இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையை நாங்கள் இங்கே பகுதி பகுதியாக தமிழில் வெளியிடுகிறோம். இந்தக் காங்கிரஸ் 2026 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. இந்த அறிக்கை, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது.
ஒரு வரலாற்றுத் திருப்புமுனை
1. சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ், அமெரிக்கா மற்றும் உலக அரசியல் வரலாற்றின் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் —அதாவது போர், பொருளாதார நெருக்கடி, மற்றும் வேகமாக வளர்ந்துவரும் சமூக தீவிரமயமாதல் ஆகியவை சந்திக்கும் புள்ளியில்— கூடுகிறது. “அதிர்ச்சி மற்றும் அச்சமூட்டும்” வகையிலான கொடூரமான குண்டுவீச்சு மூலோபாயத்தின் அடிப்படையில் மூன்றரை தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் தோற்கடிக்க முடியாத சக்தி என்ற மாயத் தோற்றம் இப்போது தகர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நெறிமுறையற்ற குண்டரால் தன்னலக்குழுவின் நலன்கள் நன்கு பேணப்படும் என்ற நம்பிக்கையில் ஆளும் வர்க்கம் ட்ரம்பை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. அமெரிக்க அரசியல் குறித்த மிக முக்கியமான சமகால நூலான தன்னலக்குழு: ட்ரம்பும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும் (Oligarchy: Trump and the Breakdown of American Democracy) எனும் நூலின் முன்னுரை பின்வரும் கேள்வியை எழுப்புகிறது:
எந்த வகையான சமூக மற்றும் பொருளாதார செயல்முறைகளின் சேர்க்கை இப்படிப்பட்ட ஒரு மனிதனை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது? முந்தைய அமெரிக்க அரசியல்வாதிகள் எவரின் அரசியல் வாழ்வையும் முற்றிலுமாக அழித்திருக்கக்கூடிய ஒரு தசாப்த கால ஊழல்கள் மற்றும் குற்றங்கள் மத்தியிலும், ட்ரம்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தியது எது? எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமாக, யாருடைய நலனுக்காக அவர் ஆட்சி செய்கிறார்?
கடைசிக் கேள்விக்கான பதிலில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அமெரிக்காவை ஆட்சி செய்ய வந்துள்ள பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுக்களின் அரசியல் கருவியே ட்ரம்ப் ஆவார். இது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற அளவில் செல்வத்தைக் குவித்து வைத்துள்ள ஒரு நிதிப் பிரபுத்துவம் ஆகும். மேலும் இது, தன் அத்தியாவசிய நலன்களின் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குச் சமரசம் செய்ய முடியாத பகைமை கொண்டதாகும்.
அமெரிக்க ஒன்றியத்தையே அழித்துவிடும் அபாயத்தை ஏற்படுத்திய அடிமைமுறை ஆட்சியை தோற்கடிப்பதற்கான போராட்டத்தில், அப்போது இளமையாக இருந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம், இலினொய் மாநிலத்தின் ஸ்பிரிங்பீல்ட் எனும் புல்வெளிப் பிரதேச நகரத்தில் ஒரு ஆபிரகாம் லிங்கனைக் கண்டெடுத்து அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்த முடிந்தது. 1930-களில் நிலவிய பெரும் பொருளாதார மந்தநிலையின்போது, அப்போது இன்னும் எழுச்சிபெற்றுக்கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டைப் போன்ற தரம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடிந்தது. ஆனால் இன்றோ, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சீரழிவு என்பது, ஸ்கோர்செசி (Scorsese) திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தைப் போன்ற தோற்றமும் தன்மையும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் வடிவில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் வெளிப்படுகிறது.
ஆனால் நியூ யோர்க் ரியல் எஸ்டேட் மற்றும் அட்லாண்டிக் நகர சூதாட்ட விடுதிகளின் பாதாள உலகில் ட்ரம்ப் பெற்ற அனுபவம், ஈரானுக்கு எதிரான தனது குற்றகரமான போரின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு அவரைத் தயார்படுத்தவில்லை. திசைதடுமாறி நம்பகத்தன்மையை இழந்திருப்பது ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமல்ல. இது இரு கட்சிகளின் ஆதரவையும் பெற்ற ஒரு போராகும். ஜனநாயகக் கட்சி ஆரம்பக்கட்ட குண்டுவீச்சையும் ஈரானிய அரசாங்கத்தின் தலைமையை அகற்றுவதையும் வரவேற்றது. முப்பத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்திவந்த மூலோபாயம் —வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் இழிபுகழ்பெற்ற சொற்றொடரான “பலம் பலனளிக்கும்” என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது— துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது.
5. ஈரான் பேரழிவு, ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் சர்வதேச அரசியல் அமைப்புமுறையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். ஆரம்பக்கட்ட பொருளாதார மற்றும் அரசியல் அதிர்வுகள் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன. இதன் உடனடி விளைவுகளில் ஒன்று, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக அமைப்புமுறையின் அழுகிய தன்மையை வெளிப்படுத்தியதாகும்—அதன் இருகட்சி முறைமை, பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள், ஊழல் நிறைந்த உயர்கல்வித் துறை, அதிகாரத்துவ தொழற்சங்க அமைப்புகள், அடையாள அரசியலில் மூழ்கிய வசதி படைத்த போலி இடதுகள் மற்றும் அறிவுப்பூர்வமாகச் சீரழிந்த கலாச்சாரம் ஆகியவற்றின் அழுகலை இது அம்பலப்படுத்தியுள்ளது.
6. இந்தப் போர், பரந்த செயற்பாடுகளுடன் தொடர்பற்ற, தனிமைப்பட்ட ஒரு நிகழ்வல்ல. இராணுவத் தோல்வி, சமூக தீவிரமயமாக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஒன்றிணைவு ஒரு விபத்தோ அல்லது எதிர்பாராத அதிர்ச்சியோ அல்ல. இது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் விளைவாகும், மேலும் இது ட்ரோட்ஸ்கிச இயக்கத்தால் முன்னரே கணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. எனவே, இந்தக் காங்கிரஸின் பணி, கட்சியின் பணியை வழிநடத்துகின்ற முன்னோக்கைப் பரிசீலிப்பதில் இருந்து தொடங்க வேண்டும்.
I. சோசலிசப் புரட்சியின் தசாப்தம்
7. 2020 ஜனவரி 3 அன்று, உலக சோசலிச வலைத் தளம் தனது புத்தாண்டு அறிக்கையான “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது” என்பதை வெளியிட்டது. இது வெளியாகி ஆறரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்காட்டியைச் சுட்டிக்காட்டுவதை மட்டுமே முழு முறையியலாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை விமர்சனத்தை இந்த அறிக்கை ஈர்த்துள்ளது. உலகில் எங்குமே இன்னும் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்படவில்லை. ஆனால், இந்த வாதமானது அந்த ஆவணத்தில் உண்மையில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு வாக்கியத்தைக்கூடக் கையாளவில்லை.
8. இந்த வகை விமர்சனம், ஜோன் கெல்லியின் உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (The Twilight of World Trotskyism) எனும் நூலில் தனது மிக விரிவான கல்விப்புல வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் அழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு வரலாற்று எச்சம் என்ற ஆய்வறிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூலில், உலக சோசலிச வலைத் தளத்தின் 2020 முன்னோக்கு தனிப்படுத்திக் கண்டனம் செய்யப்பட்டுள்ளது கெல்லி பின்வருமாறு எழுதுகிறார்:
மரபுவழி ட்ரொட்ஸ்கிச அமைப்புகள், அவற்றின் கோட்பாட்டுவாதத்திற்குள் முடங்கிக்கொண்டு, உண்மையான அனுபவவாத விசாரணை அல்லது தத்துவார்த்தக் கண்டுபிடிப்புகளுக்கு விரோதமானவையாகவும், இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியின் சுலோகங்கள் மற்றும் கொள்கைகளை என்றென்றும் திரும்பத் திரும்பக் கூறும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இந்த சிந்தனைகளும் இந்தச் சிந்தனைகள் மட்டுமே, உலகெங்கிலும் முதலாளித்துவ அதிகாரத்தின் மீதான லெனினிச-பாணியிலான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கும் வெகுஜன புரட்சிகரக் கட்சிகளாக தங்களை உடனடியாக உருமாறுவதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளன என்று அவை உறுதியாக நம்புகின்றன.[2]
9. இந்தப் பத்தியானது, நவ-ஸ்ராலினிசத்தின், மற்றும் கல்விப்புலத்தில் தழைத்தோங்கும் அதனுடன் தொடர்புடைய குட்டி-முதலாளித்துவ அரசியல் வடிவங்களின், அறிவார்ந்த மற்றும் அரசியல் திவால்நிலையை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் ஒவ்வொரு கூறுகளும் யதார்த்தத்தைத் தலைகீழாக்குகின்றன. கெல்லி “கோட்பாட்டுவாதம்” என்று ஏளனம் செய்வது உண்மையில், மார்க்சிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதையே ஆகும். ஏனெனில், இதன் தத்துவார்த்த அடித்தளத்தின் மீது மட்டுமே ஒரு அறிவியல் பூர்வமான முன்கணிப்பை வழங்க முடியும். அவர் தனக்காகக் கோரும் “அனுபவவாத விசாரணை”, 1945க்குப் பிறகான உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி வெடிக்கவிருந்த முந்தைய தருணத்திலேயே, ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமக் காலத்தைப் அறிவிக்கும் ஒரு நூலை உருவாக்கியது.
10. கெல்லியால் ஏளனம் செய்யப்படும் “முழக்கங்களும் கொள்கைகளும்” ஏகாதிபத்திய சகாப்தத்தில் சோசலிசப் புரட்சிக்கான மூலோபாயத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்களை அமைக்கின்றன. கெல்லி ஆட்சேபிக்கும் அந்த “கோட்பாட்டுவாதத்திற்கு” சில உதாரணங்களை மேற்கோள் காட்டுவோம்:
தற்போதைய போர் அடிப்படையில், தேசம் மற்றும் அரசு என்ற அரசியல் வடிவத்திற்கு எதிராக உற்பத்தி சக்திகள் நடத்தும் ஒரு கிளர்ச்சியாகும்... இந்தப் போரின் உண்மையான, புறநிலை முக்கியத்துவம் என்பது தற்போதைய தேசியப் பொருளாதார மையங்களின் சிதைவும், அதற்குப் பதிலாக ஒரு உலகப் பொருளாதாரம் பிரதியீடு செய்யப்படுவதுமே ஆகும். ஆனால், ஏகாதிபத்தியத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் முன்மொழியும் வழியானது, மனிதகுலத்தின் அனைத்து உற்பத்தியாளர்களின் அறிவார்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட ஒத்துழைப்பின் மூலம் அல்ல. மாறாக, வெற்றிபெற்ற நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தால் உலகப் பொருளாதார அமைப்புமுறை சுரண்டப்படுவதன் மூலமே ஆகும்... [ட்ரொட்ஸ்கி, போரும் அகிலமும், 1915]
ஏகாதிபத்தியம் என்பது ஒட்டுண்ணித் தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவம் என்ற உண்மையானது, முதலாவதாக உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை அமைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு ஏகபோகத்திற்கும் உரித்தான அழுகும் போக்கில் வெளிப்படுகிறது. ஜனநாயகக் குடியரசுவாத மற்றும் பிற்போக்குத்தனமான-முடியாட்சிவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையே உள்ள வேறுபாடு துடைத்தெறியப்படுகிறது. ஏனெனில் அவை இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன... எல்லாத் தளங்களிலும் நிலவும் அரசியல் பிற்போக்குத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்தின் ஒரு தனிச்சிறப்புப் பண்பாகும். [லெனின், ஏகாதிபத்தியமும் சோசலிச இயக்கத்தில் பிளவும், 1916]
11. கடந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளின் துல்லியமான கால எல்லையைச் சில ஆண்டுகள் கடந்து சென்று, கெல்லியின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் புரட்சிகர மூலோபாயத்தின் இன்றியமையாத அடித்தளங்களாக நிலைத்திருக்கும் அந்த “கோட்பாட்டுவாதத்திற்கு” உதாரணங்களாக விளங்கும் இன்னும் சில பத்திகளை நான் மேற்கோள் காட்டுகிறேன்:
ஏகாதிபத்திய சகாப்தமாகிய எமது சகாப்தத்தில், அதாவது நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழுள்ள உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் இயங்கும் சூழலில், எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது சொந்த நாட்டில் உள்ள நிலைமைகள் மற்றும் வளர்ச்சிப் போக்குகளிலிருந்து மட்டுமே அல்லது முதன்மையாக அவற்றிலிருந்து தொடங்கி தனது வேலைத்திட்டத்தை நிறுவ முடியாது…
சர்வதேச வேலைத்திட்டமானது, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் அமைப்புமுறை ஆகியவற்றின் நிலைமைகள் மற்றும் போக்குகளை — அவற்றின் அனைத்துத் தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளுடனும் மற்றும் அவற்றின் தனித்தனிப் பகுதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையுடனும் — முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதிலிருந்து நேரடியாகத் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சகாப்தத்தில், கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்து மட்டுமே ஊற்றெடுக்க வேண்டும், ஊற்றெடுக்க முடியும்; அதற்கு நேர்மாறாக அல்ல. கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் முதன்மையான வேறுபாடு இங்குதான் உள்ளது. [ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டத்தின் மீதான விமர்சனம், 1928]
நெருக்கடிக் காலத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம், செழிப்புக் காலத்தைவிட மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், மிகவும் இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பா என எங்கு நிகழ்ந்தாலும் சரி, அல்லது அது அமைதியான முறையிலோ அல்லது போரின் மூலமோ நடந்தாலும் சரி, அமெரிக்கா தனது சிரமங்களையும் நோய்களையும் கடந்து, முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பிலேயே தன்னை விடுவித்துக்கொள்ள முயலும். [ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டத்தின் மீதான விமர்சனம், 1928]
சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது, இச்சொல்லின் புதிய மற்றும் பரந்த பொருளில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; எமது முழுப் பூமியிலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது நிறைவை அடைகிறது. [ட்ரொட்ஸ்கி, “நிரந்தரப் புரட்சி என்றால் என்ன”, 1930]
தேசிய பாதுகாப்பைப் பற்றிப் போதிக்கும் ஒரு “சோசலிஸ்ட்”, சிதைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்குச் சேவகம் செய்யும் ஒரு குட்டி-முதலாளித்துவப் பிற்போக்குவாதியே ஆவார். போர்க் காலத்தில் தன்னைத் தேசிய அரசுடன் பிணைத்துக்கொள்ளாமல் இருப்பதும், போர் வரைபடத்தையல்ல மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுவதும், அமைதிக் காலத்தில் தேசிய அரசுக்கு எதிராக ஏற்கனவே சமரசமற்ற போரை அறிவித்துவிட்ட அந்தக் கட்சிக்கு மட்டுமே சாத்தியமாகும். ஏகாதிபத்திய அரசின் புறநிலை ரீதியான பிற்போக்கான பாத்திரத்தை முழுமையாக உணர்வதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்க முன்னணி அனைத்து வகையான சமூக தேசபக்தியாலும் பாதிக்கப்படாததாக மாற முடியும். இதன் பொருள், “தேசிய பாதுகாப்பு” எனும் சித்தாந்தத்திலிருந்தும் கொள்கையிலிருந்தும் உண்மையான முறிவு என்பது, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே சாத்தியமாகும். [ட்ரொட்ஸ்கி, போரும் நான்காம் அகிலமும், 1934]
12. இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியிலும் முதல் மூன்றிலொரு பங்கிலும் உருவான இந்தக் கருத்தாக்கங்கள், இருபத்தோராம் நூற்றாண்டின் தீர்க்கமான இந்த இரண்டாவது காற்பகுதியை நாம் தொடங்கும்போது, மார்க்சிச மூலோபாயத்தின் அடித்தளமாகத் தொடர்கின்றன. தொண்ணூறு ஆண்டுகளாக ட்ரொட்ஸ்கிசம் மறைந்துவிடும் என்று முன்னறிவித்துக்கொண்டே, முதலில் தனது உறுப்பினர்களையும் பின்னர் தன்னையுமே அழித்துக்கொண்ட ஸ்டாலினிச இயக்கத்தின் வழியே செல்லும் அரசியல் வம்சாவளியைக் கொண்ட கெல்லி, எந்தப் போக்கின் முன்னோக்கை நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளனவோ, அந்தப் போக்கிற்கே இரங்கற் குறிப்பு எழுதுகிறார். ஆனால், ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாட்டுவாதத்திற்கு அவர் முன்வைக்கும் மாற்றீட்டை உரிய கவனத்துடன் கருத்தில் கொள்ளாமல், திரு. கெல்லியை நாம் கண்டிக்கக் கூடாது. அவர் நமக்குத் தெரிவிக்கிறார்:
தொழிலாள வர்க்க அரசியலைச் சீர்திருத்தவாத சோசலிசம் அல்லது புரட்சிகர சோசலிசம் என்ற இருமுனைத் தேர்வுக்குள் முடக்குவது... ‘சமூக சீர்திருத்தம்’ எனும் மிக முக்கியமான மூன்றாவது பிரிவை விட்டுவிடுகிறது; இது முதலாளித்துவத்தின் எல்லைகளுக்குள்ளேயே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தேடுதலாகும்.[3]
13. 1898 இல் எட்வேர்ட் பேர்ன்ஸ்டைனுக்கு ரோசா லுக்சம்பேர்க் எழுதிய பதிலான சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதைத் திரு. கெல்லி கவனமாக வாசித்திருக்க மாட்டார் என்று நான் சந்தேகிக்கிறேன். 2022இல் அவரது நூல் வெளியிடப்பட்டது. எனினும், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், கெல்லி தனது சமூக சீர்திருத்தப் பார்வையின் சாத்தியக்கூற்றுக்கு ஆதாரமாக லத்தீன் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், கடந்த நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை, கடந்த ஐந்து ஆண்டுகளின் வரலாறாவது, லத்தீன் அமெரிக்காவில், அல்லது அந்த வகையில் ஐரோப்பாவில், அல்லது வேறெங்கேனும், கெல்லியின் முன்னோக்கை உறுதிப்படுத்தியுள்ளதா?
14. கெல்லி புரட்சியை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில், எந்த ‘முதலாளித்துவத்தின் வரம்புகளுக்குள்’ அமைதியாக மேம்பாடுகள் தேடப்பட வேண்டியிருந்தனவோ, அந்த வரம்புகள் தமது உண்மையான உள்ளடக்கத்தை வெளிப்படுத்திவிட்டன: சிக்கன நடவடிக்கை, சர்வாதிகாரம், போர் ஆகியவற்றின் வரம்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை மிகவும் சிலிர்க்க வைத்த, அவர் கனவுகண்ட அந்த ஜனநாயகமயமாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா இப்போது, லிமாவில் ஒரு புஜிமோரியாலும், சாண்டியாகோவில் ஒரு பினோச்சே ஆதரவாளராலும், புவெனஸ் அயர்ஸில் சங்கிலி ரம்பம் ஏந்தி இராணுவச் சதிக்குழுவைப் போற்றும் ஒருவராலும், மேலும் காரகஸில், அமெரிக்கக் கமாண்டோக்கள் ஒரு நாட்டுத் தலைவரைக் கடத்திச்சென்று அந்த நாட்டின் எண்ணெயை வோல் ஸ்ட்ரீட்டிடம் ஒப்படைத்த பிறகு அமர்த்தப்பட்ட ஒரு பதில் அரசாங்கத்தாலும் தலைமை தாங்கப்படுகிறது.
15. “சமூக சீர்திருத்தத்தின்” மாதிரிகளாக அவர் முன்வைத்த சமூக ஜனநாயகக் கட்சிகள், ஐரோப்பாவை மறு ஆயுதபாணியாக்கிக்கொண்டும், முதலாளித்துவம் சீர்திருத்தத்திற்கான ஆற்றல் கொண்டது என்பதற்குச் சான்றாக எந்த நலன்புரி அரசின் கட்டளைகளையும் சட்டங்களையும் அவர் விவரப்பட்டியலிட்டாரோ, அந்த நலன்புரி அரசில் எஞ்சியிருப்பதைச் சிதைத்துக்கொண்டும் இருக்கின்றன. ஒருபோதும் அடையமுடியாத ஒரு வேலைத்திட்டத்தை ட்ரொட்ஸ்கிசம் வீணாக முன்னெடுக்கிறது என்று கெல்லி கூறுகிறார்.
16. முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைத்தன்மை, உலகப் போரின் சாத்தியமின்மை, புரட்சிகர சகாப்தம் தீர்ந்துவிட்டது என்பது என, ஒவ்வொரு முன்முடிவும் நிகழ்வுகளால் மறுக்கப்பட்டுவிட்ட ஒரு முன்னோக்கையே கெல்லி முன்வைக்கிறார் என்று மிக அதிக நியாயத்துடன் நாம் பதிலளிக்கலாம். அந்த அந்திமப் பொழுது, நான்காம் அகிலத்தின் மீதல்ல, மாறாக அதன் இரங்கற் குறிப்பை எழுதியவர்களின் மாயைகளின் மீதே இறங்கியுள்ளது என்பது தெரியவருகிறது.
17. 2020-ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் தொடக்க வாக்கியம் இவ்வாறு கூறியது: “புத்தாண்டு பிறப்பானது, தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டங்கள் மற்றும் உலக சோசலிசப் புரட்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தசாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.” இதில் ‘தொடக்கத்தைக் குறிக்கிறது’ என்பதே மிக முக்கியமான சொற்றொடராகும். அந்த அறிக்கை புறநிலைச் சூழலையும் அதன் போக்கையும் விவரித்ததே தவிர, கிளர்ச்சிகளுக்கான கால அட்டவணையை வெளியிடவில்லை. இந்த தசாப்தத்தைத் தொடங்கியபோது நாம் கொண்டிருந்த முன்னோக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன.
18. ஒன்பதாவது காங்கிரஸின் முன் வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள், இந்தத் தசாப்தத்தின் பாதியைத் தாண்டி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், உலக நிலைமையைப் பற்றிய ஒரு முறையான மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இந்த தீர்மானங்களில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடிப்படைப் போக்கும்— ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பு, உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய திருப்பம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தனியார் உடைமையை அடிப்படையாகக் கொண்ட இலாப அமைப்பு முறைக்கும் இடையிலான வெடிப்புப் பூசல், பகுத்தறிவற்ற அளவிலான செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தீவிரமயமாக்கல் என அத்தீர்மானங்களில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடிப்படைப் போக்குமே, 2020-ஆம் ஆண்டிற்கான முன்னோக்கில் முன்வைக்கப்பட்ட கணிப்புகளை விஞ்சும் வகையிலான வீச்சிலும் வேகத்திலும் வளர்ச்சியடைந்துள்ளன.
தொடரும்…
——-
[1] மெஹ்ரிங் புக்ஸ், 2026, ப. x
[2] ஜோன் கெல்லி, உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (நியூயார்க், ரூட்லெட்ஜ், 2023), பக். 97
[3] கெல்லி, ப. 78
