முன்னோக்கு

கட்டாய இராணுவச் சேவையை எதிர்த்திடு! ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஏப்ரல் 3, 2026 அன்று தென் கரோலினாவின் பாரிஸ் தீவில் உள்ள கடற்படை ஆட்சேர்ப்பு முகாமில், கடற்படை தற்காப்புக் கலைத் திட்ட சகிப்புத்தன்மை பயிற்சியின் போது கடற்படை வீரர்கள் ‘பிளாங்க்’ (plank) நிலையில் இருப்பதை ஒரு பயிற்சி பயிற்றுவிப்பாளர் மேற்பார்வையிடுகிறார். [Photo: Marine Corps Lance Cpl. Nicholas White ]

கடந்த மாத இறுதியில், 2026 டிசம்பர் முதல் 18 முதல் 26 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு அமெரிக்க ஆணும், கட்டாய இராணுவச் சேர்க்கைக்காகத் தானாகவே பதிவு செய்யப்படுவார்கள் என்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கின்றன: அமெரிக்க ஆளும் வர்க்கம், கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. பெருநிறுவனத் தன்னலக்குழு தனது சட்டவிரோதமான மற்றும் விரிவடைந்து வரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு இளைஞர்களைப் பீரங்கி இரையாகப் பயன்படுத்த விரும்புகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் (NDAA) மறைத்து வைக்கப்பட்டுள்ள, மில்லியன் கணக்கான இளைஞர்களைத் தெரிவுச் சேவை முறையில் (Selective Service System) தானாகப் பதிவு செய்யும் இந்த நடவடிக்கை, கட்டாய இராணுவச் சேவையை நோக்கிய ஒரு பாரிய படியாகும். தற்போது, 46 மாநிலங்கள் ஓட்டுநர் உரிம முறைகள் மூலம் ஆண்களைத் தானாகப் பதிவு செய்கின்றன; இது தகுதியுள்ளவர்களில் சுமார் 81 சதவீதத்தினரை உள்ளடக்கியுள்ளது. புதிய சட்டம் இந்தச் செயல்முறையை மத்தியமயமாக்கிப் பொதுமைப்படுத்துவதுடன், எஞ்சியவர்களைப் பதிவு செய்ய சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (Social Security Administration) தரவுகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், பதிவு என்பது இனி ஓட்டுநர் உரிமத்தையோ அல்லது எந்தவொரு தனிநபரின் நடவடிக்கையையோ சார்ந்திருக்காது. இது முற்றிலும் தானியங்கி முறையிலானதாகவும், கட்டாயமானதாகவும், பிறப்பு முதல் ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிக்கும் மத்திய தரவுத்தளங்களுடன் இணைக்கப்பட்டதாகவும் இருக்கும்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், ஈரானியக் கடற்கரைப் பகுதியில் தரைவழி ஊடுருவலுக்குத் தயாராகி வரும் சூழலிலும், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான தனது மோதலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு போலி “போர்நிறுத்த” கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டே, ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கிற்கு ஒரு பாரிய இராணுவப் படைப்பிரிவைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அமெரிக்க இராணுவம் சுமார் 1.3 மில்லியன் நேரடி சேவைப் பணியாளர்களைக் கொண்டுள்ளது, இவர்கள் உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதன் உச்சக்கட்டத்தில், 2003 ஈராக் போரில் 170,000 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டனர், ஆனால் அது மீண்டும் மீண்டும் துருப்புக்களை நிலைநிறுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இராணுவத்தையே நெருக்கடிக்குள்ளாக்கியது. ஈரானில் —அந்நாடு ஈராக்கை விட நான்கு மடங்கு பெரியது மற்றும் மூன்று மடங்கு அதிக மக்கள் தொகை கொண்டது— ஒரு தொடர்ச்சியான தரைவழிப் போரை நடத்த பெரும்பாலான மதிப்பீடுகளின்படி 300,000 முதல் 500,000 துருப்புக்கள் தேவைப்படும், மேலும் ஒரு நீண்டகால ஆக்கிரமிப்புக்கு இதைவிட மிக அதிகமான படைகள் தேவைப்படவும் வாய்ப்புள்ளது.

ஆட்சேர்ப்பில் ஒரு பாரிய விரிவாக்கம் (இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை) அல்லது கட்டாய இராணுவச் சேவை இல்லாமல், தற்போதுள்ள தன்னார்வப் படைகளால் இந்தத் தேவையை ஈடுகட்ட முடியாது. இராணுவக் கடமைகளுக்கும் கிடைக்கக்கூடிய மனிதவளத்திற்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியதாக இருக்கும் ஒரு தருணத்தில், இதற்கான உள்கட்டமைப்புகள் அமைதியாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் இது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 8 அன்று, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், கட்டாய இராணுவச் சேவையை நிராகரிக்க மறுத்தார். பாக்ஸ் நியூஸிடம் பேசிய அவர், இது “இப்போதைக்கு தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் ஜனாதிபதி தனது வாய்ப்புகளைப் புத்திசாலித்தனமாகத் திறந்து வைத்துள்ளார்” என்று கூறினார்.

ஈரானுக்கு எதிரான இந்தப் போர், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் குறிப்பாக சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பு உட்பட, தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும். இந்த உலகளாவிய ஆக்கிரமிப்புத் திட்டமானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள் போர்க்களத்தில் பலியிடப்படும் ஒரு நிலைக்கு மீண்டும் திரும்புவதைக் கோருகிறது.

1964 மற்றும் 1973-க்கு இடையில், வியட்நாம் போருக்காக அமெரிக்க அரசாங்கம் 2.2 மில்லியன் ஆண்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்தது. இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பு ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியதுடன், ஆயுதப் படைகளுக்குள்ளேயே ஒரு எதிர்ப்பையும் உருவாக்கியது; இது இறுதியில் இராணுவத்தின் நிலைகுலைவிற்கே வழிவகுத்தது. ஆளும் வர்க்கத்தால் அரசியல் ரீதியாக இனி இதைத் தொடர்ந்து தக்கவைக்க முடியாது என்ற நிலையில்தான், 1973-ல் நிக்சன் கட்டாய இராணுவச் சேவை முறையை ஒழித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா ஒரு முழுமையான தன்னார்வப் படையையே நம்பியிருந்தது. கட்டாய இராணுவச் சேர்க்கையினால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளுக்கு ஆளும் வர்க்கம் அஞ்சியது. ஆனால், அந்த அமைப்பு இப்போது உடைந்து வருகிறது. ஆட்சேர்ப்புப் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10 அன்று வெளியான NPR (தேசிய பொது வானொலி) அறிக்கை, ஈரான் போரை ஒரு முக்கிய காரணியாகக் குறிப்பிட்டு, இராணுவ சேவையிலிருந்து மனசாட்சியின் அடிப்படையில் போரை எதிர்க்கும் தகுதி அல்லது பணியிலிருந்து முன்கூட்டியே விலகக் கோரி இராணுவப் பணியாளர்களிடமிருந்து இராணுவ ஆலோசனை அமைப்புகளுக்கு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சிறுமிகள் பள்ளியின் மீதான குண்டுவீச்சு மற்றும் ஆயுதப் படைகளைச் சூழ்ந்துள்ள பரந்த சட்டவிரோதச் சூழல் ஆகியவற்றை இராணுவ வீரர்கள் இதற்குக் காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் கையெழுத்திட்டிருந்தாலும், கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான உந்துதல் இருகட்சி ஆதரவைப் பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி கிறிஸ்ஸி ஹூலகான் 2024-ல் தானியங்கிப் பதிவை முன்மொழிந்தார்; முந்தைய ஆண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திலிருந்து அது நீக்கப்பட்ட பிறகு, 2025-ல் மீண்டும் அதை அறிமுகப்படுத்தினார். இறுதி மசோதா பிரதிநிதிகள் சபையில் 312-112 என்ற கணக்கிலும், செனட்டில் 77-20 என்ற கணக்கிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயகக் கட்சியினர் இதனை முன்மொழிந்து, நிலைக்குழுக்கள் மூலம் வழிநடத்தி, சபையில் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இது ஒரு சர்வதேசச் செயல்முறையின் ஒரு பகுதியாகும். நாஜியின் மூன்றாவது பேரரசு (Third Reich) புரிந்த குற்றங்களுக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 டிசம்பர் 5 அன்று ஜேர்மனியின் நாடாளுமன்றம் ஒரு புதிய இராணுவச் சேவைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி, 18 வயதுடைய அனைத்து ஆண்களும் ஒரு கட்டாயக் கேள்வித்தாளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவேளை கட்டாய இராணுவச் சேவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற ஜேர்மனிய இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பின்வருமாறு அறிவித்தார்: “இது போதுமானதாக இல்லையென்றால், பகுதி அளவிலான கட்டாய இராணுவச் சேவையை அறிமுகப்படுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.”

பிரான்ஸ் நவம்பர் 2025 இல் ஒரு தன்னார்வ இராணுவச் சேவைத் திட்டத்தை அறிவித்தது. ரஷ்யாவுடனான ஒரு போரில் நாடு தனது “குழந்தைகளை இழக்கத்” தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ஃபேபியன் மாண்டன் கூறினார்.

போர் தயாரிப்புகள் என்பது சமூக நலத்திட்டங்கள் மீதான தாக்குதலுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படவுள்ள அதே இளைஞர்களுக்கு, ஏற்கனவே ஒரு எதிர்காலம் மறுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாத்தியமற்ற வீட்டு வாடகைகள், மாணவர் கடன் சுமை, பாதுகாப்பற்ற வேலை மற்றும் பொதுக் கல்வி உட்பட சமூகச் சேவைகளின் அழிவு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.

“நாம் போர்களில் ஈடுபட்டுள்ளோம்” என்பதால் சமூக நலத் திட்டங்களைத் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். அவர் கூறுகையில், “குழந்தைப் பராமரிப்பு, மெடிகேட் [Medicaid - குறைந்த வருமானம் கொண்டோருக்கான மருத்துவ உதவித் திட்டம் ], மெடிகேர் [Medicare - முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவக் காப்பீடு] ஆகியவற்றை எங்களால் கவனித்துக் கொள்ள முடியாது. ... நாம் ஒன்றை மட்டும் கவனித்தாக வேண்டும்: அது இராணுவப் பாதுகாப்பு.” ட்ரம்பின் 2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கோரிக்கை இராணுவத்திற்கு 1.5 டிரில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது —இது பென்டகன் வரலாற்றிலேயே மிகப்பெரிய கோரிக்கையாகும்— அதே வேளையில், 1950-களுக்குப் பிறகு இல்லாத அளவிற்கு, பாதுகாப்புத் துறை சாராத பொதுச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் மிகக் குறைந்த பங்கிற்குத் தள்ளுகிறது.

கட்டாய இராணுவச் சேர்க்கையின் மீள்வருகை என்பது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. கட்டாய இராணுவச் சேர்க்கைக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் அதே அரசாங்கம்தான், ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) அமைப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது, எதிர்ப்புகளைக் குற்றமாக்குகிறது மற்றும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகார அமைப்பிற்குள் குவிக்கிறது. அமெரிக்காவிற்குள் ஒரு மூர்க்கமான இராணுவ-போலீஸ் சர்வாதிகார ஆட்சி இல்லாமல், “முழுமையான போர்” திட்டத்தைச் செயல்படுத்தவோ, அங்கு நிலவும் உச்சகட்ட சமூக சமத்துவமின்மையைத் தக்கவைக்கவோ முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றன:

  • தானியங்கி இராணுவச் சேவைப் பதிவு விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஈரான் மீதான போருக்கோ அல்லது வேறு எந்த ஏகாதிபத்திய மோதல்களுக்கோ கட்டாய இராணுவச் சேவையைத் திரட்டுவதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
  • மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் மற்றும் ஈரான் மீதான போரை நிறுத்த வேண்டும்.
  • உலக ஆதிக்கத்திற்கான இருகட்சிகளின் முனைப்பு, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான போர் தீவிரமாக்கம் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை ஈடுகட்ட இராணுவ வன்முறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
  • நிரந்தர இராணுவத்தை ஒழிக்க வேண்டும்; வெளிநாடுகளில் முடிவில்லாப் போர்களை முன்னெடுக்கவும், உள்நாட்டில் ஒடுக்குமுறையை ஏவவும் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைக் கலைக்க வேண்டும். பென்டகன், உளவு முகமைகள், உலகளாவிய இராணுவத் தளங்களின் வலைப்பின்னல், தனியார் இராணுவ ஒப்பந்ததாரர்களின் அமைப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் இரகசிய நடவடிக்கைகளுக்கான இயந்திரங்கள் ஆகியவை “பாதுகாப்பிற்கான” கருவிகள் அல்ல; மாறாக, அவை ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான கருவிகளாகும்.
  • வறுமை, கடன் சுமை, தரமான வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வியைப் பெற முடியாத நிலை ஆகியவற்றால் இளைஞர்கள் இராணுவச் சேவைக்குத் தள்ளப்படும் “பொருளாதாரக் கட்டாயச் சேர்க்கை” முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞருக்கும் கண்ணியமான வேலை, இலவச உயர்தரக் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றுக்கான சமூக உரிமை வழங்கப்பட வேண்டும். இராணுவச் சேவையில் சேருமாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
  • போருக்காக விரயமாக்கப்படும் அபரிமிதமான வளங்களை, அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திருப்பிவிட வேண்டும்: அதாவது, அனைவருக்கும் பொதுவான சுகாதாரம், இலவச பொதுக் கல்வி, மலிவு விலை வீட்டுவசதி மற்றும் பாதுகாப்பான, நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இந்தத் வேலைத்திட்டத்திற்கான போராட்டம், இரு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அவற்றின் அனைத்து அரசியல் கூட்டாளிகளுக்கும் எதிரான சமரசம் செய்துகொள்ள முடியாத எதிர்ப்புடன், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சோசலிச இயக்கத்தின் நீண்டகாலக் கொள்கை ரீதியான முழக்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்: “ஏகாதிபத்தியப் போருக்காக ஒரு மனிதனோ ஒரு பைசாவோ கொடுக்கப்படக் கூடாது!” அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் நோக்கங்களுக்காக ஒரு தொழிலாளியோ, ஒரு மாணவரோ, ஒரு இளைஞரோ பலிகொடுக்கப்படக்கூடாது.

இது ஒரு அமைதிவாத வேண்டுகோள் அல்ல. இது ஒரு வர்க்கக் கொள்கை. கட்டாய இராணுவச் சேர்க்கைக்கு எதிரான போராட்டம் என்பது, இராணுவச் சேவையிலிருந்து தனிப்பட்ட முறையில் விலக்கு பெறுவதோ அல்லது ஆளும் வர்க்கத்தின் போர் நோக்கங்களைத் தொடர அனுமதித்துவிட்டு, போரில் தன் தனிப்பட்ட ஈடுபாட்டைத் தவிர்த்துக் கொள்வதோ அல்ல. இது ஏகாதிபத்திய இராணுவவாதத்தையே தீவிரமாகவும் சமரசமின்றியும் எதிர்ப்பதாகும். இது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

எனவே, கட்டாய இராணுவச் சேர்க்கைக்கு எதிரான எதிர்ப்பானது, போருக்கு எதிரான எதிர்ப்போடும், ஒட்டுமொத்த இராணுவ-உளவுத்துறை எந்திரத்தோடும் மற்றும் போரை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்போடும் பிரிக்கவியலாதவாறு இணைக்கப்பட வேண்டும்.

இந்த இயக்கம் சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு ஈரான், சீனா, ரஷ்யா அல்லது வேறு எங்குமுள்ள தொழிலாளர்களைக் கொல்வதில் எந்த ஆர்வமும் இல்லை. எதிரி வெளிநாட்டில் இல்லை. அது உள்நாட்டில் உள்ளது: லாபம், சூறையாடல் மற்றும் போருக்காக உலகையே அடிபணியச் செய்யும் முதலாளித்துவ ஆளும் வர்க்கமே அந்த எதிரி. கட்டாய இராணுவச் சேர்க்கையை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

யுத்தம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளது. இதற்கு மாற்றாக இருப்பது சோசலிசமே ஆகும்: அதாவது, சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், சமூகத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதாகும்.

Loading