இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் இரண்டாம் பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.(முதல் பகுதியைப் பார்க்கவும்). இந்தக் காங்கிரஸ் 2026 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. இந்த அறிக்கை, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது.
II. மூன்றாம் உலகப் போரின் புற்றுநோய் போன்ற பரவல்
19. 2020 ஆம் ஆண்டின் அறிக்கை, வரவிருக்கும் தசாப்தம் பற்றிய தனது பகுப்பாய்வில் மூன்றாம் உலகப் போர் அபாயத்தை மையமாகக் கொண்டிருந்தது. உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் மைய முரண்பாட்டிலேயே இந்த அபாயம் வேரூன்றியிருந்தது. அதாவது, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் தன்மைக்கும், முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய-அரசு கட்டமைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டில், இந்த இந்த அபாயம் வேரூன்றியிருப்பதை அது சுட்டிக்காட்டியது. ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய ஒரு போர் வெடிக்குமா என்பது இனி கேள்வியல்ல.
20. உலகப் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது; அது ஒரு புற்றுநோய் பரவலைப் போல வளர்ந்து வருகிறது: ஒரு நாள்பட்ட மற்றும் விரிவடையும் நிலையாக அது உலகெங்கும் பரவிக்கொண்டு, புதிய பிராந்தியங்களைக் காலனியாக்கிக்கொண்டு, முன்னர் தனித்தனியாக இருந்த மோதல்களை ஒன்றிணைத்துக்கொண்டு, தான் நோக்கிச் செல்லும் பொதுவான பேரழிவுத் தீக்கு அவற்றைத் தயார்படுத்தும் வகையில், உலகப் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தேசிய அரசையும் படிப்படியாக மாற்றிக்கொண்டும் இருக்கிறது. இவ்வாறு நோக்கும்போது, “மூன்றாம் உலகப் போர் நிகழுமா?” எனும் பரிச்சயமான கேள்வி, தவறாகக் கருதப்பட்ட ஒன்று என்பது வெளிப்படுகிறது.
21. 2026 மே தினத்தன்று நான் கூறியது போல், “உலகப் போர் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாக தற்போது விரிந்துகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம்.” இது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய, தொடர்ச்சியான ஒரு செயல்முறையாகும். இதில் போர்முனைகளின் பெருக்கம், போர்க் களங்களின் ஒன்றோடொன்று பிணைப்பு, பொருளாதார வாழ்வை இராணுவத் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்துதல், சர்வாதிகாரத்தை நோக்கி அரசு மறு ஒழுங்கமைக்கப்படுதல், மற்றும் மக்களைக் கருத்தியல் ரீதியில் தயார்படுத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன.
22. இந்தப் பகுப்பாய்வு இப்போது முதலாளித்துவக் கருத்தின் மிகவும் நிதானமான ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலை 26 அன்று, பைனான்சியல் டைம்ஸ், அதன் தலைமை வெளியுறவு விவகார வர்ணனையாளரான கிடியன் ராக்மன் எழுதிய ஒரு கட்டுரையை, “உக்ரேன், ஈரான், மற்றும் பிராந்தியப் போர்கள் எவ்வாறு உலகளாவியதாக மாறுகின்றன” எனும் தலைப்பில் வெளியிட்டது. ராக்மன் அத்தியாவசியமான உண்மைகளைத் தொகுத்து வழங்குகிறார்: 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக இரத்தக் களரியான போர்; பன்னிரண்டு நாடுகளை நேரடியாகப் போரில் இழுத்துள்ள மத்திய கிழக்குப் போர்; வட கொரியாவின் இராணுவக் கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் அமைதியான முறையில் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியைக் கைவிடுதல்; தைவானுக்கான விநியோகப் பாதைகளைத் துண்டிப்பதற்கான சீனாவின் ஒத்திகைகள் ஆப்பிரிக்கப் போர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இரண்டு கண்டங்களிலும் ஒன்றோடொன்று இணையத் தொடங்கியுள்ள பிராந்திய மோதல்கள்; மற்றும் அமெரிக்க மூலோபாய வகுப்பாளர்களால் “எதிரிகளின் அச்சு” என்று அழைக்கப்படும் கூட்டணியின் உருவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்.
23. இரு உலகப் போர்களை வரையறுக்கும் அளவுகோல்களில் தற்போதைய மோதல்களின் தொகுப்பு “சிலவற்றை ஏற்கனவே பூர்த்திசெய்கிறது” என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். வட கொரியப் படைகளைக் களமிறக்கியதை “உலகப் போருக்கான முதல் படி” என்று ஜெலென்ஸ்கி விவரித்ததையும் அவர் மேற்கோள் காட்டி, உக்ரேன் இப்போது ஈரானியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், “இரண்டாவது படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று வாதிடலாம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார். 2020 ஜனவரியில், புரட்சிகர இயக்கம் முன்வைத்த கணிப்பை, ஐரோப்பிய நிதிய மூலதனத்தின் முன்னணி கட்டுரையாளர் ஒருவரும் இப்போது உறுதிப்படுத்துகிறார்.
24. காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உக்ரேனில் விரிவடைந்து வரும் மோதல் ஆகிய அனைத்தும் ஒரு உலகளாவிய போரின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போர்க் களங்கள் ஆகும். ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு ஒரு பினாமிப் போராகத் தொடங்கிய உக்ரேனிய போர், இப்போது மறுக்கமுடியாத வகையில், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ சக்திகள் நடத்தும் அறிவிக்கப்படாத, ஆனால் மிகவும் நிஜமான ஒரு போராக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவின் மீதான ட்ரோன் தாக்குதல்கள், எந்த மறைப்பு முயற்சியும் இன்றி, அமெரிக்காவாலும் அதன் நேட்டோ கூட்டாளிகளாலும் இயக்கப்படுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் ஜூலை 29 அன்று அறிவித்தபடி, “அமெரிக்காவும் பிரான்சும் வழங்கிய உளவுத் தகவல்கள், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் நிலைகளை வரைபடமாக்கவும், அவற்றைத் தவிர்த்து ரஷ்யாவுக்கு உள்ளே ஆழமான இலக்குகளை அடைய ட்ரோன்களை அனுமதிக்கும் பாதைகளை அடையாளம் காணவும் உதவியுள்ளன.”
25. உக்ரேனின் ஆளில்லா அமைப்புப் படைகளின் தளபதி ரொபேர்ட் புரோவ்டியை மேற்கோள் காட்டி, ரஷ்யாவின் ஐரோப்பியப் பிரதேசம் இப்போது இலக்கு வைக்கப்படுகிறது என்று பைனான்சியல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. “எண்பது மில்லியன் மக்கள் —அதாவது ரஷ்யாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர்— நாட்டின் ஐரோப்பியப் பகுதியில், தாக்குதல் மண்டலத்திற்குள் வாழ்கின்றனர். இனி, இப்பகுதி ரஷ்யாவின் பாதுகாப்பான பின் பகுதியாகக் கருதப்படாது, இனிமேலும் அவ்வாறு கருதப்படவும் போவதில்லை.” மேலும், “அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத்துறைகளும் இலக்குத் தேர்வை மேம்படுத்தியுள்ளன... இதன்மூலம், உக்ரேனின் ஆழ்-தாக்குதல் ட்ரோன் குழுக்கள் எங்கு தாக்குவது என்பதைக் கற்றுக்கொள்ள’ உதவுகிறது...” என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது.
26. ரஷ்யா மீதான தாக்குதல்களை நேட்டோ வழிநடத்துவதன் பேரழிவுகரமான தாக்கங்கள் வெளிப்படையானவை. நேட்டோ நாடுகளின் மீது ரஷ்யா எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “அமைதியான சகவாழ்வு” எனும் ஸ்டாலினிசப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட முன்னாள் சோவியத் பொலிஸ் முகவரான புட்டின், தனது “மேற்கத்திய கூட்டாளிகள்” ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொள்வார்கள் என்ற முழு எதிர்பார்ப்புடன் தனது “சிறப்பு இராணுவ நடவடிக்கையைத்” தொடங்கியபோது, எதையும் முன்கூட்டிக் காணவில்லை. சோவியத் ஒன்றியத்தை ஸ்டாலினிசம் கலைத்தொழித்ததன் பேரழிவுகரமான விளைவுகள் குறித்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் எச்சரித்தது; அந்த விளைவுகளை நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.
27. இப்போது ஐந்து கண்டங்களிலும் பரவிவரும் உலகப் போர், இந்தச் சகாப்தத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை அதன் உச்சபட்ச மட்டத்திற்கு உயர்த்துகிறது: அதாவது, உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கும் உலகப் புரட்சிக்கும் இடையிலான போராட்டம்; பூமியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அடிமைப்படுத்த ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முனைப்பிற்கும், ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய மறுபங்கீட்டிற்கு வழிவகுக்கும் சமூக ஒழுங்கை தூக்கியெறிய சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் மிகவும் நனவுடனான முயற்சிக்கும் இடையிலான போராட்டம் இதுவாகும்.
தொடரும்…
