பாசாங்கு மற்றும் பொய்கள்: ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி திசாநாயக

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டம்பர் 25 அன்று, நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி திசாநாயக, தன்னை வறுமைக்கு எதிரான போராளியாகவும், உலக அமைதிக்கான பிரச்சாரகராகவும் கேலிக்கூத்தாக காட்டிக் கொண்டார்.

அவரது பொய் கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, திசாநாயகவின் உரையின் சாராம்சம், அவரது அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு, அடிமையாக இருப்பதையும், குற்றவியல் இஸ்ரேலிய ஆட்சிக்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அனுரகுமார திசாநாயக [Photo: President’s Media Division]

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) நிர்வாகத்தின் தலைவராக ஒரு வருடத்துக்கு முன்பு பதவியேற்ற பிறகு, திசாநாயக ஐ.நா பொதுச் சபையில் தோன்றியமை, அவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட முதல் விஜயமாகும், ட்ரம்ப் வாஷிங்டனில் மத்திய அரசின் துருப்புக்களை சட்டவிரோதமாக அணிதிரட்டி, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தனது அரசாங்கத்தின் தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றபோதும் கூட, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனது புகைப்படத்தை எடுத்துக்கொள்ள அவர் ஆவலுடன் இருந்தார்,

வறுமை என்பது 'மனித நாகரிகத்தைப் போலவே பழமையான ஒரு துன்பம் [மற்றும்], காலங் காலமாக அது மனிதகுலத்தின் பயணத்தில் சேர்ந்து வருகிறது' என்று இலங்கை ஜனாதிபதி பொதுச் சபையில் கூறினார். கூடியிருந்த இராஜதந்திரிகளை 'கடும் வறுமையை ஒழிப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு' அவர் கபடத்தனமாக அழைப்பு விடுத்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் கீழேயே இலங்கையில் வறுமை கடுமையாக மோசமடைந்ததோடு, இப்போது அவரது சொந்த ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகத்தால் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்ற யதார்த்தத்தை மூடிமறைக்க மேற்கொண்ட ஒரு பரிதாபகரமான முயற்சியே திசாநாயகவின் பிரகடனங்கள் ஆகும்.

2022 இல் இலங்கை கடன் தவணை தவறியதில் இருந்து, உண்மையான ஊதியங்கள் தனியார் துறையில் 14 சதவீதமும், பொதுத்துறையில் 24 சதவீதமும் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிந்துள்ளன. இதற்கு மேல், திசாநாயகவின் தனியார்மயமாக்கல் திட்டம் பல்லாயிரக்கணக்கான அரச தொழில்களை நீக்கும். அதேநேரம், அரசாங்கம் சுகாதாரம், கல்வி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான நிதியைக் குறைத்து, உழைக்கும் மக்களை சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்குத் தள்ளியுள்ளது.

தீவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றனர். உலக வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதுடன் 10 சதவீதம் பேர் அதற்கு சற்றே மேலே வாழ்கின்றனர்.

இலங்கை மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கின்ற மறுபக்கம், பெரிய வணிக நிறுவனங்களின் இலாபங்கள் அதிகரித்து வருவதை அறிக்கைகள் காட்டுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22,000 புள்ளிகளை எட்டியது.

ஆனால் திசாநாயக்கவைப் பொறுத்தவரை, இப்போது இலங்கையிலும் உலகளவிலும் கடும் அதிகரிப்பு மட்டங்களில் காணப்படும் வறுமையும் கடும் சமூக சமத்துவமின்மையும் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமையின் விளைவு அல்ல, மாறாக, மனித நாகரிகத்தின் நிரந்தர அம்சமாகும்.

அந்தந்த தேசிய பில்லியனர்களுக்காகப் பேசுகின்ற ஏகாதிபத்திய சக்திகளும் பொதுச் சபையில் உள்ள அவற்றின் நட்புமிக்க பிற்போக்கு ஆட்சியாளர்களும், வறுமையை 'ஒழிக்க' எப்படியாவது தங்களை மனிதாபிமானிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே திசாநாயகவின் அழைப்பு. திசாநாயகவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் பொதுச் சபையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உள்ள அதே பீதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஆழமான இடைவெளியானது அவர்கள் அனைவரும் பாதுகாக்கின்ற முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களாக வெடிக்கும் என்பதே ஆகும்.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றிய போது [Photo: President’s Media Division]

https://www.wsws.org/asset/bab1b40e-b6d8-472f-a07e-46e4f7d4f2fc?rendition=image1280

இலங்கை வாக்காளர்கள் தனது கட்சியின் 'வளரும் தேசம், அழகான வாழ்க்கை' ஏன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதரித்ததாக திசாநாயக பொதுச் சபையில் தெரிவித்தார். ஆனால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தொகை வெற்று வாக்குறுதிகளை உள்ளடக்கிய ஜே.வி.பி./தே.ம.ச. பிரச்சாரம் ஒரு பொய் மூட்டையாகும்.

பதவிக்கு வந்தவுடன் திசாநாயக, தனது கட்சியின் வெற்று வாக்குறுதிகளைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி செயல்படுத்தத் தொடங்கினார்.

சுகாதாரச் செலவு 2024 இல் 410 பில்லியன் ரூபாயிலிருந்து 2025 இல் 383 பில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மருந்துகள், மருத்துவ ஊழியர்கள், உபகரணங்கள் மற்றும் கடுமையாக மோசமடைந்து வரும் அரச மருத்துவமனை முறைமையிலான பற்றாக்குறையை இலங்கையர்கள் தொடர்ந்து எதிர்கொள்வதை உறுதி செய்கிறது.

அதேபோல், இலவசக் கல்வி போதுமான ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் இல்லாமல் மோசமான நிதி பற்றாக்குறையில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் மீதான  வரி அதிகரிப்பு, அரசு மானியங்களில் வெட்டுக்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை கூட்டுத்தாபனமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் அல்லது மூடுதல் உட்பட பல கடுமையான சமூக சிக்கன நடவடிக்கைகளை விதித்துள்ளது. இதன் விளைவாக பெருமளவிலான வேலை இழப்பு, ஊதியங்களில் வெட்டுக்கள் மற்றும் போராடிப் பெற்ற வேலை நிலைமைகள் அழிப்பும் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதாகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்த திசாநாயக அரசாங்கம், தொழில்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்கப் போராடும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் ஆர்வலர்களுக்கு எதிராக இதே அடக்குமுறைச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. அஞ்சல் ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையை முறியடிக்க இராணுவத்தையும் பயன்படுத்தியது.

1980களின் பிற்பகுதியிலிருந்து ஜே.வி.பி. மற்றும் அதன் சிங்கள-பௌத்த மேலாதிக்க திட்ட நிரலின் முன்னணி பிரதிநிதியான திசாநாயக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால இனவாதப் போரை இறுதிவரை ஆதரித்தார். இருப்பினும், 'மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் இனவெறி மற்றும் மதத் தீவிரவாதத்தை எதிர்க்க நம் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன்' என்று திசாநாயக பொதுச் சபையில் வஞ்சத்தனமாகக் கூறினார்,

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, உள்நாட்டுப் போரின் போது கைப்பற்றப்பட்ட மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாகவும் வாக்குறுதியளித்து, இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக கூறி, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தினரிடம் திசாநாயக்க வாக்கு கேட்டார். ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியைப் பிடித்த பின்னர் அந்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலப் போரின் போது இலங்கை இராணுவம் எந்த போர்க்குற்றங்களையும் செய்யவில்லை என்று ஜே.வி.பி./தே.ம.ச. வலியுறுத்துகிறது. போரின் போது இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு சர்வதேச விசாரணையையும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் எதிர்ப்பதாக அதன் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

'நூற்றுக்கணக்கான மில்லியன்கள் பயனற்ற போர்களுக்கு செலவிடப்படுகின்றன' மற்றும் 'மற்றொருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க மில்லியன் கணக்கில் செலவிடப்படும்போது, இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்க கல்வி உரிமைகள் மறுக்கப்படுகின்றன,” என அறிவித்து ​​போதுமான சுகாதார வசதியின்மையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்ததற்கு திசாநாயக வருத்தம் தெரிவித்தார்.

திசாநாயக தனது அநாகரிகப் புலம்பலின் போது எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது அரசியல் தலைவரையோ குறிப்பிடவில்லை, ஆனால் கூடியிருந்த இராஜதந்திரிகளை 'உலகை மற்றொரு பேரழிவிற்கு இட்டுச் செல்லாமல்', அடுத்த தலைமுறைக்கு உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தத் தோரணை ஒரு மோசடி ஆகும். உண்மையில், இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்பு முயற்சியுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. திசாநாயக அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் டொனால்ட் லூ உட்பட ஏராளமான சிரேஷ்ட அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளை கொழும்புக்கு வரவேற்றுள்ளார். ஏப்ரல் மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு வருகையின் போது, ​​ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்தியாவுடன் முதல் முறையாக உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் கொலைகார இன அழிப்புப் போரை பற்றி குறிப்பிட்ட திசாநாயக, தனது ஆட்சியின் இஸ்ரேல் சார்பு மற்றும் அமெரிக்க சார்பு அரசியல் பாதையுடன் ஒத்துப்போனார். தனது உரையின் போது 'இனப்படுகொலை' அல்லது 'இன அழிப்பு' என்ற வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்ட அவர், அதற்கு பதிலாக 'இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் சட்ட, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கவலைகள்' மற்றும் திவாலான மற்றும் பிற்போக்கு இரு-அரசு தீர்வை சமமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுச் சபையில் பாசிசத்தனமாக உரையாற்றுகையில் ஏராளமான இராஜதந்திரிகள் வெளிநடப்பு செய்தபோது, ​​இலங்கை தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் வாஷிங்டனுக்கும் மத்திய கிழக்கில் அதன் இராணுவவாத திட்ட நிரலுக்கும் சார்பாக தெளிவாக தலையாட்டும் வகையில் அமெரிக்காவுடன் அமர்ந்திருந்தார்.

ஐ.நா.வின் முன்னோடியான நாடுகளின் கழகத்தை 'திருடர்களின் சமையலறை' என்று சரியாக அழைத்த லெனின், அது ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் அவர்களின் புவிசார் அரசியல் நோக்கங்களை முன்னெடுக்கும் ஒரு தளமாக செயல்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். திசாநாயகவின் உரை அவரது அரசாங்கம் இந்த நலன்களுக்கு சேவை செய்யும் என்பதற்கான மற்றொரு நிரூபணமாகும்.

Loading