இலங்கை: காலிமுகத் திடலில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்திய இவர்கள் யார்?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 28 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தின் போது, காலிமுகத் திடலில் போராட்டத் தளத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்கள் மத்தியில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வெளியிட்ட அறிக்கையை விநியோகித்துக் கொண்டிருந்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு அங்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! என்பதே சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையின் தலைப்பு ஆகும்.

அது முதலாளித்துவ இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் அதே போல் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளதும் தொழிலாளர் விரோத வேலைத் திட்டத்தை விளக்கியதுடன், கொடூரமான முதலாளித்துவ தாக்குதல்களை தோற்கடிக்கக்கூடிய சோசலிச வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைத்தது. இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளில் அதன் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் போராட்டத் தளத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி கூடாரங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு குண்டர்கள் அங்கே பாய்ந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி, உடனடியாக அதை நிறுத்துமாறு கோரினர். பின்னர் அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்களைப் பறித்து, “அடிவாங்காமல்” வெளியேறுமாறு அச்சுறுத்தினர்.

குண்டர் தாக்குதலை நடத்திய இவர்கள் யார்? (Photo: WSWS media)

அவர்கள் யார் என்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கேட்டபோது, குண்டர்கள் தங்களை அடையாளப்படுத்த மறுத்து, காலிமுகத்திடல் பிரச்சாரத்தின் அமைப்பாளர்கள் என்று கூறிக்கொண்டனர்.

துண்டுப் பிரசுரத்தில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அதே போல் பல நாட்களாக காலி முகத்திடலிலும் மற்றும் நாடு முழுவதிலும் போராடி வருவோர் தங்கள் போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான இன்றியமையாத வேலைத் திட்டமே உள்ளது என்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினர். கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்த்து உழைக்கும் மக்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்த குண்டர்கள், “நாங்கள் கோட்டாபயவை விரட்டுவதற்கே செயற்படுகிறோம். அதன் பிறகு எங்களால் யாரையாவது போட்டுக்கொள்ள முடியும்” என்று அவர்கள் கூறினர். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தம்மைச் சுற்றியிருந்தவர்களைத் தூண்டிவிட முயற்சித்த குண்டர்கள், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை கோட்டாபய இராஜபக்ஷவிடமிருந்து தலா 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வந்த 'ஐந்தாயிரம் துண்டுகள்' என்று கூறினர்.

சோசலிச சமத்துவக் கட்சி அரசியலுக்கும் இராஜபக்ஷவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி, துண்டுப் பிரசுரத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகளை சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் விவரித்தனர். அதற்கு பதிலளித்த குண்டர்கள், 'மேலும் பேசினால், பிளாஸ்டிக் சத்திர சிகிச்ச செய்யுமளவுக்கு எங்களுக்கு வழியை உருவாக்க முடியும்' என்று சரீர அச்சுறுத்தல் விடுத்தனர்.

துண்டுப் பிரசுரத்தில் 'சோசலிச சமத்துவக் கட்சி' என்று குறிப்பிடப்பட்டிருப்பதே அவர்களின் முக்கிய பிரச்சனை என்று கூறிய அவர்கள் இது “கட்சி சார்பற்ற” பிரச்சாரக் களம் என்றும் கூறிக்கொண்டனர். அன்றைய தினமே, போராட்டத் களத்தின் மேடையில், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர்கள் பகிரங்கமாக உரையாற்றியிருந்ததை சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், அவர்கள் கட்சி சார்பாக உரையாற்றமாட்டார்கள் என்று குண்டர்கள் கூறினார்.

தங்களது கட்சி சார்பாக பேசாதது எவ்வளவு மோசடி என்று கேள்வி எழுப்பிய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், 'எங்ளுக்கு அத்தகைய மோசடியை செய்யவேண்டிய தேவை இல்லை' என்று கூறினர். முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அவற்றுக்கு வக்காலத்து வாங்கும் போலி-இடதுகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இன்றியமையாத சோசலிச அரசியல் வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சியே தெளிவாக முன்வைக்கிறது என்றும், அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது, நாங்கள் அதை ஒரு பொதுவான தளத்தில் இருந்து செய்கிறோம் என்றும் கூறிய போது, குண்டர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

குண்டர்களில் ஒருவர் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினரின் உடலைக் கைகளால் சுற்றிக் கொண்டு, 'நாங்கள் உங்களை நாசகாரர்களாகக் கருதி பொலிசிடம் ஒப்படைப்போம்.' எனக் கூறியவாறு அவரை சில அடிகள் இழுத்துச் செல்ல முயன்றார். எனினும் சூழ இருந்தவர்களிடம் அதற்கு ஆதரவு கிடைக்காததால் அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது.

“புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டிக்கு இடையில்” துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை நிறுத்துவதாக அச்சுறுத்திய குண்டர்கள், அவர்களுக்கு உதவியாக பொலிஸார் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

கூட்டத்தில் இருந்த சிலர், “அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் உள்ளது” என்றும், இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என்றும் குண்டர்களை நோக்கி சத்தம் போட்டனர்.

அதற்கு பிரதிபலித்த குண்டர்கள், அருகில் இருந்தவர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக எடுத்து, சம்பவத்தின் வீடியோ மற்றும் ஒளிப் படங்களை அழித்துள்ளனர்.

தொடர்ந்து உடல்ரீதியான அச்சுறுத்தல்களை விடுத்த குண்டர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் துண்டுப் பிரசுரங்களையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

யார் இந்த குண்டர்கள்? அவர்களை பராமரிப்பவர்கள் யார்? அவர்களின் பெயர்கள் மற்றும் பின்னணி என்ன? அவர்களை அனுப்பியது யார்?

Loading