இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த சில நாட்களாக ஈரானின் அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தொழிப்பதாகவும், அதன் மக்கள் மீது மரணத்தையும் பேரழிவையும் ஏற்படுத்துவதாகவும் ஹிட்லரிய மிரட்டல்களை மீண்டும் மீண்டும் விடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை மீண்டும் தொடங்கியுள்ளார்.
புதன்கிழமை, அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் ஓரமாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கடந்த மாதம் வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே எட்டப்பட்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தான முறையில் நிராகரித்தார். “என்னைப் பொறுத்தவரை அது முடிந்துவிட்டது,” என்று அவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை ஈரான் மீது தொடங்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடரும் என்று உறுதியளித்தார். பாசிச, சர்வாதியாவதற்கு விரும்பும் ஜனாதிபதி, “இன்றிரவு அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதனுடன், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவது மற்றும் பாரசீக வளைகுடாவில் ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா “கைப்பற்றுவது” உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான, புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடைகளிலிருந்து விலக்களிப்பை வாஷிங்டன் இரத்து செய்தது. அதன் சில மணி நேரங்களின் பின், அமெரிக்கா தெற்கு ஈரானில் உள்ள 80க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானிய அதிகாரிகளின் தகவலின்படி, இதில் எட்டு படையினர் கொல்லப்பட்டனர்.
புதன் கிழமை, தனக்கே உரிய குண்டர் படை தலைவனின் பாணியில் பேசிய ட்ரம்ப், ஈரானின் தலைவர்களை அவமதித்ததுடன் போரின் தொடக்கத்தில் ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை குறிவைத்து நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலைப் போன்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடும் அமெரிக்க ஏகாதிபத்திய போரியந்திரத்தின் தலைவராகத் தன்னை வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். “அவர்களுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை. அவர்கள் அற்பமானவர்கள். அவர்கள் நோயுற்றவர்கள்,” என்று அவர் இழிவாகக் கூறினார்.
மறுபுறம், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக தெஹ்ரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதன்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் “ஈரானுக்கு எதிரான மீண்டும் மீண்டும் நடத்தப்படும் சட்டவிரோதத் தாக்குதல்கள்”, ஈரானின் எண்ணெய் மீது மீண்டும் விதிக்கப்பட்ட தடைகள், மேலும் லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் ஆகியவை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் “முக்கியமான மற்றும் அடிப்படையான பகுதிகளை செயலிழக்கச் செய்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு பென்டகன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால், வளைகுடாப் பிராந்தியத்தின் ஏனைய எண்ணெய் வளமிக்க ஷேக் ஆட்சிகளும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு இலக்காகும் என்று எச்சரித்துள்ளது.
ஜூன் 17 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான் ஆகியோரால் உத்தியோகப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டதிலிருந்து, அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மிகவும் நிலையற்றதாகவே இருந்து வந்தது.
அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளமை மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு ஈரான் ஏற்படுத்திய சேதம் குறித்து மேலும் மேலும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த போதிலும், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் போரைத் தொடங்குவதாக அச்சுறுத்தி வந்தார்.
ட்ரம்ப், அவரது போர் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ஏனையை நிர்வாக அதிகாரிகளும், அமெரிக்கா “மாபெரும் வெற்றி” பெற்றதாக தொடர்ச்சியாக அறிவித்த பின்னர் ஏற்பட்ட இந்த போர்நிறுத்தம், உண்மையில் வாஷிங்டனுக்கு ஒரு படுதோல்வியையும் அவமானத்தையும் குறித்ததாக இருந்தது.
அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கண்மூடித்தனமான வன்முறையையும் மனிதத் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துதல், அதன் அணு ஆயுதத் திட்டத்தை முற்றாக அழித்தல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திறனை ஒழித்தல், ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிற பிராந்தியக் கூட்டாளிகளுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்தச் செய்தல் போன்ற, ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த எந்த முக்கிய இலக்கையும் அடையத் தவறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலும், பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் உலகின் மிக முக்கியமான கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை மீது ஈரான் விரைவாகச் செயல்திறன் மிக்க கட்டுப்பாட்டை நிறுவியதன் மூலம், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எரிசக்தி உட்பட ஏற்றுமதி-இறக்குமதி போக்குவரத்தை அது கடுமையாகப் பாதித்தது.
போர்நிறுத்தத்தை நியாயப்படுத்தியபோது, இந்தச் சட்டவிரோதமான மற்றும் ஈரானால் ஆத்திரமூட்டப்படாத போரினால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பேரழிவை தாமே மறைமுகமாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப், பெரும் பொருளாதார மந்தநிலை போன்ற உலகளாவிய பொருளாதாரச் சரிவு ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டினார்.
ஆனால், மூன்று வாரங்களுக்குப் பிறகு, ட்ரம்பும் அவரது ஆட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க செல்வந்த ஆளும் வர்க்கமும் ஈவிரக்கமின்றி மீண்டும் போரைத் தொடங்கி, மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் உலகத்தையும் இன்னும் விரிவான போருக்குள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளும் அபாயத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாதாரண ஈரானிய மக்களிடையே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெளிப்பட்டிருக்கும் மிகப்பெரிய வெகுஜன எதிர்ப்பை முற்றிலும் புறக்கணித்தே அவர்கள் இதைச் செய்கின்றனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 நடத்திய தலைமை ஒழிப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது 14 மாத பேத்தி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக, ஜூலை 4 முதல், ஆறு நாட்கள் நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் மில்லியன் கணக்கான ஈரானியர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மேற்கத்திய ஊடகங்களில் கூட, இந்த இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் வெகுஜனங்கள் பரந்தளவில் பங்கேற்றதையும், அவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆழமான வெகுஜன கோபம், எதிர்ப்புணர்வு மற்றும் உண்மையான துயரம் வெளிப்பட்டிருப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள், இஸ்லாமியக் குடியரசின் பாரம்பரிய ஆதரவாளர்களாகக் கருதப்படும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களை மட்டுமல்லாமல், ஈரானின் தேசிய முதலாளித்துவ ஆட்சியின் மீது நீண்டகால அதிருப்தி கொண்டிருக்கும் பரந்த தொழிலாளர் மக்களையும் ஒன்றிணைத்துள்ளன. ஈரானின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் தங்களது சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை அடைவதற்கு மிகப் பெரிய தடையாக ஏகாதிபத்தியமே இருப்பதை உணர்வதுடன், 1979 புரட்சிக்கு முன்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி செய்த இரத்தக்களறி ஷா ஆட்சிக்காலத்தைப் போல், ஈரானை மீண்டும் ஒரு புதிய காலனித்துவ அடிமைத்தனத்திற்குள் தள்ள முயலும் அமெரிக்க அரசியல் அமைப்பின் இரு பிரதான கட்சிகளின் கொள்கையையும் அவர்கள் உறுதியாக எதிர்க்கிறார்கள்.
ஈரானைப் போலவே பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு, குறிப்பாக “பேரழிவு ஆயுதங்கள்” இருக்கின்றன என்ற பொய்களின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய படையெடுப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் பலியாகியுள்ள ஈராக்கிற்குள் புதன்கிழமை இறுதி ஊர்வலம் நுழைந்தது. ஈராக்கிலும் இந்த ஊர்வலத்திற்குள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தாக்குதல் நாயான இஸ்ரேலுக்கும் எதிராக பெருமளவிலான வெகுஜன கோபமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் போர்வெறி, ஒரு ஆழமான நெருக்கடியிலிருந்து உருவாகிறது. அந்த நெருக்கடியின் வேர்கள், உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலை தொடர்ந்து வேகமாகச் சரிவடைந்து வருவதிலும், முதலாளித்துவ சமூக ஒழுங்கின் அடிப்படை முரண்பாடுகளிலும் உள்ளன. உள்நாட்டில், 'மன்னர்கள் வேண்டாம்' என்ற எதிர்ப்புப் போராட்டங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்றதிலும், வாகன உதிரிப்பாகத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உட்பட நாட்டின் பரந்த தொழிலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வேலைநிறுத்த அலைகளிலும் வெளிப்பட்டுள்ளவாறு, அது அதிகரித்து வரும் எதிர்ப்பையும் வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயமாதலையும் எதிர்கொண்டு வருகிறது. கீழிருந்து தலைதூக்கும் இந்த வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் பீதியடைந்துள்ள ட்ரம்ப், 'கம்யூனிசத்தின்' ஆபத்து குறித்து கூச்சலிட்டபடி, ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான தனது முயற்சியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறார்.
எதிர்க்கட்சியாக தோற்றமளிக்கும் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் அது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து செயல்படுகிறது. ட்ரம்பின் கொள்கைகள் மீதான அவர்களின் எதிர்ப்புகள் பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் மூலோபாயம் தொடர்பான பிரச்சினைகளைச் சுற்றியே சுழல்கின்றன. ஈரான் போருக்கு அவர்களின் பிரதிபலிப்பில் இது தெளிவாக வெளிப்பட்டது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் உட்பட முழு ஜனநாயகக் கட்சித் தலைமையும், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு நாடான ஈரானை ஒரு ஆக்கிரமிப்பாளராகவும் அச்சுறுத்தலாகவும் சித்தரித்து, போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை ஆதரித்தது. அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் கூட, உதாரணமாக, போரைத் திட்டமிடுவதிலும் மேற்பார்வையிடுவதிலும் காங்கிரசுக்கு உரிய பங்கு வழங்கத் தவறியமை மற்றும் போரை ட்ரம்ப் திறமையற்ற முறையில் நடத்தியமை போன்ற நடைமுறை சார்ந்த விடயங்களுக்கே மட்டுப்பட்டிருந்தன.
வாஷிங்டன் நிர்ணயித்த எந்தவொரு போர்க்குறிக்கோளையும் அடையத் தவறிய நிலையிலும் ஈரானுடன் போர்நிறுத்தத்திற்கு இணங்கியதற்காக, இராணுவ-பாதுகாப்பு அமைப்புகளின் சக்திவாய்ந்த பிரிவுகளுடனும் நிதி ஆதிக்கக் குழுவுடனும் இணைந்து ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பைத் தாக்கினர். கலிபோர்னியா மாநில செனட்டர் ஆடம் ஷிஃப் இதை 'முழுமையான சரணடைவு' என்று குறிப்பிட்ட அதேவேளை, கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த அவரது சக செனட்டர் கிறிஸ் மர்பி, இதை 'அடிப்படையில் ஈரானிடம் சரணடைந்தமைக்கு சமமானது' என்று வர்ணித்தார்.
வளங்கள், சந்தைகள், உற்பத்தி வலையமைப்புகள் மற்றும் மூலோபாயப் பிரதேசங்களின் கட்டுப்பாட்டிற்காக, கடந்த நூற்றாண்டின் ஏகாதிபத்திய உலகப் போர்களை ஒத்தவாறு, ஆனால் அதைவிடப் பெரியதும் அதிக உயிர்ப்பலிகளை ஏற்படுத்தக்கூடியதுமான அளவில், வளர்ச்சியடைந்து வரும் பூகோளப் போரின் சூழலில், நேட்டோ உச்சிமாநாட்டில் ஏகாதிபத்திய சக்திகளின் போட்டி நிகழ்ச்சிநிரல்களே ஆதிக்கம் செலுத்திய ஒரு பின்னணியிலேயே ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கினார்.
கனடாவுடன் இணைந்த ஐரோப்பிய சக்திகள், தங்களது வேகமடைந்து வரும் மறுஆயுதமயமாக்கல் திட்டத்தையும், அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யாவின் ஆழமான உள்பகுதிகளுக்கே தாக்குதல் நடத்தும் திறனை தமது உக்ரேனிய பிரதிநிதிப் படைக்கு வழங்குவதில் தாங்கள் வகிக்கும் பங்கையும் பெருமையுடன் எடுத்துரைத்து, ரஷ்யாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவதற்காக அந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்தின. இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போருக்கு போதுமான ஆதரவு வழங்கவில்லை என்று ஐரோப்பிய நாடுகளை கண்டித்த ட்ரம்ப், டென்மார்க் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அமெரிக்காவின் நேட்டோ 'நேச நாடுகளின்' செலவில் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா-ரஷ்யா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, ஸ்பெயினுடனான அனைத்து அமெரிக்க வர்த்தகத்தையும் துண்டித்துவிடுவதாகவும் அச்சுறுத்தினார்.
ஏகாதிபத்திய சக்திகளும் அவை தலைமை தாங்கும் முதலாளித்துவ அமைப்பும் மனிதகுலத்தை பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. மறுஆயுதமயமாக்கல், போர், சிக்கனக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைச் சிதைக்கும் நடவடிக்கைகள் போன்ற, அவற்றின் போட்டி கொள்ளையடிக்கும் திட்டநிரல்களுக்கு எதிரான, ஒரே முற்போக்கான பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்த்தை புரட்சிகர வேலைத் திட்டத்தில் அணிதிரட்டுவதே ஆகும். பூகோளப் போரைத் தூண்டிவரும் உலக முதலாளித்துவத்தின் அதே நெருக்கடியே, வர்க்கப் போராட்டத்தையும் தீவிரப்படுத்தி, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் உருவாகுவதற்கான புறநிலை நிலைமைகளை உருவாக்கி வருகிறது என உலக சோசலிச வலைத் தளம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது.
தீர்மானகரமான கேள்வி என்னவென்றால், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலை, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் தலைமைத்துவத்தால் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதாகும். இந்தப் பணிக்கே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.
மேலும் படிக்க
- ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வேளையில், ஏகாதிபத்திய சக்திகள் எர்டோகனின் போலீஸ்-அரசு ஒடுக்குமுறைக்கு பச்சைக்கொடி காட்டுகின்றன
- மவுண்ட் ரஷ்மோரில் ட்ரம்ப்பின் பாசிச வெறிப்பேச்சு:: கம்யூனிச எதிர்ப்பு வெறியும் சர்வாதிகாரத்திற்கான சதியும்
- அங்காராவில் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக: ஐரோப்பிய வல்லரசுகள் உக்ரேன் போரை ரஷ்யாவுடனான நேரடி மோதலை நோக்கித் தள்ளுகின்றன.
