இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த 'சர்வதேச தலையீடு தொடர்பான முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் உடன்படவில்லை' என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்திற்கு (OHCHR) தனது அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அக்டோபர் 24 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“[மனித உரிமை மீறல்கள் குறித்து] வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பிளவுகளை அதிகரிக்கும் என்றும் தற்போதைய தேசிய செயல்முறைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் அறிவித்தார்.
ஜூலை 23 முதல் 26 வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் தொகுத்த அறிக்கையை பற்றியே அமரசூரிய குறிப்பிடுகிறார். ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கை, செப்டம்பர் 7 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கீழ், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுகின்றமை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோரின் மரணங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கைதுகள் உட்ப மனித உரிமை மீறல்களை விரிவாக விவரிக்கின்றது.
இந்த அறிக்கை முக்கியமாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முந்தைய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் 'பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகள்' சம்பந்தமாக கவனம் செலுத்தியது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த 26 ஆண்டுகால தமிழர் விரோதப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகள் குறிப்பிடுகின்றன.
2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அப்படியே 'காணாமல் போயினர்.' பல நிராயுதபாணியான விடுதலைப் புலி தலைவர்கள் சரணடைந்தபோது கொல்லப்பட்டனர்.
'நடந்து கொண்டிருக்கும் தேசிய செயல்முறைகள்' பற்றிய அமரசூரியவின் கூற்று பொய்யானதாகும். புலிகள் தோல்வியடைந்த பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், அத்தகைய செயல்முறைகள் மிகவும் குறைவாகவே உள்ளதுடன் எவரும் குற்றவாளிகள் ஆக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, ஒரு சில சிப்பாய்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை குற்றவியல் பொறுப்புக்கு இட்டுச் செல்லும் எந்தவொரு உண்மையான விசாரணையையும், ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் கடுமையாக எதிர்க்கின்றது.
சமீபத்திய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தக் கோராமல் இருக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்களைத் திசைதிருப்பும் நோக்கிலேயே அமரசூரியவின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
அக்டோபர் 6 அன்று, யு.என்.எச்.ஆர்.சி. அமர்வில் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது, இலங்கையோ அல்லது வேறு எந்த நாடும் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாற்பத்தொரு உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட போதிலும், வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாததால், UNHRC தீர்மானம் 'ஏற்றுக்கொள்ளப்பட்டதாக' அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தை விமர்சித்து, அந்தத் தீர்மானம் 'தமிழ் புலம்பெயர்ந்தோரை மகிழ்விக்கப் போகிறது' என்று கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கம் ஏன் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
உண்மையில், ஜே.வி.பி./தே.ம.ச., இனவாத மோதலின் போது எந்த போர்க்குற்றங்களும் நடக்கவில்லை என்ற பொய்யுடன் உடன்படுவதாக அரசாங்கத்தின் விமர்சகர்களுக்கு அமரசூரிய வெறுமனே தெரிவித்தார். மேலும், ஏதேனும் துஷ்பிரயோகங்கள் நடந்திருந்தால், இலங்கை ஒரு 'உள்நாட்டு செயல்முறை' மூலம் அவற்றை நிவர்த்தி செய்யும் என்றார். இது எந்தவொரு சர்வதேச அல்லது சுயாதீன விசாரணைகளையும் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும்.
அமரசூரியவின் கருத்துக்கள், இனவாத அரசியலை எதிர்ப்பதாகவும், தமிழர்கள் உட்பட சிறுபான்மையினருடன் 'சமரசத்தை' விரும்புவதாகவும், போரின் 'காயங்களை குணப்படுத்த' விரும்புவதாகவும் திசாநாயக அரசாங்கம் கூறும் பொய்களை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகின்றன.
கொழும்பின் போரை அமெரிக்கா ஆதரித்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் போரின் இறுதி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்களை விமர்சிக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் இல்லாத வாஷிங்டன், ராஜபக்ஷ சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நெருங்கிய உறவுகளை கடுமையாக எதிர்த்தது.
செப்டம்பர் 10 அன்று, இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த 'இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின்' சமீபத்திய தீர்மானத்தை யு.என்.எச்.ஆர்.சி.யின் இன் 60வது அமர்வில் சமர்ப்பித்தன.
2021 ஆம் ஆண்டில், யு.என்.எச்.ஆர்.சி 'இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை' அமைக்க அழைப்பு விடுத்ததுடன் ஐ.நா. உயர் ஆணையாளரின் மனித உரிமைகளுக்கான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது ஆட்சியில் இருந்தார். அவர் தனது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்ததுடன், போரின் இறுதி மாதங்களில் நடந்த போர்க்குற்றங்களுக்கு அவர் நேரடி பொறுப்பாளியாக இருந்தார். பெய்ஜிங்குடன் நெருக்கமான அரசியல் உறவுகளை வளர்த்துக் கொண்டால் அவர் எதிர்கொள்ளக்கூடிய விளைவுகள் பற்றிய கூர்மையான எச்சரிக்கையாக இந்தத் தீர்மானம் இருந்தது.
அக்டோபர் 6 அன்று யு.என்.எச்.ஆர்.சி. அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆண்டு தீர்மானத்தின் இறுதி வடிவமானது, இலங்கையில் நடந்த துஷ்பிரயோகங்கள் குறித்து உடனடி சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும், அது மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக இலங்கை பொறுப்புக் கூறல் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
அதேநேரம், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கான அதன் முயற்சிகளையும் அது வரவேற்றது.
கடைசியாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திசாநாயக்க அரசாங்கம் செயல்படுத்தியதற்கு பெரும் வல்லரசுகள் பாராட்டு தெரிவித்தன. தீர்மானத்தில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த கொழும்பு, யு.என்.எச்.ஆர்.சி.யில் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கவுமில்லை அதை தீர்மானத்தை எதிர்க்கவுமில்லை.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், அக்டோபர் 8 அன்று பாராளுமன்றத்தில் பேசிய போது, முந்தைய கொழும்பு அரசாங்கங்கள் யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்களுக்கு இணங்கிச் செயற்படத் தவறிவிட்டதாகக் கூறினார். 'வாக்கெடுப்பைக் கோரி யு.என்.எச்.ஆர்.சி.யில் மோதல் நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், உள்நாட்டு வழிமுறைகள் மூலம் எங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இடத்தை நாங்கள் மேலும் சுருக்கிக் கொள்கிறோம்,' என்று அவர் கூறினார்.
சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழர்-விரோத இனவெறியில் மூழ்கிப்போயுள்ள ஜே.வி.பி., இலங்கையின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால இனவாதப் போரை முன்நின்று ஆதரித்ததுடன் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இராணுவத் தாக்குதலை போதுமான அளவு தீவிரமாகத் தொடரவில்லை என்றும் கண்டனம் செய்தது.
2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., இராணுவத்தை 'போர் வீரர்கள்' என்று புகழ்வதில் இணைந்து கொண்டதோடு மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் தொடர்ந்து நிராகரித்து வந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் நிறுவப்பட்ட 2011 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை 'நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும்' என கண்டித்தது.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 27 அன்று அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய திசாநாயக்க, 'உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க முயற்சிக்க மாட்டேன்' என்று கூறினார். ஜே.வி.பி. இந்த நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றவில்லை.
21,000 வழக்குகளை மேற்கோள் காட்டியும் 375 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தும், காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக அரசாங்கம் கூறுகிறது. எவ்வாறெனினும், இந்த செயல்முறை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் அதேவேளை, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றது. காணாமல் போன ஒரு நபரைக்கூட அவர்களின் குடும்பங்களுக்காக காணாமல் போனோர் அலுவலகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இதேபோல் போர்க்குற்றங்களை புதைத்துவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்கு இலங்கை தளபதிகள் பிரிட்டனால் தடைசெய்யப்பட்ட போதிலும், எந்த சிரேஷ்ட அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டில் எட்டு தமிழர்களைக் கொன்றதற்காக தண்டனை பெற்ற ஒரே ஒரு இராணுவ சிப்பாயும் கூட பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவால் மன்னிக்கப்பட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதுடன், குடியிருப்பாளர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது, திசாநாயகவும் ஏனைய ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்களும், தங்கள் தமிழர்-விரோத, சிங்களப் பேரினவாத கொள்கைகளை மூடி மறைக்கும் தீவிர முயற்சியில், மக்களை பிளவுபடுத்தும் இனவாத அரசியலை முன்னெடுப்பதாக பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் குற்றம் சாட்டினர்.
கொழும்பில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் மீதான போலி விமர்சனங்களுடன் இனவாத பிளவு உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கின்றன. அரசாங்கம் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு சேவை செய்வதாகவும் இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாகவும் அவை குற்றம் சாட்டுகின்றன.
இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. மாகாண சபைகளுக்கு உள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தங்களின் இலாப நலன்களை முன்னேற்றுவதற்கும் அவர்கள் முன்கூட்டியே மாகாண சபைத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.
தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கவும் 1948 முதல் தமிழர்-விரோத பாகுபாடு நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் இன வேறுபாடுகளைக் கடந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
அந்தப் போராட்டம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
