முன்னோக்கு

உக்ரேனிய புலம்பெயர்ந்தோரை கட்டாய இராணுவ சேவைக்காக ட்ரம்ப் விமானத்தில் நாடுகடத்துவதை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உக்ரேனின் கார்கிவ் பகுதியில் அமெரிக்கா வழங்கிய M777 ஹோவிட்சர் பீரங்கி மூலம் ரஷ்ய இராணுவ நிலைகள் மீது குண்டு வீச்சு நடத்த உக்ரேனிய சிப்பாய்கள் தயாராகின்றனர். ஜூலை 14, 2022.  [AP Photo/Evgeniy Maloletka]

திங்களன்று, ட்ரம்ப் நிர்வாகம் 83 பேரை அமெரிக்காவிலிருந்து உக்ரேனுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளில் இதுவே முதல் பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை ஆகும்.

இந்த விமானப் பயணம் அனுமதிக்கப்பட்டால், கடத்தப்படும் ஆண்கள் போலந்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, உக்ரேன் எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு, உக்ரேனிய அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்து, போர்முனைக்கு அனுப்புவார்கள். திங்கட்கிழமை விமானத்தில் அனுப்பப்படுவதை உறுதிசெய்த பெயர் குறிப்பிடாத ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் குண்டர்பாணியில் கூறியது போல், “அமெரிக்கா அவர்கள் விரும்பும் அளவுக்கு பலரை நாடு கடத்தும். நாம் அவர்களுக்கு நல்ல பயனைக் கொடுப்போம்” என்று கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் குழந்தைப் பருவத்திலிருந்தே அமெரிக்காவில் வசித்து வந்தவர்களும் அடங்குவர். பலருக்கு அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கும் வாழ்க்கைத் துணைகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை மரண தண்டனைக்கு அனுப்புவது போல் அஞ்சுகிறார்கள். இதில், பெரும்பாலானவர்களுக்கு உக்ரேனிய மொழி கூட பேசத் தெரியாது. மேலும், இவர்களில் பலர் உக்ரேனிய குடிமக்களாக இல்லாதிருப்பதுடன், உக்ரேன் ஒரு தனி நாடாக ஆவதுக்கு முன்பே சோவியத் யூனியனில் பிறந்தவர்கள் ஆவர்.

உக்ரேனிய இராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதுக்கு நாடு கடத்தப்படுவது என்பது மரண தண்டனைக்கு சமமானதாகும். திங்களன்று விமானத்தில் அனுப்பப்படவிருக்கும் ஒரு கைதி வாஷிங்டன் போஸ்ட்டிடம், “நான் நாடு கடத்தப்படுவதற்கு தகுதியுடையவன், ஆனால் போர் மண்டத்திற்குள் அல்ல — போர் இப்போது இருக்கும் இடத்திற்குள் அல்ல. போர் நடக்கும் இடத்திற்கு என்னை எப்படி நாடு கடத்த முடியும்?” என்று கேட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) இந்த நாடுகடத்தல் விமானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரையும் குடியேற்றக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோருகிறது. திங்களன்று நாடு கடத்தப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியும் இந்த நாடுகடத்தல் விமானம் குறித்து ட்வீட் செய்ததில்லை. ஒகாசியோ-கோர்டெஸ், சாண்டர்ஸ், மம்தானி மற்றும் ஏனையவர்கள், ஊழல் பிடித்த உக்ரேன் சர்வாதிகாரி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை “ஜனநாயகத்தின்” ஒரு கலங்கரை விளக்கமாக முன்வைப்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இவர்கள், இவற்றை மௌனமாக மூடி மறைத்துக்கொண்டு, விமானத்தை அனுப்புவதுக்கு ட்ரம்பிற்கு அனுமதி வழங்குகின்றனர்.

 Hapag-Lloyd Line நிறுவனத்தை சேர்ந்த ஜேர்மன் இயந்திரக் கப்பலான செயின்ட் லூயிஸ், நியூ யோர்க்கை வந்தடைந்து, பயணிகள் இல்லாமல் உடனடியாக ஹாம்பர்க்கிற்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது, செப்டம்பர் 28, 1938 புகைப்படம். 1939 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்பு, செயின்ட் லூயிஸ் 937 யூத அகதிகளுடன் ஜேர்மனியை விட்டு வெளியேறியது, ஆனால் அது கியூபா மற்றும் புளோரிடாவிற்குள் நுழைவதுக்கு மறுக்கப்பட்டது. [AP Photo]

திங்கட்கிழமை விமானத்தில் உக்ரேனியர்கள் அனுப்பப்பட்டால், அது நவீன காலத்தில் “சபிக்கப்பட்டவர்களுக்கான பயணமாக” இருக்கும். இந்த வசனம், 1939 ஆம் ஆண்டு, ஹிட்லரிடமிருந்து தப்பி தஞ்சம் புகுந்த எம்எஸ் செயிண்ட் லூயிஸ் கப்பலையும், அதிலிருந்த நூற்றுக்கணக்கான யூத பயணிகளையும் கியூபாவில் திரித்து நிற்க அனுமதி மறுத்ததை விவரிக்க பயன்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் ஜனநாயக கட்சி நிர்வாகம் இந்தக் கப்பல் தரித்து நிற்பதை மறுத்து, அதை மீண்டும் ஐரோப்பாவிற்கு திருப்பி அனுப்பியது. பயணிகளில் பலர் பெல்ஜியம் மற்றும் பிரான்சுக்குச் சென்றனர். அவர்களில் 200 முதல் 300 பேர் வரை யூத இனப்படுகொலையின்போது இறந்தனர். வரலாற்றின் ஒரு துயரமான திருப்பத்தில், உக்ரேன் அரசாங்கத்தில் இருக்கும் பாசிஸ்டுகளும் நாஜி ஆதரவாளர்களும் திங்கட்கிழமை புறப்படும் விமானப் பயணத்தை சாத்தியமாக்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இந்த நாடுகடத்தலானது, ட்ரம்ப் நிர்வாகம் சட்டத்தை மீறி முறையாக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது, நவீனகால சர்வதேச குடியேற்ற சட்டத்தின் மூலக் கல்லான, திருப்பி அனுப்பப்படாமை என்ற அடிப்படை சர்வதேச சட்டக் கொள்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த குடியேற்றய் சட்டம், அகதிகளின் நிலை தொடர்பாக 1951 மாநாட்டின் பிரிவு 33 இல் பொறிக்கப்பட்டுள்ளதோடு, பல அடுத்தடுத்த அறிவிப்புகளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், எந்தவொரு நாடும் ஒரு நபரை “அவரது உயிருக்கு அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பிரதேசங்களின் எல்லைகளுக்கு” திருப்பி அனுப்புவதை தடைசெய்கிறது. இது முற்று முழுதாக, தேசியம், அந்தஸ்து அல்லது அரசியல் நோக்கத்தை பொருட்படுத்தாமல் பயன்படுத்தப்படுகிறது.

குடியேற்றச் சட்ட விஷயங்களில், திருப்பி அனுப்பாத மறுவாழ்வுக் கொள்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் மீறுவது என்பது, வெனிசுலா மற்றும் கொலம்பிய மீனவர்களை திட்டமிட்டு படுகொலை செய்வதற்குச் சமமானது.

இந்த நாடுகடத்தல் விமானம் முறையான சட்டப்பூர்வ உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்டது அல்ல. இது, ஜெலென்ஸ்கி தலைமையிலான ஊழல் நிறைந்த உக்ரேனிய அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இது, அரசின் ஒவ்வொரு மட்டமும், மோசடி ஊழலில் மூழ்கியுள்ளது என்பதைக் குறிக்கிறது. 83 உயிர்களுக்கு ஈடாக, உக்ரேன் அரசாங்கம் எத்தனை கிலோ தங்கம் அல்லது வான் பாதுகாப்பு ஆயுதங்களில் வர்த்தகம் செய்தது என்று யாருக்குத் தெரியும்? நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் எப்படியாவது கட்டாய இராணுவ சேவையைத் தவிர்த்தாலும் கூட, அவர்கள் ஒரு சர்வாதிகாரம் கோலோச்சும் நாட்டுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள்.

ஆட்கொணர்வு மனுவில், இந்த நாடுகடத்தல்களை சவால் செய்த வழக்கறிஞர்களில் ஒருவரான எரிக் லீ, உக்ரேன் குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் சொந்த 2024 மனித உரிமைகள் அறிக்கையை மேற்கோள் காட்டினார். அந்த அறிக்கையில், “உக்ரேனிய அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட, குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்களை எடுத்துக்காட்டியது, அவற்றில் நம்பகமான அறிக்கைகள் அடங்கும்..... சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை;” “தன்னிச்சையான கைதுகள் அல்லது தடுப்புக்காவல்கள்;” “பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள் உட்பட கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான கடுமையான கட்டுப்பாடுகள்” ஆகியவை அடங்குகின்றன. இந்த மனித உரிமை மீறல்களில் சில இராணுவச் சட்டத்திலிருந்து உருவாகியவை என்றும், இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டப் பாதுகாப்புகள் உட்பட போரின் சூழல் காரணமாக, ஜனநாயக சுதந்திரங்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்தியது என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

2022 இல் போர் தொடங்கிய பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய நூறாயிரக்கணக்கான இளம் உக்ரேனியர்களுக்கு இந்த நாடுகடத்தல் விமானம் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. இராணுவத்தில் சேர்ப்பதற்காக, தனது சொந்தப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான இளையோர்களை கட்டாயப்படுத்தி, கொடூரமாக நடத்துவதில் திருப்தி அடையாத உக்ரேனிய அரசாங்கம், இப்போது வெளிநாடுகளில் வசிக்கும் உக்ரேனியர்களை பிடிப்பதை விரிவுபடுத்தியுள்ளது.

இது நீண்டகாலமாக சர்வாதிகார உக்ரேனிய அரசாங்கத்தின் இலக்காக இருந்து வருகிறது, மேலும், இந்த நாடுகடத்தல் விமானம், உலகளாவிய பாரிய நாடுகடத்தல் கொள்கையின் மூலம், உக்ரேனிய இராணுவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தின் தொடக்கமாகும். ட்ரம்ப் உக்ரேனிய அகதிகளை, உக்ரேனிய இராணுவத்தில் சேர்க்க முடிந்தால், இலட்சக்கணக்கான இளம் உக்ரேனிய அகதிகள் வசிக்கும் ஜேர்மனி, பிரான்ஸ் அல்லது பிரிட்டனும் இதேபோன்று நாடுகடத்தும் நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்களா?

கடந்த ஆண்டு, உக்ரேனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால், போரில் இருந்து தப்பி ஓடியவர்களை “திருப்பி நாட்டுக்கு கொண்டு வருவதை” அரசாங்கம் பின்தொடர்கிறது என்று கூறினார். மேலும், “நாம் இந்தப் போரில் வெற்றி பெற வேண்டும், இது போரில் பாதி மட்டுமே, நாம் முதன்மையாக மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம்,... நமது மக்கள்தொகை அடையாளத்தைப் பாதுகாக்க நாங்கள் போரிடுவோம்.” என்று சிக்காகோவில் கூறினார்.

நவீன கால “சபிக்கப்பட்டவர்களின் பயணம்”, ஜெலென்ஸ்கி அரசாங்கத்தால் ஆதாரமற்ற தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட 26 வயது சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கின் வழக்குக்கு ஒரு குறிப்பிட்ட அவசரத்தை அளிக்கிறது. நேட்டோ ஆதரவுடன் நடத்தப்பட்டுவரும் போரை எதிர்த்து, இந்த மோதலைத் தூண்டுவதுக்கு காரணமான முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக வாதிட்டதே போக்டன் சிரோடியுக் செய்த ஒரே குற்றமாகும். அவர், நிகோலேவிலுள்ள சிறைச்சாலயில் மோசமான சூழ்நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலமாக அமெரிக்காவில் வசிப்பவர்களை அதே சர்வாதிகார உக்ரேனிய அரசுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்துகிறது. அங்கு சிரோடியுக் போன்ற அரசியல் எதிர்ப்பாளர்கள் மௌனமாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவதானது, ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி ஆட்சிகளின் குற்றவியல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போக்டன் சிரோடியுக்கின் விடுதலைக்கான பிரச்சாரம், நாடுகடத்தலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பிரிக்க முடியாதது: இவை இரண்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அணு ஆயுத மோதலாக அதிகரிக்க அச்சுறுத்தும் போரை எதிர்க்கின்றன.

திட்டமிட்ட நாடுகடத்தல் விமானம் என்பது பாசிச ட்ரம்ப் நிர்வாகத்தால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீது நடத்தப்படும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாக உள்ளது. சிக்காகோ மற்றும் பிற நகரங்களில், புலம்பெயர்ந்த சமூகங்கள் கொடூரமான குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) சோதனைகளால் அச்சுறுத்தப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, நவம்பர் 8 அன்று, வெனிசுவேலா மக்களுக்கு தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை (TPS) ட்ரம்ப் நிர்வாகம் காலாவதியாக அனுமதித்தது. நூறாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தடுத்து வைக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னத்தை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையிலும், வெனிசுவேலாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களை முடுக்கிவிடும் நிலையிலும் இந்த நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியின் முன்னணியில் உள்ளது.

திங்கட்கிழமை நாடுகடத்தப்படுபவர்களின் விமானம் காட்டுவதைப் போல, புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தலானது, இராணுவவாதம், ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்தல் ஆகியவற்றின் மீதான பரந்த தாக்குதலுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. அகதிகளை போர் வலயங்களுக்கு நாடு கடத்தும் அதே நிதியாளும் தட்டுக்கள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக இடைவிடாத போரை நடத்தி வருகின்றன.

தொழிலாள வர்க்கமமானது, திங்களன்று விமானத்தில் நாடு கடத்தப்படுவதை, அதன் முழுப் பலத்துடன் எதிர்க்க வேண்டும். இது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தொண்டு நடவடிக்கையாக இருக்கக் கூடாது, மாறாக சர்வாதிகாரம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பாகமாகவும், சர்வதேச வர்க்க ஐக்கியத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதில் இருந்து தொடங்குகிறது. போர், ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை வளர்க்கும் அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாக வேண்டும்.

Loading