முன்னோக்கு

ஈரான் மீதான போருக்கு எதிரான எதிர்ப்பை முடக்குவதற்காக, ஜாகோபின் பத்திரிகையும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பும் மக்களிடையே மெத்தனத்தை விதைக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளான ஷெரிப் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இடிபாடுகளை தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். திங்கள்கிழமை, ஏப்ரல் 6, 2026. [AP Photo/Francisco Seco]

ட்ரம்ப் “போர்நிறுத்தம்” அறிவித்ததில் இருந்து கடந்த இரண்டு நாட்களில், மத்திய கிழக்கில், எல்லாவற்றிற்கும் மேலாக, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பெரும் குண்டுவீச்சுகள் மூலமான வன்முறை தொடர்ந்ததுடன், அமெரிக்காவில் அரசியல் நெருக்கடியும் ஆழமடைந்தது. ட்ரம்ப் தனது போர் நிறுத்த அறிவிப்புடன், ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதாக வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், அமெரிக்க இராணுவம் தனது “அடுத்த வெற்றிக்காக” “தயாராகி ஓய்வெடுத்து வருகிறது” என்றும் புதன்கிழமை மாலை அறிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற பத்திரிகையான ஜாகோபின், ஒரு தொடர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. எதற்கும் கவலைப்படத் தேவையில்லை, எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே அந்தக் கட்டுரைகளின் மையக் கருத்தாகும்.

பென் பர்கிஸ் என்பவர் எழுதிய “ஈரான் விவகாரத்தில், ட்ரம்பும் அமெரிக்க சாம்ராஜ்யமும் பின்வாங்கினர்” என்ற கட்டுரையின் அலட்சியப்போக்கு அதன் தலைப்பிலேயே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பர்கிஸ் எழுதுகையில், “ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார். அவ்வாறு செய்ததன் மூலம் அவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் காட்டியுள்ளார். அடுத்த முறை போர் ஆதரவாளர்கள் ஏதேனும் புதிய போர் எளிதான வெற்றியைத் தரும் என்று கூறும்போது இதை நினைவில் கொள்ள வேண்டும்—உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசுகளுக்கும் கூட வரையறைகள் உண்டு.”

தனது ஆய்வைச் சுருக்கமாகக் கூறும் பர்கிஸ், “உலகெங்கும் சென்று போர்களைத் தொடங்கக் கூடாது என்பதற்கான பல காரணங்களில் ஒன்று, சில நேரங்களில் நீங்கள் தோற்க நேரிடும் என்பதாகும். அடுத்த முறை போர் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஏதேனும் புதிய அமெரிக்க சாகசத்தை ஊக்குவிக்க முயன்றால், இதுவும் அப்படிப் போகாது என்று அவர்களுக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று கேளுங்கள்” என்று முடித்துள்ளார்.

இந்த சிடுமூஞ்சித்தமான மற்றும் பொறுப்பற்ற மொழி, DSA-வின் அரசியல் நிலைப்பாட்டையும் அதிலிருந்து உருவாகும் முடிவுகளையும் அம்பலப்படுத்துகிறது. பர்கிஸ், ஏகாதிபத்திய போரை பாரிய போராட்டத்தின் மூலம் எதிர்க்க வழிதேடும் தொழிலாளர்களிடமோ அல்லது இளைஞர்களிடமோ பேசவில்லை. உண்மையில், அவர் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பாளராகப் பேசவில்லை. மாறாக, மிகவும் பயனுள்ள ஏகாதிபத்தியக் கொள்கைகள் மற்றும் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட போர்களுக்காக வாதிடுபவராகவே பேசுகிறார்.

அரசியல் ஸ்தாபனத்தின் சில பிரிவினருக்கு வேண்டுகோள் விடுக்கும் அவர், ஒரு இராணுவ மற்றும் மூலோபாய பின்னடைவிலிருந்து மிகவும் விவேகமான முடிவுகளை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்துகிறார்.

இந்த நிலைப்பாடு ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது. பர்கிஸின் “ஆய்வு” என்று சொல்லப்படுபவற்றில் ஜனநாயகக் கட்சி பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. ஜனநாயகக் கட்சியினர் அவ்வப்போது ட்ரம்பின் வாய்வீச்சுக்களையும், வழிமுறைகளையும் விமர்சித்தாலும், போரின் அடிப்படை மூலோபாய நோக்கங்களை முழுமையாக ஆதரிக்கின்றனர். ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி புதன்கிழமை அன்று CNN-னிடம் கூறுகையில், “ஆனால் இப்போது ஈரான் அந்த நீரிணையை நிரந்தரமாகக் கைப்பற்றினால், இந்த முழு முயற்சியும் எவ்வளவு பெரிய தவறு, எவ்வளவு பெரிய தவறான கணக்கீடு!” என்றார்.

ஜாகோபின் பத்திரிகையின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் ஜனநாயகக் கட்சி அரசியலுடன் பிணைக்கப்பட்டுள்ள அதன் முக்கிய நோக்கம், போருக்கு எதிரான எதிர்ப்பை முடக்குவதாகும்: ட்ரம்ப் ஒரு “படுதோல்வியை” சந்தித்துவிட்டார், எனவே ஆபத்து குறைந்துவிட்டது என்று அது காட்ட முயல்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதும், ஈரானிய மக்களின் எதிர்ப்பைத் தவறாகக் கணித்துவிட்டது என்பதும் உண்மையே. ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தின் பதில் பின்வாங்குவதாக இருக்காது, மாறாக அது தீவிரமடைவதாகவே இருக்கும்—வெளிநாடுகளில் அதிக வன்முறை மற்றும் உள்நாட்டில் சர்வாதிகாரத்திற்கான ஆழமான சதி ஆகியவை அரங்கேறும்.

ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களைக் பர்கிஸ் கையாளும் விதம் குறிப்பாகப் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. செவ்வாய்கிழமை காலை ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டதை —“ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடக்கும்”— அவர் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அதை ஒரு வேடிக்கையான அலட்சியத்துடன் கையாளும் அவர், ஒரு “சித்திரக்கதை புத்தக எழுத்தாளர் இந்த வசனத்தை ஒரு பைத்தியக்கார விஞ்ஞானி அல்லது ஆடை அணிந்த ஒரு சூப்பர் வில்லனின் வாய்மொழியாக வைத்திருந்தால், அது நம்பமுடியாத அளவிற்குத் தீவிரமானதாகத் தோன்றியிருக்கும்” என்று குறிப்பிடுகிறார்.

இதன் முடிவு முற்றிலும் மெத்தனமான ஒன்றாக இருக்கிறது:

போர் சிறப்பாகச் நடந்திருந்தால், அவர் தான் செய்துகொண்டிருந்ததையே தொடர்ந்து செய்திருப்பார். ஆனால் அது நடக்காதபோது, அவர் தனது கற்பனைக்கு எட்டிய மிகவும் விசித்திரமான அச்சுறுத்தல்களை விடுத்தார். அதுவும் தோல்வியடைந்தபோது, மிகவும் அவமானகரமான நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த வாதத்தின் சாராம்சம் என்னவென்றால், ஈரானை நிர்மூலமாக்குவோம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் வெறும் “விசித்திரமானது” மட்டுமே தவிர, அது உண்மையான உள்நோக்கம் கொண்டது அல்ல என்பதாகும். பர்கிஸ் இதை மிகத் தெளிவாக வெளிப்படையாக இவ்வாறு எழுதுகிறார்: “உலகின் மேலாதிக்கம் செலுத்தும் பேரரசின் மகத்தான அதிகாரத்திற்கு கூட எல்லைகள் உண்டு. அவரது ஆரம்பகால இனப்படுகொலை மிரட்டல் இந்த யதார்த்தத்தின் விளைவே ஆகும், அதேபோல் அவரது அடுத்தடுத்த சரணடைவும் அதன் விளைவே.”

ட்ரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுப்பதற்கு முன்பே, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பதையும், நாட்டின் பெரும்பாலான தொழில்முறை மற்றும் சமூகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என்பதையும் பர்கிஸ் முற்றிலும் புறக்கணிக்கிறார். DSA-வை உண்மையில் இயக்கும் நடுத்தர வர்க்க அரசியல் வஞ்சகர்கள் மற்றும் இரண்டாம் நிலை ஜனநாயகக் கட்சி ஏஜெண்டுகளுக்கே உரிய பாணியில், இந்த போர் ஒரு நகைச்சுவையான சிறு தவறைப் போலவே கையாளப்படுகிறது.

ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை “இனப்படுகொலை வெற்று மிரட்டல்” என்று — அதாவது, செயல்படுத்தப்படாத வெறும் வெற்று அச்சுறுத்தல்கள் என்று — ஜாகோபின் நிராகரிப்பது, அரசின் பிரிவுகளுக்குள்ளேயே நிலவும் கருத்துக்களுக்கு கூட முரணாக உள்ளது. உதாரணமாக, ஓய்வுபெற்ற ஜெனரல் பாரி மெக்காப்ரே, ட்ரம்ப்பின் மொழி அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான “குறியீட்டு வார்த்தைகள்” என்று குறிப்பிட்டார். மேலும், இந்த அச்சுறுத்தல்களும் போரும் ஒட்டுமொத்தமாக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்ற அடிப்படை உண்மையை பர்கிஸ் குறிப்பிடவில்லை.

உலக சோசலிச வலைத் தளம் (wsws) எச்சரித்தபடி, ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும். 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு முழு நாகரிகத்தையே அழிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் அறிவித்தது, போரின் இனப்படுகொலை தர்க்கத்தை வெளிப்படுத்தியதுடன், அமெரிக்க அரசு மற்றும் அதன் தலைவர்களின் குற்றவியல் தன்மையையும் அம்பலப்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் “ஜனநாயகம்” அல்லது “மனித உரிமைகளைப்” பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற எஞ்சியிருந்த கட்டுக்கதையை இது சிதறடிக்கிறது.

இத்தகைய சிந்தனைகள் ஜாகோபின் மற்றும் DSA-வின் அரசியலுக்கு முற்றிலும் அந்நியமானவை. ஏனெனில் இவை முழுமையாக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றி மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய அரசியல் முன்னேற்றம் (மற்றும் தனிப்பட்ட செழிப்பு) ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிக்கின்றன.

ஜனநாயகக் கட்சியைப் பற்றி பர்கிஸ் எதுவும் கூறவில்லை என்றாலும், பிரான்கோ மார்செடிக் எழுதிய மற்றொரு கட்டுரை, மர்பி உட்பட சில முன்னணி ஜனநாயகவாதிகள், போர்க்குற்றங்களை ஆதரித்ததற்காக ட்ரம்பைக் கண்டிப்பதிலிருந்து ஒரே இரவில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிடுகிறது. இது ஈரானிடம் சரணடைவதாகவும், “பகைமையை மீண்டும் தொடங்குவதற்கு ட்ரம்பை திறம்படத் தூண்டுவதாகவும்” உள்ளது.

ட்ரம்பை வலதுசாரிக் கண்ணோட்டத்தில் இருந்து மார்செடிக் விமர்சிப்பதை “தெளிவாக எந்தப் பயனும் தராதது” என்று அழைக்கிறார். ஆனால், “நல்வாய்ப்பாக, அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் அவ்வாறு இல்லை. பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் யாசமின் அன்சாரி போன்ற சிலர் விவேகத்தையும் பகுத்தறிவையும் ஆதரிக்கின்றனர்,” என்று அவர் கூறுகிறார்.

அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் கிரெக் காசர் போன்ற காங்கிரஸில் உள்ள DSA உறுப்பினர்கள் அல்லது செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் போன்ற DSA ஆதரவு பெற்றவர்களைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இவர்கள் ஈரான் போருக்கான தங்கள் “எதிர்ப்பை”, ட்ரம்பின் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த சாண்டர்ஸ், “இப்போது குடியரசுக் கட்சியினர் (காங்கிரஸில்) குரல் கொடுக்க வேண்டிய நேரம்,” என்று கூறினார்.

இந்த “இடது” ஜனநாயகக் கட்சியினர் ஈரானில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து வாய்வீச்சு விமர்சனங்களை வெளியிடும் அதே வேளையில், பைடென் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு அவர்கள் முழு ஆதரவையும் அளித்தனர்.

மார்செடிக்கின் சொந்த முடிவு பர்கிஸை விட அரசியல் ரீதியாக இன்னும் திவாலானதாகும். போர்நிறுத்தம் என்பது “உண்மையில் அமைதி சக்திகளுக்கான வெற்றி அல்ல”, ஆனால் “இராணுவவாதத்திற்கு கிடைத்த ஒரு அதிர்ச்சியூட்டும் தோல்வி” என்று அவர் கூறுகிறார். பின்னர் “எந்தவொரு அமைதியையும் நிலைநாட்ட, ட்ரம்ப் பெரிய அளவில் வெற்றி பெற்றார் என்ற கற்பனையை நிலைநிறுத்த நாம் அனைவரும் அவருக்கு உதவ வேண்டும்” என்று வாதிடுகிறார். “அமைதியை நிலைநாட்டச் செய்வது” என்பது வெறும் மனோதத்துவ விஷயமாக மாற்றப்படுகிறது. ட்ரம்ப் தான் “வெற்றி பெற்றுவிட்டதாக” நம்பினால் மட்டுமே போர் மீண்டும் தொடங்காது என்பது போன்ற ஒரு சித்திரத்தை இது தருகிறது.

ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்போடு மட்டும் நின்றுவிடாமல், கீழிருந்து ஒரு மக்கள் இயக்கம் உருவாவதைத் தடுப்பதே ஜனநாயகக் கட்சி மற்றும் DSA-வின் முக்கிய நோக்கமாகும். எந்தவொரு உண்மையான மக்கள் அணிதிரட்டலையும் கண்டு ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகிறார்கள். ஏனெனில், அது உடனடியாகப் பரந்த கேள்விகளை எழுப்பும். செல்வக் குவிப்பு, நிதிய தன்னலக்குழுவின் சர்வாதிகாரம் மற்றும் இரு முதலாளித்துவக் கட்சிகளும் எதைப் பாதுகாக்க இருக்கின்றனவோ அந்த ஒட்டுமொத்த சமூக ஒழுங்கு குறித்த கேள்விகளை அது எழுப்பும்.

இதனால்தான், மார்ச் 28 அன்று ட்ரம்பிற்கு எதிராக நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களின் போது, அவர்களும் அவர்களின் அரசியல் இணைப்புகளும் ஈரானுக்கு எதிரான போரை வேண்டுமென்றே முக்கியத்துவம் குறைத்துக் காட்டினர். போர் குறித்த கேள்வியை எழுப்பிய சாண்டர்ஸ் போன்றவர்கள், காங்கிரஸுக்கும், ஏன் ட்ரம்புக்கே கூட முறையிடுவதைத் தவிர, அந்தப் போராட்டத்திற்கு வேறு எந்த ஒரு முன்னோக்கிய வழியையும் முன்வைக்கவில்லை.

ஜாகோபின் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளில் ஈரானுக்கு எதிரான போரின் வரலாற்று வேர்கள் மற்றும் அடிப்படை உந்து சக்திகள் பற்றிய எந்தவொரு குறிப்பும் முற்றிலும் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்கள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரின் கீழும் ஈரானில் அமெரிக்க தலையீட்டின் நீண்ட வரலாறு அல்லது ஈரான் மீதான தாக்குதலுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான விரிவடைந்து வரும் மோதலுக்கும் இடையிலான தொடர்பு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இரண்டு கட்டுரைகளுமே “எண்ணெய்”, “ஏகாதிபத்தியம்”, “முதலாளித்துவம்”, ஆளும் வர்க்கம் அல்லது ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சக்திகள் பற்றி குறிப்பிடவில்லை.

இந்த தவிர்ப்பு ஒரு திட்டவட்டமான வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் DSA-ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மேல் நடுத்தர வர்க்கச் சூழலுக்காகப் பேசும் ஜாகோபின் பத்திரிகையானது, எல்லாவற்றிற்கும் மேலாக போருக்கும், அதை உருவாக்கும் முதலாளித்துவ நலன்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் உருவாவதைத் தடுக்க முயல்கிறது. இத்தகைய இயக்கத்தை “குறுங்குழுவாதம்” என்று ஜாகோபின் மற்ற இடங்களில் குறிப்பிட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாபெரும் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போராடுகின்றன. ஏகாதிபத்தியப் போர் இயந்திரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், தற்போதைய நெருக்கடி —அல்லது அடுத்தடுத்த நெருக்கடிகள்— ஈரானில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நாகரிகத்தை அச்சுறுத்தும் ஒரு உலகப் போராக உருவெடுப்பதைத் தடுப்பதற்கும் தேவையான சமூக சக்தி சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்திடம் மட்டுமே உள்ளது.

Loading