மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கிழக்கில் பெருமளவிலான படைக் குவிப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான தீவிரப் போர் முன்னேற்பாடுகளுக்கு மத்தியில், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து 32 தூதரக ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வெளியேறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது, அதே சமயம் வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 என்று தூதரக வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
திங்களன்று லெபனானுக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்க வெளியுறவுத்துறை, தமது குடிமக்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்ததுடன், எஞ்சியுள்ள பணியாளர்களுக்கு “மிகக் குறுகிய கால அறிவிப்புடன்” பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்தது.
ஜூன் 22 அன்று ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பாக்தாத், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள தூதரகங்களில் அமெரிக்கா தனது இருப்பைக் குறைத்தது. 2025 ஜூன் மாதம் நடந்த நள்ளிரவு தாக்குதல் நடவடிக்கைக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட அதே முறையை பின்பற்றி தற்போதைய இந்த வெளியேற்றமும் இடம்பெறுகிறது.
உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்டு, மத்திய தரைக்கடல் வழியாக திங்களன்று கிரீட் தீவில் உள்ள சூடா விரிகுடாவை வந்தடைந்தது, இது இன்னும் சில நாட்களில் இஸ்ரேல் கடற்கரைக்கு அப்பால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் குழு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. ஏராளமான போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புகள் இப்பகுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் கடற்படை சொத்துக்களில் 40,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க பணியாளர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈராக் மீதான படையெடுப்பிற்கு ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தயாரானதிலிருந்து, இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள “மிகப்பெரிய இராணுவப் படை இதுவாகும்” என்று நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் திங்களன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தங்கள் நாட்டு இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அரபு நாடுகள் வாஷிங்டனிடம் தெரிவித்துள்ளதாக பாரசீக வளைகுடா அதிகாரி ஒருவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற அச்சுறுத்தல், வான்வழிப் பயண உரிமைகளைப் பெறுவதில் வாஷிங்டனின் திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது. ஆனால், ஈரானுடனான அமெரிக்க “இராஜதந்திரத்தின்” வரலாறு, வாஷிங்டன் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைத் தேடுகிறது என்ற எந்தவொரு நம்பிக்கையையும் நிராகரிக்கிறது.
ஏப்ரல் 2025 இல், ஐந்து சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிகை ஈரானுக்கு 60 நாள் காலக்கெடுவை விதித்தது. ஜூன் 8, 2025 அன்று, பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருந்தபோதே, சி.ஐ.ஏ இயக்குனர் ஜோன் ராட்க்ளிஃப், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் கேம்ப் டேவிட்டில் நடந்த போர் திட்டமிடல் கூட்டத்தில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், பங்கேற்றார். இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், ஈரானுக்குள் ஏற்கனவே அதன் உளவாளிகள் இருப்பதாகவும் ராட்க்ளிஃப் ட்ரம்ப்பிற்கு விளக்கமளித்ததாக ஜூன் 10 அன்று ஆக்ஸியோஸ் செய்தி வெளியிட்டது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் அமெரிக்காவும் இணைவதற்கான விருப்பத் தேர்வுகளை ட்ரம்ப்பின் ஆலோசகர்கள் “பல மாதங்களுக்கு முன்பே” தயாரித்துவிட்டதாக ஜூன் 22 அன்று சி.என்.என் தெரிவித்தது.
கேம்ப் டேவிட் அமர்வுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 13 அன்று — சரியாக காலக்கெடு முடிவடைந்த ஒரு நாளுக்குப் பிறகு — இஸ்ரேல் “எழும் சிங்கம்” நடவடிக்கையைத் தொடங்கியது. ஜூன் 22 அன்று, அமெரிக்கா “நள்ளிரவு சுத்தியல்” நடவடிக்கையைத் தொடங்கி, ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கியது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையில்: “தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு இராஜதந்திர செயல்முறைக்கு மத்தியில் நாங்கள் தாக்கப்பட்டோம்” என்று கூறினார்.
இதேபோன்ற மோசடி வெனிசுவேலாவிற்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டது, அங்கு படையெடுப்பிற்கு முந்தைய நாளான ஜனவரி 2, 2026 வரை மதுரோ பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ட்ரம்ப் பின்னர் பொக்ஸ் நியூசுக்கு கூறுகையில்: “நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை” என்றார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் நிலவும் விவாதங்கள், அச்சுறுத்தப்படும் இந்தப் போரினால் ஏற்படக்கூடிய பாரிய விளைவுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ஈரான் மீதான தாக்குதல் வெனிசுவேலாவை விட மிகப் பெரிய அளவிலான பதிலடி தாக்குதலை ஏற்படுத்தி, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அமெரிக்க உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஈரான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், மேம்பட்ட ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பினாமி படைகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தான் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
பிப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் ட்ரம்ப் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம், கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் எச்சரிக்கை விடுத்ததாக வாஷிங்டன் போஸ்ட் திங்களன்று செய்தி வெளியிட்டது. “முக்கியமான ஆயுதங்களின் பற்றாக்குறை மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவின்மை ஆகியவை இந்த நடவடிக்கையிலும், அமெரிக்கப் பணியாளர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கும் உக்ரேனுக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு “பெருமளவில் குறைந்துவிட்டது” என்று கெய்ன் எச்சரித்துள்ளார். ஈரானிய ஏவுகணைகளிலிருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க அவசியமான தாட் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் சமீபத்திய நடவடிக்கைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா ஆண்டுக்கு சில நூறு எண்ணிக்கையிலான ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
வெனிசுவேலா திட்டமிடலின் போது, ஜெனரல் கெய்ன் ட்ரம்பிடம் “வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், கெய்ன் “ஈரான் விவாதங்களின் போது அதே போன்ற உத்தரவாதங்களை திரு. ட்ரம்பிற்கு வழங்க முடியவில்லை, ஏனெனில் அது மிகவும் கடினமான இலக்காகும்” என்று குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிலளித்த ட்ரம்ப், இந்தச் செய்திகள் “100 சதவீதம் தவறானவை” என்று அழைத்ததுடன், ஈரான் மீதான தாக்குதல் “எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக” இருக்கும் என்று கெய்ன் நம்புவதாகக் கூறினார். போஸ்ட் பத்திரிகையிடம் பேசியவர்கள் “ட்ரம்பின் இத்தகைய நம்பிக்கையான சித்தரிப்பை நேரடியாக மறுத்தனர்.”
ஒரு அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், “இந்த முறை ஒரு பரந்த மற்றும் நீண்டகால இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகளே அதிகம்” என்று பிப்ரவரி 19 அன்று வெளியிட்ட ஆய்வில் RANE (முன்பு ஸ்ட்ராட்ஃபோர்) மதிப்பிட்டுள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் வெளியிட்ட இதன் மதிப்பீட்டில், “வரும் நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஆபத்து அதிகமாகவே இருக்கும்” என்று RANE முடிவுக்கு வந்தது. மேலும் பிப்ரவரி மாத ஆய்வின்படி, “இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய முடியாத கோரிக்கைகளால் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் முடங்கவோ அல்லது தோல்வியடையவோ வாய்ப்புள்ளது; இது அமெரிக்க (மற்றும் இஸ்ரேலிய) இராணுவ நடவடிக்கைகான ஆபத்தைத் தக்கவைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட ஒரு போர் நடவடிக்கை “வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நீடிக்கலாம், அதிகப்படியான ஆயுதங்கள் தேவைப்படலாம் மற்றும் அமெரிக்கப் படைகளை ஈரானின் தீவிரமான பதிலடிக்கு உள்ளாக்கலாம்” என்று அட்லாண்டிக் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விரிவான ஆய்வில் கணித்துள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கையின் அளவு மலைக்க வைக்கிறது. ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை மட்டும் முடக்க வேண்டுமானால், “ஈராக்கை விட மூன்று மடங்கு பெரிய நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகளை” தாக்க வேண்டும் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதில் நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள், விநியோகக் கிடங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் அடங்கும். இலக்கு ஆட்சி மாற்றம் என்றால், “தாக்கப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் விரிவடையும்; இதில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாதுகாப்பு சேவைகள் மற்றும் கொமேனியுடன் தொடர்புடைய முக்கிய கட்டிடங்கள் அடங்கும்.”
ஈரான் தனது ஆயுதப் படைகளை மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளதுடன், ஈராக் உடனான அதன் மேற்கு எல்லை மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணை ஏவுதளங்களை நிலைநிறுத்தி வருகிறது.
கடந்த வாரம் அயதுல்லா கொமேனி பேசுகையில்: “உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவம் ஒரு பலமான அடியைப் பெறக்கூடும், அதிலிருந்து அவர்களால் மீண்டும் எழ முடியாமல் போகலாம்” என்று கூறினார். மேலும், ஒவ்வொரு இராணுவ மற்றும் அரசாங்கப் பொறுப்பிற்கும் நான்கு அடுக்கு வாரிசுத் திட்டங்களை அவர் வகுத்துள்ளார். தனக்குப் பின் மூன்று சாத்தியமான வாரிசுகளைப் பெயரிட்டுள்ளார். தான் கொல்லப்பட்டால், முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது நம்பிக்கைக்குரிய நெருக்கமான வட்டத்திடம் கொமெனி ஒப்படைத்துள்ளார்.
இந்தப் போர் தயாரிப்புகளுக்கு ஜனநாயகக் கட்சி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் மற்றும் செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் உட்பட அதன் முன்னணித் தலைவர்கள் எவரும் இந்த அச்சுறுத்தலைக் கண்டித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
போரை எதிர்ப்பதற்குப் பதிலாக, முக்கிய ஜனநாயகக் கட்சியினர் அதை தீவிரமாக ஆதரித்துள்ளனர். செனட்டர் பெட்டர்மேன் ஈரான் மீது குண்டுவீசுவதற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸின் அனுமதி தேவை என்ற தீர்மானத்தை பிரதிநிதி காட்ஹைமர் எதிர்த்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்காகத் திரட்டப்படும் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் ஜனநாயகக் கட்சியினரே நிதி வழங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 901 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA) 115 ஜனநாயகக் கட்சியினரும், ஜனவரி மாதம் 839 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒதுக்கீட்டிற்கு 149 பேரும் ஆதரவாக வாக்களித்தனர்.
