இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
திங்களன்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், தனது நாட்டின் மீது இந்திய இராணுவத் தாக்குதல் 'நெருங்கிவிட்டதாக' எச்சரித்ததோடு, 'நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால்' மட்டுமே இஸ்லாமாபாத் தந்திரோபாய அல்லது மூலோபாய அணு ஆயுதங்களைக் கொண்டு பதிலளிக்கும் என்றும் கூறினார்.
தாக்குதல் நெருங்கியுள்ளமை பற்றிய ஆசிஃபின் கூற்றை, பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் செவ்வாய்க்கிழமை இரவு விரிவுபடுத்தினார். அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் 'இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட உளவுத்துறை தகவல்கள் உள்ளன' என்று அவர் கூறினார்.
இந்தியத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதே போல் பதிலடி கொடுக்கும் என்று தரார் சபதம் செய்தமை, இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் விரைவில் தலைதூக்கும் அச்சுறுத்தலை எழுப்புகிறது. 'இந்தியாவின் எந்தவொரு இராணுவ சாகசத்துக்கும் ஒரு நிச்சயமான மற்றும் தீர்க்கமான பதிலடி கிடைக்கும்' என்று தரார் அறிவித்தார். 'எந்தவொரு பேரழிவுகரமான விரிவாக்கத்திற்கும் பொறுப்பு இந்தியாவை மட்டுமே சாரும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தங்கள் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் எந்த விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள்' என்றார்.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பஹல்காம் அருகே ஏப்ரல் 23 அன்று 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியதிலிருந்து தெற்காசியாவின் போட்டி அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் கொந்தளிக்கின்றன.
பஹல்காம் அட்டூழியத்தில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டதாகக் கூறுவதற்கு புது தில்லி எந்த ஆதாரத்தையும் வழங்காததோடு இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற இஸ்லாமாபாத்தின் கோரிக்கைகளை உடனடியாக நிராகரித்துள்ளது.
அதற்கு பதிலாக, இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் 'பழிவாங்கும் நடவடிக்கைகளை' எடுத்துள்ளதுடன், பாகிஸ்தான் மீது எல்லை தாண்டிய தாக்குதலைத் தயாரித்து வருவதற்கான ஒவ்வொரு அறிகுறியையும் வெளிப்படுத்தியுள்ளது – இதே போன்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை பாகிஸ்தான் மீது சுமத்தி 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அது நடத்தியதை விட இம்முறை பெரிய தாக்குதல் நடக்கும் சாத்தியும் உள்ளது.
சமீபத்திய நாட்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிற சிரேஷ்ட அரசாங்கத் தலைவர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். நாட்டின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாத குற்றவாளிகளை மட்டுமன்றி, 'பயங்கரவாதத்தின் எஜமானர்களையும்' 'அமைப்பாளர்களையும்' தாக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
இதற்கிடையில், 'தீவிரவாதிகளை வேட்டையாடுதல்' என்ற பெயரில், இந்திய பாதுகாப்புப் படைகள் காஷ்மீரில் மிகவும் கடுமையான மற்றும் கண்மூடித்தனமான அடக்குமுறை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இதனால் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய சார்பு அரசியல்வாதிகள் கூட அதை விமர்சிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
செவ்வாயன்று, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வட்டாரத்தின்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பில், ஏப்ரல் 22 தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியின் 'விதம், இலக்குகள் மற்றும் நேரத்தை' தீர்மானிக்க இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு மோடி முழுமையான 'செயல்பாட்டு சுதந்திரத்தை' வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானும் தனது இராணுவத்தை போருக்குத் தயார்படுத்தி வருகிறது. திங்களன்று ராய்ட்டர்ஸிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆசிப், இஸ்லாமாபாத் தனது படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைத்திருப்பதாகவும், இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ளவும், அதற்கு பதிலளிக்கவும் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் கூறினார். 'இது இப்போது விரைவில் தாக்குதல் நடக்கலாம் என்பதால் நாங்கள் எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம். அந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,' என அவர் கூறினார். பதட்டங்களின் நிலைமையும் இந்தியத் தாக்குதலின் சாத்தியமும், பழிக்குப் பழிவாங்கும் இராணுவ தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் வகையில், ஆசிப், ஒரு பாகிஸ்தானி அதன் அணு ஆயுதக் கிடங்கை நாடினால் எந்த அளவிலான அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பிரச்சினையை எழுப்பினார்.
கடந்த வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு இரவும் எல்லை தாண்டிய சிறிய ஆயுதத் தாக்குதல்கள் என விவரிக்க கூடிய சம்பவங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு என்பது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரிலிருந்து பிரிக்கும் எல்லையாகும். இது முன்னாள் பிரிட்டிஷ் இந்திய சமஸ்தானமான காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரு நாடுகளதும் போட்டி உரிமைகோரல்களை இந்த எல்லைக் கோடுகளே கட்டுப்படுத்தி வைத்துள்ளன.
செவ்வாயன்று, பாகிஸ்தான் இராணுவம், 'அதன் வான்வெளி அத்துமீறலைத் தடுப்பதற்காக', கட்டுப்பாட்டு எல்லை வழியாக சென்ற நான்கு விசிரி இந்திய கண்காணிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக பெருமையாகக் கூறியது. உள்ளூர் விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் துணையாக கட்டுப்பாட்டு எல்லை வழியாக சென்றதாகக் கூறப்படும் ஒரு இந்திய எல்லைப் பாதுகாப்பு சிப்பாயையும் அது கைது செய்துள்ளது.
காஷ்மீர் தொடர்பாகவும், இன்னும் பரந்த அளவில் தெற்காசியாவில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு தொடர்பாகவும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சை, போட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான ஒரு பிற்போக்கு மோதலாகும். இதன் வேர்கள் 1947-48ல் தெற்காசியாவை ஒரு வெளிப்படையான முஸ்லிம் பாகிஸ்தானாகவும், ஒரு இந்து இந்தியாவாகவும் பிரித்த வகுப்புவாதப் பிரிவினையிலேய உள்ளன.
புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டும், வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாகத் திருப்பிவிட, வகுப்புவாதத்தைத் தூண்டுவதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பிளவுபடுத்தும் வழிமுறையாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முதலாளித்துவ உயரடுக்குகள் கடந்த எட்டு தசாப்தங்களாக இந்த மோதலை நிலைநிறுத்தி வருகின்றன. அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத பல போர்கள், ஏராளமான எல்லை மோதல்கள் மற்றும் போர் நெருக்கடிகள், மற்றும் 1990 களின் பிற்பகுதியிலிருந்து அணு ஆயுதங்கள் உட்பட ஆயுதங்களை வாங்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் சொல்லமுடியாத மனித மற்றும் பொருள் வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.
பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் உதவியுடன் பாஜக அரசாங்கம், பஹல்காம் அட்டூழியத்தைப் பயன்படுத்தி, போர்க்குணமிக்க தேசியவாதத்தைத் தூண்டிவிடவும், வகுப்புவாத மோதல்களைத் தூண்டவும், ஜனநாயக உரிமைகள் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கவும் முயற்சி செய்து வருகிறது.
ஆளும் பாஜகவின் ஆதரவைப் பெறும் வலதுசாரி இந்து அமைப்புகள், இந்தியாவின் ஏனைய இடங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொந்தப் பகுதிக்கு தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். செவ்வாயன்று மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பிரதிபலிப்பு குறித்து கலந்துரையாட இந்து மேலாதிக்கவாத ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. பாஜக, வகுப்புவாத தூண்டுதலின் நீண்ட இரத்தக்களரி வரலாற்றைக் கொண்ட ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு கிளை ஆகும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பங்கேற்பதை முதன்முறையாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்ததற்கு, அது பாகிஸ்தான் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், ஒரு பெரிய இந்திய விவசாயிகள் அமைப்பின் தலைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார். ஒரு பாஜக தலைவர் அவர் 'பாகிஸ்தனுக்குச் சார்பான மொழியில் பேசுவதாக' குற்றம் சாட்டினார்.
திங்களன்று, டான் நியூஸ் மற்றும் ஜியோ நியூஸ் உட்பட ஒரு டஜன் பிரதான பாகிஸ்தானிய யூடியூப் ஊடகங்களுக்கான பிரவேசத்தை இந்திய அரசாங்கம் துண்டித்தது. அவை 'ஆத்திரமூட்டும் உள்ளடக்கம்' கொண்டுள்ளதாகவும் 'இந்தியா, அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றிய தவறான தகவல்களை' ஒளிபரப்பியதாகவும் அதற்கு காரணம் கூறியது.
கடந்த வியாழக்கிழமை, முன்னணி ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், பாகிஸ்தானுக்கு எதிராக பிற்போக்கைத் தூண்டிவிட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்காக, பயங்கரவாதத் தாக்குதலை சுரண்டிக்கொள்வதற்குப் பின்னால் மக்களைத் திசைதிருப்ப உதவுவதற்காக பாஜக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது. இராஜதந்திர பணியாளர்களைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவது, மற்றும் நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானின் மின் கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அவசியமான தண்ணீர் வசதியை தடுக்க அச்சுறுத்தும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட, பாகிஸ்தானுக்கு எதிரான புது தில்லியின் 'பழிவாங்கும்' நடவடிக்கைகள் எதையும் சிபிஎம் விமர்சிக்கவில்லை.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியா-பாகிஸ்தான் மோதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலுடன், மேலும் மேலும் பின்னிப் பிணைந்துள்ளது. இது இரண்டு மோதல்களுக்கும் மேலும் பெரிய வலு சேர்த்துள்ளது.
சீனாவிற்கு எதிரான ஒரு எதிர் எடையாக இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான வாஷிங்டனின் உந்துதல், இந்தியாவிற்கு ஏராளமான மூலோபாய சலுகைகளை வழங்குவதை உள்ளடக்கியதுடன், புது தில்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான அதிகார சமநிலையை அல்லது இன்னும் பொருத்தமாக கூறுவதெனில் பயங்கரத்தின் சமநிலையை சீர்குலைத்துள்ளது.
இது, பிராந்திய மேலாதிக்க நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், பாகிஸ்தானுடனான தனது உறவில் விளையாட்டின் விதிகளை திறம்பட மாற்ற முயற்சிக்க இந்தியாவைத் துணிச்சலுடன் தூண்டியுள்ளது. அதன் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நட்பு நாடுகளைப் போலவே, புது தில்லியும் பாகிஸ்தான் மீது சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதற்கான 'உரிமையை' வலியுறுத்தியுள்ளது. 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவ்வாறு செய்தபோது, ஒபாமா மற்றும் பின்னர் ட்ரம்பின் கீழ் வாஷிங்டனின் ஆதரவைப் பெற்றது.
பாகிஸ்தான், சீனாவுடனான அதன் 'எல்லா சூழ்நிலையிலுமான' மூலோபாய கூட்டாண்மையை இரட்டிப்பாக்குவதன் மூலம் பதிலளித்துள்ளமை, இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் இறுக்கமாக்குகிறது.
2019 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீர் மீதான தனது பிடியை பலப்படுத்தவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தனது கையை வலுப்படுத்தவும் எடுத்த முயற்சியில், முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசத்தின் சிறப்பு தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தை சட்டவிரோதமாக ரத்து செய்து, அதை ஒரு மாநிலத்திலிருந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாகக் குறைத்தது. அதே நேரத்தில், பிராந்தியத்தின் இராணுவமயமாக்கலை எளிதாக்குவதற்காக, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின்னின் எல்லையாக இருக்கும் லடாக்கை ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரித்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து சீனா தொடர்ந்து இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
ஈரானும் சவுதி அரேபியாவும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்குள் தள்ள முயன்றாலும், ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் நிதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், வாஷிங்டன் எதுவும் சொல்லவில்லை, மேலும் அதன் நட்பு நாடான இந்தியாவை கட்டுப்படுத்த நிச்சயமாக தலையிடவில்லை.
மேலும் படிக்க
- இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன
- புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன
- சீனாவுடன் சர்ச்சையிலுள்ள தனது எல்லையில் இந்தியா 10,000 மேலதிக துருப்புக்களை நிறுத்துவதால் பதற்றம் அதிகரிக்கிறது
- இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்துகிறது