இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் பொது சுகாதார சேவையில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், சுகாதார சேவைகள் இயக்குநர் அசேல குணவர்தன, ஜூலை 16 அன்று ஒரு அசாதாரண சுற்றறிக்கையை வெளியிட்டார்.
இது 'மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வெளியில் கொள்வனவு செய்தல் மற்றும் ஆய்வக பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளல் சம்பந்தமாக நிறுவனத் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் / பல் மருத்துவர்களுக்கான வழிகாட்டுதல்கள்' ஆகும். அதன்படி, ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் அல்லது ஆய்வக வசதிகள் ஒரு மருத்துவமனையில் அல்லது மருத்துவ நிறுவனத்தில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு அவற்றை வெளியில் கொள்வனவு செய்ய அல்லது அவர்களின் சொந்த செலவில் அவற்றை வெளியில் செய்துகொள்ள பரிந்துரைக்க முடியும்.
வழிகாட்டுதல்களில் உள்ள மற்றொரு பிரிவின்படி, தேவையான மருத்துவ பரிசோதனைக்கான வசதிகள் 'நிறுவனத்தில் கிடைக்கவில்லை என்றால், மற்றும் உள் நடைமுறை மற்றும் நோயறிதல் அல்லது மருத்துவமனைகளில் தொடர்ச்சியான பராமரிப்புக்கு இது 'அத்தியாவசியமானது' என்றால், 'நோயாளி அல்லது அவரது நெருங்கிய உறவினர் செலவை ஏற்கத் தயாராக இருப்பின், நிறுவனத் தலைவரின் அனுமதிக்கு உட்பட்டு, அதை வெளியில் மேற்கொள்ளமுடியும்.'
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் புதிய நடைமுறை, நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இரு தரப்பினருக்கும் மிகவும் கடினமான மற்றும் சோர்வை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையாகும். அதன்படி, நோயாளியின் பெயரில் தேவையான பொருளை கொள்வனவு செய்வதற்கு, 'நோயாளியின் சம்மதத்தை எழுத்துப்பூர்வ படிவத்தில் பெற வேண்டும்.' குறித்த படிவத்தில் விசேட மருத்துவர், தலைமை மருந்தாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரும் கையொப்பமிட்டு சான்றளிக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கை வெறுமனே சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரால் வெளியிடப்பட்ட 'வழிகாட்டுதல்' மட்டுமல்ல. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே,வி,பி,/தே.ம.ச.) அரசாங்கம், பொது சுகாதார சேவையை சீர்குலைக்கும் முந்தைய அரசாங்கங்களின் திட்டத்தை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது என்று நாங்கள் தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறோம்.
மருத்துவ நிபுணர்கள் சங்கம், நோயாளிகளுக்கு வெளியில் இருந்து மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை பெறுவதற்கு பரிந்துரைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தாம் என்ன செய்வது என்பது குறித்து பரிந்துரை செய்யுமாறு கேட்டபோது, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, '(நிபுணர்கள்) அவர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் [அரசாங்கத்தால்] வழங்க முடியாது. நோயாளிகள் அவற்றை மலிவான இடங்களிலிருந்து கொள்வனவு செய்ய முடியும்,' என பதிலளித்தார். இந்த சுற்றறிக்கை அந்தக் கொள்கையின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகும்.
அரச மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை, ஆய்வகப் பரிசோதனைகளை நடத்த முடியாத நிலை உட்பட நெருக்கடி, பல மாதங்களாக மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் சூழ்நிலையில், பொது சுகாதாரத்தில் அக்கறை கொண்டுள்ளதாக கூறும் ஒரு அரசாங்கம், உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இருப்பினும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கொள்கை, இவ்வளவு பிரமாண்டமான பிரச்சினையாக இருக்கும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்ப்பதாக இல்லை, மாறாக மருந்துகளை கொள்வனவு செய்யக்கூடியவர்கள் வாழ வேண்டும்! மருந்துகளை வாங்க முடியாதவர்கள் இறக்க வேண்டும்! என்பதாக உள்ளது. இது உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமம் ஆகும். சில அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் இல்லாத நிலையில், மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளே மரணிக்கின்றார்கள் என்று நாம் கூற முடியுமா?
கண்டி மாவட்டத்தின் ஒரு அரச மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு விசேட மருத்துவ நிபுணர், உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறியதாவது: “புதிய சுற்றறிக்கையின்படி, தலைமை மருந்தாளர் மற்றும் பணிப்பாளரும், படிவங்களில் கையொப்பமிடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. மறுபுறம், ஏற்கனவே பல வரிசையில் நின்று சோர்வடைந்து வீட்டிற்குச் செல்லும் ஒரு நோயாளி இந்தப் படிவத்தில் கையொப்பம் பெற சுமார் மூன்று வரிசைகளில் நின்று காலத்தை செலவிட வேண்டியிருக்கும்.” பெரும்பாலான நோயாளிகளுக்கு வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவுசெய்ய பரிந்துரைக்கப்பட வேண்டியிருப்பதாக அவர் கூறினார், மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நோயாளிகளிடம் காணப்படும் 'அனாதரவான நிலைமையை' விவரித்த அவர் தெரிவித்ததாவது: 'பலர் அதற்கு பணம் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் மருந்து துண்டை எடுத்துக்கொண்டு எதுவும் சொல்லாமல் முனுமுனுத்துக்கொண்டே சென்றுவிடுகிறார்கள்.'
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ஒரு வயதான நோயாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு புதிய நடைமுறை பற்றி கூறினார்: “இது என்னைப் போன்ற முதியவர்களை மருந்து இல்லாமல் மருத்துவமனைகளில் தேடித்திரிய வைக்கும் ஒரு திட்டமாகும். அரசாங்கம் எங்களை விரைவாகக் கொல்ல முயற்சிக்கிறது.”
மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை “தீவிரமானது அல்ல” என்று சுகாதார அமைச்சரும் துணை சுகாதார அமைச்சரும் பலமுறை கூறியிருந்தாலும், நிலைமை மோசமாக உள்ளது. சமீபத்திய அறிக்கைகள் பின்வருமாறு கூறுகின்றன:
மத்திய மருந்தகத்தில் 180 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்று ஜூன் 14 அன்று, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஊடகங்களுக்குத் தெரிவித்தது. இதில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகளும் அடங்கும். இந்த மருந்துகளில் 50 க்கும் மேற்பட்டவை மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை.
“புற்றுநோய், நீரிழிவு நோய், மனநல கோளாறுகள், கால்-கை வலிப்பு மற்றும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான முக்கியமான மருந்துகள் கிடைக்கவில்லை அல்லது ஆபத்தான முறையில் பற்றாக்குறையாக உள்ளன,” என்று ஜூன் 18 அன்று டெய்லி மிரர் கூறியுள்ளது.
சிலோன் வயர் நியூஸ் வலைத் தளத்தின்படி, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டாக்ரோலிமஸின் அளவை அரசு மருத்துவமனைகளில் பரிசோதிப்பதில் காலவரையற்ற தாமதங்கள் காணப்படுகின்றன.
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை, பேராதனையில் உள்ள சிரிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை ஆகியவற்றில் இதயம் தொடர்பான சிகிச்சைக்கான அத்தியாவசிய உபகரணங்கள் இல்லை.
பணம் உள்ளவர்கள் அரசாங்க மருத்துவமனைகளில் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறலாம்; அல்லது அவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகத்திற்குச் செல்லலாம். தங்கள் அன்புக்குரியவர்கள் ஊனமுற்றவர்களாவதை அல்லது மரணிப்பதை விரும்பாத மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழித்து ஊர் முழுதும் கடன்பட்டு நோயாளிக்கு பணம் செலுத்த முயற்சி செய்வார்கள். முதலாளித்துவ அமைப்பில் தேவையான சுகாதாரப் பராமரிப்புக்காக பெறுவது என்பது இப்போது நன்கு அறியப்பட்ட வர்க்கப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இலங்கையின் இலவச பொது சுகாதார சேவை, பல தசாப்தங்களாக சர்வதேச மூலதனத்தின் தேவைகளால் உந்தப்பட்டு, வெட்டுக்களுக்கு உட்பட்டுள்ளது. சுகாதாரப் பராமரிப்பை இலாபகரமான தொழிலாக மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும். 1980 களில் இருந்து, தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்து மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் காளான்கள்போல் முளைத்துள்ளன.
தனியார் துறையை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தாலேயே நிர்வகிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் நாடு அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய காரணத்தால், சர்வதேச வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் போலவே, அவருக்குப் பிறகு வந்த திசாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை துரிதப்படுத்துகிறார். திசாநாயக்க அரசாங்கம் இலவச சுகாதார சேவையின் மீதமுள்ளவற்றை வெட்டுப் பலகையின் மீது நிறுத்தி வைத்துள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி திசாநாயக்க ஜூலை 22 அன்று சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை அழைத்து, எந்த தாமதமும் அல்லது பற்றாக்குறையும் இல்லாமல் மற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் அரச மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது உண்மையை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கை மட்டுமே.
அமைச்சு செலவின ஒதுக்கீட்டு ஆவணத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் 410 பில்லியன் ரூபாயாக இருந்த அரசாங்கத்தின் சுகாதாரச் செலவு 2025 இல் 383 பில்லியன ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக திசாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பாதீட்டு உரையில், சுகாதாரச் செலவு 604 பில்லியன் ரூபா வரை 'கணிசமாக அதிகரிக்கப்படும்' என்றும், அதில் ரூபா 185 பில்லியன் பெறுமதியான, மருந்துகள் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். இப்போது உண்மையில் வெட்டப்பட்ட தொகை அல்லது அதற்கும் குறைவான தொகையே செலவிடப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின் கீழ் அரசாங்கம் பரந்த அளவிலான தாக்குதல்களுக்குத் தயாராகி வருகிறது. இதில் இலவசக் கல்வியைக் வெட்டுதல், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தலும் அடங்கும். இந்த பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகவே சுகாதார சேவை வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளது.
உலக முதலாளித்துவம் ஆழமடைந்து வரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா முதல் இலங்கை வரையிலான நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்கள் நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வி உட்பட தொழிலாளர்கள் கடந்த காலத்தில் போராடி வென்ற சேவைகள் மற்றும் ஏனைய சமூக உரிமைகளை அழித்து வருகின்றன.
சமீபத்திய வாரங்களில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் உட்பட சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் சுற்றறிக்கை மற்றும் மருத்துவமனைகளின் நெருக்கடிக்கு அரசாங்கத்தின் பதில், இலவச பொது சுகாதார சேவைகளை ஒழிப்பதாகும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. சுகாதார சேவையின் சரிவு பற்றி, பிரதான ஊடக அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் தலையங்கங்களில் கூட எழுதப்பட்டுள்ளன.
இருப்பினும், பொது சுகாதார சேவையில் பாரிய வெட்டுக்கள் முன்னெடுக்கப்படுவதோடு, அரசாங்கம் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின்படியே செயல்படுத்துகிறது, என்ற உண்மையை ஊடகங்களும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் வேண்டுமென்றே மூடிமறைக்கின்றன.
இலவச பொது சுகாதார சேவையைப் பாதுகாப்பதும் முன்னேற்றுவதும் வெறுமனே சுகாதார ஊழியர்களின் பொறுப்பு மட்டுமல்ல. அதை வெல்வதற்காக கடந்த காலத்தில் போராடியது போலவே, இப்போது அதைப் பாதுகாக்கப் போராடுவது தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய இலவச பொது சேவைகளை இனி முதலாளித்துவத்தின் கீழ் பாதுகாக்க முடியாது என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம், இலாபத்திற்காகவே செயல்படுகிறது, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நலனுக்காக அல்ல.
இந்த அமைப்புமுறை மாற்றப்பட வேண்டும். உற்பத்தி சக்திகளின் உரிமையை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலமே இதைச் செய்ய முடியும்; வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்கள் உட்பட உற்பத்தி மையங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து கைப்பற்றப்பட்டு தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். ஒரு சோசலிச உற்பத்தி-பொருளாதார அமைப்பின் கீழ் மட்டுமே உற்பத்தியானது இலாபத்திற்காக அன்றி, பொது நலனுக்காக மேற்கொள்ளப்பட முடியும். வெளிநாட்டுக் கடனை நிராகரித்து, பணக்காரர்களால் குவிக்கப்பட்ட செல்வத்தைக் கைப்பற்றி, தொழிலாளர் ஆட்சியின் கீழ், பொது சேவைகளை மேம்படுத்த இந்த செல்வத்தைப் பயன்படுத்துவது அவசியம்.
முதலாளித்துவ ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் உலக முதலாளித்துவத்திற்கும் எதிரான, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மற்றும் சோசலிச அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, மருத்துவமனைகள் உட்பட ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலமும், போராட்டத்தை ஒழுங்கமைக்க அவர்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மையமாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலமும், போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை அழைக்கிறது.