மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) முகவர்களால் ரெனீ நிக்கோல் குட் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், வெனிசுவேலா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் படையெடுப்பும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தையும் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் நோக்கிய உந்துதலில் ஒரு தீவிரமான அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்தச் சம்பவங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தை ஒரு பாசிசக் குற்றவாளிகளின் ஆட்சியாக அம்பலப்படுத்துகின்றன. இந்த ஆட்சி, பெருகிய முறையில் அப்பட்டமான வன்முறை மூலம் செயல்படுகிறது, சட்டப்பூர்வமான தன்மையை ஒரு இடையூறாகக் கருதி நிராகரிக்கிறது, மேலும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உழைக்கும் மக்களை அடக்கப்பட வேண்டிய ஒரு எதிரியாகக் கருதுகிறது.
ஜனவரி 3 அன்று தொடங்கப்பட்ட வெனிசுவேலா மீதான ஊடுருவல், அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது — இது சர்வதேசச் சட்டம் மற்றும் அரசு இறையாண்மையின் மிக அடிப்படையான நெறிமுறைகளை மீறும் ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச் செயலாகும்.
வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளங்களைக் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், கோடிக்கணக்கான பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு மாற்றவும், அந்நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியில் காலவரையற்ற ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அமெரிக்கா தனது நோக்கத்தை விரைவாக சமிக்ஞை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், ரஷ்யக் கொடியுடன் பயணித்த ஒரு கப்பல் உட்பட பல எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய வாஷிங்டன், ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கியூபாவுடனான பொருளாதார உறவுகளை கராகஸ் (Caracas) துண்டிக்க வேண்டும் என்றும், அதன் எண்ணெய் உற்பத்தியை முழுக்க முழுக்க அமெரிக்க நலன்களுடன் பிரத்தியேகமாக இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, இறுதி எச்சரிக்கைகளை வெளியிட்டது.
நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 7 அன்று, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை முகவர்கள் மினியாபோலிஸைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான 37 வயது ரெனீ நிக்கோல் குட்டை சுட்டுக் கொன்றனர். ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளின் உடனடி எதிர்வினை, அந்த ICE கொலையாளியைப் பாராட்டுவதாகவும் ரெனீ நிக்கோல் குட்டை அவதூறு செய்வதாகவும் உள்ளது. இது, இக்கொலையைத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக அல்லாமல், எதிர்காலக் கொலைகளுக்கான ஒரு முன்னுதாரணமாகவே அவர்கள் கருதுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் குட்டின் படுகொலை தொடர்பான வீடியோ பதிவைப் பார்த்துள்ளனர். அவர்களின் கண்கள் அவர்களை ஏமாற்றவில்லை. ஆனால், இது ட்ரம்ப், துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்குவதைத் தடுக்கவில்லை. அதில், ICE வன்முறைக்கு பலியானவரே தனது இறப்பிற்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறார்.
“தீவிர இடதுசாரிகளுக்கு” எதிரான போர் என்ற போர்வையில், முக்கிய நகரங்களில் துணை இராணுவத்தின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும், கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குவதையும் நியாயப்படுத்த வெள்ளை மாளிகை இந்தப் படுகொலையைப் பயன்படுத்துகிறது. மினியாபோலிஸ் நகரம் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், அங்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றச்செயல்களும், உள்நாட்டில் நிலவும் சர்வாதிகாரமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளன. தன்னலக்குழு, இனி சட்டப்பூர்வமான மற்றும் ஜனநாயக வடிவங்களின் மூலம் தனது நலன்களைப் பாதுகாக்க முடியாது என்பதால், ட்ரம்பை முன்னிறுத்தியுள்ளது. மேலும், உலகளாவிய மேலாதிக்கத்திற்காகப் போர் தொடுக்கத் தேவையான பெரும் வளங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான நேரடித் தாக்குதலின் மூலமே திரட்டப்பட வேண்டும். இது, இன்னும் கூடுதலான ஒடுக்குமுறை மற்றும் வன்முறையைக் கோருகிறது.
ஜனவரி 6, 2021 அன்று, அதிகார மாற்றத்தை நிறுத்தவும், அரசியலமைப்பைக் கவிழ்க்கவும் முயன்ற ஒரு சதிப்புரட்சிக்கு ட்ரம்ப் தலைமை தாங்கினார். அந்தச் சதிப்புரட்சி, இப்போது அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியால் மேற்பார்வை செய்யப்படும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வாதிகாரத்தை நோக்கிய இந்த வீழ்ச்சியை ட்ரம்பின் தனிப்பட்ட அபிலாஷைகள் அல்லது மனநோயியலின் விளைவாக மட்டும் விளக்கிவிட முடியாது. அமெரிக்கா ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவால் ஆளப்படுகிறது. இது முடியாட்சியின் பிரபுத்துவ கண்ணோட்டத்தையும், அடிமை முறையின் கருத்தியல் பிற்போக்குத்தனத்தையும், நிதி மூலதனத்தின் வர்க்க நலன்களோடு ஒன்றிணைக்கிறது.
அமெரிக்கப் புரட்சியிலிருந்து 250 ஆண்டுகள் — அதன் பாரம்பரியம் நிராகரிக்கப்படுகிறது
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும், அமெரிக்காவை ஒரு பாசிச சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான சதியும், ஒரு பெரிய வரலாற்று ஆண்டு விழாவின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கட்டவிழ்ந்து வருகின்றன.
இந்த 2026 ஆம் ஆண்டில், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஜூலை 4, 1776 அன்று அறிவிக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும். இது, அமெரிக்காவைத் தோற்றுவித்த மற்றும் அரசியல் மற்றும் சமூகப் புரட்சியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்த ஒரு உலகளாவிய வரலாற்று நிகழ்வாகும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இராணுவப் போராட்டம் ஏப்ரல் 1775-இல் தொடங்கியது. அப்போது அமெரிக்காவில் குடியேறிவர்கள் லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் பகுதியில் ஆயுதம் ஏந்தினர். ஆனால், அமெரிக்கப் புரட்சியானது ஒரு சிறிய அளவிலான உயர்குடி மக்களால் நடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சச்சரவாக உருவாகவில்லை. மாறாக இது, பிரிட்டிஷ் முடியாட்சி மற்றும் பேரரசரின் நிர்வாகத்தின் பெருகிவரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் தொகையின் பரந்த பிரிவினரிடையே ஏற்பட்ட தீவிரமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்தது. தன்னிச்சையான நிர்வாக அதிகாரம், தண்டனைக்குரிய பொருளாதார நடவடிக்கைகள், அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் இராணுவப் பலத்தைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது, இந்த மோதலானது ஏற்கனவே இருந்த அரசியல் வழிகளுக்குள் அடக்க முடியாத ஒரு பாரிய எதிர்ப்பின் வளர்ச்சியைத் தூண்டியது.
இந்தத் தீவிரமயமாக்கல், புதிய வகை அரசியல் சுய-அமைப்புகளின் வெடிப்பின் மூலம் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்கள் தீவிர அரசியல் வாழ்க்கையில் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் குழுக்கள், சபைகள் மற்றும் ஒருங்கிணைப்பு வலையமைப்புகளை உருவாக்கி, பேரரசரின் அதிகாரத்திற்கு சவால் விடுத்ததோடு, பெருகிய முறையில் அந்த அதிகாரத்தை இடமாற்றம் செய்தனர். வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஆலன் ரையர்சன் விளக்குவது போல்: “அமெரிக்கப் புரட்சியானது, பெரிய மற்றும் சிறிய நூற்றுக்கணக்கான சமூகங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான சாமானிய மனிதர்களை அரசியல் மற்றும் சமூக ஒழுங்கு இரண்டையும் மாற்றுவதற்காக அணிதிரட்டியது...”
லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பதினைந்து மாதங்களுக்குப் பிறகு, பிலடெல்பியாவில் கூடிய பிரதிநிதிகள் 33 வயதான தோமஸ் ஜெபர்சனால் வரையறுக்கப்பட்ட ஒரு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர். அது, அமெரிக்க சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடிப்படையாக, உலகளாவிய ஜனநாயகக் கோட்பாடுகளை அறிவித்தது. அந்த ஆவணம், இதுவரை எழுதப்பட்டவற்றிலேயே மிகவும் புரட்சிகரமான வாக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படக்கூடிய ஒன்றைக் கொண்டுள்ளது:
அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்பதும், அவர்கள் தங்கள் படைப்பாளரால் மாற்ற முடியாத சில உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்த உரிமைகளில் உயிர் வாழ்தல், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவை அடங்கும் என்பதும் சுயமாகத் தெளிவான உண்மைகள் என நாம் கருதுகிறோம்.
17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளின் அறிவொளி காலத்து (Enlightenment) சிந்தனையில் ஆழமாக வேரூன்றி, அந்த வரலாற்று காலத்தின் சிறந்த பொருள்முதல்வாத அரசியல் மற்றும் சமூகக் கோட்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்ட அந்தப் பிரகடனம், ஒடுக்குமுறை அரசாங்கங்களைப் புரட்சிகரமான முறையில் தூக்கியெறிய மக்களுக்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்தியது. ஜெபர்சனின் வார்த்தைகளில் கூறுவதானால்: “அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன. அவை, ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்து தங்கள் நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்றன. எந்தவொரு அரசாங்கமும் இந்த நோக்கங்களுக்கு அழிவை ஏற்படுத்துவதாக மாறும்போது, அதை மாற்றுவதற்கோ அல்லது அதை ஒழித்துக்கட்டுவதுக்கோ மக்களுக்கு உரிமை உண்டு...”
அமெரிக்கப் புரட்சியின் வரலாற்று மரபு இன்றைய காலகட்டத்தில் மிக எரியும் யதார்த்தத்தைப் பெறுகிறது. 250 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கொள்கைகள் இப்போது அனைத்துத் தளங்களிலும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. உரிமைகளின் மசோதா சிதைந்து போயுள்ளது. மேலும், அரசியல் அமைப்பு சர்வாதிகாரத்தின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிரான அனைத்து “குறைகளும்”, —குறிப்பாக “எமது மக்களைத் துன்புறுத்துவதற்காக அதிகாரிகளின் கூட்டத்தை அவர் இங்கே அனுப்பினார்” என்பது உட்பட— தற்போதைய அரசாங்கத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாக அமையக்கூடும்.”
சமூக சமத்துவமின்மையும், சர்வாதிகார ஆட்சியின் வர்க்க அடித்தளமும்
“அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்று அமெரிக்கப் புரட்சி பிரகடனம் செய்து இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சமூக சமத்துவமின்மை நவீன அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவிலுள்ள பில்லியனர்கள் (தோராயமாக 900 நபர்கள்) தங்களின் நிகர சொத்து மதிப்பை 18 சதவீதம் அதிகரித்துள்ளனர். இதன் மூலம், அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் பத்து நபர்கள் மட்டும் 2.4 டிரில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க், தனது சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலராக உயருவதைக் கண்டுள்ளார் —இது பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம். அரசாங்கத்தின் உச்சத்திலுள்ள தனது நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப், ஒரே ஆண்டில் தனது நிகர சொத்து மதிப்பை 4.3 பில்லியன் டாலரிலிருந்து 7.3 பில்லியன் டாலராக உயர்த்தியதன் மூலம், அமெரிக்காவின் பணக்காரர்களின் பட்டியலில் 100 இடங்களுக்கு மேல் முன்னேறியுள்ளார்.
தொழிலாளர் புள்ளி விவர பணியகம் இந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அமெரிக்காவின் வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பல கோடி மக்கள் வீழ்ச்சியடைந்து வரும் ஊதியம், எகிறும் விலையேற்றம் மற்றும் சமாளிக்க முடியாத கடன் சுமையை எதிர்கொள்கின்றனர். பெருநிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி வேலைகளை பெருமளவில் ஒழித்து வருகின்றன. இந்த இரத்தக் களரி 2026-இல் மேலும் தீவிரமடையும்.
மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு, உணவு உதவி, பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய சமூகத் நலத் திட்டங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் ஒரு பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது. மக்களுக்கு இருக்கும் மிக அடிப்படையான பாதுகாப்புகளைக் கூட பறிப்பதன் மூலம், உலகளாவிய போர் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறைக்குத் தேவையான நிதியைத் அது திரட்ட முயல்கிறது.
இந்தச் சமூக யதார்த்தமே சர்வாதிகாரத்தின் அடிப்படையாகும். ஒரு சிறிய அடுக்கானது, செல்வம் மற்றும் அதிகாரத்தைத் தனது ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளும்போது, ஜனநாயக வடிவங்கள் அந்த தன்னலக்குழுவின் ஆட்சியைத் தக்க வைப்பதற்குப் பொருந்தாதவையாக மாறிவிடுகின்றன. ஆளும் வர்க்கம் இந்த அமைப்புமுறையை சீர்திருத்துவதன் மூலம் பதிலளிக்காமல், சட்டப்பூர்வமான வடிவங்களைக் கைவிடுவதன் மூலமும், ஒடுக்குமுறை கருவிகளை விரிவுபடுத்துவதன் மூலமும் பதிலளிக்கிறது.
ஜனநாயகக் கட்சியினரின் உடந்தையும், அரசை சார்ந்திருப்பதன் திவால்நிலையும்
ட்ரம்ப் உருவாகக் காரணமாக இருந்த சமூகப், பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், பல தசாப்தகால இருகட்சி (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டது. ட்ரம்பின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கு, ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் முற்றிலுமான இயலாமை மற்றும் விருப்பமின்மை ஆகியவை, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையும் முதலாளித்துவ தன்னலக்குழுவால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற யதார்த்தத்தையே பிரதிபலிக்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை ஒரு பாசிச சதிப்புரட்சியின் மூலம் கவிழ்க்க முயன்றார். இதற்கு, ட்ரம்பை மிகவும் மென்மையாகக் கையாண்ட பைடென் நிர்வாகம், இந்த குற்றவியல் சதிக்காக அவரை ஒருபோதும் பொறுப்பாக்கவில்லை.
2024 தேர்தல்களின் போது, “முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்வேன்” என்று உறுதியளித்த ட்ரம்பை, ஜனநாயகக் கட்சியினரே ஒரு “பாசிஸ்ட்” என்று வர்ணித்தனர். இருப்பினும், கடந்த ஓராண்டு காலமாக, அவர் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை முறையாகச் செயல்படுத்தியபோது, அதற்கான எதிர்ப்பை அடக்கவும் முடக்கவும் ஜனநாயகக் கட்சியினர் அயராது உழைத்து வந்தனர். ட்ரம்ப், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஜனநாயகக் கட்சியின் தலைமை அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஆலோசனையைக் கூட முன்வைக்கவில்லை.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஜனநாயகக் கட்சியினரின் முன்னுரிமை அல்ல. மாறாக, முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாகும். ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலின் அத்தியாவசிய உள்ளடக்கமான இராணுவவாதம், சிக்கன நடவடிக்கைகள், பெருநிறுவன கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் அரசின் அடக்குமுறை எந்திரத்தின் விரிவாக்கம் ஆகியவற்றுடன் ஜனநாயகக் கட்சியினர் உடன்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அஞ்சுவது ட்ரம்பின் சர்வாதிகாரத்தை அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் வகையில் கீழிருந்து எழும் ஒரு வெகுஜன இயக்கத்தின் வெடிப்பையே ஆகும். ஜனநாயகக் கட்சியை நம்பியிருப்பது என்பது, சர்வாதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு உண்மையான எதிர்ப்பையும் சாத்தியமற்றதாக்கிவிடும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் மூலோபாயம்: தொழிலாளர் அதிகாரத்தின் அமைப்புகளைக் கட்டியெழுப்புதல்
2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தின் நிகழ்வுகள் — வெனிசுவேலா மீதான படையெடுப்பு மற்றும் ரெனீ நிக்கோல் குட்டின் படுகொலை — ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 1,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உட்பட நாடு முழுவதும் ஏற்கனவே போராட்டங்கள் உருவாகி வருகின்றன. இந்தப் படுகொலை குறித்த சீற்றமானது, போர், சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான கொடூரமான துன்புறுத்தல்களுக்கு எதிரான பரந்த மக்கள் எதிர்ப்புடன் ஒன்றிணைகிறது.
ஆனால், இந்தக் குற்றங்களை முன்னின்று நடத்தும் அதே குண்டர்களிடம், அவர்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுமாறு முறையிடுவது இந்தப் போராட்டங்களின் நோக்கமாக இருக்கக் கூடாது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் நிரூபித்தது போல, தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்படாத போராட்டங்கள் பயனற்றவை ஆகும்.
ரெனீ நிக்கோல் குட்டின் படுகொலைக்கு எதிரான போராட்டங்களுக்காக சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளையும் வேலைத்திட்டத்தையும் முன்வைக்கிறது:
- ரெனீ நிக்கோல் குட்டின் படுகொலைக்குக் காரணமான அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
- மினியாபோலிஸ் மற்றும் ஏனைய அனைத்து நகரங்களிலிருந்தும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE), சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை (CBP) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஆகியவற்றின் படைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
- புலம்பெயர்ந்த சமூகங்களைப் பயமுறுத்தும் இந்த ‘கெஸ்டாபோ’ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) பாணி அமைப்புகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
- ICE காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து வகையான சுற்றிவளைப்புகள், ஆட்கடத்தல்கள் மற்றும் நாடுகடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- அனைத்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழுமையான சட்ட உரிமைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
- வெனிசுவேலா மற்றும் கரீபியன் பகுதிகளிலிருந்து அனைத்துப் படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், அமெரிக்கப் போர் இயந்திரத்தை அகற்ற வேண்டும்.
- இஸ்ரேலுக்கான அனைத்து ஆதரவுகளும் நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியான இனப்படுகொலையை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை பேணப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு பின்வருபவை அவசியமாகும்:
- தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட தலையீடு : இவர்களே அனைத்தையும் உற்பத்தி செய்யும் சமூக சக்தி, அதன் நலன்கள் அடிப்படையில் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தன்னலக்குழுவின் தாக்குதல்களுக்கு எதிரானவை.
- ஜனநாயகக் கட்சி, அதன் கூட்டாளிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களிடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனம் அவசியமாகும்.
- போருக்கு எதிரான போராட்டமும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- அமெரிக்காவிற்குள் இருக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களை உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கும் ஒரு சர்வதேச மூலோபாயத்தை செயல்படுத்த வேண்டும். உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தைத் வெறும் தேசிய அடிப்படையில் மட்டும் முன்னெடுக்க முடியாது.
எப்படி தொடங்குவது
ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பள்ளியிலும், மருத்துவமனையிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனக் குழுக்களை கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது. இந்த அமைப்புகள், அரசின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு உண்மையான எதிர்ப்பைத் தடுக்கும் தொழிற்சங்க எந்திரத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இவை எதிர்ப்பின் மையங்களாக உருவாக்கப்பட்டு, தொழில்துறை, சரக்குகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் துறை, போக்குவரத்து, உணவகங்கள், சமூக சேவைகள், சட்டப் பாதுகாப்பு, கல்வி, பொதுச் சேவைகள், கலை மற்றும் கலாச்சாரம், பொழுதுபோக்கு, மருத்துவம், சுகாதாரம், அறிவியல், கணினித் தொழில்நுட்பம் மற்றும் பிற சிறப்புத் தொழில்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும், மாணவர்களுடனும் இளைஞர்களுடனும் ஒன்றிணைத்து, ட்ரம்பின் பாசிச அரசாங்கம், அதற்கு ஜனநாயகக் கட்சியினரின் உடந்தை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்தத் தாக்குதலுக்கு எதிராகப் போராட வேண்டும்.
1770களில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தீவிரமயமாக்கல், புதிய அரசியல் சுய-அமைப்பு வடிவங்களை —பேரரசின் அதிகாரத்தை சவால் செய்த குழுக்கள் மற்றும் சபைகள்— உருவாக்கியது போலவே, இன்று சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாளர் அதிகாரத்தின் சுயாதீன அமைப்புகளை நனவுடன் கட்டியெழுப்ப வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) இணைந்து சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) உருவாக்கத்தைத் தொடங்கின.
தொழிலாளர் வர்க்கம் செறிந்துள்ள இடங்களான தொழிற்சாலைகளும் வேலைத்தளங்களும் —எங்கு உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்த முடியுமோ மற்றும் எங்கு உழைப்பின் சமூக அதிகாரம் நேரடியாக வெளிப்படுகிறதோ— சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் மையங்களாக மாற வேண்டும். இந்தச் சுயாதீனக் குழுக்களே, தொழிலாளர்கள் பல்வேறு தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், குறிவைக்கப்படும் சமூகங்களைப் பாதுகாக்கவும், அரசு மற்றும் நிறுவனங்களின் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தவும், ஒடுக்குமுறை மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களை ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக ஒன்றிணைக்கவும் உதவும் நடைமுறைச் சாதனங்களாகும்.
தொழிலாளர்கள், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களின் தர்க்கம், ஒரு பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட ஐக்கியப்பட்ட பாரிய நடவடிக்கையை நோக்கி இட்டுச் செல்கிறது. பெருநிறுவன மற்றும் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு தோற்கடித்த 1934-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற மினியாபோலிஸ் பொது வேலைநிறுத்தம் போன்ற வர்க்கப் போராட்டத்தின் சிறந்த மரபுகளை தொழிலாளர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
முதலாளித்துவ தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தாமல், பாசிசத்திற்கு எதிராக எந்தவொரு தீவிரமான இயக்கத்தையும் முன்னெடுக்க முடியாது. பில்லியனர்கள் அருவருப்பாக குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும், பிரமாண்டமான வங்கிகளும் பெருநிறுவனங்களும் பொதுச் சேவைகளாக மாற்றப்பட்டு, தனிப்பட்ட இலாபத்திற்காக அல்லாமல், சமூகத்தின் நலனுக்காக ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் மீதான தன்னலக்குழுக்களின் ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
நியூ யோர்க்கின் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தானி போன்ற நபர்கள் கூறுவது போல, சிறு சீர்திருத்தங்கள் மூலம் தொழிலாளர்களின் நிலைமைகளைச் சரிசெய்து விடலாம் என்பது ஒரு ஆபத்தான அரசியல் பொறியாகும். ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலம், இந்த நிதிய தன்னலக்குழுவானது, தனக்கு முன்னிருந்த முடியாட்சி மற்றும் அடிமை முறையைப் போலவே, சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நிரூபிக்கிறது. எதிர்ப்புகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறையும் ஒடுக்குமுறையும் மட்டுமே ஆகும்.
இது, அமெரிக்காவில் மட்டும் இடம்பெறும் போராட்டம் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமெரிக்காவில் நிலவும் நெருக்கடியானது, உலகளாவிய ஒரு செயல்முறையின் மிகக் கூர்மையான வெளிப்பாடாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ஏகாதிபத்தியம் மற்றும் போரின் உலகளாவிய அமைப்பு முறையை எதிர்கொள்ள எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட வேண்டும். தேசியவாதம் என்பது பாசிசம் ஊற்றெடுக்கும் இடமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காகவும், ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறியவும் போராடுகிறது.
முதலாவது அமெரிக்கப் புரட்சி (1775-83) பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தது. இரண்டாவது அமெரிக்கப் புரட்சி (1861-1865) உள்நாட்டுப் போரின் மூலம் அடிமை முறையை ஒழித்துக்கட்டுவதை கோரியது. இப்போது சர்வதேசப் போராட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக உருவாகி வரும் மூன்றாவது அமெரிக்கப் புரட்சியானது, ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கும், ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கும் எதிராக உருவாகி வருகிறது. இது சோசலிசத்திற்காகத் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கும் நனவுபூர்வமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல் குறித்த கேள்வியாகும்: அதாவது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், ஜனநாயக ஆட்சியின் உண்மையான அமைப்புகளை நிறுவுதல் மற்றும் சமூகத் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுசீரமைத்தல் என்பதாகும்.
நியூ யோர்க் டைம்ஸ் உடனான நேர்காணலின் போது ட்ரம்ப்பிடம், “உலக அரங்கில் உங்கள் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது ஏதேனும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆமாம், ஒன்று இருக்கிறது. அது எனது சொந்த அறநெறி. எனது சொந்த மனம். அதுதான் என்னைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம்” என்று பதிலளித்தார்.
வெள்ளை மாளிகையின் இந்த மனநோய் பிடித்த அதிகார வெறியர் தவறாகக் கூறுகிறார். ட்ரம்ப் மற்றும் தன்னலக்குழுவை விடப் பிரமாண்டமான ஒரு சக்தி உள்ளது. அது அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தி ஆகும்.
ஆனால், இதை எதிர்த்துப் போராடுவதுக்கு தேவையான வேலைத்திட்டமும் தலைமையுமே இப்போது கட்டியெழுப்பப்பட வேண்டும். போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முன்னோக்கிய பாதையாக சோசலிச சமத்துவக் கட்சி இந்த மூலோபாயத்தை முன்வைக்கிறது. இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் (SEP) இணைந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் அழைப்ப விடுக்கிறோம். பாசிசம், போர் மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் இல்லாத எதிர்காலத்தை உறுதி செய்ய வாருங்கள் !
