இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்)
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அக்டோபர் 6 அன்று நடைபெற்ற போராட்ட நடவடிக்கையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் இளைஞர்களும் தொழிலாளர்களும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக பேரணியாகச் சென்றனர். ஸ்பெயினில் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்படுவதுக்கும், வாங்க முடியாத வீட்டு விலைகளுக்கும் எதிரான பாரிய போராட்டங்கள், போர்த்துக்கலில் பொதுத்துறை வேலைநிறுத்தங்கள், பெல்ஜியத்திலும் ஜேர்மனியிலும் இளைஞர் போராட்டங்கள் என நிகழ்வுகளின் வீச்சு தெளிவாக உள்ளது. ஒரு ஐரோப்பிய மாபெரும் இயக்கம் பொலிஸ் அரசுடனும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்துடனும் மோதிக் கொண்டிருக்கிறது.
பிரான்சில், நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டோ அல்லது மூடப்பட்டோ உள்ளன. கொடூரமான வன்முறை மற்றும் பெருமளவிலான கைது நடவடிக்கைகளுடன் பொலிசார் பதிலளித்து வருகின்றனர். வெறும் இரண்டு வாரங்களில், பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் சிறார்களான 6,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 5,000-க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். லென்ஸ் நகரில் பொலிசாரின் ஸ்டென் துப்பாக்கியால் சுடப்படும் குண்டை எடுத்ததால் 15 வயது சிறுவன் ஒருவன் தனது கையை இழந்தான்.
1968-ஆம் ஆண்டு மே-ஜூன் மாத நிகழ்வுகளை —அப்போது மாணவர் போராட்டங்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறை பிரெஞ்சு வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டியது— நினைவுகூரும் வகையிலான போராட்ட முழக்கங்கள் பிரான்ஸ் முழுவதும் பரவி வருகின்றன. அடிப்படை சமூக மாற்றத்தை வேண்டி, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு வளர்ந்து வரும் பிரிவு இடதுசாரிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இளைஞர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்தவும், பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள நெருக்கடிக்குத் தனது சொந்தத் தீர்வை முன்வைத்து, தொழிலாள வர்க்கம் எவ்வாறு தலையிட்டு, தனது சமூக சக்தியைத் திரட்ட முடியும் என்பதே இப்போதைய கேள்வியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஒவ்வொரு தீர்க்கமான பிரச்சினையிலும் சாமானிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்துகிறது. வர்க்கப் போராட்டத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இது அவசியமானது.
பிரான்சின் முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் வரவிருக்கும் வாரங்களில் பகுதியளவிலான வேலைநிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இவை, நாடு தழுவிய நடவடிக்கையை நவம்பர் 5 வரை தாமதப்படுத்தியுள்ளன.
ஆனால் தொழிலாளி வர்க்கம் நவம்பர் 5 வரை காத்திருக்க முடியாது. வர்க்கப் போராட்டம் இப்போதே சுதந்திரமாக வளர்ச்சியடைய வேண்டும். இளைஞர்களின் போராட்டங்களின் வெடிப்பான ஆற்றலை, பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதின் பக்கம் திருப்ப வேண்டும்.
தொழிற்சங்கத் தலைமைகள் போராட்ட இயக்கத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைக்கவும், அதைத் தனித்தனி போராட்ட நாட்களாகவும், துறைவாரியான நடவடிக்கைகளாகவும் பிளவுபடுத்தவும், ஒரு பரந்த அணிதிரட்டலைத் தடுத்துக்கொண்டே அரசாங்கத்திடம் வரையறுக்கப்பட்ட சலுகைகளைக் கோரவும் முயன்று வருகின்றன. 2023-ல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுத்த இவர்கள், இறுதியில் மக்ரோன் அந்தச் சட்டத்தை அமல்படுத்தியதும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதுவே அவர்கள் ஆற்றிய பங்காகும்.
ஜோன்-லூக் மெலோன்சோனும் அவரது அடிபணியாத பிரான்ஸ் கட்சியும் (LFI) வெவ்வேறு வழிகளில், தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பிற்குள் இந்த இயக்கத்தை அடக்கிவைக்க முயல்கின்றனர். மெலென்சோன் பொலிஸ் வன்முறையைக் கண்டித்து, போராட்டங்களுக்கு ஆதரவளித்தாலும், இந்த இயக்கத்தை 2027 ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திருப்பிவிட வெளிப்படையாகவே முயல்கிறார். “அணிதிரட்டல் மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்கான இந்தக் காலகட்டத்தில், 2027-ஆம் ஆண்டை நோக்கிய” ஒரு முன்னோக்கை முன்வைப்பதன் மூலம் LFI செயல்பட வேண்டும் என்று அவர் எழுதினார்.
இது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் சுயாதீனத்தை வளர்ப்பதற்கு நேர் எதிரானதாகும். முதலாளித்துவ அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் ஒரு வெடிமருந்து போன்ற இயக்கத்தை, தேர்தல்கள் மூலம் அந்த அரசைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் சக்தியாக மாற்ற மெலன்சோன் முயல்கிறார்.
பிரெஞ்சு முதலாளித்துவத்திற்குள்ளேயே அடிப்படையான சமூக மேம்பாடுகளை அடைய முடியும் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் அவரது முன்னோக்காகும். ஆனால், முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடிக்கு தேசிய அல்லது சீர்திருத்தவாதத் தீர்வு கிடையாது.
பிரான்சின் பொதுக் கடன் கிட்டத்தட்ட 3.6 டிரில்லியன் யூரோவாக, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 119 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதிச் சந்தைகள் மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கோரும் வேளையில், கடனை திருப்பிச் செலுத்தும் செலவுகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அதே நேரத்தில், பிரெஞ்சு அரசு இராணுவ மறுஆயுதமயமாக்கலுக்காகவும் தனது அணு ஆயுதக் களஞ்சியத்திற்காகவும் பல பத்துக்கணக்கான பில்லியன் யூரோக்களைக் கொட்டுகிறது.
இதே அழுத்தங்கள் ஐரோப்பா முழுவதும் நிலவுகின்றன. அரசாங்கங்கள் பெருமளவிலான கடன்களையும், பொருளாதாரத் தேக்கத்தையும், சமூகச் செலவினங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென நிதியியல் தன்னலக்குழு விடுக்கும் அதிகரித்து வரும் கோரிக்கைகளையும் எதிர்கொள்கின்றன.
அதி தீவிர வலதுசாரிகள் இந்த நெருக்கடியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுடன், இன்னும் கொடூரமான வேலைத்திட்டத்தையும் முன்வைக்கின்றனர். தேசிய பேரணி கட்சியின் தலைவர் மரின் லூ பென் சமூகக் கோபத்தை, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான திசைதிருப்பும் அதேவேளையில், வலுவான பொலிஸ் அரசு எந்திரத்தைக் கோரி, 2032 க்குள் 140 பில்லியன் யூரோ மதிப்பிலான வெட்டுக்களை வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்போவதாக உறுதியளிக்கிறார்.
அதி தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி என்பது, மக்கள் தொகை சீராக வலதுசாரிகளை நோக்கி நகர்வதன் வெளிப்பாடு அல்ல. மாறாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதுசாரிப் பாதையை நோக்கித் திரும்பும் வளர்ந்து வரும் இயக்கத்தின் பின்னணியில், வர்க்கப் போராட்டத்தை முதலாளித்துவ அரசுக்குக் கீழ்ப்படுத்தும் அமைப்புகளால், அந்த இயக்கத்தின் சுயாதீனமான அரசியல் வெளிப்பாடு தடுக்கப்பட்டுவரும் நிலையில் இது தலையெடுக்கிறது.
இதனுடன் பிணைந்த வகையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அசாதாரண ஆக்கிரோஷத்துடன், இராணுவவாதத்தையும் ரஷ்யாவிற்கு எதிரான போரையும் நோக்கித் திரும்பி வருகிறது.
இங்கு சர்வதேச மோதலும் உள்நாட்டு வர்க்க நெருக்கடியும் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. ஊதியங்கள், ஓய்வூதியங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூகச் செலவினங்கள் மீதான மேலும் ஆழமான தாக்குதல்கள் மூலமாக மட்டுமே, ஐரோப்பிய மறு ஆயுதமயமாக்கலுக்குத் தேவையான நூற்றுக்கணக்கான பில்லியன்களை பிழிந்தெடுக்க முடியும். இதன் விளைவாக எழும் சமூக எதிர்ப்பு, ஆளும் வர்க்கம் தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கித் திரும்புவதைத் தீவிரப்படுத்துகிறது.
முதலாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில், ஏகாதிபத்திய சக்திகள் ஆயுதப் போட்டியைத் துரிதப்படுத்தி ஒரு சர்வதேச நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஐரோப்பாவானது பாரிய வேலைநிறுத்தங்களாலும் வளர்ந்துவந்த புரட்சிகர தொழிலாளி வர்க்கப் போராட்டத்தாலும் உலுக்கப்பட்டது.
1914 இல் போர் வெடித்தபோது, தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது சொந்த முதலாளித்துவ வர்க்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கோருவதற்கு ஆளும் வர்க்கங்கள் தேசியப் பாதுகாப்பை ஒரு காரணமாகக் கூறின. பிரான்சில், சோசலிசக் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் யூனியன் சாக்ரே என்ற புனிதக் கூட்டணியில் இணைந்து கொண்டன. ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி உள்நாட்டு அமைதி (Burgfrieden) என்ற ஒரு அரசியல் ஒப்பந்தத்தைக் ஆதரித்து போருக்கான கடனை வழங்குவதற்கு வாக்களித்தது.
அரசாங்கங்கள் உள்நாட்டு அமைதியின்மையை எதிர்கொள்வதால் மட்டுமே போர்களைத் தொடங்குவதில்லை. ஏகாதிபத்தியப் போருக்கான அடிப்படைக் காரணங்கள் முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் முரண்பாடுகளில் உள்ளன. ஆனால் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்களுக்கு, இராணுவமயமாக்கலானது “தேசிய ஒற்றுமையைக்” கோரவும், அளப்பரிய தியாகங்களைத் திணிக்கவும், அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்தவும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
இந்தத் தொடர்பு அக்டோபர் 6 அன்று தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் முழுவதும் இலட்சக்கணக்கானோர் பேரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பிரெஞ்சு இராணுவம் தனது சமீபத்திய M51.3 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையின் முதல் சோதனை ஏவுதலை நடத்தியது.
காலினின்கிராட்டுக்கு எதிரான நேட்டோவின் அச்சுறுத்தல்கள் குறித்து மாஸ்கோ வெளிப்படையான அணுவாயுத எச்சரிக்கையை விடுத்த சில நாட்களிலேயே இந்த ஏவுதல் நடந்தது. ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தினாலும், அது ஒரு பேரழிவுகரமான எதிர்வினையைத் தூண்டாது என்ற பொறுப்பற்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே நேட்டோ நாடுகள் செயல்படுகின்றன.
ஆனால், முந்தைய நெருக்கடிகளில் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிப் பிழைப்பது, அடுத்த நெருக்கடியைப் பாதுகாப்பானதாக மாற்றிவிடாது. 1914-ஆம் ஆண்டு நிகழ்வு நிரூபிப்பது போல, இது துல்லியமாக அந்த அலட்சியத்தையும் தவறான கணக்கீட்டையும் உருவாக்கி, இராணுவ மோதல் வெடிக்கும் தருணம் வரையான விளிம்புநிலைப் போரை ஒரு பேரழிவில் கொண்டு போய் விட்டுவிடுகிறது.
போர் விரிவாக்கமும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. பள்ளிகள், மருத்துவமனைகள், ஓய்வூதியங்கள், வீட்டுவசதிக்குப் பணம் இல்லை எனத் தொழிலாளர்களிடம் கூறும் அதே அரசாங்கங்கள், ஆயுதங்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடுகின்றன. மேலும், வெளிப்புறப் பாதுகாப்பு என்ற பெயரில் வலுப்படுத்தப்பட்ட இராணுவ-பொலிஸ் எந்திரம் உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு முற்போக்கான தீர்வுக்குச் சோசலிசக் கொள்கைகள் தேவைப்படுகின்றன: அதாவது, நிதியியல் தன்னலக்குழுவின் பெருஞ்செல்வத்தைப் பறிமுதல் செய்யவும், சமூகத்தை அது கொள்ளையடிப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும், போர் நோக்கிய விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தவும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவது அவசியமாகும்.
உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் அத்தகைய போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்கான சக்திவாய்ந்த நெம்புகோலாக மாறக்கூடும். இளைஞர்கள் தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் தொழிலாள வர்க்கப் பகுதிகளுக்குச் சென்று, இராணுவ-பொலிஸ் அமைப்பின் அதிகரிப்பு, அதி தீவிர வலதுசாரிகள், சமூக வாழ்வில் வங்கிகளின் சர்வாதிகாரம் மற்றும் தீவிரமடைந்து வரும் உலகப் போர் ஆகியவற்றால் ஏற்படும் பொதுவான ஆபத்துகளை விளக்க வேண்டும். பதிலுக்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் கோரப்படும் கால அட்டவணையிலிருந்து சுயாதீனமாக இளைஞர்களின் பாதுகாப்புக்காக அணிதிரள வேண்டும்.
புதிய போராட்ட அமைப்புகளும் ஒரு புரட்சிகர அரசியல் முன்னோக்கும் தேவைப்படுகின்றன. பிரெஞ்சு, ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் முழுவதும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு PES விடுக்கும் அழைப்பின் பொருள் இதுவே ஆகும். 1930-களின் வெடிப்பான வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில், “போராடும் மக்களின் புரட்சிகரப் பிரதிநிதித்துவத்தின் வழியாக, கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் புரட்சிக்கு எதிரான எதிர்ப்பை“ உடைப்பதற்கான ஒரு சாதனமாக, நடவடிக்கைக் குழுக்களை லியோன் ட்ரொட்ஸ்கி அழைத்தார்.
நடவடிக்கைக் குழுக்கள் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடங்களிலும் நிறுவப்பட வேண்டும். அவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களால் கட்டுப்படுத்தப்படுபவையாகவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து சுயாதீனமானவையாகவும் செயல்பட வேண்டும். அவற்றால் பள்ளிகளைப் பள்ளிகளுடனும், பல்கலைக்கழகங்களைப் பல்கலைக்கழகங்களுடனும், பணியிடங்களைப் பணியிடங்களுடனும் இணைக்க முடியும். பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க முடியும். கூட்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குத் தயாராகவும் முடியும். மேலும், தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்ட தேசிய மற்றும் துறைவாரியான பிளவுகளை உடைத்து எறியவும் முடியும்.
மேலும், அத்தகைய இயக்கம் பிரான்சுக்குள் மட்டுமே முடங்கி இருக்க முடியாது. ஸ்பெயின், போர்த்துக்கல், பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் பிரான்சில் நடைபெறும் போராட்டங்கள், அதே முதலாளித்துவ நெருக்கடியால் தூண்டப்படும் ஒரு சர்வதேச செயல்முறையை வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் போருக்கான ஆயத்தங்களை விரைவுபடுத்துவதால், முழுக் கண்டமும் ஒரு வெடிமருந்து கிடங்காக மாறி வருகிறது.
தேசிய எல்லைகளைக் கடந்து இந்த இயக்கங்களை ஒன்றிணைத்து, அவற்றுக்குச் சாத்தியமான அதிகபட்ச வலிமையை அளிப்பதே இன்றைய பணியாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் மாற்று வழி என்பது மக்ரோன், மெலன்சோன் மற்றும் லூ பென் ஆகியோருக்கு இடையிலான தேர்வு அல்ல. மாறாக, முதலாளித்துவத்தின் கீழ் நிலவும் சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு அடக்குமுறை மற்றும் போரை நோக்கிய ஆழமான சரிவுக்கும், சோசலிசம் மற்றும் ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கும் இடையிலான தேர்வாகும்.
