இலங்கைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை ஆதரிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போர் குறித்து பெரும்பாலும் எதுவும் கூறவில்லை. எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் வல்லரசுகளுக்கும் அவர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை மூடிமறைப்பதற்கான ஒரு மௌனமே ஆகும் என்பதை அவர்கள் தெரிவித்துள்ள ஒரு சில கருத்துக்கள் அம்பலப்படுத்துகின்றன.

தீவின் தமிழர்கள் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஒரு கொடூரமான இனவாதப் போருக்கு உள்ளாக்கப்பட்டனர். 2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இட்டுச் சென்ற இறுதி மாதங்களில் பத்தாயிரக் கணக்கானோர் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க தூதர் ஜூலி சங் (நடுவில்), தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நிற்கிறார்: (இடமிருந்து) கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், சாணக்கியன் ராசமாணிக்கம், துரைராசா ரவிகரன், சிவஞானம் ஸ்ரீதரன், பி. சத்தியலிங்கம், ஞானமுத்து ஸ்ரீநேஷன், கே.எஸ். குகதாசன் [Photo: X/Julie Chung]

தீவு முழுவதும், அதேபோல் சர்வதேச ரீதியிலும் உள்ளவர்களைப் போலவே, பல தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் சந்தேகத்துக்கிடமின்றி, அமெரிக்க-இஸ்ரேலிய இடைவிடாத குண்டுவீச்சுகளால் பாதிக்கப்பட்ட ஈரானியப் பொதுமக்களின் மீதே அனுதாபம் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை, உண்மையில், ஈரானில் நடைபெறும் படுகொலையைக் கண்டிக்கத் தவறியதை நியாயப்படுத்தவும், அதற்கு மௌனமாக ஆதரவு அளிக்கவும், தமிழர்கள் மீதான படுகொலையை ஒரு சாக்குப்போக்காக அது வஞ்சத்தனமாகப் பயன்படுத்துகின்றது.

மார்ச் 6 அன்று, நடைபெற்ற பாராளுமன்றக் கலந்துரையாடலின் போது, ​​ஈரான் போர் குறித்து முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மென்மையான விமர்சனங்களுக்கு, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இவ்வாறு பதிலளித்தார்: “‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் 22 நாடுகளின் உதவியுடன் இந்த நாட்டில் போர் தொடுக்கப்பட்டபோதும், வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், [தமிழ்ப் பகுதிகளில்] பல்குழல் குண்டுகள் வீசப்பட்டபோதும், இவ்வுலகில் எங்களுக்காக யாரும் பேசவில்லை; எங்களுக்காக யாரும் குரல் எழுப்பவில்லை.”

பின்னர் அவர், “தமிழர்களுக்கு எதிரான அந்தப் போர் ஒரு ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்றால், உலக ஒழுங்கை நிர்ணயிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் தானே முன்னணியில் இருப்பதாக இப்போது அடையாளப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா தொடுத்த [ஈரானுக்கு எதிரான] போரும் நியாயமானதுதானே! அந்தப் போரை ஏன் தவறாகப் பார்க்கிறீர்கள்?..” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கூற்றில் உள்ள வஞ்சகத்திற்கு முடிவே இல்லை. கொழும்பு அரசாங்கத்தின் தமிழர்-விரோத போருக்கு ஈரானிய ஆட்சி அளித்த ஆதரவை, ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கான தனது மௌனமான ஆதரவை நியாயப்படுத்தவும் ஸ்ரீதரன் பயன்படுத்திக்கொள்கிறார்.

பிரதானமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் இஸ்ரேலும் கொழும்பு அரசாங்கத்தின் போருக்கு ஆதரவளித்ததை மூடி மறைப்பதற்காக, அவர் அந்த 22 நாடுகளின் பெயர்களில் எதனையும் வேண்டுமென்றே குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொண்டார். குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கிய உளவுத் தகவல்களை வழங்கி, இலங்கை இராணுவத்திற்கு கணிசமாக உதவிய அதேநேரம், மற்றவர்கள் அத்தியாவசிய ஆயுதங்களை வழங்கியதுடன், புலிகளை ஒரு 'பயங்கரவாத' அமைப்பாகத் தடை செய்தமை உட்பட அரசியல் ஆதரவையும் வழங்கினர்.

2006 இல், விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த அப்போதைய அமெரிக்கத் தூதவர் ஜெஃப்ரி லன்ஸ்டட், “பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளைத் தடுத்தல் உட்பட எங்களின் இராணுவப் பயிற்சி மற்றும் உதவித் திட்டங்களின் மூலம், இலங்கை அரசாங்கம் தனது மக்களைப் பாதுகாக்கவும் அதன் நலன்களைக் காக்கவும் தேவையான திறனை வளர்த்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்” என்று அறிவித்தார்.

தமிழரசுக் கட்சி, இலங்கையில் போர் முடிவடைந்த காலத்திலும் அதற்குப் பின்னரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான பெரும் வல்லரசுகளான “சர்வதேச சமூகத்திடம்” மீண்டும் மீண்டும் ஆதரவு கோரியது. புலிகளின் தோல்விக்குப் பின்னர், தமிழ் உழைக்கும் மக்களின் துன்பத்தைத் தணிக்கும் பெயரில், தமிழ் உயரடுக்கினருக்குச் சலுகைகளை வழங்குமாறு கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அது மேலைத்தேய வல்லரசுகளிடம் தொடர்ந்து கெஞ்சியது. அமெரிக்க ஏகாதிபத்தியம், கொழும்பை சீனாவிலிருந்து விலகி இருக்க நெருக்குவதற்காக, இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டபோது, தமிழரசுக் கட்சி அந்தப் போலிப் பிரச்சாரத்துடன் தன்னை இணைத்துக்கொண்டது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் நம்பலாம் என்ற அபாயகரமான மாயையை தமிழரசுக் கட்சி இன்னும் ஊக்குவிப்பதால் தான், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனமான போரைக் கண்டிக்க அது மறுக்கிறது.

போரின் போது, “இவ்வுலகில் எங்களுக்காக யாரும் பேசவில்லை” என்ற கூற்று, ஏகாதிபத்திய அரசாங்கங்கள் கொழும்புக்கு ஆதரவளித்த போதிலும், இலங்கை இராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்த்தனர் என்ற உண்மையுடன் முரண்படுகிறது.

ஈரானுக்கு எதிரான போருக்கு தமிழரசுக் கட்சியின் உள்ளார்ந்த ஆதரவானது, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்து கிளிநொச்சியில் உள்ள பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் மார்ச் 10 அன்று நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டது. அதன் தலைவர் சுப்பிரமணியம் சுரேன், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு ஒரு பணிவான கடிதம் எழுதி, 'உலக அமைதியைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்கா தலைமையிலான இந்த முயற்சிக்கு நாங்கள் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்' என்று அறிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கட்டவிழ்த்துவிடும் அழிவை “உலக அமைதியைப் பேணுதல்” என்று வர்ணிப்பது ஒரு கொடூரமான செயலாகும். ஒரு மாதத்திற்கும் சற்று முன்னர், 160 பாடசாலை பிள்ளைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உட்பட முக்கிய உட்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இப்போது ட்ரம்ப் நிர்வாகம், ஈரானின் அனைத்து மின் நிலையங்களையும் அழிப்பதன் மூலம் அவர்களை “கற்காலத்திற்குத் திருப்பி அனுப்ப” தயாராகி வருகிறது. காசாவில் இஸ்ரேல் தனது இனப்படுகொலைப் போரில் ஏற்கனவே செய்ததை, அமெரிக்கா இப்போது 9 கோடி மக்கள் கொண்ட ஒரு முழு நாட்டிற்கு எதிராகத் திட்டமிடுகிறது. மற்றும், காசா இனப்படுகொலையை ஆதரித்ததைப் போலவே, ஈரான் மீதான ஆக்கிரமிப்புப் போரையும் தமிழரசுக் கட்சி ஆதரிக்கிறது.

அமெரிக்கத் தூதுவருக்கு அனுப்பப்பட்ட கடிதம், தமிழரசுக் கட்சி தலைமையை மிகவும் அம்பலமாக்கியதாக அமைந்தது. தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பச்சிளைப்பள்ளித் தீர்மானம் ' தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது' என்று மறுத்ததோடு, அதன் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இந்த சூழ்ச்சியால், கட்சியின் உண்மையான வழிகாட்டும் 'கொள்கையாக' விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான அதன் கண்மூடித்தனமான விசுவாசத்தை மூடி மறைக்க முடியாது. இந்த விசுவாசம், ஈரானின் வன்முறையைக் கண்டித்துவிட்டு, ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டிக்காத இலங்கை அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாததாகும்.

ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் இதேபோன்ற ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் அணுகுவதன் மூலமும், ஏகாதிபத்திய நலன்களுடன் இணைந்த ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலமும், தேசிய சுயநிர்ணயம் என்றழைக்கப்படும் உரிமைக்காகப் பிரச்சாரம் செய்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உடன் தொடர்புடைய, வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், உள்நாட்டுப் போரின் போது இராணுவ ஆதரவு பெற்ற கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் 'காணாமல் ஆக்கப்பட்டதற்கு' 'பொறுப்பேற்பை' உறுதி செய்யுமாறு 'சர்வதேச சமூகத்தை' வலியுறுத்துகிறது. போராட்டங்களின் 3,000 நாட்கள் என்ற கடுமையான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் பெப்ரவரி 25 அன்று நடைபெற்ற பேரணியில், பாதிக்கப்பட்ட உறவினர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளைக் காட்சிப்படுத்தினர்.

மார்ச் 4 அன்று வவுனியாவில் நடைபெற்ற இதேபோன்ற ஒரு போராட்டத்தில், வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் எஸ். ராஜ்குமார், ஈரான் போருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவைத் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ட்ரம்பை நாங்கள் வாழ்த்துகிறோம்,” என்றும், “தமிழ் மக்களின் பத்தாண்டுகால அரசியல் போராட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்றும் அவர் அறிவித்தார்.

ஏனைய தமிழ் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும் ஈரான் போர் குறித்து முழுமையான மௌனம் காக்கின்றன. இந்த மௌனமானது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றங்களில் அவற்றின் உடந்தையைப் பறைசாற்றுகிறது.

ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற்போக்கு இனவாத அரசியல் சேற்றில் மூழ்கியுள்ளது. அடுத்தடுத்து  ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் சிங்கள மேலாதிக்கத்தைத் தூண்டிவிட்டன; அதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், படுகொலைகளும், இறுதியில் உள்நாட்டுப் போரும் ஏற்பட்டது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் தங்களின் சொந்த அற்ப நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ் தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், அவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துடனும் அதன் குற்றங்களுடனும் தங்களை இணைத்துக் கொள்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியானது, எல்லா விதமான தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீ லங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான ஒரு பொதுப் போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே நாங்கள் இதைச் செய்கிறோம்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரையும், அந்நாட்டின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகளையும் எதிர்க்குமாறு தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்துத் தொழிலாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 'உலக அமைதிக்கான ஒரு முயற்சி' என்பதற்கு மாறாக, ஈரான் மீதான இந்தப் போர், உக்ரைனில் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் மற்றும் மனிதகுலத்திற்குப் பேரழிவை அச்சுறுத்தும் வகையில் சீனாவுக்கு எதிராகத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு விரிவடைந்துவரும் உலகப் போரின் ஒரு முனையாகும்.

முதலாளித்துவத்தை ஒழிப்பதற்காகவும், மனிதகுலத்திற்கான ஒரு சோசலிச எதிர்காலத்தை உருவாக்கவும் போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போர் எதிர்ப்பு இயக்கத்தால் மட்டுமே அந்தப் பேரழிவைத் தடுக்க முடியும்.

Loading