திருகோணமலையில் கோட்டை வீதியில் உள்ள கடற்கரையோரத்தில், இனவாத பதட்டங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் முயற்சியாக, பௌத்த பிக்குகள் குழு ஒன்று, அப்பகுதியில் வசிக்கும் சில
சிங்களவர்களின் ஆதரவுடன், ஞாயிற்றுக்கிழமை ஒரு பௌத்த விகாரையை சட்டவிரோதமாக அமைக்க முயன்றது.
அந்த இடம் அருகிலுள்ள சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஆதரவில் அமைக்கப்பட்ட ஒரு தேநீர் கடைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தேநீர் கடையின் வருமானத்தில் ஒரு பகுதி பௌத்த கோயிலுக்கு கிடைக்கின்றது. கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், உள்ளூர்வாசிகளதும் ஏனையோரதும் பயன்பாட்டிற்கான கடற்கரைப் பகுதியின் ஒரு அங்கமாக அதை வரையறுத்ததால், தேநீர் கடை இருந்த நிலம் சர்ச்சைக்குரியதாகியது.
ஊடகங்களுக்கு சமீபத்திய நிலைமையை தெளிவுபடுத்திய கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த கடற்கரைக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், 'அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தது. “நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிசாரின் உதவியுடன் இடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, புத்தர் சிலை கொண்ட ஒரு புதிய தற்காலிக மத கட்டுமானம் திடீரென அந்த இடத்தில் நிறுவப்பட்டது,” என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவை 'தடுப்பதற்காக' வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். (நியூஸ்வயர், நவம்பர் 18)
திருகோணமலையானது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களும் வாழ்கின்ற பிரதான நகரங்களில் ஒன்றாகும். 2009 மே மாதம் முடிவுக்கு வந்த, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போரால் வடக்கு மற்றும் கிழக்கும் பேரழிவிற்கு உள்ளாகின. தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாட்டின் ஒரு பகுதியாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், மக்கள்தொகையை திட்டமிட்டு மாற்றுவதற்காக சிங்கள குறியேற்றங்களை குறிப்பாக கிழக்கில் நிறுவின.
போரின் பின்னர், பௌத்த ஸ்தாபனம் 'தனது பாரம்பரியத்தைக் கண்டறியும்' நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து, பதட்டங்களை உக்கிரமாக்கியது. இரண்டு மாகாணங்களும் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதோடு, அவை நிர்வாகத்திலும் செல்வாக்கு செலுத்துவதுடன், மக்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது கண்காணிப்பைத் தொடர்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இந்த இனவாத ஆத்திரமூட்டலை நிராகரிக்குமாறு வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் சர்வதேசிய வர்க்க ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அந்தப் பகுதியில் ஒரு விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, முதலில் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றுமாறு அந்தப் பிரதேச பொலிசுக்கு அறிவுறுத்தினார்.
இருப்பினும், அதிதீவிர வலதுசாரி சிங்கள-பௌத்த சக்திகளின் கூக்குரலுக்கு தலைவணங்கிய அமைச்சர் விஜயபால, அடுத்த நாள் சிலையை மீண்டும் அங்கேயே வைக்குமாறு பொலிசுக்கு அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர், சிலை சேதப்படுத்தப்படலாம் என்ற தகவல் பொலிசுக்கு கிடைத்ததால், அது எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டது என்று கூறினார். சிலையை சேதப்படுத்தவிருந்தது யார் என்று அவர் கூறவில்லை.
சிலை அகற்றப்பட்டதை பௌத்த மேலாதிக்கத்தின் மீதான தாக்குதல் என்று பௌத்த பிக்குகளின் ஒரு பகுதியினர் கண்டிக்கத் தொடங்கினர். பௌத்த மதப் பிரிவுகளில் ஒன்றான அமரபுர நிகாயவின் தலைமை பீடாதிபதி உயங்கொட மைத்ரிமூர்த்தி, 1951 முதல் விகாரை அந்த நிலத்தில் இருந்ததாகக் கூறினார். அந்தப் பகுதி பௌத்த கோயிலுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
புதன்கிழமை, முஸ்லிம்கள், தமிழ் சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை நடத்திய ஒரு தீவிரவாதக் குழுவான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அந்த இடத்தைப் பார்வையிட்டு, 'எந்த இடத்திலிருந்தும் புத்தர் சிலைகளை அகற்ற காவல்துறைக்கு அதிகாரம் இல்லை' என்றும், 'பௌத்தத்தின் மேலாதிக்கத்தை' யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அறிவித்தார். நவம்பர் 10 அன்று புது தில்லியில் நடந்த குண்டுவெடிப்பைக் குறிப்பிட்ட அவர், இந்த சம்பவம் அங்கு நடந்ததைப் போன்ற குண்டுவெடிப்புகளுக்கும் கூட வழிவகுக்கும் என்று எச்சரித்தார். இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் இது முஸ்லிம் தீவிரவாதிகளின் செயல் என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் முஸ்லிம்-விரோத மற்றும் பாகிஸ்தான்-விரோத பதட்டங்களைத் தூண்டுகிறது.
உடனடியாக அனைத்து பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும் இந்த கூச்சலில் இணைந்துகொண்டன. பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்த ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பௌத்த மதத்தின் முன்னுரிமையையும், அதைப் பாதுகாக்கும் அரசின் பொறுப்பையும் உள்ளடக்கிய அரசியலமைப்பை அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும் என்றார். இலங்கையின் பிற்போக்கு அரசியலமைப்பு, பௌத்தம் மற்றும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமையை அறிவிக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரா, 'பௌத்தர்களுக்கு எதிரான' அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கூச்சலிட்டார்.
சிலையின் பாதுகாப்பிற்காக சிலை அகற்றப்பட்டால், இரண்டு பிக்குகளும் ஏன் பொலிஸ் தாக்குதலுக்கு ஆளானார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தேசிய அமைப்பாளர் நாமல் இராஜபக்ஷ கேட்டார். வெள்ளிக்கிழமை நுகேகொடையில் நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சி பேரணியில் இந்த 'பிரச்சினை' குறித்து பேசப்படும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர், கட்சி இனவெறி தூண்டுதலை முழுமையாகப் பயன்படுத்தும் என்பதை சமிக்ஞை செய்தார்.
சிங்கள நாளிதழான திவயின, 'திருகோணமலை பௌத்த பாரம்பரியமும் அதை அழிக்கும் அருவருப்பான முயற்சியும்' என்ற தலைப்பில், பற்றவைக்கும் தலையங்கமொன்றை வெளியிட்டது.
இந்த ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திற்கு மத்தியில், அரசாங்கம் பௌத்த கட்டுமானத்திற்கு அளித்த ஆதரவு அதன் உண்மையான இனவாத நோக்குநிலையை அம்பலப்படுத்தியதாக வாதிட்ட தமிழரசுக் கட்சி செய்தித் தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன், ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தில் உள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதேநேரம், அந்த சிலையை அகற்றி அடுத்த நாள் அதை அங்கேயே வைத்தமை பற்றி குறிப்பிட்ட ராசமாணிக்கம், அரசாங்கத்தின் “தலைகீழ் மாற்றத்தைப்” பற்றி விமர்சித்தார்.
இந்த தமிழ் கட்சிகளும் சிங்கள ஆளும் உயரடுக்கின் இனவாத அரசியலையே பிரதிபலிக்கின்றன. தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது. அவர்கள் கொழும்பு ஆட்சிகளுடன் பேரம் பேசுவதற்குத் தயார் நிலையில் உள்ள தமிழ் உயரடுக்கிற்கு சலுகைகளை பெற முயல்வதுடன், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுக்கு தங்கள் ஆதரவை வலியுறுத்தி, வாஷிங்டனின் மூலோபாய நலன்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகின்றனர்.
இந்த கூச்சலுக்கு மத்தியில், ஜே.வி.பி./தே.ம.ச. தலைவரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக, பாதுகாப்பு பாதீட்டு விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் தோன்றி, சிலை அந்த இடத்தில் 'மீண்டும் வைக்கப்பட்டுள்ளது' என்றும் 'இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்தும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளன' என்றும் அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26 அன்று வழங்கப்படவுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி அரசாங்கம் செயல்படும் என்று அவர் கூறியதுடன், “நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம்… யாராவது பழைய இனவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்தால், அவர்கள் தற்போது அல்லது எதிர்காலத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் கூறினார்.
இவை மக்களை ஏமாற்றுவதற்கான வெற்று வாய்ச்சவடால்களாகும். திசாநாயகவும் ஜே.வி.பி. நிர்வாகமும், சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்க திட்டமிட்டுப் பயன்படுத்தப்படும் பிற்போக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். தனது ஆட்சி எப்போதும் பௌத்த பாரம்பரியத்தையும் மதிப்புகளையும் நிலைநிறுத்தும் என்று அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு பலமுறை உறுதியளித்துள்ளார்.
ஜே.வி.பி. சிங்கள தேசபக்தியை ஊக்குவிப்பதில் ஒரு விஷமத்தனமான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் மூன்று தசாப்த கால இனவாதப் போரை தீவிரமாக ஆதரித்தது. 1987-1989 இல், இந்த அமைப்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை 'தாய்நாட்டைக்' காட்டிக்கொடுப்பதாக அறிவித்தது, அதற்கு எதிராக பாசிச தாக்குதல்களை முன்னெடுத்தது. இந்தப் பிரச்சாரத்தில், அது அரசியல் எதிரிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களையும் கொன்றது. திசாநாயகவோ அல்லது ஜே.வி.பி.யோ இந்தத் தாக்குதல்களில் எதையும் கண்டிக்காததோடு 1987-1989 இல் இத்தகைய தாக்குதல்களை நடத்திய அதன் குண்டர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறது.
இலங்கை ஆளும் உயரடுக்கு 2022 இல் வெடித்த தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ளது. இந்த நெருக்கடி நான்கு மாத வெகுஜன எழுச்சிக்கு வழிவகுத்தது. ஐ.ம.ச., தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து, ஜே.வி.பி./தே.ம.ச., “பாராளுமன்றக் கட்சிகளின் இடைக்கால ஆட்சிக்காக” பிரச்சாரம் செய்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை பாராளுமன்ற முட்டுச் சந்துக்குள் அரசியல் ரீதியாக கட்டிப்போட்டது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, வெகுஜன எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட போதிலும், வெகுஜன போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமை, மதிப்பிழந்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்து சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் முன்னெடுக்க வழிவகுத்தது. கடந்த ஆண்டு தேர்தலில், முதலாளித்துவ உயரடுக்கின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரின் ஆதரவுடன், திசாநாயகவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் அதிகாரத்தைக் கைப்பற்றின. தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், மாணவர்கள் உட்பட இளைஞர்கள், திசாநாயக அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தொடர்ச்சியான மற்றும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக கொதித்தெழும் கோபத்தில் உள்ளனர்.
போலி இடது குழுக்களின் ஆதரவுடன் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் அடக்கவும் தீவிரமாக முயற்சிக்கும் அதேவேளை, ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கமும் 2022 போன்ற வெகுஜனப் போராட்டத்தைப் பற்றிய பீதியில் உறைந்துபோயுள்ளன.
நெருக்கடியின் ஒரு தீர்க்கமான சூழ்நிலையில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி அடக்குவதற்கு விஷமத்தனமான தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத இனவாதத்தைப் பயன்படுத்துவர். திருகோணமலை ஆத்திரமூட்டல் அதற்கான அறிகுறியாகவும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையாகவும் உள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாள வர்க்கம் இன எல்லைகளைக் கடந்து, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சுயாதீனமாக ஒன்றுபட்டு, கிராமப்புற ஏழைகளையும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் எந்த வகையான இனவாத ஆத்திரமூட்டலுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
உலகம் முழுவதும், ஆளும் வர்க்கங்கள் வர்க்க ஒற்றுமைக்கு குழி பறிக்க இன மற்றும் மத வெறுப்பை விதைக்கின்றன; சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தால் மட்டுமே இந்த பிளவுபடுத்தும் திட்ட நிரல்களை தோற்கடிக்க முடியும்.
பிற்போக்கு அரசியலமைப்பு மற்றும் அனைத்து அடக்குமுறை மற்றும் பாகுபாடு சட்டங்களை ஒழித்தல்; வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றுதல்; அனைத்து போர்க் குற்றவாளிகளையும் தண்டித்தல் போன்றவை, ஜனநாயக உரிமைகளுடன் அனைத்து சமூகங்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பணிகளாகும்.
முதலாளித்துவ அரசு அல்லது இனவாதக் கட்சிகள் மூலம் உண்மையான சமத்துவத்தையும் ஜனநாயக உரிமைகளையும் அடைய முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கு கிராமப்புற உழைப்பாளர்களின் ஆதரவுடன் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் ஐக்கிய சோசலிச கூட்டமைப்பின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற முன்னோக்கை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கிறது.
இந்த திட்டத்திற்காகப் போராட, சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புறங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பவும், இந்தக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புமாறும் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.
இது லியோன் ட்ராட்கியால் முன்னெடுக்கப்பட்ட நிரந்தர புரட்சியை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமாகும். இதுவே தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட இனங்கள் மற்றும் சமூகங்களையும் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைத்து 1917 அக்டோபர் புரட்சியை வெற்றிகரமாக நடத்த லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை வழிநடத்தியது.
இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராட சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கை பிரதமர் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை எதிர்க்கிறார்
- இலங்கை வெளியுறவு அமைச்சர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையை எதிர்க்கிறார்
- இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் முல்லைத்தீவு பத்திரிகையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
- இலங்கையில் பௌத்த குழுக்கள் கோவிலை விரிவாக்கும் முயற்சியில் இனவாத பதட்டங்களைத் தூண்டிவிடுகின்றன
