நீக்கியது” என்று கூறியது.
இந்தக் கூற்று பொய்யானது. முதலாளித்துவ ஆட்சியால் திணிக்கப்பட்ட கொடூரமான நிலைமைகளை எதிர்ப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். முன்னிலை சோசலிசக் கட்சியும் ஏனைய தீவிரவாதக் குழுக்களும், போராட்டத்தில் ஒரு சோசலிச முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதை கடுமையாக எதிர்த்தன.
கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சியினதும் அவமானகரமான வீழ்ச்சியின் பின்னர், எதிர்க்கட்சிகள் ஒரு இடைக்கால ஆட்சிக்கான தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தின. எதிர்க்கட்சிகள் மற்றும் போலி இடது குழுக்களின் இந்த வஞ்சத்தனமான சூழ்ச்சிகளால், அமெரிக்க மற்றும் சர்வதேச நாணய நிதிய ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மதிப்பிழந்த பாராளுமன்றம் ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்துவதற்கு வழிவகுத்தன.
வெகுஜன எழுச்சியில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் தலையீடு
இந்த சூழ்ச்சிகள் அனைத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆரம்பத்திலிருந்தே வெகுஜன எழுச்சிக்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது.
வெகுஜன எழுச்சிக்கு முந்தைய நாள், வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பு ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுக்கும் என்பதை எதிர்பார்த்து, 30 மார்ச் 2022 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி, “இலங்கை ஆட்சியின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடி! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு!” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, “சோசலிசக் கொள்கைகளுடன்” ஆயுதபாணியாகி, “இந்த சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்” என்றும், “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தது.
காலிமுகத் திடல் ஆக்கிரமிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 7 ஏப்ரல் 2022 அன்று, “இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்த்திடுவோம்! ….” என்று அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டது. “கோட்டா வெளியேற வேண்டும்!” என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அதே வேளை, சோசலிச சமத்துவக் கட்சி, “ஆனால் அவருக்குப் பதிலாக யார்?” என்ற கேள்வியை நேரடியாக எழுப்பியது. சோசலிச சமத்துவக் கட்சி, புரட்சிகர சோசலிச மாற்றீடாக தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு தெளிவான அரசியல் வேலைத் திட்டத்தை முன்வைத்தது.
காலிமுகத் திடல் போராட்டத் தளத்தில் சில குழுக்களால் முன்னிலை சோசலிசக் கட்சியின் உதவியுடன் பிறப்பிக்கப்பட்ட ஜனநாயக விரோத “அரசியல் வேண்டாம்” என்ற உத்தரவை சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் எதிர்த்தன. அவர்களின் மாற்று சோசலிச வேலைத்திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தக் குழுக்களில் சில, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களை அந்த இடத்தில் அரசியல் ரீதியாகத் தலையிடவிடாமல் உடல்ரீதியாகத் தடுத்தன.
'இடைக்கால அரசாங்கம்' அமைக்க வேண்டும் என்ற ஜே.வி.பி./தே.ம.ச., ஐ.ம.ச. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக நிராகரித்தது. அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக 'அனைத்துக் கட்சி உடன்படிக்கையை' எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் சேருமாறு ஐ.ம.ச., 5 ஜூலை 2022 அன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு கடிதம் எழுதியது. அந்த அழைப்பை நிராகரித்த, சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரான இந்தக் கட்டுரையாளர், 'ஐ.ம.ச. முன்மொழிந்த ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ அல்லது ஜே.வி.பி. முன்மொழிந்த ‘ஐக்கிய அரசாங்கம்’ மூலம் இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்திற்கு ஒரு புதிய முகத்தைக் கொடுப்பதால்' நெருக்கடி தீர்க்கப்படாது என்று குறிப்பிட்டார்.
2022 ஜூலை 20 அன்று ஒரு பிரதான அறிக்கையை வெளியிட்ட சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டுக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பிரச்சாரத்தைத் தொடங்கியது.
அந்த அறிக்கை விளக்கியதாவது: “ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதன் மூலம், அரசியல் ஸ்தாபனம் மற்றும் முதலாளித்துவ அரசின் ஜனநாயக விரோத சதிகளிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கம் தனது சொந்த அரசியல் அதிகார மையத்தை நிறுவ வேண்டும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி புரிந்துகொண்டுள்ளது…”
இந்த மாநாடு, சுரண்டப்படும் மக்களுக்கு உண்மையாக குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீடாகக் கருதப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பல்பூரணமான வேலைத்திட்டத்தை முன்வைத்தது: அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல்; சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்தல்; கோடீஸ்வரர்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்து, வங்கிகளையும் பெரிய நிறுவனங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல்; விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து, உர மானியங்களை மீண்டும் வழங்குதல்; மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்தல். இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு, சோசலிச வழிகளில் சமூகத்தை மறுசீரமைக்க உறுதிபூண்ட ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் அவசியமாகும்.
1917 ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, நடவடிக்கைக் குழுக்கள் வளர்ந்து போராட்டங்களில் தங்களை நிரூபிக்கும்போது, அவை சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் அதிகாரத்தின் அங்கங்களாக மாறும்—இதுவே சமகால சோவியத்துகளுக்கு இணையானது—என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.
இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் எதிர்க்கட்சிகளான முதலாளித்துவக் கட்சிகள் அல்ல, மாறாக சர்வதேச அளவில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளே என்று கட்சி வலியுறுத்தியதுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேசக் கூட்டணி மூலம் அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்குமாறும் அழைப்பு விடுத்தது.
அந்த அறிக்கை தொடர்ந்தது:
“இலங்கையிலும் உலக அளவிலும் முதலாளித்துவத்தின் நெருக்கடி, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று மிகவும் ஆழமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களின் மாபெரும் மக்கள் எழுச்சி, முதலாளித்துவ ஆட்சியை அதன் ஆணிவேர் வரை உலுக்கியுள்ளது. ஆனால், லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை விளக்கியது போல், முதலாளித்துவத்தின் பலம் என்பது அது தனது பலவீனத்தைப் புரிந்துகொள்வதே ஆகும். அரசியல் அதிகாரம் அதன் கைகளில் விடப்பட்டால், அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் திணிப்பதன் மூலமும், எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதன் மூலமும் தனது நலன்களை ஈவிரக்கமின்றிப் பாதுகாக்கும்.
“தொழிலாளர் வர்க்கத்தின் பலவீனம் என்பது அது தனது பலத்தைப் புரிந்துகொள்ளாததே என்றும் ட்ரொட்ஸ்கி விளக்கினார். மாபெரும் வெகுஜனப் போராட்டங்கள், பெரும் போர்க்குணத்தையும், உறுதிப்பாடு மற்றும் தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், உழைக்கும் மக்கள் அரசியல் ஸ்தாபனத்துக்கு கட்டுண்டு கிடந்து, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தால், அதன் விளைவு தவிர்க்க முடியாமல் ஒரு பேரழிவாகவே இருக்கும்.”
முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்து பிரிந்து, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கை ஏற்கத் தொழிலாள வர்க்கம் தவறியமை பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதனால், வெகுஜன எழுச்சியில் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் தலையீட்டின் முக்கியத்துவம் மறுக்கப்படவில்லை, மாறாக இந்தப் போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
விக்கிரமசிங்க, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, காலிமுகத் திடல் முகாமை வன்முறையாகக் கலைப்பதற்காக 1,000 ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை அனுப்பி, முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார். பிரதான துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்ய அத்தியாவசிய சேவைகள் சட்டத்தையும் அவர் பயன்படுத்தியதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார்.
இன்று, அரசியல் ஸ்தாபனத்தின் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பைச் சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ், உழைக்கும் மக்கள் தங்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.
ஸ்டாலினிச மற்றும் சமூக-ஜனநாயக அதிகாரத்துவங்களாலும், பாப்லோவாதிகள் போன்ற பல்வேறு திருத்தல்வாதப் போக்குகளாலும் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் துரோகங்களின் மூலம், தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச மற்றும் மார்க்சிய கலாச்சாரமும் உணர்வும் அழிக்கப்பட்டதன் துயரமான விளைவாகவே இந்த முடிவு பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச மற்றும் மார்க்சிய கலாச்சாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்துலகக் குழு எடுத்துள்ள முயற்சியின் மகத்தான முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2022 எழுச்சி முதல் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வரை, உழைக்கும் மக்கள் கடந்து வந்த அனைத்து அனுபவங்களும், ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டிய, ட்ரொட்ஸ்கியால் விரிவாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துக்களின் செல்லுபடித் தன்மையை நிரூபித்துள்ளன. ஏகாதிபத்திய மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில், இலங்கை போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள எந்தவொரு முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவக் கட்சியாலும் ஒரு முற்போக்கான பங்கை வகிக்க முடியாது என்று அது கூறியது. அவை ஏகாதிபத்தியத்துடன் உள்ளார்ந்த வகையில் பிணைக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன.
தனது கடந்தகால ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சுகளைக் கைவிட்டு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் கொழும்பை நெருக்கமாக ஒருங்கிணைப்பதன் மூலம், ஜே.வி.பி.யானது முந்தைய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அதே வெளியுறவுக் கொள்கையைத் தொடர்வதுடன், ஜேவிபி/என்பிபி அரசாங்கம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்க்காமலும் கண்டிக்காமலும் அதில் உடந்தையாக இருந்து வருகின்றது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் மூலம், ஏகாதிபத்திய சக்திகள் உலகை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை நோக்கி இழுத்துச் செல்கின்றன. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலாக, போரின் பெரும் பொருளாதாரச் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகிறது. சர்வதேச அளவில் போலவே, இந்த நிகழ்வுகளும் இலங்கையில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சிக்கு வழிவகுக்கின்றன.
வரவிருக்கும் மாபெரும் வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராகும் தொழிலாளர்களும் இளைஞர்களும், 2022 இன் தீர்க்கமான படிப்பினைகளை இப்போது நனவுப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்கள்
முதலாவதாக, முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினராலோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளாலோ உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வை வழங்க முடியாது.
இரண்டாவதாக, உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புகளிடமிருந்து சுயாதீனமாக அணிதிரண்டு, வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை குழுக்களின் அடிப்படையில், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு தொழிலாளர்களின் அரசியல் அதிகார மையமாக கட்டியெழுப்பப்பட்டு கிராமப்புற மக்களையும் ஒன்றுதிரட்டிக்கொண்டு, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராட வேண்டும்.
மூன்றாவதாக, சிக்கன நடவடிக்கை, சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் நடத்த முடியாது. மாறாக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதன் மூலம், உலக சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க உழைக்கும் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் அவசியமாகும்.
நான்காவதாக, சோசலிச நனவு வெகுஜனப் போராட்டங்களிலிருந்து தன்னிச்சையாக வெளிப்படுவதில்லை என்பதை எழுச்சியின் அனுபவங்கள் உறுதிப்படுத்தின. சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்று மற்றும் மூலோபாயப் படிப்பினைகளைக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதே தீர்க்கமான விஷயமாகும்.
புரட்சிகரப் போராட்டத்திற்கான புறநிலை நிலைமைகள் உலகம் முழுவதும் வேகமாக முதிர்ச்சியடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியப் போர், முதலாளித்துவச் சரிவு மற்றும் அதிகரித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை சர்வதேச அளவில் போராட்டத்திற்குத் தள்ளுகின்றன.
இறுதியாக, தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிய-ட்ராட்ஸ்கிசத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்பதே 2022 எழுச்சியின் மிக முக்கியமான படிப்பினையாகும்.
