இலங்கை மின்சார சபையின் (இ.மி.ச.) 22,000 பலமான ஊழியர் படையில் சுமார் 16,000 பேர் ஜூலை 22 அன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு, இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார (திருத்த) மசோதாவை எதிர்த்து ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இ.மி.ச. பல நிறுவனங்களாக பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவு முழுவதிலுமிருந்து சுமார் 1,500 தொழிலாளர்கள் காலை 11:30 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர். தனியார்மயமாக்கலுக்கு வழி வகுக்கும் இந்த மறுசீரமைப்பு, அவர்களின் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது.
இ.மி.ச. இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், இ.மி.ச. தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் (CEBTOU), வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அத்தியட்சகர்கள் சங்கம் மற்றும் பொறியியலாளர்கள் சங்கம் உட்பட 28 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து இ.மி.ச. தொழிற்சங்க கூட்டணியால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆளும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை மின்சாரத் தொழிலாளர் சங்கத்தின் (ACEWU) உறுப்பினர்களும் தங்கள் தொழிற்சங்கத் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின்படி, இ.மி.ச. அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் ஐந்து தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்படும். இந்த நிறுவனங்கள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட இயக்குனர்கள் குழுவால் மேற்பார்வையிடப்படும். இந்த ஐந்து நிறுவனங்களும் ஆறு மாதங்களுக்குப் பிறகு மேலும் 12 நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
இந்த மாற்றச் செயல்பாட்டின் போது சம்பளம், கொடுப்பனவுகள், கடன்கள் மற்றும் மருத்துவ சலுகைகள் தொடர்பான விடயங்கள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே உள்ள ஊழியர்களின் உரிமைகள் நிறுத்தப்படுவதுடன் புதிய நிறுவனங்களே ஒருதலைப்பட்சமாக சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை தீர்மானிக்கும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகள் மீது பெரும் தாக்குதலைத் கட்டவிழ்த்துவிடத் தயாராகி வருகிறது.
மசோதா இதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், நிறுவனங்கள் பொது-தனியார் பங்காண்மைகளாகவோ அல்லது முழுமையாக தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களாகவோ மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை 'மறுசீரமைக்கவும்' -முந்தைய தேசியமய பாதுகாப்புகளை அகற்றி- தனியார் முதலீட்டாளர்களுக்கு அவற்றைத் திறந்துவிடவும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
மின்சாரத் தொழிலாளர்களின் நடவடிக்கை, ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு விரோதமாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் தெளிவான வெளிப்பாடாக இருந்தாலும், தொழிற்சங்க கூட்டணியானது போராட்டத்தை ஒரு சில கோரிக்கைகளுக்கு மட்டுப்படுத்தியது. ஜூலை 15 அன்று, ஊதிய உயர்வு கோரி நூற்றுக்கணக்கான ஆசிரிய கல்வியியலாளர்கள் நடத்திய போராட்ட நடவடிக்கையையும், ஜூலை 5 அன்று பதவி உயர்வு கோரி புகையிரத ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையும் தொடர்ந்தே இ.மி.ச. தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அனைத்து இ.மி.ச. தொழிற்சங்க கூட்டணியின் கோரிக்கைகளில் ஒன்று, மசோதா மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று கோருவதாகும். சில பிரிவுகள் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக வாதிட்டு, தொழிற்சங்கங்கள் முன்னர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
புதிய நிறுவனங்களுக்கு மாற்றப்படும் ஊழியர்களின் உரிமைகள் குறித்து மசோதாவில் குறிப்பிடப்படாததால், இந்தப் பாதுகாப்புகள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறுவன இயக்குநர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
அடிப்படை உரிமைகளை மீறும் விதிகள் திருத்தப்பட வேண்டும் அல்லது மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையுடன் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது.
மசோதாவின் இரண்டாவது பாராளுமன்ற வாசிப்பு ஜூலை 24 அன்று நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், அதில் தொழில்நுட்ப பிழைகள் இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது என்ற இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுகள் ஒரு கட்டுக்கதை ஆகும். நீதிமன்றத்தின் முடிவுகள் முற்றிலும் சர்வதேச நாணய நிதிய ஆதரவு மறுசீரமைப்பு கட்டமைப்பிற்குள்ளேயே உள்ளன.
1969 இல் இ.மி.ச. நிறுவப்பட்டபோது செய்யப்பட்டதைப் போன்று, மாற்றங்களைச் செயல்படுத்தும்போது ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தொழிற்சங்க அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் எவரும் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை; அவர்கள் விரும்புவது மேசையில் ஒரு இடத்தையும், புதிய கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் நிறுவன இயக்குனர்களுடன் ஒத்துழைப்பதில் ஒரு பங்கையும் மட்டுமே ஆகும்.
2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கையெழுத்திடப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், சுமார் 400 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளன. அந்த அரசாங்கமே கடந்த ஆகஸ்ட் மாதம் இ.மி.ச.யை 11 நிறுவனங்களாகப் பிரிக்க முன்மொழியும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. 'உடனடி மறுசீரமைப்பிற்காக' குறிக்கப்பட்ட 12 அரசு நிறுவனங்களில் இ.மி.ச. முதன்மையானது ஆகும்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, ஜே.வி.பி. மற்றும் அதன் தொழிற்சங்க அதிகாரிகள், விக்ரமசிங்கவின் மின்சார சபை திருத்த மசோதாவை எதிர்ப்பதாக பொய் கூறி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர். பல வாக்குறுதிகளைப் போலவே, இதுவும் கைவிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இ.மி.ச. மட்டுமன்றி, அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மீதும் அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்துள்ளது.
ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இலங்கை மின்சார ஊழியர் சங்கமானது தொழிலாளர்களின் எதிர்ப்பை நெரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அதன் தலைவரும் ஜே.வி.பி. மத்திய குழு உறுப்பினருமான ரஞ்சன் ஜெயலால், தொழிலாளர்களின் போராட்டங்களை மட்டுப்படுத்தவும் அடக்கவும் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறார். சமீபத்திய உள்ளூராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, அவரது விசுவாசமான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள கடுவெல நகர சபையின் மேயர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தின் போது, இ.மி.ச. தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்' என்றும் அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார். அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றால், ஜூலை 23 ஆம் திகதிக்குப் பின்னர் எடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை 'பாரதூரமானதாக இருக்கும்' என்று அவர் வெற்று அச்சுறுத்தலுடன் எச்சரித்தார்.
இருப்பினும், அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பதன் மூலம் தனது உரையை முடித்த அவர், ஆர்ப்பாட்டமானது 'அரசுக்கு எதிரான, அல்லது அரசாங்கத்தை சிரமத்திற்கு உள்ளாக்கும் போராட்டமோ, அல்லது மசோதவை விலக்கிக்கொள்வதற்கான கோரிக்கையோ அல்ல' என்றார்.
பிரச்சினை இதற்கு நேர்மாறானது ஆகும். திசாநாயக்க அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ளவாறு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அது மறுசீரமைப்பதற்கும், அவற்றின் எதிர்கால தனியார்மயமாக்கலுக்கும் எதிராக, தொழிலாளர்கள் நேரடி அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். இந்த பரந்த திட்ட நிரலை தோற்கடிக்க தொழிலாளர்கள் போராடாவிட்டால், அவர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இ.மி.ச. தொழிலாளர்கள் அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு, விக்ரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு ஜனவரியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு பெரிய அரசாங்க அடக்குமுறையில் 62 இ.மி.ச. ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஜே.வி.பி. சார்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட, தற்போதைய தொழிற்சங்கத் தலைமைகள், இந்தப் போராட்டங்களைத் தணிக்க முடிந்த அனைத்தையும் செய்து, விக்கிரமசிங்கவுக்கு அவரது கொள்கைகளை கைவிடுமாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயைகளை ஊக்குவித்ததுடன், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவும் பிரச்சாரம் செய்தன.
திசாநாயக்க அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியிருந்தாலும், அது இ.மி.ச.யை உடைப்பதன் மூலம் இன்னும் ஆழமான தாக்குதலைத் தொடங்குகிறது. இந்த மறுசீரமைப்பு வெறுமனே தனியார்மயமாக்கலை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த வலிமையை சிதைக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கையில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பும் இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையிட்டு அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளன. 25 மார்ச் 2024 அன்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது போல்:
இ.மி.ச. மற்றும் ஏனைய அரச ஊழியர்களை, தே.ம.ச. மற்றும் பிற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் அரசியல் ரீதியாக கட்டிவைக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எடுக்கும் பிற்போக்கு முயற்சிகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பும், இந்த முதலாளித்துவ சார்பு அமைப்புகளிலிருந்து விலகி சுயாதீனமாக அணிதிரளுமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகின்றன.
விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் அதன் ஜனநாயக விரோத தாக்குதல்களையும் தோற்கடிக்க, தொழிலாளர்கள் பிரச்சினையை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களிலும் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதாகும். தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விக்கிரமசிங்க அரசாங்கத்தையும் அதன் சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளையும் வீழ்த்துவதற்கான அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
இந்த திட்டத்தின் அவசியம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இ.மி.ச. தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் தாமதமின்றி இணையுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.