மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவூதி அதிருப்தியாளரும் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளருமான ஜமால் கஷோகியின் கொடூரமான படுகொலை குறித்து செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது, இளவரசரின் இரத்தக்கறை படிந்த ஆட்சியைப் பாதுகாத்தார். இதன் பின்னர், இளவரசரை கௌரவிப்பதற்காக பில்லியனர்கள், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட ஒரு ஆடம்பரமான இரவு விருந்தையும் ட்ரம்ப் ஏற்பாடு செய்தார்.
முகமது பின் சல்மான், கடந்த நான்கு ஆண்டுகளாக கஷோகி கொலை தொடர்பான தீர்க்கப்படாத சட்ட சிக்கல்கள் காரணமாக, ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவிற்கு பயணிக்க முடியவில்லை. துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு கஷோகி தனது துருக்கிய வருங்கால மனைவியுடனான திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறுவதற்காக சென்றபோது, சல்மானின் பாதுகாப்புத் தலைவர் தலைமையிலான சவுதி கொலையாளிகள் குழு, அவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது.
முகமது பின் சல்மானின் இந்த விஜயத்தின் போது, ட்ரம்ப்புக்கும் ஒரு நிருபருக்கும் இடையிலான அசாதாரணமான உரையாடல், இரு அரசாங்கங்களின் குண்டர்வாதம் மற்றும் குற்றத்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸ் நிருபர் மேரி புரூஸ், எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள சாத்தியமான குற்றச்சாட்டு ஆதாரங்கள் குறித்து ட்ரம்பிடமும், கஷோகி கொலை மற்றும் 9/11 பயங்கரவாத தாக்குதல்களில் சவுதி அரசாங்கத்தின் தொடர்புகள் குறித்து பின் சல்மானிடமும் இரண்டு கூர்மையான கேள்விகளை எழுப்பியபோது, ட்ரம்ப் தன்னையும் இளவரசரையும் பாதுகாத்துக்கொள்ள வெடித்தெழுந்தார்.
கஷோகியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நீங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய ஒருவரைக் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் பேசும் அந்த மனிதரைப் பற்றி நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவரை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், விஷயங்கள் நடக்கும்” என்று ட்ரம்ப் கூறினார். மேலும் அவர் தொடர்ந்தும் சவுதி இளவரசரைப் பாதுகாத்து, “அவருக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, அதை நாம் அப்படியே விட்டுவிடலாம். இதுபோன்ற கேள்வியைக் கேட்டு எங்கள் விருந்தினரை நீங்கள் சங்கடப்படுத்த வேண்டியதில்லை” என்று கூறினார்.
“விஷயங்கள் நடக்கும்.” ஒரு அரசியல் விமர்சகரின் கொலை மற்றும் அவரது உடல் பல துண்டுகளாக துண்டாடப்பட்டது குறித்த இந்தக் கூற்று, ட்ரம்பின் பாசிச ஜனாதிபதி பதவியின் குறிக்கோளாக சேவையாற்றக்கூடும். அமெரிக்காவில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர்கள் கார் ஜன்னல்களை உடைத்து குடிமக்களைத் தாக்குகிறார்கள். தேசிய காவல்படை துருப்புக்கள் முக்கிய நகரங்களை ஆக்கிரமித்து நாடு தழுவிய அளவில் நடவடிக்கைக்கு தயாராக உள்ளன. மில்லியன் கணக்கானவர்கள் உணவு முத்திரைகள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள். கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீன்பிடிப் படகுகள் மீது ஏவுகணைகளை வீசியதில், இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர். ட்ரம்பின் அமெரிக்காவில், இந்தக் குற்றங்கள் அனைத்தும் ஒரு தோள் குலுக்கலுடன் தள்ளுபடி செய்யப்பட்டு “விஷயங்கள் நடக்கின்றன”.
மேலும், ட்ரம்ப் விரும்பினால், சவுதி அரேபியாவின் மரணப் படைகள் ஜமால் கஷோகிக்கிக்கு வழங்கிய சிகிச்சையை, அமெரிக்காவில் உள்ள அவரது சொந்த விமர்சகர்களுக்கும் வழங்கப்படும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேரி புரூஸ் என்ற ஒரு பெண் நிருபர் எப்ஸ்டீனைப் பற்றி ஒரு கேள்வியைக் கேட்டபோது, ”குட்டிப் பன்றி வாயை மூடு!” என்று கடுமையாக அவரை விமர்சித்த ட்ரம்ப், “கொடூரமான, கீழ்ப்படியாத மற்றும் வெறுமனே பயங்கரமான கேள்வி” என்று அவரைக் கண்டித்து, “உங்கள் செய்தி மிகவும் போலியானது, அது மிகவும் தவறானது என்பதால் ABC யின் உரிமத்தை பறிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
முகமது பின் சல்மானை வரவேற்ற ட்ரம்ப், “அவர் செய்த பணியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மனித உரிமைகள் மற்றும் இதர எல்லா விஷயங்களிலும் அவர் செய்தது நம்பமுடியாதது” என்று கூறினார். இது, கடந்த ஆண்டு 345 மரண தண்டனைகளை நிறைவேற்றிய, முழு அதிகாரத்தையும் கொண்ட ஆட்சியாளரின் புதிய சாதனையின் அளவாகும்.
அரசியல் வெடிமருந்து பீப்பாய்களின் மேல் அமர்ந்து கொண்டு, ட்ரம்பும் முகம்மது பின் சல்மானும் மேற்கொண்ட சந்திப்பானது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் காலாவதியான சமூக ஒழுங்கை பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறையாக, வன்முறை அடக்குமுறையை தயார் செய்வதாக இருந்தது. ட்ரம்ப் அமெரிக்க நிதியியல் செல்வந்த தன்னலக்குழுக்களின் குற்றத் தன்மையை உருவகப்படுத்துகிறார். அதேவேளையில், முகம்மது பின் சல்மான் சவூதி அரேபியாவின் பரந்த எண்ணெய் வளத்தை ஏகபோகமாக வைத்திருக்கும் ஒரு ஊழல் நிறைந்த அரச குடும்பத்திற்கு தலைமை தாங்குகிறார்.
அந்நிய முதலீடுகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மற்றும் நல்ல ஊதியம் பெறும் வேலைகளை உருவாக்கும் என்ற அவரது தவறான கூற்றுக்களை வலுப்படுத்த ட்ரம்ப் சவூதி முதலீட்டை நம்பியுள்ளார். முகம்மது பின் சல்மானுடனான பொதுச் சந்திப்பின் போது, ட்ரம்ப் சவூதி முதலீடுகளில் 600 பில்லியன் டாலர்கள் இருப்பதாக பெருமையடித்துக் கொண்டார். இந்த எண்ணிக்கையை பட்டத்து இளவரசர் உடனடியாக “கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்களாக” உயர்த்தினார். ட்ரம்பின் அனைத்து முதலீட்டு வாக்குறுதிகளையும் போலவே, இந்தப் புள்ளிவிவரங்களும் பெரும்பாலும் கற்பனையானவை மற்றும் மக்களுக்கு எந்த உறுதியான நன்மைகளையும் வழங்கவில்லை. உண்மையில், அவரது வர்த்தகப் போர்க் கொள்கை, வேலைகளை அழித்து, விலைகளை உயர்த்தி, தொழிலாள வர்க்க குடும்பங்கள் மீது நிதிச் சுமையை அதிகரித்துள்ளது.
இந்த ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியை காட்டுகிறது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற, 7 மில்லியன் மக்கள் 2,500க்கும் மேற்பட்ட நகரங்களிலும், மாநகரங்களிலும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட, பாரிய “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகம் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் 4 ம் திகதி இடம்பெற்ற நியூ யோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. ட்ரம்பின் பாசிச கண்டனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் கடந்து, “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று தன்னைத்தானே வர்ணித்துக் கொண்ட ஜோஹ்ரான் மம்தானி நியூ யோர்க் நகர மேயராக தெரிவானார்.
டரம்ப் நிர்வாகம் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கூட்டம், ஒரு காலத்தில் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஒரு பில்லியனரும், பாலியல் கடத்தல்காரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான கோப்புகளை நீதித்துறை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கிட்டத்தட்ட ஒருமனதாக வாக்களித்த நிலையிலேயே இடம்பெற்றது. ட்ரம்ப் இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், பிரதிநிதிகளின் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் இதை பல வாரங்களாகத் தடுத்து வந்தார். ஆனால், ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த மசோதா இப்போது அவரது மேசைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முகமது பின் சல்மான், தனது சொந்த மக்களையும் அண்டை நாடுகளின் மக்களையும், குறிப்பாக ஏமனில், சவுதி தலைமையிலான போரில் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், மில்லியன் கணக்கானவர்களை பட்டினியால் வாட்டி வதைத்து அடக்குவதற்கும், போர் விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறார். காஸாவில், இஸ்ரேலிய-அமெரிக்க இனப்படுகொலையில் தான் உடந்தையாக இருந்து வருவது, வாஷிங்டனில் தனக்கு ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது என்று அவர் கணக்கிடுகிறார். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சவுதி முடியாட்சியால் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாகக் கருதப்படும் ஈரானை இந்த ஆயுதக் குவிப்பு இலக்கு வைக்கிறது.
ட்ரம்ப் வெறுமனே ஒரு தனிநபராக மட்டும் பேசவில்லை. மாறாக, அரசின் உருவகமாகவும், அது சேவை செய்யும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகவும் அவர் பேசுகிறார். சவுதி ஆட்சியின் கொடூரத்தை அவர் மகிமைப்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை மற்றும் குற்றத்தன்மையை பிரதிபலிக்கிறது.
காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையின் மைய நோக்கம், மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும், வாஷிங்டன், டெல் அவிவ் மற்றும் ரியாத் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணியை பலப்படுத்துவதும் ஆகும். இது குடியரசுக் கட்சியினதும் மற்றும் ஜனநாயகக் கட்சியினதும் கொள்கையாக இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் —அவர் தனது 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது முகம்மது பின் சல்மானை ஒரு “தீயவராக” ஆக்குவதாக சூளுரைத்தார்— பட்டத்து இளவரசருக்கு இறையாண்மை விலக்கு அளித்ததோடு, அமெரிக்க நீதிமன்றங்களில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்குத் தொடரலில் இருந்தும் அவரைப் பாதுகாத்தது. பைடென் ரியாத்துக்குச் சென்று கொலையாளியை இழிவான முறையில் முஷ்டி போட்டு சந்தித்த சில மாதங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
இரு கட்சிகளாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமெரிக்க தன்னலக்குழு, சவுதி ஷேக் வம்சத்தின் முழு அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியை ஏக்கத்துடன் பார்க்கிறது - ஒரு கட்டுப்பாடற்ற எதேச்சதிகாரத்துடன், செல்வம் ஒரு வம்ச உயரடுக்கால் ஏகபோகமாக கட்டுப்படுத்தப்படுவதுடன், அரசியல் எதிர்ப்பு மரண தண்டனைக்குரியது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரசு விருந்தில் நிதிய பிரபுத்துவத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கலந்து கொண்டனர், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் கலந்துகொண்ட விருந்தினர்களில் ஒருவராக இருந்தார். மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான மத்திய கூட்டாட்சி சமூக செலவினங்களில் இருந்து போதுமான அளவைக் குறைக்க ட்ரம்ப் தவறியதால் (மஸ்க்கின் பார்வையில்) கடந்த கோடை காலத்தில் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, மஸ்க் வெள்ளை மாளிகைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
எலோன் மஸ்க்குடன் விருந்தில் இணைந்தவர்களில் பிளாக் ஸ்டோனின் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன்; பிளாக் ரொக்கின் லாரி ஃபிங்க்; பாரமவுண்ட்/CBS டேவிட் எலிசன் (மற்றும் ஆரக்கிள் பில்லியனர் லாரி எலிசனின் மகன்); கோல்பெர்க் கிராவிஸ் ரொபர்ட்ஸ் (KKR) இணை நிறுவனர் ஹென்றி கிராவிஸ்; அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இணை நிறுவனர் ஜோசுவா ஹாரிஸ், சிட்டிகுரூப் CEO ஜேன் ஃப்ரேசர், GM CEO மேரி பார்ரா, ஃபோர்டு தலைவர் வில்லியம் கிளே ஃபோர்டு ஜூனியர், ஆப்பிள் CEO டிம் குக் மற்றும் என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் ஆகியோர் அடங்குவர். செவ்ரோன், குவால்காம், போயிங், சிஸ்கோ, ஜெனரல் டைனமிக்ஸ், ஃபைசர், IBM, ஹனிவெல், லொக்ஹீட் மார்டின் மற்றும் பலவற்றின் உயர் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். 2019 ஆம் ஆண்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ஏற்பட்ட மரணத்தினால் மட்டுமே - பாலியல் கடத்தலுக்காக மன்ஹாட்டன் சிறைச்சாலையில் இவர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார் - அவரை இந்த விருந்தினர் பட்டியலில் இருந்து விலக்கி வைத்தது.
ட்ரம்பின் மருமகனும், சவுதி பட்டத்து இளவரசரால் நிர்வகிக்கப்படும் நிதியிலிருந்து 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டைப் பெற்ற பயனாளியுமான ஜெரெட் குஷ்னர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத நிலையில், ட்ரம்பினது மகன் டொன் ஜூனியர், சவுதி இராச்சியத்தில் ட்ரம்ப் நிறுவனத்தின் மிகப்பெரிய வணிக முயற்சியான ஜெட்டா மற்றும் ரியாத்தில் ட்ரம்ப் பிராண்டட் கோபுரங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே கலந்து கொண்டார். ட்ரம்ப் தனது ஜனாதிபதி காலத்தில் அத்தகைய வணிக தொடர்புகளின் உரிமை குறித்த கேள்விக்கு கோபமாக பதிலளித்தார். இந்த நிறுவனத்தின் உரிமையாளராக அவர் இருந்து வருகின்ற போதிலும், இந்த நிறுவனத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ட்ரம்ப் கூறினார்.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் கலந்துரையாடப்பட்ட இழிவான ஒப்பந்தங்கள் பற்றிய விடயங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மேலும் வெளிச்சத்திற்கு வரும். ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்த்தை வலுப்படுத்துவதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான, இல்லாவிட்டால், மில்லியன் கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, அமெரிக்க ஆயுதத் தொழில்துறை மற்றும் சவூதி எண்ணெய் முடியாட்சியின் இலாபங்களை அதிகரிப்பதே இந்த ஒப்பந்தங்களின் இலக்குகள் ஆகும்.
ட்ரம்ப்புக்கும் முகம்மது பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பு, இரு ஆட்சிகளின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்துகிறது. அரை நிலப்பிரபுத்துவ சவுதி முடியாட்சி மற்றும் அமெரிக்காவில் ஊழல் நிறைந்த, பில்லியனர் ஆதிக்கம் செலுத்தும் தன்னலக்குழுவான இவை ஒவ்வொன்றும், வரலாற்று ரீதியாக அழிந்துபோன ஒரு சமூக ஒழுங்கின் எச்சமாகும், இவை துடைத்தெறியப்பட வேண்டும்.
