இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பத்தியாளரான கிடியன் ரச்மன் (Gideon Rachman), முதலாளித்துவ பத்திரிகையாளர்களில் மிகவும் அறிவார்ந்தவர்களில் ஒருவராகவும், வரலாற்றை நன்கு அறிந்தவராகவும் பரவலாகக் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், இருபதாம் நூற்றாண்டின் பேரழிவுகளை அவர் மனதில் கொண்டிருந்தார். பொறுப்பற்ற தவறான கணிப்புகளுக்கு எதிராக அரசியல் தலைவர்களை எச்சரிப்பதற்கு, இரண்டு உலகப் போர்களின் படிப்பினைகளை ரச்மன் அடிக்கடி பயன்படுத்தி வந்தார்.
2013 பிப்ரவரி 4 அன்று FT-யில் வெளியான ரச்மனின் மிகவும் பிரபலமான கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பு, “பசிபிக் மீது 1914இன் நிழல் படர்கிறது” என்பதாகும். அது பின்வருமாறு தொடங்கியது:
முதல் உலகப் போரில் வீரர்கள் ‘அகழிகளிலிருந்து மேலேறி’ தாக்குதலுக்குச் செல்வதைக் காட்டும் மினுங்கும் கறுப்பு-வெள்ளைப் படங்கள், இன்று எட்ட முடியாத தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றன. ஆயினும், 1914இல் நடந்ததைப் போல இன்றைய பெரும் சக்திகள் மீண்டும் ஒருபோதும் போருக்குள் தடுமாறி விழ முடியாது என்ற கருத்து அளவுக்கு மீறிய தன்னிறைவுணர்வை வெளிப்படுத்துகிறது. சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வெடித்த அந்தப் பயங்கரமான மோதலின் எதிரொலிகளை நினைவூட்டுகின்றன.
தவறான கணிப்புகளின் விளைவுகளை மறந்துவிடக் கூடாது என்று ரச்மன் எச்சரித்ததோடு, “நாம் அணு யுகத்தில் வாழ்கிறோம் என்ற உண்மையும், 1914 நெருக்கடி மீண்டும் நிகழும் வாய்ப்பை மிகவும் குறைக்கிறது” என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
2022இல் வெடித்த உக்ரேன் போர், ரச்மனின் கண்ணோட்டத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்று அறிவின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும் அவரது திறன், இந்த மோதலில் பலியானவற்றுள் ஒன்றாகும். ஒரு காலத்தில் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் தவறான கணிப்புகளுக்கு எதிராக எச்சரித்த அந்தப் பத்திரிகையாளர், இப்போது பொறுப்பற்ற தன்மையையே ஒரு மூலோபாயக் கொள்கை என்ற நிலைக்கு உயர்த்துகிறார்.
அக்டோபர் 5 அன்று, பைனான்சியல் டைம்ஸ் “புட்டினின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இனி பலனளிப்பதில்லை” என்ற தலைப்பில் ரச்மன் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு, கலினின்கிராட் பிராந்தியத்தைத் தனிமைப்படுத்த நேட்டோ முயன்றால், “அணு ஆயுதங்கள் உட்பட தன் வசமுள்ள படைகள் மற்றும் திறன்கள் அனைத்தையும்” பயன்படுத்தும் என்று அறிவித்து, ரஷ்ய அரசாங்கம் நேட்டோவுக்கு ஒரு குறிப்பாணையை அனுப்பியிருந்தது. நேட்டோ நாடுகளில் உள்ள “முடிவெடுக்கும் மையங்கள்” மீதான தாக்குதல்களுடன் ஒரு மோதல் தொடங்கக்கூடும் என்றும் அந்தக் குறிப்பாணை எச்சரித்தது. அக்டோபர் 1 அன்று வால்டாய் கலந்துரையாடல் மன்றத்தில் (Valdai Discussion Club), அந்தக் குறிப்பாணையில் கூறப்பட்ட எச்சரிக்கைகள் உண்மையாகவே பொருள்படும் என்றும், அவை வெறும் வார்த்தைகள் அல்ல என்றும் விளாடிமிர் புட்டின் உறுதிப்படுத்தினார்.
ரச்மனின் பதில், தனது வாசகர்களுக்கு உறுதியளிப்பதாக அமைந்துள்ளது. 2022 பிப்ரவரி முதல், புட்டின் தனது அச்சுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமல், மேற்குலகை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதக் களஞ்சியத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்துள்ளார் என்று அவர் எழுதுகிறார். “ஒரு காலத்தில் பரிசீலனைக்குக் கூட உரியதாகக் கருதப்படாத” டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரேனுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025 ஜூனில் ரஷ்யாவின் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை உக்ரேன் தாக்கியது; ஆனால் எதுவும் நிகழவில்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தடைமரபு “மிகவும் வலிமையானது” என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், ரஷ்யாவின் தடுப்பாற்றல் சரிவு “பெரும்பாலும் நல்ல செய்தி” என்றும் அவர் முடிவுக்கு வருகிறார்.
இந்தக் கட்டுரை பதிலளிக்கத் தகுதியானது. ஏனெனில், பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் பால்டிக் நாடுகளின் அரசாங்கங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரை நடத்துவதற்கு அடிப்படையாகக் கொண்டுள்ள அனுமானத்தை அது வழக்கத்திற்கு மாறாக ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறது: ரஷ்யா இதுவரை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்பதால், நேட்டோ எத்தகைய நடவடிக்கையில் இறங்கினாலும் அது அவற்றைப் பயன்படுத்தாது என்பதே அந்த அனுமானமாகும்.
இது, இப்போது நிலவாத சூழ்நிலைகளில் நடந்த நடத்தையிலிருந்து பெறப்பட்ட ஒரு அனுமானமாகும். போரின் பெரும்பகுதிக் காலத்தில் சண்டை உக்ரேனுக்குள் மட்டுமே வரம்புக்குட்பட்டிருந்தது; தலையீடு செய்வோம் என்ற நேட்டோவின் வெளிப்படையான அச்சுறுத்தல்களை ரஷ்யா இன்னும் எதிர்கொள்ளவில்லை; ரஷ்யக் கூட்டமைப்பின் எந்தப் பகுதியும் தாக்கப்பட்டு, அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகவில்லை. 2022ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் ரஷ்யா கடுமையான இராணுவப் பின்னடைவைச் சந்தித்த ஒரே சந்தர்ப்பத்தில், தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யத் தளபதிகள் விவாதித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்; ஜனாதிபதி பைடன் “ஆர்மகெதோன்” [உலகளாவிய பேரழிவின்] ஆபத்து குறித்துப் பகிரங்கமாகப் பேசினார். இதுவரையிலான பதிவு காட்டுவது ஒன்றே: அணு ஆயுதப் பயன்பாட்டுக்கான எல்லைக்கோடு இன்னும் எட்டப்படவில்லை என்பதைத்தான்.
ஆனால், புட்டினின் உரை சுட்டிக்காட்டுவதைப் போல, அது இனி அவ்வாறு இல்லாமல் இருக்கலாம். சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் ரஷ்யப் பிராந்தியமான கலினின்கிராட், போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் இடையில், பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைந்ததன் விளைவாக நேட்டோவின் ஏரியாக மாறியுள்ள பால்டிக் கடலில் அமைந்துள்ளது. கோடைக்காலம் முழுவதும் நேட்டோ, இந்தத் தனித்துப் பிரிந்துள்ள ரஷ்யப் பிரதேசத்தைச் சுற்றி வான்வழி மற்றும் கடல்வழித் தரையிறக்கப் பயிற்சிகளை நடத்தியது. செப்டம்பரில், போலந்தின் வெளியுறவு அமைச்சர் ரடோஸ்வாவ் சிகோர்ஸ்கி, உக்ரேன் போருக்காக ரஷ்யா கலினின்கிராடிலிருந்து துருப்புகளை அகற்றிவிட்டதாகக் குறிப்பிட்டதோடு, கூட்டணியின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கிரெம்ளினால் உறுதியாகக் கணிக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட நேட்டோப் பயிற்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். 2024 நவம்பரில் திருத்தப்பட்ட ரஷ்யாவின் அணு ஆயுதக் கோட்பாடு, நாட்டின் ஆட்சிப்பகுதி ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் மரபுவழித் தாக்குதலுக்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அந்த விதி கலினின்கிராடுக்காகவே எழுதப்பட்டது.
ரச்மன் மறந்துவிடத் தேர்ந்தெடுத்த வரலாற்றை நாம் நினைவுகூர்வோம். 1914க்கு முன்னர் ஐரோப்பிய சக்திகள் மொராக்கோ, போஸ்னியா, அகாதிர், பால்கன் போர்கள் எனத் தொடர்ச்சியான நெருக்கடிகளைக் கடந்து வந்தன; அவற்றில் ஒவ்வொன்றும் பொதுப் போரை எட்டுவதற்கு முன்பே முடிவுக்கு வந்தது. 1909இல் போஸ்னியா தொடர்பாக ஜேர்மனி விடுத்த இறுதிக்கெடுவுக்கு முன்னால், பலவீனமடைந்திருந்த ரஷ்யா பணிந்தது. 1914 ஜூலையில், ரஷ்யா மீண்டும் பின்வாங்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் பேர்லின் செயல்பட்டது. ஆனால் ரஷ்யா பின்வாங்கவில்லை. இரண்டாவது முறையாகச் சரணடைவது, ரஷ்யாவின் பெரும் சக்தி என்ற அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜாரின் அமைச்சர்கள் முடிவு செய்தனர். பிரிட்டனில் புட்டினின் எச்சரிக்கைகளைவிட “மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகத்தின் சிக்கல்களே பெரிய செய்தியாக இருந்தன” என்று ரச்மன் குறிப்பிடுகிறார். 1914 ஜூலையின் இறுதி நாட்களில், ஆஸ்திரியா-ஹங்கேரி செர்பியா மீது போர் அறிவித்த அதே நாளில் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மேடம் கைலோவின் விசாரணையில் பிரெஞ்சு மக்கள் மூழ்கியிருந்தனர்.
கிரெம்ளினின் பார்வையிலிருந்தும் ரஷ்யப் பொதுப் படைத்தலைமையகத்தின் பார்வையிலிருந்தும் நோக்கினால், ரச்மன் மேற்கோள் காட்டும் பதிவு நேர்மாறான முடிவையே சுட்டிக்காட்டுகிறது. நேட்டோவின் தீவிரப்படுத்தலைத் தடுப்பதற்கான அணு ஆயுதமல்லாத ஒவ்வொரு வழிமுறையும் தோல்வியடைந்துள்ளது. ரச்மனே குறிப்பிடுவதைப் போல, “உக்ரேன் போர் குறித்த நேட்டோவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது.” மரபுவழிப் படைகளில் ரஷ்யா கூட்டணியைவிட மிகவும் பலவீனமாக உள்ளது; கலினின்கிராடை மரபுவழி வழிமுறைகளால் பாதுகாக்க முடியாது. பகிரங்கமாக அளிக்கப்பட்டு, முதல் சோதனையிலேயே கைவிடப்படும் ஒரு அணு ஆயுத உத்தரவாதம், மற்ற எல்லா முனைகளிலும் தனது மதிப்பை இழந்துவிடும். ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது மறுஆயுதமயமாக்கல் 2029 அல்லது 2030க்குள் நிறைவுபெற வேண்டும் என்று அறிவிக்கின்றன; இது படைபலச் சமநிலை தனக்கு எதிராகத் தொடர்ந்து மாறிவரும் என்பதை ஒரு ரஷ்யத் திட்டமிடுபவருக்கு உணர்த்துகிறது. போர் பின்னர் நடைபெறுவதைவிட விரைவில் நடைபெறுவது சிறந்தது என்று 1914இல் ஜேர்மன் பொதுப் படைத்தலைமையகத்தை நம்பவைத்த தர்க்கமும் இதுவே. நேட்டோவுடனான ஒரு போர், ரஷ்யாவின் அணுசக்திப் படைகளின் கட்டளை அமைப்புகள் மீதான தாக்குதல்களுடன் தொடங்கும்; அது அந்த ஆயுதங்களை இழப்பதற்கு முன்பே அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அழுத்தத்தை உருவாக்கும். ரஷ்யாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் இணைந்துள்ள ஓர் அறிவியல் மன்றத்தில் உறுப்பினராக உள்ள செர்கேய் கரகானோவ், ரஷ்யத் தடுப்பாற்றலின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்காக ஐரோப்பா மீது அணுசக்தித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்டுள்ளார். இத்தகைய குரல்களை, “ஆவேசமாகக் கூச்சலிட்டு, கற்பனையில் மிதக்கும்” கருத்துரையாளர்கள் என்று ரச்மன் புறக்கணிக்கிறார்.
புட்டினின் அரசாங்கம், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீளமைக்கப்பட்டதன் விளைவாக உருவான தன்னலக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆகவே, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர்களை அவர்களது சொந்த அரசாங்கங்களுக்கு எதிராக அது வேண்டுகோள் விடுக்க முடியாது. அதன் கையில் உள்ள ஒரே சாதனம் இராணுவப் பலமே; நேட்டோவுடனான போரில் தோல்வியடைவது அதன் முடிவையே குறிக்கும். இவற்றில் எதுவும் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உறுதி என்ற பொருளல்ல. ஆனால் நேட்டோ எடுக்கும் ஒவ்வொரு அடியும், தன் சிவப்புக் கோடுகளில் குறைந்தது ஒன்றாவது உண்மையானது என்பதை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தை மாஸ்கோ மீது அதிகரிக்கிறது.
ரஷ்யாவுடனான போர் மரபுவழிப் போராகவே தொடரும் என்பதையும் ரச்மன் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கிறார். பிப்ரவரியில் ஒரே இரவில், உக்ரேனின் எரிசக்தி அமைப்பின் மீது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் சுமார் 450 ட்ரோன்களையும் ரஷ்யா ஏவியது. இத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கு ஐரோப்பாவிடம் இல்லை. ரஷ்யக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்ட இலக்குகளுடன், அமெரிக்கத் துணைப்படைகள் கடந்து வர வேண்டிய துறைமுகங்கள், ரயில் சந்திப்புகள், மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளும் சேர்க்கப்படும். உக்ரேன் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வருவதை, ஐரோப்பா ஒரு சில வாரங்களிலேயே அனுபவிக்க நேரிடும்.
நேட்டோவின் அரசாங்கங்கள், தங்களிடமுள்ள ஆயுதங்களை நாடாமலேயே இத்தகைய “மரபுவழி” பேரழிவுக்குப் பணிந்துவிடும் என்று ரச்மன் உறுதியாக நம்புகிறாரா? அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதை நேட்டோ ஒருபோதும் கைவிட்டதில்லை. பிரெஞ்சு அணு ஆயுதக் கோட்பாடு “இறுதி எச்சரிக்கை”க்கு இடமளிக்கிறது; அதாவது, தனது உறுதியை வெளிப்படுத்துவதற்கான வரம்புக்குட்பட்ட அணு ஆயுதத் தாக்குதல். மார்ச்சில், சான்சலர் மெர்ஸின் ஆதரவுடன் ஜனாதிபதி மக்ரோன் பிரான்சின் தடுப்பாற்றலை ஐரோப்பாவிற்கும் விரிவுபடுத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் போரைத் தீவிரப்படுத்தி வந்துள்ள அரசாங்கங்கள், தோல்விக்கும் அணு ஆயுத வழிக்கும் இடையே ஒரு தேர்வை எதிர்கொள்ளும். அணு ஆயுதத் தாக்குதலுக்கு ரஷ்யா அளிக்கும் பதில் குறித்து ரஷ்யக் கோட்பாடு எந்தச் சந்தேகத்துக்கும் இடமளிக்கவில்லை. அந்த எல்லைக்கோடு ஒருமுறை தாண்டப்பட்டுவிட்டால், வரம்புக்குட்பட்ட பரிமாற்றம் என்ற கோட்பாட்டுக்கு ஆதாரமாக எதுவும் இருக்காது. 2019இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு உருவகப்படுத்துதல், ஒரேயொரு ரஷ்ய எச்சரிக்கைச் சூட்டுடன் தொடங்கி, சில மணி நேரங்களுக்குள் 90 மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்படவோ காயமடையவோ நேரிடும் என்று கணித்தது.
ரச்மன் தனது கட்டுரையை, தனது தன்னிறைவான வாதம் முழுவதையும் தகர்க்கும் ஒரு கூற்றுடன் முடிக்கிறார்: “உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து, அணு ஆயுதத் தடுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தங்கள் கருத்துக்களை ரஷ்யாவும் நேட்டோவும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிரான தடைமரபு தெளிவாகவே மிகவும் வலிமையானது. ஆனால் அது முழுமையானதா? யாராலும் உறுதியாகக் கூற முடியாது. அத்தகைய நிச்சயமின்மை ஆபத்தானது.”
அந்த நிச்சயமின்மையின் அளவு சரியாக எவ்வளவு? அணு ஆயுதத் தடைமரபு உடைக்கப்படுவதற்கான வாய்ப்பு 10 சதவீதமா, 20 சதவீதமா அல்லது 50 சதவீதமா? ரஷ்யாவுடனான மோதல், நான்கு அறைகளில் அணு முனை கொண்ட தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ரஷ்யன் ரூலெட் (Russian roulette) விளையாட்டாக மாறுவது எந்தக் கட்டத்தில்? தவறாகக் கணிப்பதன் விளைவு ஐரோப்பியக் கண்டத்தின் அழிவாக இருக்கக்கூடும் என்ற நிலையில், எந்த அளவிலான ஆபத்தை ரச்மன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்?
அவர் அதைக் கூறவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை; கலினின்கிராடைச் சுற்றிய நேட்டோவின் இராணுவ அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரவில்லை. தனது வாசகர்களுக்கு அவர் வழங்கும் ஒரே படிப்பினை, மாஸ்கோவின் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கலாம் என்பதே.
ரஷ்யா வெறுமனே மிரட்டுகிறது என்று நம்ப வேண்டிய தேவையுள்ள ஒரு ஆளும் வர்க்கத்தின் சார்பாக ரச்மன் பேசுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் வரை மறுஆயுதமயமாக்கல், ஜேர்மன் இராணுவ பலத்தின் மீளெழுச்சி, ரஷ்யாவை அடிபணிய வைத்து அதன் வளங்களைக் கைப்பற்றுதல் ஆகியவை அடங்கிய அதன் கொள்கையை, வேறெந்த அனுமானத்தின் அடிப்படையிலும் தொடர முடியாது. அதன் செலவு சமூகத் திட்டங்களை அழிப்பதன் மூலம் திணிக்கப்படுகிறது; இது வளர்ந்து வரும் எதிர்ப்பைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. 1914இல் போலவே, உள்நாட்டில் சமூகக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் அரசாங்கங்கள் போரின் ஆபத்துகளை நிதானமாகக் கணக்கிடுவதில்லை.
தங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்தச் சூதாட்டத்தை ஏற்கிறார்களா என்று ஐரோப்பிய மக்களிடம் கேட்கப்படவில்லை. ஐரோப்பா, ரஷ்யா, உக்ரேன் மற்றும் அமெரிக்காவின் தொழிலாள வர்க்கம், போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இதற்குப் பதிலளிக்க வேண்டும். அந்த இயக்கம், போரை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்பட வேண்டும்.
