இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தளத்தின் (wsws) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், ஏப்ரல் 8 புதன்கிழமை அன்று, துருக்கியைத் தளமாகக் கொண்ட துருக்கிய மொழி செய்தி அலைவரிசையான TV5 இல் நேர்காணல் அளித்தார். ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போக்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உறவு மற்றும் உலகளாவிய காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பின் வாய்ப்புகள் குறித்து உரையாற்றுமாறு அவரிடம் கேட்கப்பட்டது.

பெப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு மத்தியில் இந்த நேர்காணல் நடைபெற்றது. இந்தப் போர், பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கும் ஈரானிய உள்கட்டமைப்புகளின் பரவலான அழிவுக்கும் வழிவகுத்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளில் இரண்டு வார கால “போர்நிறுத்தத்தை” ட்ரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே — அந்த இடைவேளையில் அவர் ஈரானை “ஒரு நாகரிகமாக” அழித்துவிடுவேன் என்று பகிரங்கமாக அச்சுறுத்தியிருந்தார் — நோர்த் இந்தப் போர் குறித்த ஒரு கூர்மையான மதிப்பீட்டை வழங்கியதுடன், அதற்கு எதிராக அணிதிரளுமாறு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை அளித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் ஒரு போர் எதிர்ப்புப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்ற எந்தவொரு கருத்தையும் நோர்த் நிராகரித்தார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது தனிப்பட்ட அரசியல்வாதிகளின் சொல்லாட்சிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்கிய அவர் பின்வருமாறு கூறினார்:
அமெரிக்காவின் வேலைத்திட்டமானது ஒன்று அல்லது மற்றொரு அரசியல்வாதியின் வாக்குறுதிகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய நலன்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த ஜனாதிபதி பதவியில் இருந்தாலும், அவருடைய சொல்லாட்சிகள் எதுவாக இருந்தாலும், இலக்குகள் ஒன்றாகவே இருக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போரை பேரழிவுகரமான உயிர் இழப்பை ஏற்படுத்திய ஒரு முழுமையான குற்றவியல் போர் என்று வர்ணித்த நோர்த், ஈரானை அச்சுறுத்துவதில் ட்ரம்ப் பயன்படுத்திய மொழி அதன் குற்றத்தன்மையில் வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாதது என்று வலியுறுத்தினார்: நேற்று சொல்லப்பட்டதை இன்று மறந்துவிடக் கூடாது. இரண்டு வார கால இடைநிறுத்தம் உலக அமைதியின் தொடக்கத்தைக் குறிக்கவில்லை. இது வெறும் இடைவேளை மட்டுமே. அமெரிக்காவின் இறுதி நோக்கம் ஈரான் மீதும், உண்மையில் முழு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் மீண்டும் ஒருமுறை காலனித்துவக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதாகும் என்று எச்சரித்த அவர், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்ப இந்த இடைவேளையைப் பயன்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையிலான பதட்டங்கள் குறித்த கேள்வியில், இரு பிரிவினரையும் ஒரே உலகளாவிய ஏகாதிபத்திய அமைப்பின் வெவ்வேறு பிரிவுகள் என்று நோர்த் விவரித்தார்: “ஏகாதிபத்திய குண்டர்களில் அமெரிக்கா மிகவும் குற்றமிழைக்கக்கூடிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதே மையப் பணியாகும் என்றும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் “எந்தவொரு பிரிவினரும் தங்கள் நண்பனோ, கூட்டாளியோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அனைவரும் குற்றவியல் ஆட்சிகளே” என்றும் அவர் வாதிட்டார்.
முன்னாள் துருக்கியப் பிரதமர் நெக்மெட்டின் எர்பக்கானின் (Necmettin Erbakan) மரபு மற்றும் உலகளாவிய காலனித்துவத்தை சவாலுக்கு உட்படுத்துவதில் முஸ்லிம் சமூகங்களின் ஆற்றல் குறித்து நேர்காணல் செய்பவர் கேள்வி எழுப்பியபோது, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் மதம் அல்லது இனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நோர்த் விளக்கினார். மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமானது “அனைத்து நாடுகளையும், அனைத்து இனங்களையும், அனைத்து மதங்களையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான வர்க்கப் போராட்டத்தில் எந்தளவுக்கு ஒன்றிணைக்கிறதோ அந்தளவுக்கு மட்டுமே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியும்” என்றார்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் கதியைக் சுட்டிக்காட்டிய நோர்த், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஏதேனும் தீவிரமான எதிர்ப்பை முன்வைப்பதில் முதலாளித்துவ தேசியவாத மற்றும் மத இயக்கங்களின் தோல்வியை கடுமையாக விமர்சித்தார்: “உதாரணமாக, அரபு ஒற்றுமை அல்லது முஸ்லிம் ஒற்றுமை போன்ற பல தசாப்த கால சொல்லாட்சிகளுக்கு மத்தியிலும், அவர்கள் கைவிடப்பட்டனர். அவர்களின் பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை.” சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கம் மட்டுமே ஏகாதிபத்திய சக்திகளுக்கு திறம்பட சவால் விடுக்க முடியும் என்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் அவர் வாதிட்டார்.
துருக்கியப் பார்வையாளர்களுக்கு நேரடியான மற்றும் அவசரமான வேண்டுகோளுடன் நோர்த் முடித்தார்: “சூழ்நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ஏகாதிபத்திய சக்திகள் என்ன செய்யத் தயாராக உள்ளன என்பதை நாம் அனைவரும் இப்போது பார்த்திருக்கிறோம். அவர்கள் ஒட்டுமொத்த நாகரிகங்களையே அழிப்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஹிட்லர் முயற்சி செய்ததையும் மிஞ்சும் அளவிலான இனப்படுகொலையைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.”
அமெரிக்க-ஈரான் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலக சோசலிச வலைத் தளத்தின் போர் எதிர்ப்பு முன்னோக்கிற்கு சர்வதேச அளவில் வளர்ந்து வரும் ஆதரவை இந்த நேர்காணல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
