முன்னோக்கு

ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் உடந்தையுடன், ஈரான் மீதான போரைப் பாரியளவில் தீவிரப்படுத்த ட்ரம்ப் தயாராகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்க கடற்படையால் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படத்தில், நிமிட்ஸ்-வகுப்பு விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டின் விமானத் தளத்தில் இராணுவ விமானங்கள் தரித்து நிற்கின்றன. 2024 ஜூலை 4, தென் சீனக் கடல். [AP Photo/Seaman Ryan Holloway]

கடந்த வாரத்தின் நிகழ்வுகள், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் உடந்தையுடன் ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் போரைப் பாரியளவில் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறது என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை. ஈரான் மீதான பாரிய குண்டுவீச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து பொருளாதார முற்றுகை ஆகியவற்றின் மூலம் தனது இலக்குகளை அடையத் தவறிய வெள்ளை மாளிகை, தரைப் படைகளை ஈடுபடுத்துவது அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது போன்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு புதிய மற்றும் அவநம்பிக்கையான சூதாட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறது.

மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், தயாரிக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் அளவிற்கும், அதைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வுக்குமான இடைவெளியாகும். 2026 இடைக்காலத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, போரைத் தீவிரப்படுத்துவதற்கான ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் —கடந்த வார இறுதியில் ஒளிபரப்பான ஞாயிறு நேர விவாத நிகழ்ச்சிகளில் போரைப் பற்றிச் சில நிமிடங்கள் மட்டுமே அவை ஒதுக்கியிருந்தன— மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவையால் ஒரு மௌனச் சுவர் மட்டுமே பரிசளிக்கப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்து வரும் ஈரான் மீதான புதிய தாக்குதலைப் பற்றி பொதுமக்களை எச்சரிக்க ஜனநாயகக் கட்சி எதையும் செய்யவில்லை.

செப்டம்பர் 22 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய தனது உரையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இஸ்லாமியக் குடியரசை முற்றிலுமாக அழித்துவிடுவோம், அதை விரைவாகச் செய்வோம்” என்று அச்சுறுத்தினார். ஜூன் 10 அன்று, பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ் தெரிவித்த வெள்ளை மாளிகையின் இரகசியக் கூட்டத்தைத் தொடர்ந்தே அவரது இந்த அச்சுறுத்தல் வெளிவந்தது; அக்கூட்டத்தில் ட்ரம்ப், “போரை ஒருவேளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஓர் அணு ஆயுத வாய்ப்பு குறித்து” பேசியிருந்தார்.

இந்த அச்சுறுத்தல்களை வெறும் வெற்று மிரட்டல் என்று புறக்கணித்துவிட முடியாது. அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது பல மாதங்களாக நடத்தி வரும் குண்டுவீச்சில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளார். பாரசீக வளைகுடாவில் இப்போது குவிக்கப்பட்டு வரும் படைகள், தனது அச்சுறுத்தல்களை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை அவருக்கு வழங்குகின்றன. அலட்சியத்தை விட ஆபத்தானது வேறு எதுவுமில்லை.

ஏழு மாதப் போருக்குப் பின்னரும், ஹோர்முஸ் நீரிணையில் மேலாதிக்கம் செலுத்துவது, ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பது, அதன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்ற தனது நோக்கங்களை அடைய அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியடைந்துள்ளது. போரினால் ஏற்பட்ட அரசியல் பேரழிவிலிருந்து மீள்வதற்கான வழியைத் தீவிரமாகத் தேடும் ட்ரம்ப் நிர்வாகம், தற்போது தற்காலிக ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆனால், அதன் இந்தத் தற்காலிக ஏற்பாடுகள், நிகழ்வுகளின் தர்க்கத்தால் உந்தப்படுகின்றன. பாரசீக வளைகுடாவில் தோல்வியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் ஒவ்வொரு தோல்வியும் மேலும் மேலும் பதற்றத்தை அதிகரிப்பதற்கான அடிப்படையாக அமைகிறது.

மத்திய கிழக்கிற்கு வெள்ளை மாளிகை மூன்றாவது விமானந்தாங்கிக் கப்பலை அனுப்பியுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் கடந்த வாரம் தெரிவித்தன. யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் செப்டம்பர் 27 அன்று சான் டியேகோவிலிருந்து புறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள், சுமார் 2,200 கடற்படையினர்களுடன் யுஎஸ்எஸ் மேக்கின் ஐலேண்ட் என்ற நீர்நிலத் தாக்குதல் கப்பலும் புறப்பட்டுள்ளது. அவர்கள், யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற விமானம் தாங்கி கப்பலுடனும், அப்பகுதி முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ள 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகளுடனும் இணைந்து கொள்வார்கள்.

“நவம்பர் இடைத் தேர்தல்களுக்குப் பின்னர் ஈரான் மீதான குண்டுவீச்சை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார்” என்று ஜேர்னல் செப்டம்பர் 25 அன்று தெரிவித்தது. மேலும், “ஹோர்முஸ் அருகிலுள்ள ஈரானியத் தீவுகளைக் கைப்பற்றத் தரைப்படைகளை அனுப்புவது” உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து ஆகஸ்டில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது என்று ஜேர்னல் கடந்த மாதம் தெரிவித்தது.

ஆயிரக்கணக்கான கடற் படையினருடன் நீர்நிலத் தரையிறங்கு தாக்குதல் கப்பல்களை நிறுத்துவது குறிப்பாக அச்சுறுத்தலானது. இவை நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்கான வழிமுறைகளாகும், மேலும் போரின் அடுத்த கட்டத்தில் ஹோர்முஸ் அருகே உள்ள தீவுகள், கார்க் தீவு எண்ணெய் முனையம் அல்லது ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தரையிறங்குதல்கள் இடம்பெறலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை, ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்டத் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியின் ஓய்வு விடுதியான கேம்ப் டேவிடில், “ஈரான் போரின் அடுத்த நடவடிக்கைகள், யேமனில் நடக்கும் சவுதி-ஹூவுதி மோதல் ஆகியவை குறித்து கலந்துரையாடுவதுக்கு” கூடியதாக அன்றிரவே ஆக்சியோஸ் தெரிவித்தது. இதற்கு முந்தைய இதேபோன்ற சந்திப்பு, இஸ்ரேலும் பின்னர் அமெரிக்காவும் ஈரானைத் தாக்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஜூன் 2025-இல் நடைபெற்றது என்று ஆக்சியோஸ் மேலும் தெரிவித்தது. ஈரானை இலக்கு வைத்து அமெரிக்காவின் இந்தப் புதிய இராணுவப் படைக் குவிப்புகள், அமெரிக்காவின் ஆதரவுடன் யேமனில் சவுதி அரேபியா மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதலுக்கு இணையாக அமைந்துள்ளன.

ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பிரிட்டனின் பேர்போர்டு விமானத் தளத்திலிருந்த அனைத்து அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்களும் அமெரிக்காவுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக பென்டகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. அந்தத் தளத்திற்கு எதிராகத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் ஈரான் “பங்கு வகித்தது” என்று பிரிட்டன் பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம் செப்டம்பர் 30 அன்று கூறியதைத் தொடர்ந்தே இந்தத் திரும்பப் பெறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிரூபிக்கப்படாத இந்தக் குற்றச்சாட்டு, போரைத் தீவிரப்படுத்துவதுக்கான சாக்குப்போக்கை வழங்குகிறது.

ஈரானுக்கு எதிரான போர் என்பது, ரஷ்யாவையும் சீனாவையும் முக்கிய இலக்காகக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். முக்கியமாக, ஈரான் போரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள், உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோவின் போர் கூர்மையாகத் தீவிரமடைவதுடன் சேர்ந்தே வருகின்றன. இந்தப் போர் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலாக வெடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் ஈரானை மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றுள்ளனர். ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் போர், மத்திய கிழக்கையும் மத்திய ஆசியாவையும் அடிபணியச் செய்வதற்கான 35 ஆண்டுகாலத் தாக்குதலின் சமீபத்திய கட்டமாகும்: 1991 வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதுமான படையெடுப்புகள், லிபியாவை அழித்தது, சிரியாவில் நடத்தப்பட்ட பினாமிப் போர், மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை ஆகியவை இதில் அடங்கும்.

போருக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு, குறிப்பாக எரிசக்திச் செலவு, கடுமையாக உயர்ந்துள்ளதும் நிலவும் சூழலில், நவம்பர் 3 இடைத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், ட்ரம்ப் தேர்தல் மூலம் நிராகரிக்கப்படுவது, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எந்தவிதத் தளர்வையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது.

செப்டம்பர் 30 அன்று CNN இல் அரிசோனா செனட்டர் ரூபன் கலேகோ கூறியதைப் போல, “இந்தப் போரில் வெற்றி பெறுவதே” ஜனநாயகக் கட்சியினரின் கொள்கையாக உள்ளது. பென்டகன் நிதி ஒதுக்கீடு விவகாரங்களைக் கையாளும் மூத்த ஜனநாயகக் கட்சி செனட்டரான டெலாவேர் மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ் கூன்ஸ், வியாழக்கிழமை CNN-இல் பேசுகையில், “ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ளாத வகையிலான, அதே சமயம் நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு திட்டத்தை” ட்ரம்ப் உருவாக்க வேண்டும் என்று கூறினார். அரிசோனா மாநில ஜனநாயகக் கட்சி செனட்டரும் முன்னாள் கடற்படை விமானியுமான மார்க் கெல்லி, செப்டம்பர் 27 அன்று ABC-யின் “This Week” நிகழ்ச்சியில் ட்ரம்பை விமர்சித்து, “அந்த நீரிணையை ஈரானியர்களின் கைகளில் நாம் விட்டுவிட முடியாது” என்று கூறினார்.

புதிய படைக் குவிப்புக்களை நிறுத்த வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைவர்களில் எவரும் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட 58 பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர், ரஷ்யாவுக்கு எதிரான ட்ரம்பின் சுங்கவரி அதிகாரங்களை விரிவுபடுத்தவும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் வழிவகுக்கும் மசோதாவுக்கு செப்டம்பர் 16 அன்று குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தனர். கடந்த வாரம் தொடங்கிய தொடர் கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் தெரிவித்ததைப் போல, “தேசியப் பாதுகாப்புப் பின்னணி கொண்ட, கடந்த நான்கு தேர்தல்களில் எதிலும் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்குக்கும் அதிகமான” 67 காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சி நிறுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பின்னர், உலகம் முழுவதும் போரைத் தீவிரப்படுத்த ட்ரம்ப்புடன் இணைந்து செயல்பட ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

போருக்கு எதிரான எதிர்ப்பு பெருமளவில் வலுவாக உள்ளது. ஆனால், ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளும் (DSA) இந்த எதிர்ப்பை நடைமுறை நடவடிக்கையாக மாற்றுவதைத் தடுக்க முயன்று வருகின்றன. போருக்கு எதிரான உணர்வுகளைச் செயலிழக்கச் செய்வதில் DSA முக்கியப் பங்காற்றி வருகிறது. அதனுடன் தொடர்புடைய ஜேக்கோபின் (Jacobin) இதழ், இடைத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை; அதேபோல், வேர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் அல்லது DSA உறுப்பினரான நியூ யோர்க் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோரும் இது குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

வெளிநாடுகளில் போர் தீவிரப்படுத்தப்படுவது, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுடன் சேர்ந்தே நிகழ்கிறது. போரால் ஏற்பட்ட விலைகளின் கடும் உயர்வு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் பேரழிவுகரமான வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. AAA அமைப்பின் தரவுகளின்படி, போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் அமெரிக்காவில் ஒரு கேலன் டீசலின் விலை 3.76 டாலராக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அது 6.34 டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா “போர்களில் ஈடுபட்டு வருவதால்”, “குழந்தைப் பராமரிப்பு, மருத்துவ உதவி மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற தனிநபர் சார்ந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்வது எங்களுக்கு சாத்தியமில்லை” என்று ஏப்ரல் 1 அன்று ட்ரம்ப் கூறினார். வெள்ளை மாளிகை, 2027 நிதியாண்டிற்காக 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டைக் கோரி காங்கிரஸிடம் கேட்டுள்ளது. இது 42 சதவிகித அதிகரிப்பாகும். அதே நேரத்தில், மக்களுடைய நலனுக்கான செலவினங்களை 10 சதவிகிதம் வெட்டிக் குறைக்கிறது. இந்தப் போர் நிதி ஒதுக்கீடும், சமூக நலத் திட்டங்கள் மீதான தாக்குதலும் ஒரே வர்க்கக் கொள்கையாகும்.

போருக்கு எதிரான போராட்டத்தையும் அதன் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளுக்கு எதிரான போராட்டத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நோக்கங்களுக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ள ஜனநாயகக் கட்சிக்குக் கீழ்ப்படுத்த முடியாது. ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பைத் தடுத்து நிறுத்துவதும், போருக்கு எதிரான போராட்டத்தை வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதோடு இணைக்கும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் அவசியமாகும்.

Loading