இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே பொறுப்பென்று புது தில்லி அவசரமாக அறிவித்ததைத் தொடர்ந்து, தெற்காசியாவின் போட்டி அணு ஆயுத சக்திகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கத்தி முனையில் உள்ளன.
புதன்கிழமை, இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம், ஒரு சிறிய எண்ணிக்கையிலான அரசு பிரதிநிதிகளைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவது மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பாகிஸ்தானை குறிவைத்து பரந்த அளவிலான 'பழிவாங்கும்' நடவடிக்கைகளை அறிவித்தது,
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் போல், போரைத் தூண்டும்படியான மொழியைப் பயன்படுத்தி, இந்தியப் பிரதமரும், இந்து எதேச்சதிகார கடும்போக்காளரான நரேந்திர மோடி, இந்தியா 'பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும்' என்றும் 'பயங்கரவாதிகளின் மீதமுள்ள நிலத்தை தூசியாக மாற்றும்' என்றும் சபதம் செய்துள்ளார். இந்திய அரசாங்கம் அதன் பரம எதிரியான பாகிஸ்தானை உலகின் பிரதான 'பயங்கரவாத நாடு' என்று நீண்ட காலமாக கண்டித்து வருகிறது.
சமீபத்திய நாட்களில், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரில் இருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு தரப்பினரும் பலமுறை துப்பாக்கி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், கட்டுப்பாட்டு எல்லையின் இருபுறமும் உள்ள உள்ளூர்வாசிகள் எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதையிட்டு பீதியடைந்திருப்பார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. 'சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ். போராவில் வசிக்கும் பலர், 'ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால்' பதுங்குமிடத்தை தயாராக வைத்திருக்க நிலத்தடி பதுங்கு குழிகளை சுத்தம் செய்வதைக் காண முடிந்தது' என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று, அழகிய பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் அருகே நடந்த கமாண்டோ வகை தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தவிர அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர். 2019 இல் மோடி அரசாங்கம் இந்தியாவிற்குள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை இரத்து செய்ததற்கு பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஒரு இஸ்லாமியக் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (முன்னிலை எதிர்ப்பு) அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசாங்கம், ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளை என்றும், இது முன்னர் பாகிஸ்தான் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சில பிரிவுகளின் ஆதரவைப் பெற்ற ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகும் என்றும் குற்றம் சாட்டுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, பாஜக அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பரந்த தேடுதல் நடவடிக்கைகளுடன் ஒரு பெரிய இராணுவ பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. இந்த பாய்ச்சலின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் மூலம் 'சந்தேகத்திற்குரிய போராளிகளின்' ஆறு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 'போராளி ஆதரவாளர்கள்' என்று கருதப்பட்டவர்களின் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குல்காம் மாவட்டத்தின் மதல்ஹாமா கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான ஜாகிர் அகமது கனாயின் தந்தை, தனது வீடு இடிக்கப்பட்ட பின்னர் இந்து பத்திரிகை உடன் பேசினார். 'நாங்கள் அப்பாவிகள்' என்று அவர் கூறினார். 'எங்களுக்கு அது நடந்திருக்கக்கூடாது.' தனது மகன் 27 செப்டம்பர் 2023 அன்று காணாமல் போனதாகவும், வீடு திரும்பவே இல்லை என்றும் அந்த தந்தை கூறினார். அதைத்தொடர்ந்து, கனாய் குடும்பத்தினர் மகன் காணாமல் போனது குறித்து பொலிசில் புகார் செய்துள்ளனர். 'அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது' என்று அவரின் தந்தை கூறினார்.
இந்தியப் பாதுகாப்புப் படையினர், இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் மக்களை, குறிப்பாக சந்தேகத்துக்குரிய நபர்களாக கருதப்படுபவர்களின் கிராமங்களையும் அல்லது சுற்றுப்புறத்தாரையும் கூட்டுத் தண்டனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்திய காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், அதிகாரபூர்வமற்ற மதிப்பீட்டின்படி, ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 1,500 உள்ளூர் இளைஞர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள் கட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்டதால், அருகிலுள்ள குடியிருப்புகளின் சுவர்களில் விரிசல்களும் ஜன்னல்களில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், முன்னாள் பாஜக கூட்டாளியுமான மெஹபூபா முப்தி, இந்த அடக்குமுறையை விமர்சிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதால், பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண வேண்டும் என்று கூறினார்.
இந்திய எதிர்க்கட்சிகளோ பெருநிறுவன ஊடகங்களோ பாஜக அரசாங்கத்திற்கு போர் வெறி, இந்திய பேரினவாதம் மற்றும் முஸ்லிம்-எதிர்ப்பு வகுப்புவாதத்தைத் தூண்டுவதில் உதவுகின்றன.
வியாழக்கிழமை மோடியின் பிரதான விசுவாசியான உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றுப்படி, அரசாங்கம் எடுக்கும் 'எந்தவொரு நடவடிக்கையையும்' முழுமையாக ஆதரிக்க ஒப்புக்கொண்டனர்.
2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வாஷிங்டனின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை விட பாகிஸ்தானுக்கு எதிராக 'பலமான' இராணுவ நடவடிக்கையை தொடங்குமாறு பல ஊடகக் குரல்கள் மோடி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றன. 'பிரதமர் பாகிஸ்தான் மீது போரை அறிவித்தால், அவருக்குப் பின்னால் முழு நாடும் நிற்கும்' என்றும், 'அவர் எதுவும் செய்யாவிட்டால், அவர் அனைவரின் ஆதரவையும் இழப்பார்' என்றும் நீண்டகால இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் தவ்லீன் சிங் எழுதினார்.
பாஜக மற்றும் அதன் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க கூட்டாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு கொடூரமான துன்புறுத்தல் பிரச்சாரத்தின் காரணமாக, பிற மாநிலங்களில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பட்டப்படிப்புகளைப் படித்து வந்த நூற்றுக்கணக்கான காஷ்மீர் மாணவர்கள் காஷ்மீருக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தாக்குதல் முறையை சவால் செய்யத் துணிந்த எவருக்கும் எதிராக அரசாங்கம் அவசரத்துடன் பதிலளித்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் அமினுல் இஸ்லாம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து 'தேசத்துரோக' கருத்துக்களை வெளியிட்டதற்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட 19 பேரில் ஒருவர்.
2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலும், பாஜகவின் உயர்மட்டத் தலைமையின் 'சதி'யால் தூண்டிவிடப்பட்டு, அரசாங்கத்திற்கு ஆதரவாக பொதுமக்களின் கருத்தைத் திருப்புவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இஸ்லாம் பரிந்துரைத்தார். புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 42 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அதிகாரிகள் இன்னும் ஒருபோதும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற இந்து மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை 'வகுப்பு ரீதியாக பிளவுபடுத்த' பாஜக இந்த செயலைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதுவரை புது தில்லி எடுத்த மிகவும் ஆத்திரமூட்டும் பகிரங்க பழிவாங்கும் நடவடிக்கை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (IWR) இந்தியாவின் பங்களிப்பை நிறுத்தி வைத்ததாகும். 1960 இல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், சிந்து நதி அமைப்பின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான சட்ட கட்டமைப்பை வழங்கியதுடன், இரு நாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்டுள்ளன என்பதை உறுதி செய்தது.
இன்று பாகிஸ்தானின் 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயமும், அதன் நீர்மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கும் சிந்து நதிப் படுகையின் நீரைச் சார்ந்துள்ளது. அதன் முக்கியத்துவம் காரணமாக, கடந்த 65 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் இரண்டு அறிவிக்கப்பட்ட போர்கள், பல அறிவிக்கப்படாத போர்கள் மற்றும் எண்ணற்ற எல்லை மோதல்களை நடத்திய போதிலும், புது தில்லி இதற்கு முன்பு ஒப்பந்தத்தை ஒருபோதும் நிறுத்தி வைத்ததில்லை.
இந்த நேரத்தில் அதிக அளவு தண்ணீர் இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்றடைவதைத் தடுக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாவிட்டாலும், ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதன் மூலம், தற்போதைய பயிர் நடுகை பருவம் உட்பட, நீர் பாய்ச்சல்களை சீர்குலைத்து, அவற்றைப் பற்றிய இன்றியமையாத தகவல்களைத் தடுக்கும் அதிகாரத்தை அது பெற்றுள்ளது.
புது தில்லியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அதற்குரிய வழியில் பதிலளித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்களுக்கு தனது வான்வெளியை மூடுவது, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவது, அனைத்து இந்தியர்களையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவது மற்றும் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது ஆகியவை இதில் அடங்கும். 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம், இரு நாடுகளின் போட்டியாளர்களும் காஷ்மீர் முழுவதற்கும் தீர்வு காணும் வரை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஆசாத் காஷ்மீருக்கு இடையேயான எல்லையாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நிறுவியது.
கடந்த வாரம் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது ஆயுதப் படைகள் 'எந்தவொரு தவறான செயலுக்கும் எதிராக [பாகிஸ்தானின்] இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முழுமையாகத் திறன் கொண்டதாகவும், தயாராகவும் உள்ளன' என்று சபதம் செய்தது. இது இரு நாடுகளையும் முழுமையான போரின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற 2019 பெப்ரவரியில் பாலகோட்டில் இந்திய விமானப்படையின் தாக்குதல்களுக்கு அது கொடுத்த பதிலை சுட்டிக்காட்டுவதாகும்.
இந்த அறிவிப்புக்கு பிரதிபலளித்த பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய போது, 'சிந்து எங்களுடையது, எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று எங்கள் நீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின் இரத்தம் பாயும்' என்று கூறினார்.
உலக சோசலிச வலைத் தளம் முன்னர் விளக்கியது போல, “இந்தோ-பாகிஸ்தான் மோதல் என்பது போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான ஒரு பிற்போக்கு மோதலாகும். இந்த மோதலின் தோற்றுவாய், 1947 ஆம் ஆண்டு தெற்காசியாவை ஒரு வெளிப்படையான முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து இந்தியாவாக வகுப்புவாத ரீதியில் பிரித்ததில் வேரூன்றியுள்ளது. ... இந்திய மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கங்கள் இரண்டும் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியுள்ளன. இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களில் ஏற்பட்ட மோசடிகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1989 இல் வெடித்த வெகுஜன போராட்டங்களை புது தில்லி கொடூரமாக அடக்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவின் பேரில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கிய இஸ்லாமிய போராளிகளின் வலையமைப்பை மீண்டும் நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் மூலம், பாகிஸ்தான் தனது சொந்த பிற்போக்கு நலன்களை மேம்படுத்திய நிலையில், இது ஒரு கிளர்ச்சியைத் தூண்டியது.”
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலுடன் பெருகிய முறையில் பிணைக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதல், இரு நாடுகளுக்கும் ஒரு புதிய மற்றும் மிகவும் வெடிக்கும் பரிமாணத்தை எடுத்துள்ளது. சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா தன்னை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கு ஈடாக, நவீன ஆயுதங்கள், சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்துக்கான வாய்ப்பு மற்றும் நிகழ்நேர இராணுவ உளவுத்துறை பகிர்வு உட்பட மூலோபாய சலுகைகளை வாஷிங்டன் புது தில்லிக்கு வழங்கியுள்ளது. இந்த ஆதரவுடன், மோடியின் கீழ் இந்தியா தன்னை பிராந்திய வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்வதன் பேரில் பாகிஸ்தானுடனான தனது உறவை மறுவரையறை செய்வதற்குத் தீவிரமாக நகர்ந்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் பெய்ஜிங்குடனான அதன் 'எல்லா சூழ்நிலையிலுமான' கூட்டாண்மையை இரட்டிப்பாக்கியுள்ளதனால் புது தில்லி மற்றும் வாஷிங்டன் இரண்டையும் மேலும் பகைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் போர் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் கையாள்வதில் புது தில்லி மேலும் மேலும் போரைத்தூண்டும் நிலைப்பாட்டை எடுப்பதற்காக வாஷிங்டன் பலமுறை ஊக்குவித்து வருவதை நன்கு அறிந்திருந்தும், பெய்ஜிங் இஸ்லாமாபாத்துடனான தனது கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் நடந்த உரையாடலுக்குப் பின்னர், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, நிதானத்தை வலியுறுத்தியும், ஏப்ரல் 22 பஹல்கம் தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 'சீனா, அதன் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை எப்போதும் ஆதரித்து வருகிறது. ஒரு உறுதியான நண்பராகவும், எல்லா சூழ்நிலையிலுமான மூலோபாய பங்காளியாகவும், சீனா பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானை ஆதரிக்கிறது' என்று வாங் கூறினார்.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலந்தொட்டு அடுத்தடுத்த நிர்வாகங்கள், இந்தியாவுடனான அமெரிக்காவின் 'உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை' எனப்படுவதை வலுப்படுத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹல்கம் தாக்குதல் நடந்தபோது, அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் இருந்தார். புது தில்லி, வாஷிங்டன் மற்றும் அதன் முதன்மை ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இராணுவ பாதுகாப்பு கூட்டணிக்கு ஒப்பான குவாட்டின் (QUAD) இன் அடுத்த அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரவிருக்கும் மோதல் அச்சுறுத்தல் குறித்து, -அதாவது, அது அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒரு முழுமையான மோதலாக துரிதமாக மாறி ஏனைய உலக சக்திகளையும் உள்ளிழுக்கக்கூடிய அச்சுறுத்தல் குறித்து- வாஷிங்டன் பகிரங்கமாக எதுவும் கூறவில்லை. திரைக்குப் பின்னால், 2016 இல் ஒபாமாவும் 2019 இல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் வழங்கியது போலவும், 'பழிவாங்கும் பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கான' அதன் 'உரிமையை' வாஷிங்டன் ஆதரிக்க வேண்டும் என்று இந்தியா நிச்சயமாகக் கோரும்.
வெள்ளிக்கிழமை, போப்பின் இறுதிச் சடங்கிற்காக ரோம் செல்லும் வழியில், இந்திய-பாகிஸ்தான் மோதல் குறித்து அலட்சியமான மற்றும் பிற்போக்கு கருத்துக்களை வெளியிட்ட ட்ரம்ப், அவர்கள் 'ஏதாவது ஒரு வழியில் (அதை) தீர்த்துக்கொள்வார்கள்' என்று கூறினார். 'நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், நான் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்' என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார். 'அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளாக அந்தச் சண்டையைப் போட்டுக் கொண்டுள்ளனர். காஷ்மீர் சண்டை 1,000 ஆண்டுகளாக நடந்து வருகிறது, அநேகமாக அதை விட நீண்டதும் கூட' என அவர் கூறினார்.
இது, பிரிட்டிஷ் காலனித்துவ மற்றும் இந்து மேலாதிக்கவாத வரலாற்றின் கட்டுமானத்தில் வேரூன்றயுள்ள ஒரு விடயத்தைப் பற்றி ஒரு மிகப்பெரிய திரிபுபடுத்தல் ஆகும். ஆச்சரியப்படுவதற் இடமின்றி, இது உடனடியாக இந்து தீவிர வலதுசாரிகளால் பாராட்டப்பட்டதுடன், ஐக்கிய இந்து கவுன்சில், 'இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஏற்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான மதப் பிழைகள் பற்றிய ஆழமான வரலாற்றைப் பற்றி குறிப்பிட்டமைக்காக,” எதுவும் அறியாத பாசிச அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டியது.
தெற்காசியாவில் வளர்ந்து வரும் போர் ஆபத்து, முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் தேசிய முதலாளித்துவத்தின் ஊழல் தன்மை மற்றும் 'காலனித்துவ நீக்கம்' மூலம் உருவாக்கப்பட்ட காலனித்துவத்திற்குப் பிந்தைய தேசிய-அரசு அமைப்பின் பிற்போக்கு தன்மை ஆகியவற்றின் பேரழிவுகரமான வெளிப்பாடாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த அரசாங்கங்களை எதிர்க்க வேண்டியதன் அவசரத்தையும், சமூக சமத்துவமின்மை, வகுப்புவாதம் மற்றும் போருக்கு எதிராக தங்கள் வர்க்க ஒற்றுமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், சோசலிசப் புரட்சி மூலம் போரின் மூல காரணமான முதலாளித்துவத்தை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தில் வட அமெரிக்கா, சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டியதன் அவசரத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் படிக்க
- புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன
- இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்துகிறது
- சீனாவுடன் சர்ச்சையிலுள்ள தனது எல்லையில் இந்தியா 10,000 மேலதிக துருப்புக்களை நிறுத்துவதால் பதற்றம் அதிகரிக்கிறது