செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு பயனற்ற வேண்டுகோள் விடுத்த கொழும்பு போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வியாழக்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்கில் அடையாளம் காணப்பட்ட புதைகுழிகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினர்.

“நீதிக்கான மக்கள் சக்தி” அமைப்பால் அழைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக ஆர்வலர்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், பாலஸ்தீன ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், யூடியூபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் அதிலிருந்து பிரிந்து போனவர்கள் உட்பட சுமார் 90 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, 17 ஜூலை 2025 அன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற போராட்டம்.

செம்மணி படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்! செம்மணி மற்றும் படலந்த கொடூர கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கு! யு.என்.எச்.ஆர்.சி. வல்லரசுகளின் கைக்கூலியா? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! அரசியல் கைதிகளை விடுதலை செய்! (போரின் முடிவில்) சரணடைந்த உறவுகள் எங்கே? படலந்த அறிக்கை எங்கே? போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

செம்மணி சித்துபாத்தி இந்து மயானக் காணியில் பெப்ரவரி 20 அன்று அடையளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில், முதல் கட்ட அகழ்வுப் பணியில் 65 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தில் மேலும் 15 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமை அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் 6 அல்லது 7 எலும்புக் கூடுகள் சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையவை என சந்தேகிக்கப்படுகின்றன.

செம்மணிப் புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது புதைகுழி இதுவாகும். முன்னதாக, 1999 இல், ஒரு இராணுவ சிப்பாய் அளித்த வாக்குமூலத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இங்குள்ள மற்றொரு புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த கொடூரமான இனவாத போரின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட 'புலி சந்தேக நபர்கள்' புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல புதைகுழிகளில் இந்தப் புதைகுழிகளும் அடங்கும்.

இதேபோல், தெற்கில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1988-90ல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நடத்திய பாசிச கிளர்ச்சியை நசுக்குவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவம், பொலிஸ் மற்றும் கொலைப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்கள கிராமப்புற இளைஞர்களின் புதைகுழிகளே இவை என்று நம்பப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், 2009 மே மாத நடுப்பகுதியில் போரை கொடூரமாக முடிவுக்குக் கொண்டுவந்தபோது, யுத்தத்தின் போதும் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த பின்னரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதிக்கு நீதி கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு போராட்டத்தின் போது, போது நீதிக்கான மக்கள் சக்தியால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான 'இனவாதப் போர்' என்ற வார்த்தை ஒருபுறம் இருக்க, ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கட்சியையோ அல்லது பிரிவையோ விமர்சிக்கவில்லை. வடக்கு மற்றும் தெற்கில் நடந்த படுகொலைகளுக்கு இராணுவ அதிகாரிகளை மட்டுமே குற்றம் சாட்டிய அறிக்கை, அதிகாரத்தில் இருக்கும் போது யுத்தத்தை நடத்தியதற்குப் பொறுப்பான அரசியல் தலைவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்திருந்தது. இது தற்செயல் நிகழ்வு அல்ல; கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில், ஏற்பாட்டாளர்கள் இனவாதப் போர் என்பதை வலியுறுத்தாமல் கவனமாக இருந்தனர்.

ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று மேம்போக்காக குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரியதோடு, நீதிக்கான சர்வதேச தலையீட்டையும் வலியுறுத்தியதுடன் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

போராட்டக்காரர்கள் பேரணியாக செல்வதைத் தடுப்பதற்காக அழைக்கப்பட்ட கலகத் தடுப்பு போலீசார்

போராட்டக்காரர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, அரசாங்கம் அவர்களைத் தடுக்க டசின் கணக்கான பொலசாரை அனுப்பி தனது ஒடுக்குமுறை பிரதிபலிப்பை காட்டயது. கடைசி நேரத்தில் ஐந்து பேருடன் வந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசன், பொலிசாரைத் தள்ளிவிட்டு பேரணியை முன்னோக்கி நகர்த்துவது போல் பாசாங்கு செய்தார். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் பொலிஸ் கலகத் தடுப்பு படையை வரவழைக்கவும் இது சந்தர்ப்பமாக்கிக்கொள்ளப்பட்டது.

மனோ கணேசன் ஊடகங்களுக்கு தனது முகத்தைக் காட்டவே கடைசி நிமிடத்தில் வந்ததாகக் கூறி, அவரது ஆதரவாளர்கள் சிலருடன் போராட்டக்காரர்களில் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“நீதிக்கான மக்கள் சக்தி” அமைப்பின் செயலாளர் சக்திவேல், தமிழ் முதலாளித்துவ உயரடுக்கின் கோரிக்கைகளை எதிரொலித்தார். “சர்வதேசத்திடம் கூறுகின்றோம். வடக்கு கிழக்கில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழர்கள் என்பதற்காகத்தான் கொல்லப்பட்டார்கள். எனவே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், முதலில் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அந்த சுயநிர்ணய உரிமையோடு வட கிழக்கு மக்கள் அரசியல் அதிகாரத்தோடு தங்களைத் தாங்களே ஆளுகின்ற, ஒரு நீதியான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோருகின்றோம். சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கோருகின்றோம்,” என அவர் பிரகடனம் செய்தார்.

தமிழ் உயரடுக்குடன் நெருக்கமாகப் பணியாற்றும் சக்திவேல், அந்த முதலளித்துவக் கட்சிகளைப் போலவே 'சர்வதேச சமூகம்' மற்றும் 'சர்வதேசம்' என குறிப்பிடுவது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளையே ஆகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர் ஒருவர், அமெரிக்காவும் ஏகாதிபத்திய நாடுகளும் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை ஆதரிக்கின்றன அல்லவா என்று சக்திவேலிடம் கேட்டார்.

முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள கபடத்தனமாக முயன்ற சக்திவேல், 'சர்வதேச சமூகம்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தைக் குறிப்பிடுவதாகக் கூறினார். அது “வல்லரசுகளின் ஒரு கைக்கூலி” என்றும், 'உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட சக்திகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே விடுதலையை அடைய முடியும்' என்றும் அறிவித்தார். முற்போக்கானது போல் காட்டிக்கொள்ளும் இதுபோன்ற கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, துண்டுப்பிரசுரத்திலோ அல்லது சக்திவேலின் உரையிலோ அமெரிக்காவின் ஆதரவுடன் காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொன்று முன்னெடுக்கும் இனப்படுகொலைப் போரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சக்திவேல் கோரும் சுயநிர்ணய உரிமை என்பது, தமிழ் உழைக்கும் மக்களுக்கு அன்றி, தமிழ் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு சலுகை அளிக்கும் அதிகாரப் பரவலாக்கமாகும். இதற்காக, அவர்கள் சார்பாகச் செயல்படும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும், கொழும்பு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இந்தியாவிற்கும் வேண்டுகோள் விடுப்பதற்காக, இராணுவத்தின் போர்க்குற்றங்கள் மீதான தமிழ் மக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

சீனாவிற்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளில் இலங்கையை முழுமையாக ஒருங்கிணைக்க நெருக்குவதற்காக, வாஷிங்டன் முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் பிரேரணைகளை முன்வைத்தது. தமிழ் தேசியவாதக் கட்சிகள் இந்தப் பிரேரணைகளை முழுமையாக ஆதரித்ததுடன் தற்போது சீனாவிற்கு எதிரான இந்தப் போர் தயாரிப்புக்கு தங்களது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளன.

சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சியின் போது முன்னாள் அமைச்சராக இருந்த மனோ கணேசன், அப்போது நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளை செம்மணிக்கு அனுப்புமாறும், தெற்கில் அடையாளம் காணப்பட்ட புதைகுழிகள் குறித்தும் விசாரணை நடத்துமாறும் கோரினார். இது அரசாங்கத்திற்கு ஒரு 'அக்கனிப் பரீட்சை', அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாவிட்டால், 'ஐக்கிய நாடுகள் சபை அல்லது வேறு நாடு அல்லது சர்வதேச சமூகம் விசாரிக்கட்டும்' என்று கணேசன் கூறினார். அத்துடன், 'இதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல முடியும்' என அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.

அரசாங்கத்திற்கும் பந்தம் பிடித்த அவர், இறுதியாக, 'தோழர் (ஜனாதிபதி) அனுர, என் நண்பரே, இதை ஒரு இலங்கை நாடாகக் கட்டியெழுப்புங்கள்' என்றார்.

மனோ கணேசனும் அவரது ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழர்-விரோத இனவாதப் போரைத் தூண்டிவிட்டு அதை முன்னெடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதுடன், இப்போது அதிலிருந்து பிளவுபட்டு உருவான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக உள்ளனர். கணேசனின் 'அனுர தோழரும்' அவரது ஜே.வி.பி.யும், வடகிழக்கில் நடந்த இனவாதப் போரில் முக்கிய பங்காளிகளாக இருந்ததுடன் அவரது தற்போதைய அரசாங்கம் இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

அரசாங்கத்திடமும் ஏகாதிபத்திய சக்திகளிடமும் மன்றாடும் எந்தவொரு போராட்டத்திலும் இருந்து ஒருபோதும் பின்வாங்காத முன்னிலை சோசலிசக் கட்சி, இந்த நிகழ்வில் அதன் உறுப்பினர்களையும் ஈடுபடுத்தியது. தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கு எதிராக, பிற்போக்கு சக்திகளைத் தயார் செய்வதற்காக, முதலாளித்துவ இயக்கங்களுக்கு முண்டுகொடுக்கும் சேவையில் இந்தக் கட்சி ஈடுபட்டுள்ளது.

தமிழ் சிறுபான்மையினர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை அம்பலப்படுத்துவதும் நியாயத்தைப் பெறுவதும், முதலாளித்துவ ஆளும் வர்க்கம் கையாளுகின்ற இனப் பிரிவினை அரசியலைத் தோற்கடிப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால் தூண்டிவிடப்பட்ட இனப் பிரிவினை, போர் வரை சென்றதற்கும், தற்போதைய இன ஆத்திரமூட்டல்களுக்குமான நோக்கம், தொழிலாள வர்க்கத்தைப் பிரித்து முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதாகும்.

எனவேதான், சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஒன்றுபட வேண்டும் என்று முன்மொழிகிறது. நீதி தேடும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களும், போர்க் குற்றவாளிகளான ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்களை நோக்கி திரும்பாமல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.

Loading