இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை அரசாங்கம், பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின்போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்களது காணிகளைத் திருப்பித் தருமாறு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளதுடன், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்துள்ளது.
1983 முதல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நடத்திய 26 ஆண்டுகால இனவாதப் போர் முடிவடைந்து ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. ஆயினும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ளன.
2024 தேர்தல் பிரச்சாரங்களின்போது இந்தக் காணிகள் அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பதும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மிகச் சிறியளவிலான காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த மாகாணங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் இதேபோன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கியிருந்தன.
ஆகஸ்ட் 4 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலான பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, “தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் மூலோபாய முக்கியத்துவம் கொண்டதுமான உயர் பாதுகாப்பு வலயங்களில்...” உள்ள காணிகள் மீளக் கையளிக்கப்படமாட்டாது என்று வலியுறுத்தினார். ஜயசேகர ஜூலை 9 அன்றும் பாராளுமன்றத்தில் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
அமைச்சரின் கூற்றுப்படி, 2025 ஜனவரி முதல் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 1,109 ஏக்கர் காணியை விடுவித்துள்ளது. அதேவேளை, இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸ் உட்பட பாதுகாப்புப் படைகளால் 12,225 ஏக்கர் காணி “தற்போது பயன்படுத்தப்பட்டு” வருகிறது.
இவை தரிசு நிலங்கள் அல்ல. தலைமுறை தலைமுறையாக மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி வந்த விவசாயக் காணிகள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள், மீன்பிடித் தளங்கள் மற்றும் பாடசாலைகள், மத நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற பிரதான உட்கட்டமைப்பு வசதிகளும் இவற்றில் அடங்குகின்றன. இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு ஒரு பொருளாதார முற்றுகையாகச் செயல்படுகிறது.
இந்தக் காணிகள் “இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவை” என்ற வர்ணனையை நிராகரித்த அமைச்சர், அதற்குப் பதிலாக, “தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசர மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக” இராணுவம் இந்தக் காணிகளைக் கையகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுப்பதற்கும்; இந்தியாவில் இருந்து இடம்பெறும் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும்; இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இந்தியப் படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைத் தடுப்பதற்கும் இது அவசியம், என்று அவர் கூறினார்.
ஜூலை 9 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க முடியாது என்று தெரிவித்தார். பலாலி பகுதி “உயர் பாதுகாப்பு வலயம்” என்றும், அதற்குள் உள்ள 1,662 ஏக்கர் காணி இராணுவத் தேவைகளுக்காக சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
போரின்போது யாழ்ப்பாணக் குடாநாட்டின் இராணுவக் கட்டளை மையமாக விளங்கிய பலாலியில் விமானப்படைத் தளம், விமான நிலையம் மற்றும் அதற்கு அருகிலுள்ள கடற்படைத் தளம் ஆகியவை இருந்தன. அது இன்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமையகமாக இருந்து வருகிறது. மேலும், சுமார் 775 ஏக்கர் காணியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு மேலதிக காணி தேவைப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
ஒரு அடையாள நடவடிக்கையாக, “மொத்தம் 353 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பல காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என்றும், அவை “வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில்” முன்னாள் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை மீளக் கையளிக்க வேண்டும் என்றும், போரின்போது இராணுவத்தால் “காணாமல் ஆக்கப்பட்ட” ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முல்லிக்குளம், இரணைத்தீவு, கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மற்றும் பாணம ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்ட இயக்கங்களை மனித உரிமை கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. இவற்றில் சில போராட்டங்கள் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகின்றன.
அடையாளம் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் 2017 ஆம் ஆண்டு வடக்கின் கிளிநொச்சியில் போராட்டங்களை ஆரம்பித்தனர். இந்தப் போராட்ட இயக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரவியதுடன், குறைந்தபட்சம் 2022 பெப்ரவரி வரை தொடர்ந்தது. இந்தப் போராட்டங்கள் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் கீழும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மயிலிட்டி மற்றும் பலாலியில் மட்டும் மக்கள் கிட்டத்தட்ட 20 வாராந்திர போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராக ஏனைய போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. கேப்பாப்பிலவு போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தொடர்ச்சியாக 25 நாட்களுக்கும் மேலாகப் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜூலை 9 அன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக, இராணுவ முகாம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக மீண்டும் தனது வெற்று வாக்குறுதிகளைத் தெரிவித்த போதிலும், விடுவிக்கப்படும் திகதியையோ எத்தனை ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்பதையோ விளக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட, பெருமளவிலான காணிப் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கச் செய்வதன் முக்கியத்துவத்தையும் மாவட்ட நிர்வாகிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
கடந்த மாதம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், கிளிநொச்சி மாவட்டம் தென்னைப் பயிர்ச்செய்கைக்கான ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளதாகவும், 2,000 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை மின்சக்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் நூற்றுக்கணக்கான தென்னந்தோட்டங்களை அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உள்ளூர்வாசிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளதாகவும், அதனை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் கோரியுள்ளதாக சிறீதரன் கூறினார்.
தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து மந்தமான விமர்சனங்களை முன்வைக்கும் அதேநேரம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து அதற்கு உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. அனைத்து உழைக்கும் மக்களின் சமூக உரிமைகளைக்கும் குழிபறிக்கும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனத் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கும் அது, ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர்பாக மௌனம் காக்கின்றது.
ஆகஸ்ட் 4 அன்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், காணிகளை “இராணுவ ஆக்கிரமிப்பு” என்று அழைப்பதை அரசாங்கம் நிராகரித்தது தொடர்பாக வெறுமனே சொற்பிரயோக விவாதத்தில் ஈடுபட்டார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதும் பேரிடர் முகாமைத்துவமும் வடக்கில் இவ்வளவு பெரிய இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்துவதாக இருந்தால், இதேபோன்ற நடவடிக்கைகள் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதை எதிர்ப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் “சமமான” இராணுவமயமாக்களுக்காக அவர் வாதிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியோ அல்லது வேறு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று கோரவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை தமிழ் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பதற்கான அடிப்படை முன்நிபந்தனை இதுவாகும். இந்தக் கட்சிகள் இத்தகைய கோரிக்கையை எதிர்ப்பதுடன், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட அரச எந்திரத்தை அப்படியே விட்டுவிட்டு, அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்பாக கொழும்பு அரசாங்கத்துடன் பேரம்பேச முற்படுகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முழுவதும் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீளக் கையளிப்பதற்காகவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட ஒடுக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதற்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வந்துள்ளன.
1948 முதல் கொழும்பில் ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நச்சுத்தனமான சிங்கள பேரினவாதப் பாரபட்சக் கொள்கைகளைப் பயன்படுத்தி, இன அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும், முதலாளித்துவ வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கவும், 1983 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங்கின.
தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் “சர்வதேச சமூகத்திடம்” விடுக்கும் வேண்டுகோள்களுக்கு மாறாக, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் கொழும்பு ஆளும் உயரடுக்கிற்கும் எதிராக ஐக்கியப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்:
- வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்று! இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் மீளக் கையளி!
- அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
- பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஏனைய அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களையும் உடனடியாக ஒழித்திடு!
சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து, தெற்காசிய சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தையும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசையும் ஸ்தாபிப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கையில் WSWS நிருபரை பொலிஸ் அச்சுறுத்தியதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது
- இலங்கையின் வடக்கில் தமிழ் பொதுமக்களின் வெகுஜனப் புதைகுழியை நீதி அமைச்சர் பார்வையிட்டார்
- நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கணேஷ்குமார் அரச துரோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்
