"தொழிற்சாலையிலும் தோட்டத்திலும் லயத்திலும் எங்கள் உயிர் எப்போதும் ஆபத்திலேயே உள்ளது": இலங்கை மவுசாக்கலை தோட்டத் தொழிலாளி கூறுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 5 அன்று, மஸ்கெலியாவின் மவுசாக்கலை தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையில் வேலைசெய்த கே. விஜயகுமார், தற்செயலாக இயந்திரத்தில் தலை சிக்கியதால் மரணித்தார். இயந்திரத்தில் தேவையான பாதுகாப்பு ஆவரணங்கள் (கவசங்கள்) இல்லாததால் அவர் இறந்தார் என்பது முழுமையாக தெரியவந்துள்ளது.

மஸ்கெலியா தோட்ட தேயிலை தொழிற்சாலை [புகைப்படம்: [Photo: https://www.jedb.lk/]

இலங்கையின் ரிச்சர்ட் பீரிஸ் கம்பெனி லிமிடெட் (ARPCO) எனும் பெரிய கூட்டு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் மவுசாக்கலை தோட்டமும் தேயிலை தொழிற்சாலையும் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமானவை ஆகும். 268 ஹெக்டயர் கொண்ட இந்தப் பெருந்தோட்டத்தில் பல பிரிவுகள் இருப்பதோடு விஜயகுமார் மவுசாக்கலை பிரிவில் வசித்து வந்தார்.

நவம்பர் 8 அன்று காலை, விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கொழும்பிலிருந்து நோர்டன் வழியாக மஸ்கெலியாவுக்குச் சென்று கொண்டிருந்த உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், மவுசாக்கலை தோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏனைய தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர் குழுவினர் தங்கள் சக தொழிலாளிக்கு இறுதி மரியாதை செலுத்த சென்றுகொண்டிருப்பதைக் கண்டனர்.

எமது நிருபர்கள், விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த லயன் (வரிசை வீடு) வீட்டிலும், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திலும் கூடியிருந்த தொழிலாளர்களுடன் விஜயகுமாரின் மரணம் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

விஜயகுமாரின் இறுதிச் சடங்கு

சக தொழிலாளர்களின் அன்பையும் மரியாதையையும் வென்ற விஜயகுமாரின் திடீர் மரணத்தால் தொழிலாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்திருந்தனர். சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தங்கள் சக ஊழியர் உயிரிழந்தமை தொடர்பாக தோட்ட நிர்வாகத்தின் மீதும் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

மவுசாக்கலை தோட்டத்தில் தற்போது வேலைசெய்யும் தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடனான கலந்துரையாடல்களில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இங்கு வெளியிடப்படுவதோடு நிர்வாகம் அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

ஒரு தொழிற்சாலை ஊழியர் கூறியதாவது: “இயந்திரங்களில் பாதுகாப்பு ஆவரணங்கள் இருந்திருந்தால், இந்தக் அநியாயம் நடந்திருக்காது. உண்மையில், தொழிற்சாலையிலும் தேயிலை மலையிலும் லயத்திலும் எங்கள் உயிர்கள் எப்போதும் ஆபத்திலேயே உள்ளன. பெண்கள் கொழுந்து பறிக்கச் செல்லும்போது குளவி கொட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர். அல்லது அவர்கள் பல நாட்கள் மருத்துவமனைகளில் தங்க வேண்டியிருக்கிறது. அந்த நாட்களுக்கு சம்பளம் இல்லை. இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற எங்களுக்கு ஒரு வழி தேவை.”

அவர்கள் வசிக்கும் 10x10 அடி லயன் வீட்டை அவர் சுட்டிக்காட்டிய அவர், “இந்த லயன் வீடுகள் எவ்வளவு பழையவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 'இவை 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. தகரக் கூரைகள் மிகவும் இத்துப்போய்விட்டன. மழை பெய்யும்போது, ​​எல்லா இடங்களிலும் நனைந்துவிடும். வீடு முழுவதும் தண்ணீர் ஓடுவதைத் தடுக்க அந்த இடங்களில் பேசின்கள் மற்றும் வாளிகளை வைக்க வேண்டும். தோட்டத்தை நடத்தும் கம்பனி எந்த பராமரிப்பும் செய்வதில்லை. எங்கள் பெற்றோரின் காலத்திலாவது எப்போதாவது திருத்த வேலைகள் செய்துள்ளனர்.'

ஒன்றோடு ஒன்று பிணைந்து அமைந்துள்ள லயன் வீடுகள் மின் கசிவு காரணமாக அடிக்கடி தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாகவும், இந்த ஆண்டு ஜனவரி 17 அன்று நடந்த ஒரு தீ விபத்தில் லயன் ஒன்று எரிந்து போனதாகவும் தொழிலாளி கூறினார். '10 குடும்பங்களின் பிள்ளைகளின் புத்தகங்கள், உடைகள், ஆபரணங்கள், தளபாடங்கள் மற்றும் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு அரசு சாரா நிறுவனம் மற்றும் ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடமிருந்து எங்களுக்கு நிதி உதவி கிடைத்தது. தோட்டத்திலிருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கள் உயிரை மதிப்பதில்லை, நிர்வாகம் எங்களிடமிருந்து முடிந்தவரை அதிகம் வேலை வாங்கவே விரும்புகிறது.'

மற்றொரு தொழிலாளி பேசும் போது: “குளவிகள் மட்டுமல்ல, சிறுத்தைகளும் புதர்களுக்குப் பின்னால் இருந்து எங்கள் மீது பாய்கின்றன. அட்டை எங்கள் இரத்தத்தை உறிஞ்சுவது சாதாரண விடயமாகிவிட்டது. மழைக்காலத்திலும் குளிரிலும், அதிகாலையில் கொழுந்து பறிக்கச் செல்லும் பல பெண்கள் ஆஸ்துமா போன்ற நோய்களால் இறக்கின்றனர். அதனால்தான் விஜயகுமாரின் மனைவியும் மிக விரைவாக இறந்துவிட்டார்,” என்றார்.

அருகிலுள்ள மருத்துவமனை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியாவில் இருப்பதோடு அங்கு போய் திரும்புவதற்கு முச்சக்கர வண்டிக்கு 3,000 ரூபா செலவாகும். அந்தக் கட்டணம் அவர்களின் தினசரி ஊதியமான 1,350 ரூபாவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

“நாங்கள் (நோயாளிகள்) அதிகாலையில் மருத்துவமனைக்குச் சென்று துண்டுவாங்கிக்கொண்டு மணித்தியாலக் கணக்காக வரிசையில் நின்ற பின்னர் பெரும்பாலும் மருந்து சிட்டை மட்டுமே கிடைக்கும். இப்போது மருத்துவமனைகளில் மருந்து இல்லை. தங்குமிட வசதிகள் இல்லாததால், கடினமாக இருந்தாலும் எங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்புகிறார்கள்.”

தோட்டத்தில் மருந்தகமும் மகப்பேறு மருத்துவமனையும் இருந்தபோதிலும், பத்து பிரிவுகளின் தொழிலாளர் குடும்பங்களுக்கு அவை போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலையில் அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து, தற்போது வேறொரு நிறுவனத்தில் சமையல்காரராகப் பணிபுரியும் மகாதேவன், விஜயகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அத்தகைய தொழிற்சாலையில் தனி அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மகாதேவன்

“ஒரு தொழிலாளி வேலையைத் தொடங்குவதற்கு முன்பு இயந்திரத்தைச் சரிபார்க்க வேண்டும். உண்மையில், இந்த இயந்திரத்தில் பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஆவரணங்கள் இல்லை. அது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் பாதுகாப்பு உடைகளை முறையாகச் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் அவரது ஜாக்கெட் இயந்திரத்தில் சிக்கியது.”

“உண்மையில், இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்து தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக் ஆவரணங்கள் இல்லாததுதான். இந்த மரணத்திற்கு நிறுவனமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.”

தொழிற்சாலையில் தேயிலை அரைக்கும் வேலை இரவு 10 மணிக்குத் தொடங்கும் என்றும், வேலை அதிகம் உள்ள நாட்களில், மறுநாள் மதியம் 1.30 மணி வரை அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மற்றொரு தொழிலாளி கூறினார். மேலதிக நேரங்களுக்கு தொழிலாளர்களுக்கு மேலதிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றாலும், அது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மட்டுமே. அதற்கு மேற்பட்ட நேரக் கொடுப்பனவுகள் கழிக்கப்படுகின்றன.

“மதியம் 1.30 மணிக்கு வீட்டிற்குச் சென்றாலும், ஓய்வெடுக்கவோ அல்லது தூங்கவோ வழி இல்லை. துணி துவைப்பது அல்லது விறகு சேகரிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். எனவே இரவில் நாங்கள் மிகவும் சோர்வாக இருக்கும்போது வேலைக்குச் செல்கிறோம். இயந்திரத்தில் பாதுகாப்பு ஆவரணங்கள் இல்லாவிட்டால், தூக்கம் மற்றும் சோர்வு காரணமாக விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.”

மற்றொரு தொழிலாளி, தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்கு பாடசாலையில் அழைத்தால் ஏற்படும் சிரமங்களை விளக்கினார்: “வகுப்பு ஆசிரியர்கள் அல்லது அதிபர் எங்களை பிள்ளைகளின் கல்வி குறித்து கலந்துரையாட பாடசாலைக்கு வரச் சொன்னாலும், நாங்கள் செல்ல வழி இல்லை. எங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை இல்லாததால், நாங்கள் சென்றால், எங்களுக்கு சம்பளம் கிடைக்காது. பெரும்பாலான நேரங்களில் பாடசாலைக்கு போகமல் இருக்க முடிவு செய்ய வேண்டியிருக்கும்.”

தினசரி ஊதியத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதியைப் பற்றிப் பேசுகையில், “ஒரு நாளைக்கு 5,000 ரூபாவில் வாழ முடியாத நிலையில், ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதன் பயன் என்ன?” என அவர் கேட்டார்.

மயானத்தில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தோட்டத் தலைவர் கலந்துரையாடலை சீர்குலைக்க முயன்ற போதிலும், தொழிலாளர்கள் அவரைத் தடுத்தனர். 'இவர்கள்தான் எங்கள் போராட்டங்கள் அனைத்தையும் நாசமாக்குபவர்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் எங்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக எதுவும் செய்யவில்லை.' என்று ஒரு தொழிலாளி முகத்திற்கு நேராகச் சொன்னார்.

இலாபத்திற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைப்பதால் ஏற்பட்ட இந்த மரணங்கள், சாதாரண 'தொழிற்சாலை விபத்துக்கள்' அல்ல. மாறாக, முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்று எமது நிருபர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர்.

ஒவ்வொரு தொழிற்சாலை, பெருந்தோட்டம் மற்றும் வேலைத் தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுக்கள் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்து தொழில்கள் மற்றும் ஊதியங்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Loading