இலங்கையின் இனவாதப் போரில் "காணாமல் போனவர்களின்" உறவினர்கள் பேசுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாம்

2024 மே 17, இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவு நிகழ்வின் போது, இலங்கைப் போரில் தப்பிப்பிழைத்த ஒரு தமிழ்ப் பெண், இறந்த தனது குடும்ப உறுப்பினர்களுக்காக அழுகையில், மற்றொருவர் ஆறுதல் கூறுகிறார். [AP Photo/Eranga Jayawardena]

யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி ஜூலை 21 அன்று மீண்டும் தொடங்கியதுடன் அங்கு மேலும் டசின் கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக நூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள்  மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி 20 அன்று, யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள  செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புத் துண்டுகள் அடங்கிய ஒரு பாரிய புதைகுழி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மே 15 அன்று இதன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட,  நாட்டின் 26 ஆண்டுகால கொடூரமான உள்நாட்டுப் போரின் மெய்சிலிர்க்கும் மற்றொரு நினைவூட்டலாக இருக்கின்றது.

2009 மே மாதம், விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த இந்தப் போரில், சுமார் 100,000 பேர் உயிரிழந்தனர் என கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் -முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள்- பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

முதல் கட்ட அகழ்வின்போது, எண்பத்தொரு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இவற்றில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகளுடையவை  உட்பட  37 முழுமையான எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஆடைகள், ஒரு பொம்மை, செருப்புகள் மற்றும் ஒரு பாடசாலை புத்தகப்பை ஆகியவை அடங்கும். இது செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மனிதப் புதைகுழியாகும்.

ஒரு இராணுவச் சிப்பாய் 1995-96ல் இராணுவம் மேற்கொண்ட சித்திரவதையிலும், விடுதலைப் புலி சந்தேக நபர்களை மரண தண்டனைப் பாணியில் கொலை செய்ததிலும் தான் பங்கேற்றதாக ஒப்புக்கொண்டதை அடுத்து,  1999 ஆம் ஆண்டில் 15 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த சிப்பாய், 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததுடன் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ததற்காக உயர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவராவர்.

முதல் கட்டத்தைப் போலவே, இரண்டாவது கட்ட அகழ்விலும் பாலூட்டும் போத்தல், காலுறை மற்றும் வளையலுடன் கூடிய ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் கிடைத்தன. இவை, 'பயங்கரவாதத்தை ஒழித்தல்' என்ற பெயரில் இராணுவம், முழு குடும்பங்களையும் கொன்றதற்கான கடுமையான அறிகுறிகள் ஆகும்.

ஜூலை 20 அன்று, கண்ணிவெடி அகற்றும் தொழிலாளர்கள் குழு ஒன்று, கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் மனித எச்சங்களைக் கண்டுபிடித்தது. இது போர் ஆரப்பித்த காலத்தில் இருந்தே இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது. மூதூர் பதில் நீதவான் எச்.எம். ஃபௌசன் அந்த இடத்தைப் பார்வையிட்டு, எச்சங்களை மீட்பதற்காக இந்த இடத்தினை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டார்.

2013 இல் இருந்து, கண்டுபிடிக்கப்படும் வெகுஜன புதைகுழிகளின் பட்டியல் அதிகரித்து வருகிறது.  இதில் மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் திருக்கேதீஸ்வரம், 2018 இல் மன்னார் நகரத்தில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் 2021 இல் முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய் மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் உள்ள புதை குழிகளும் உள்ளடங்கும்.

இலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகள், மனிதப் புதைகுழிகளைத் தோண்டி எடுப்பதையிட்டு மிகவும் பதட்டமாக உள்ளனர். இனவாதப் போரின் தவிர்க்க முடியாத விளைவு என, படுகொலைகள் மற்றும் மனிதப் புதைகுழிகளை நியாயப்படுத்த முயற்சிக்கும் பிவிதுரு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில, 'வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே மனிதப் புதைகுழிகள் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம்,. அவற்றைத் தோண்டி [அவற்றைப் பற்றி] கருத்து தெரிவிப்பது அர்த்தமற்றது மற்றும் பணத்தை வீணடிப்பதாகும்' என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த பலர் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததால், 'அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதிலும் எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது' என்று இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்து பத்திரிகையிடம் தெரிவித்தார்.

இந்தக் கூற்று பாசாங்குத்தனமானதாகும். போரின் இறுதி வரை அதை முழுமையாக ஆதரித்த ஜே.வி.பி, இரத்தக்களரி இராணுவ நடவடிக்கைகளின் போது எந்த போர்க்குற்றங்களும் நடக்கவில்லை என்று தொடர்ச்சியாக மறுத்தது வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து 'விசாரணை' செய்யவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அற்ப இழப்பீடு வழங்கவும் ஒரு போலியான, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அது முன்மொழிந்துள்ளது.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் சமீபத்தில் 'காணாமல் போனவர்களின்' உறவினர்களுடன் பேசினர். பலர் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி பல தசாப்தங்களைச் செலவிட்டுள்ளதுடன் போர்க்குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரக் கோரி வருகின்றனர்.

அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசலிங்கம் துளசிமலர் கூறியதாவது: “இந்தப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம், எங்கள் இதயங்கள் வேதனைப்படுகின்றன. எனது பிள்ளைக்கு என்ன ஆனது என்பதை அறிய நாங்கள் ஏங்குகிறோம். அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனது பிள்ளையை ஈ.பி.டி.பி.யே  [ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இது அரசாங்க ஆதரவு துணை ராணுவப் படையாகவும் செயல்பட்ட ஒரு தமிழ் கட்சி] பிடித்துக் கொண்டு சென்றது. எனது, பிள்ளையை பிடித்துச் சென்றவரை நான் ஈ.பி.டி.பி. முகாமில் கண்டேன். ஆனாலும், நான் ஈ.பி.டி.பி. தலைவரான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து முறையிட்டபோது, அவர் எதுவிதமான பதிலும் கூறவில்லை.

தனது மகனைத் தேடி அலைந்ததனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தனது கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக துளசிமலர் கூறினார். சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து உதவி கோரும் போராட்டங்களுக்கு தங்களை இழுத்துச் சென்றதற்காக தமிழ் கட்சிகளை அவர் விமர்சித்தார்.

'அந்த சர்வதேச நாடுகள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை,' என்று அந்த தாய் அழுகையுடன் WSWS இடம் கூறினார். 'அதனால்தான் நான் இப்போது எந்த போராட்டங்களிலும் பங்கேற்பதில்லை. எங்கள் பிள்ளைகளை யாராவது அழைத்து வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம்,' என்றார்

திருநீலகண்டன் சின்னக்கிளி (நடுவில்) அவரது கணவர் (இடது) மற்றும் மகன் கேந்திரகுமாருடன்

கிளிநொச்சி, முரசுமோட்டையைச் சேர்ந்த 62 வயதான திருநீலகண்டன் சின்னகிளி, தனது கணவர் முத்தையா திருநீலகண்டன் (68) மற்றும் மகன் கேந்திரகுமார் (23) ஆகியோரைத் தேடி வருகிறார். அவர்கள் 2009 மே மாதம் இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த நாட்களின் பயங்கரங்களை நினைவு கூர்ந்த சின்னகிளி, 'ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருந்தபோது, உறவினர்கள் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்தனர். யாராலும் மற்றவர்களுக்கு உதவ முடியவில்லை' என்றார். கடந்த 16 ஆண்டுகளாக தனது கணவர் மற்றும் மகனின் தடயங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார், ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.

“மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல அமைப்புகளிடம் புகார் அளித்தேன், ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின், உறவினர்கள் நடத்தும்  அனைத்துப் போராட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன், ஆனாலும் அது பயனற்றது.” என்றார்

சின்னகிளியின் மற்றய பிள்ளைகள் திருமணமாகிச் சென்றுவிட்டதால், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த பல பெண்களைப் போலவே, சின்னக்கிளியும் தனியாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சின்னகிளி அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளியாக இருந்தபோதிலும், இந்த மாதம் அவருக்கு உதவி கிடைக்கவில்லை.

“காணாமல் போனோர் பிரச்சினையில், இந்த அரசாங்கம் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும் போலவே செயற்படுகிறது. இப்போது கண்டுபிடிக்கப்படும் புதைகுழிகள் எங்கள் அச்சங்களை மேலும் அதிகரிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவான காரைநகரைச் சேர்ந்த 76 வயதான சண்முகம் செல்லமுத்து, காணாமல் போன தனது மகனும் 18 வயது மாணவனுமாகிய சக்திவேல் பற்றிய வேதனையான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

சண்முகம் செல்லமுத்து

பிரேமதாச அரசாங்கம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காரைநகரைக் கைப்பற்றுவதற்காக, புலிகளுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கிய பின்னர், 1991 ஏப்ரலில் செல்லமுத்துவின் குடும்பம் மூளாய்க்கு தப்பிச் சென்றது. அவரது மகன் சக்திவேல் தனது சித்தப்பாவையும், சித்தியையும் அழைத்து வருவதற்காக திரும்பி வந்தார், ஆனால் மீண்டும் மூளாய்க்கு திரும்பி வரவில்லை. சக்திவேலையும் மற்ற இளைஞர்களையும் இராணுவம் கைது செய்ததாக அவரது சித்தப்பா பின்னர் உறுதிப்படுத்தினார்.

துக்கத்தில் ஆழ்ந்த பெற்றோர் தங்கள் மகனைத் தீவிரமாகத் தேடி, வடக்கின் அனைத்து இராணுவ முகாம்கள் உட்பட பல இடங்களுக்குச் சென்றனர். 'அவரது தந்தையான, என் கணவரும் அவரைத் தேடும் போது இறந்துவிட்டார். மூன்று மகள்கள் மத்தியில் எனது ஒரே மகனை இராணுவம் அழைத்துச் சென்றது ஆனால் அவர்கள் இன்னும் அவரைக் கைது செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இலங்கை இராணுவத்தால் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டதாக பலர் எங்களிடம் தெரிவித்தனர்,' என்று அவர் கூறினார்.

2006 ஆம் ஆண்டு கடற்படையினர் ஒரு தமிழ் தொழிலாளியை வெட்டிக் கொன்றதை அடுத்து, இளையதம்பி நாகேஷ்வரி (68) மற்றும் அவரது கணவர், அவர்களது ஐந்து பிள்ளைகளுடன், காரைநகரின் ஊரியில் இருந்து தப்பி ஓடினர். அப்போது காரைநகர், இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இளையதம்பி நாகேஸ்வரி

அந்தக் குடும்பம் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிக்குச் சென்றது. 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது அவர்களின் இளம் மகன்களில் ஒருவர் காணாமல் போனார்.

'காணாமல் போனவர்களின்' மற்ற குடும்பங்களைப் போலவே, அவர்கள் தங்கள் மகனையும் சகோதரனையும் தேடி பலனளிக்கவில்லை. 'இராணுவம் அவரை அழைத்துச் சென்றது மட்டுமே எங்களுக்குத் தெரியும்,' என்று நாகேஷ்வரி கூறினார், மேலும் அரசாங்க அதிகாரிகளிடம் செய்யப்பட்ட எதிர்ப்பு முறையீடுகள் எதுவும் பயனற்றவை என்றார்.

இந்த கொடூரமான சூழ்நிலை இருந்தபோதிலும், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளான, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசு கட்சி போன்றவை, இந்த துயரங்கள் குறித்து சிறிதும் அக்கறை காட்டவில்லை, மாறாக பாதிக்கப்பட்டவர்களின் துயர நிலையைத் தங்கள் சொந்த அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.

செம்மணிப் புதைகுழி பற்றி கேள்விப்பட்டபோது ஐயம்பிள்ளை லட்சுமணன் (50) கோபமடைந்தார். 'பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்படக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அங்கு மக்கள், முழு குடும்பங்களாகக் கூட கொல்லப்பட்டு, சாதாரணமாக புதைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது,' என்று அவர் கூறினார்.

ஐயம்பிள்ளை லக்ஸ்மணன்

லக்ஸ்மணன் தனது கொடூரமான சொந்த அனுபவங்களை நினைவு கூர்ந்தார். தமிழ் அரசியல் இயக்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத அவரது சகோதரரான ஐயம்பிள்ளை ஜெயக்குமார், 2009  யுத்தத்தின் இறுதி நாட்களில் அவரது நண்பருடன் முல்லைத்தீவில் காணாமல் போனார்.  காணாமல் போகும்போது 38 வயதானவராக இருந்தார், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் - அப்போது அவரது இளைய மகளுக்கு ஆறு மாதம்.

“அனைத்து உறவினர்களும் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள், ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை, அதனால்தான் அவர்கள் போராடுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இந்த மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் அதிகாரத்தையும் சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்,” என அவர் தொடர்ந்தார்.

“அவர்கள் 'சர்வதேச சமூகம்' தலையிட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். உண்மையில், அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக இந்த சக்திகளுடன் தங்கள் உறவுகளை பலப்படுத்த விரும்புகிறார்கள். அவர்களின் 'சர்வதேச சமூகம்'  என்பது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா, என்பனவேயாகும். ஆனால் இந்த நாடுகள் சர்வதேச போர் குற்றவாளிகள், இல்லையா?”

'இன்று காசாவில் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவது, இந்த நாடுகளின் ஆதரவுடன்தான். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் இறக்கின்றனர். அமெரிக்கா இந்தக் குற்றங்களை ஆதரிக்கிறது,' என்று அவர் கூறினார். காசாவில் நடக்கும் படுகொலைகள் குறித்து இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் கண்ணை மூடிக் கொண்டு மௌனம் காத்து வருவதாகவும் லக்ஸ்மணன் குற்றம் சாட்டினார்.

Loading