இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
பிரிட்டன் ஒரு புதிய அரசியல் நெருக்கடியின் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. தொழிற் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மருடைய, பிரதமர் பதவிக் காலம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. குறிப்பாக, பிளேயரின் தீவிர ஆதரவாளரான சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் உட்பட பலரின் ராஜினாமாக்கள் மற்றும் நம்பிக்கையில்லா கடிதங்களால் இது உலுக்கப்பட்டுள்ளது. மேலும் இது, தலைமைப் பதவிக்கான பகிரங்கமான சவாலைத் தொடங்குவதற்கான இறுதித் தூண்டுதலுக்காக தற்போது காத்திருக்கிறது.
இதற்கு ஒரு சோசலிச ரீதியிலான பதிலை வழங்குவதற்கு, தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியலை வெறும் நாடகமாகவும், தனிநபர் மோதல்களாகவும் சுருக்கும் ஊடகங்களின் உளவியல் நாடகங்களைத் தாண்டிப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்த நெருக்கடியை உந்தித்தள்ளும் அடிப்படை யதார்த்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்டார்மர் அரசாங்கத்தின் நெருக்கடி என்பது நீண்டகால மற்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட இரு செயல்முறைகளின் விளைவாக ஏற்பட்டதாகும்: உலக முதலாளித்துவத்தின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச வீழ்ச்சி, மற்றும் தொழிற் கட்சியின் தொழிலாள வர்க்க ஆதரவுத்தளத்தில் ஏற்பட்டுள்ள முழுமையான வீழ்ச்சி ஆகியவையே அவையாகும்.
1979 முதல் 2007 வரை, நீண்ட கிட்டத்தட்ட 30 ஆண்டுக் காலத்தில், பிரிட்டனில் மூன்று பிரதமர்கள் மட்டுமே பதவி வகித்தனர். அவர்களில் இருவர் —கன்சர்வேடிவ் கட்சிக்காக மார்கரெட் தாட்சர் மற்றும் தொழிற் கட்சிக்காக டோனி பிளேயர்— தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பதவியில் இருந்தனர். அதன்பிறகு, இருபது ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், பிரிட்டன் ஏழு பிரதமர்களைக் கண்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் —இப்போது சாத்தியமாக ஐந்து பேர்— கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே பதவியேற்றுள்ளனர்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பிரிட்டிஷ் பிரதமரின் வீழ்ச்சியானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலையின் பலவீனத்தையும், அதன் நிலையற்ற தன்மையையும் அம்பலப்படுத்திய ஒரு சர்வதேச அதிர்ச்சியால் தூண்டப்பட்டது. அதேவேளை, அது நாட்டுக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளையும் மேலும் தீவிரப்படுத்தியது.
2008 நிதி நெருக்கடியில், தொழிற் கட்சி வங்கிகளுக்குப் பிணைத் தொகை வழங்கி, சிக்கன நடவடிக்கைகளின் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்ததால், கோர்டன் பிரவுனின் பிரதமர் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா பிரிந்து செல்லும் பிரெக்ஸிட் (Brexit) பொதுவாக்கெடுப்புக்குப் பிறகு டேவிட் கேமரூன் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இந்த பிரெக்ஸிட் வாக்கெடுப்பு சிக்கன நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு, பிரித்தானியாவின் பொருளாதாரத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியதுடன், அதன் வெளியுறவுக் கொள்கையையும் நெருக்கடிக்குள் தள்ளியது—இதன் விளைவுகள் தெரசா மேயையும் பதவியிலிருந்து வீழ்த்தின.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்களான போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் அடுத்தடுத்த விலகல்கள், இறுதியாக கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் தாக்கத்தை பிரதிபலித்தன. இவை இரண்டும் பிரித்தானிய முதலாளித்துவத்தின் தீவிர பலவீனத்தை வெளிப்படுத்தின. அதேவேளை, இந்தப் போர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் இராணுவவாதத்திற்கும் புதிய அழுத்தங்களையும் கோரிக்கைகளையும் ஏற்படுத்தியது. ஆனால், அவற்றை திறம்பட கையாளும் திறன் இந்த தலைவர்களில் எவருக்கும் இல்லை என ஆளும் வர்க்கம் கருதியது.
பிளேயரிச தொழிற் கட்சியானது, சமூக எதிர்ப்பை ஒடுக்குவதில் ஈவிரக்கமற்ற உறுதிப்பாட்டையும், மிக ஆழமான மக்கள் செல்வாக்கின்மையையும் ஒருங்கே கொண்டிருந்ததால், பல ஆண்டுகளாக அதனால் ஒரு நம்பகமான தேர்தல் சவாலை முன்வைக்க முடியவில்லை. இதன் காரணமாக, கன்சர்வேடிவ் கட்சிக்கு அந்த நெருக்கடியைத் தீர்க்க மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பிளேயரிசத்திற்கு மாற்றாக ஒரு இடது அரசியல் சக்தி உருவாகும் என்ற நம்பிக்கையை மில்லியன் கணக்கான மக்கள் ஏற்றுக்கொண்டபோது, அந்த வாக்குறுதியின் அடிப்படையில், தொழிற் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரமி கோர்பின், கட்சியிலிருந்த வலதுசாரி அணியிடம் சரணடைந்தார். அத்தோடு அவர், தனது ஆதரவாளர்களை நிராயுதபாணியாக்கி, தொழிற் கட்சித் தலைவராக இருந்த தனது ஐந்தாண்டுக் காலம் முழுவதும் எந்தவொரு தீவிரமான எதிர்ப்பையும் திட்டமிட்டுச் சீர்குலைத்தார்.
இறுதியில் ஸ்டார்மர், ஊடகங்கள் மிகச் சரியாக விவரித்தபடி “ஒரு அன்பற்ற மாபெரும் வெற்றி” மூலமே ஆட்சிக்கு வந்தார். டோரிக்கள் மற்றும் பிரித்தானியாவின் ஜனநாயகமற்ற தேர்தல் முறை மீதான வெறுப்பின் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவிலான மிகக் குறைந்த வாக்கு விகிதத்தைப் பெற்றிருந்த போதிலும், அவருக்குப் பிரம்மாண்டமான பெரும்பான்மை கிடைத்தது. இப்போது அவர், ஈரான் போரின் அதிர்ச்சி அலைகளாலும், அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான “சிறப்பு உறவை” ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தகர்த்தெறிந்ததாலும் நிலைதடுமாறிப் போயுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் வர்க்கம் ஒரு இறுக்கமான பிடியில் சிக்கியுள்ளது. ஒருபுறம், கடுமையான விலை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியை விட இந்த ஆண்டின் இறுதியில் 50-64 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மேலும், விண்ணை முட்டும் எரிபொருள் விலை, தொழிலாள வர்க்கக் குடும்பங்களை நெருக்குவதோடு, தொழில்துறையையும் கடுமையாகப் பாதிக்கிறது. மறுபுறம், ஒரு பெரிய அளவிலான மறு ஆயுதமயமாக்கல் இயக்கத்திற்கான கோரிக்கை உள்ளது. பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மூத்த அரசாங்க ஆலோசகர், இதை “’நாட்டின் இராணுவத்தில் செய்யப்படும் குறைவான முதலீட்டிற்கான ஒரு கொடூரமான எச்சரிக்கை மணி’” என்று குறிப்பிட்டார்.
மீண்டும் ஒருமுறை, ஸ்டார்மரின் அரசாங்கத்தின் மீதான மக்கள் வெறுப்பு ஆழமடைந்து வருவதாலும், அதன் விரைவான தேர்தல் வீழ்ச்சிக்கு மத்தியிலும், சீர்குலைந்துள்ள வலதுசாரி பிளேயரிஸ்ட் ஆதரவாளர்கள் கும்பலுக்குள் இந்த நெருக்கடி முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கான களத்தை உருவாக்குவதில், தொழிற் கட்சியின் “இடதுகள்” தீர்க்கமான பங்கை வகிக்கின்றனர்.
கோர்பின் தலைமையிலான காலத்தில் முன்னாள் நிழல் நிதி அமைச்சராக இருந்த ஜோன் மெக்டொனல், தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் தங்களின் போராட்டத்தைத் தாங்களாகவே முன்னெடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் முன்கூட்டியே தடுக்கும் நோக்கத்துடன், ஒரு “முறையான அதிகார மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார். அவர், தொழிற் கட்சியின் நாளுக்கு நாள் சுருங்கி வரும் சோசலிச பிரச்சாரக் குழுவின் நாடாளுமன்றக் குழு சார்பாகப் பேசுகிறார்.
தொழிற்சங்க அதிகாரத்துவமும் அதையே ஆலோசனையாகக் கூறி, “அடுத்த தேர்தலில் பிரதமர் தொழிற் கட்சியை வழிநடத்த மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டம் ஏதேனும் ஒரு கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.
அரசியல் எதிர்ப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் தனது முயற்சிகளில் ஜெரமி கோர்பின் புதிய கீழ்த்தரமான நிலையை எட்டியுள்ளார். கடந்த ஆண்டு சில நாட்களிலேயே 800,000-க்கும் அதிகமானோரின் மின்னஞ்சல் முகவரிப் பட்டியலைத் திரட்டிய, “தொழிற்கட்சிக்கு இடதுபுறம் என்ற கூறப்பட்ட உங்கள் கட்சியின் (Your Party) முன்முயற்சியைக் கருவிலேயே கலைப்பதற்கான அவரது பிரச்சாரம் முழுமையாக வெற்றியடைந்துள்ளது. பெயரளவில் மட்டுமே ஒரு கட்சியாக இருக்கும் அது, சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் வெறும் 20 வேட்பாளர்களை மட்டுமே களம் இறக்கியது, மேலும் 5,000-க்கும் மேற்பட்ட போட்டிகளில் 50 பேரை மட்டுமே ஆதரித்தது.
பிரித்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய நிலை பலவீனமடைந்துள்ளதால், அது சந்திக்கும் ஒவ்வொரு ஆட்சி நெருக்கடியிலும், சர்வதேச நிதிச் சந்தையின் கட்டளைகளும், இராணுவவாதத்தின் தேவைகளும் இன்னும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. சாத்தியமான ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது, பொதுமக்களின் விருப்பங்களை விட, பத்திரச் சந்தைகளின் விருப்பங்களை நிவர்த்தி செய்வதற்கே மிக அதிகமான ஊடகக் கட்டுரைகள் — குறிப்பாக, தொழிற் கட்சிக்குள்ளே இருப்பவர்களின் ஏராளமான அநாமதேயத் தகவல்கள் — ஒதுக்கப்படுகின்றன.
முதலீட்டு நிறுவனமான எக்ஸ்.டி.பி-யின் (XTB) ஆராய்ச்சி இயக்குனர் கேத்லீன் ப்ரூக்ஸ் இந்த விஷயத்தை வெளிப்படையாகக் சுட்டிக்காட்டினார்: “G7 நாடுகளில் மிக உயர்ந்த கடன் செலவைக் கொண்ட நாடாக பிரித்தானியா இன்னும் தொடர்கிறது. மேலும், மத்திய கிழக்கு போர் தொடங்கியதிலிருந்து எங்கள் பத்திர வருவாய்கள் மிக வேகமாக உயர்ந்துள்ளன. தொழிற் கட்சியின் இடது பிரிவிலிருந்து வரும் சவால் முற்றிலும் ஒடுக்கப்படும்வரை அல்லது அரசாங்கம் வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரக் கொள்கையைத் தொடங்கும் வரை, இங்கிலாந்தின் அரசுப் பத்திர வருவாய்கள் கணிசமாகக் குறையும் வாய்ப்பை நாங்கள் காணவில்லை” என்று அவர் கூறினார்.
இராணுவத் துறையைப் பொறுத்தவரை, இந்த நாடாளுமன்றத்தின் மீதமுள்ள காலத்தில் யார் தொழிற் கட்சி பிரதமராக பதவி வகித்தாலும், சமூக நலன்புரி செலவினங்களிலிருந்து பில்லியன் கணக்கான நிதியை போர்த் தயாரிப்புகளுக்குத் திருப்புவதன் மூலம், பிரித்தானியாவின் ஆயுதப்படைகளின் நீண்டகால வீழ்ச்சியை மாற்றியமைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகள் மிகக் குறைந்தபட்ச சமூக நலத் திட்டங்களுடன் கூட ஒத்துப்போகாதவை ஆகும். “மென்மையான இடது” என்று முற்றிலும் தவறாக முத்திரையிடப்பட்ட, தலைமைப் பதவிக்கு வர ஆசைப்படும் ஆண்டி பேர்ன்ஹாம் மற்றும் ஏஞ்சலா ரெய்னர் ஆகியோர், பெரு நிறுவனங்களின் தலைமையகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமான யாத்திரைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். கடந்த காலத்தில் தங்கள் வாயிலிருந்து தவறி விழுந்த சமூக அக்கறை கொண்ட வெற்றுப் பேச்சுக்களை அவர்கள் அங்கு பலியிட்டு வருகின்றனர். உலகளாவிய நிதிச் சந்தைக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கும் என்று அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
தொழிற் கட்சி இந்த சக்திகளால் வெறுமனே அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை. தனது முன்னாள் தொழிலாள வர்க்க ஆதரவுத் தளத்துடனான எஞ்சியிருந்த தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டதால், அது பெருநிறுவன மற்றும் நிதிசார் தன்னலக்குழுவின் ஓர் அரசியல் கருவியாக உடல் ரீதியாகவும், ஆன்மாவாகவும் மாறிவிட்டது.
ஜனவரி மாதம் நடத்தப்பட்ட YouGov கருத்துக்கணிப்பின்படி, உயர் மேலாண்மை, நிர்வாக மற்றும் தொழில்முறைப் பணிகளில் இருப்பவர்களிடையே, இது இப்போது விருப்பமான கட்சியாக உள்ளது.
குடும்ப வருமானம் குறையும் போது தொழிற் கட்சிக்கான ஆதரவும் வீழ்ச்சியடைகிறது. “இடைநிலைத் தொழில்களில்” உள்ளவர்களின் வாக்கு விருப்பங்களில் வெறும் 17 சதவீதத்தையும், “வழக்கமான மற்றும் கைவினைத் தொழில்களில்” உள்ளவர்களின் வாக்கு விருப்பங்களில் வெறும் 14 சதவீதத்தையும் மட்டுமே அது பெற்றுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே, அதிதீவிர வலதுசாரியான சீர்திருத்தக் கட்சியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாக ஆக்கப்பட்டுள்ளது (சீர்திருத்தக் கட்சி முறையே 29 மற்றும் 39 சதவீதங்களைப் பெற்றுள்ளது); மேலும் கன்சர்வேடிவ் (Tories) கட்சியாலும் அது முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது (டோரிகள் முறையே 23 மற்றும் 17 சதவீதங்களைப் பெற்றுள்ளனர்).
சீர்திருத்தக் கட்சி மற்றும் டோரிக்களின் தேசியவாதம், அந்நியர் வெறுப்பு மற்றும் பழமைவாத சமூக நெறிமுறைகளைக் கண்டு பின்வாங்கும் 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே, தொழிற் கட்சியை விட பசுமைக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது —ஏனெனில் தொழிற் கட்சியானது வலதுசாரிகளின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பெரும்பாலான நிகழ்ச்சி நிரல்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. ஸ்டார்மரும் அவருக்குப் பின் வரக்கூடிய சாத்தியமான தலைவரும், மக்கள் ஆதரவுத் தளம் ஏதுமற்ற, வங்கிகள் மற்றும் முக்கிய பெரு நிறுவனங்களின் கட்டளைகளுக்கு மட்டுமே பதிலளிக்கக்கூடிய, மக்கள் செல்வாக்கற்ற ஒரு வெற்றுப் பாத்திரமாக இருக்கும் கட்சியையே வழிநடத்துகிறார்கள்.
பிரிட்டனின் சர்வதேச பொருளாதாரப் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், விரைவான மறு இராணுவமயமாக்கலுக்கு நிதி வழங்கவும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்துவதன் மூலம் மட்டுமே தொழிற்கட்சியால் இந்தக் கோரிக்கைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிய முடியும். ஸ்டார்மர் இந்த செயல்முறையை இப்போதுதான் தொடங்கியுள்ளார், மேலும் இதை அவர் துரிதப்படுத்த வேண்டும் அல்லது அதைச் செய்யக்கூடிய ஒருவருக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
“பழைய தொழிற் கட்சியின் மிக மோசமான அம்சங்களைப் பிரதிபலிக்கும்” ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாக ஸ்டார்மரைக் கண்டித்து, டைம்ஸ் பத்திரிக்கை ஒரு தொனியை அமைக்கிறது: குறிப்பாக, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த வரிச் சுமை, விண்ணை முட்டும் சமூக நலத்திட்டச் செலவுகள், வேலைவாய்ப்புகளை அழிக்கும் வேலைவாய்ப்புச் சட்டங்கள் மற்றும் பணக்காரர்களின் வெளியேற்றம், படகுகளில் அடைக்கலம் தேடி வருபவர்களை நிறுத்தத் தவறியது மற்றும் யூத எதிர்ப்பு அலையை அவர் கட்டுப்படுத்தத் தவறியது போன்றவைகளாகும் — இங்கு “யூத எதிர்ப்பு” என்பது இஸ்ரேலுக்கான எதிர்ப்பைக் குறிக்கும் இரகசியக் குறியீடாகும்.
இந்தக் கட்டளைகளின் சமூகத் தாக்கங்கள், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது லண்டன் பெருநகர பொலிஸ்துறையால் 4,000ம் அதிகாரிகள், ட்ரோன்கள், தீவிரப்படுத்தப்பட்ட நிறுத்திச் சோதனையிடும் அதிகாரங்கள் மற்றும் கவச வாகனங்கள் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் வெளிப்படுகின்றன. இது, தீவிர வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்துடன் மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சாக்குப்போக்கின் கீழ் செய்யப்படுகிறது. மேலும், “இன்டிஃபாடா” (intifada) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் போராட்டக்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஸ்டார்மர் தலைமையிலான தொழிற் கட்சி அரசு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வழங்கிய மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது: அதாவது, பிரித்தானிய தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் போக்கைக் கொண்ட ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தின் தலைமையில் ஒரு புதிய பிற்போக்குத்தனமான அரக்கன்” அமர்த்தப்பட்டுள்ளான் என்பதே அதுவாகும்.
2024-ல் போலி இடதுகளால் முன்னெடுக்கப்பட்ட “தீமைகளில் குறைந்ததைத் தேர்ந்தெடுக்கும்” கொள்கைக்கும் (ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தொழிற் கட்சிக்கு வாக்களிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பு) முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியைக் கொண்ட, சோசலிச தொழிலாளர் கட்சி தலைமையிலான ஒன்றினைந்த கூட்டமைப்புக்கும் மற்றும் “உங்கள் கட்சி” போன்ற திட்டங்கள் அல்லது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் பசுமைக் கட்சிக்கான ஊக்குவிப்பு போன்றவற்றின் பின்னால் அதிருப்தியைத் திரட்டுவதற்கான பிற்கால முயற்சிகளுக்கும் இது பொருந்தும். இவை அனைத்தும் அதே தொழிற் கட்சி அரசியலின் புதிய வடிவங்களேயாகும் — இவை, உள்நாட்டில் சிக்கன நடவடிக்கை, வெளிநாட்டில் இராணுவவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குதல் ஆகிய ஒரே முதலாளித்துவ ஆதரவு திட்டத்திற்கான வெவ்வேறு மேலுறைகள் மட்டுமே ஆகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1926 பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, லியோன் ட்ரொட்ஸ்கி பிரித்தானியாவின் “திடீரெனவும் தொடர்ச்சியாகவும் வீழ்ச்சியடைந்து வரும் உலகளாவிய பாத்திரம்” குறித்து பின்வருமாறு எழுதினார்:
இந்த மாற்ற முடியாத செயல்முறை ஒரு புரட்சிகர சூழ்நிலையையும் உருவாக்குகிறது. அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ளவும், பின்வாங்கவும், தந்திரமாகச் செயல்படவும், காத்திருக்கவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிரித்தானிய முதலாளித்துவ வர்க்கம், தனக்குள் மிகப் பெரிய கசப்பை நிரப்பிக் கொள்கிறது; இது ஒரு உள்நாட்டுப் போரில் பயங்கரமான வடிவங்களில் வெளிப்படும்.
இந்தச் சூழலில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:
பிரித்தானிய தொழிலாள வர்க்கத்தின் இன்றைய ஒட்டுமொத்த “மேற்கட்டமைப்பு” முழுவதுமே —அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் குழுக்களிலும் விதிவிலக்கின்றி— புரட்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக செயல்படுகிறது.
தொழிற்கட்சியும், தொழிற்சங்க அதிகாரத்துவமும் தங்களின் செயல்பாடுகள் மூலம் ட்ராட்ஸ்கியின் கூற்றை நிரூபித்துள்ளன. கம்யூனிச அகிலத்தில் இருந்த ஸ்டாலினிய பிரிவினர், பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது திணித்த சந்தர்ப்பவாத போக்கு — அதாவது தொழிற்சங்க “இடதுகளை” மகிமைப்படுத்துவதும், தொழிற்சங்க காங்கிரசின் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதும் — ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை நசுக்கியது. இதன் விளைவாக, பிரித்தானிய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் தனது சொந்த “தீர்வுகளை” முன்னெடுப்பதற்கு நேரமும் அவகாசமும் கிடைத்தது: ஊதியக் குறைப்புகள், பெரும் மந்தநிலையின் போது ஏற்பட்ட பிரமாண்டமான வறுமை, மற்றும் இரண்டாம் உலகப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்த இராணுவவாதத்திற்கான உந்துதல் ஆகியவைகளே அந்தத் தீர்வுகளாகும்.
“பிரித்தானிய புரட்சியின் பிரதான தடை என்பது, ‘இடதுசாரித்துவம்’ என்ற போலியான, இராஜதந்திர வேடமே... அது பின்வாங்குவதற்கு மட்டுமல்ல, துரோகம் செய்வதற்கும் எப்போதும் தயாராக இருக்கிறது” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.
1926-ல் இருந்ததைப் போலவே, 2026-லும் நிலைமை இருக்கிறது. இன்றைய “இடதுகள்” —ஜெர்மி கோர்பின் மற்றும் அவரது சகாக்கள்— என்பவர்கள், தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் மனநிலைக்கு எதிராக, தொழிற் கட்சியின் அரசியலின் முன்னணிப் பாதுகாவலர்களாகவும், ஆதரவுத் தூண்களாகவும் இருக்கிறார்கள். ஒரு புதிய மற்றும் உண்மையான சோசலிசத் தலைமையை கட்டியெழுப்புவதற்கு இவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட வேண்டும்.
1926 பொது வேலைநிறுத்தம் குறித்த சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரித்தானியா) கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
