மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
விமானந்தாங்கிக் கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் கரீபியன் கடல் எல்லைக்குள் பயணித்திருப்பது, வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு உடனடி அமெரிக்க ஏகாதிபத்திய போரின் அச்சுறுத்தலை இன்னும் பரந்த அளவில் வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் இரண்டு சிறிய படகுகளை மூழ்கடித்து ஆறு பேரைக் கொன்ற இரண்டு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து “யுத்த அமைச்சர் “ பீட்டர் ஹெக்செத் வெற்றிகரமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த அமெரிக்க இராணுவ விரிவாக்கம் வந்துள்ளது. இதன் மூலம் தென் அமெரிக்காவின் கடற் பகுதிகளில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக, ட்ரம்ப் நிர்வாகம் நடத்திய குற்றவியல் கொலை வெறித் தாக்குதல், இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைந்தது 76 ஆகக் கொண்டு வந்துள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, இதுபோன்ற 20 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வெனிசுவேலாவின் தெற்கு கரீபியன் கடல் பகுதிக்கும் கொலம்பியாவின் கிழக்கு பசிபிக் கடற்கரைக்கும் இடையில் இத்தாக்குதல்கள் சமமாகப் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, “சட்டத்துக்கு புறம்பான மரண தண்டனைகள்” மற்றும் போர்க் குற்றங்கள் என்று விவரித்த, தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனமான செயல்களை நடத்திய பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது மிகப் பெரிய அட்டூழியங்களைத் தயார் செய்து வருகிறது.
USS Ford விமானம் தாங்கி கப்பலுடன் மூன்று இலக்கை வழிகண்டறிந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை நாசகாரி கப்பல்களின் தாக்குதல் குழுவில், 4,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். ஒரு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் உட்பட குறைந்தது எட்டு போர்க் கப்பல்களைக் கொண்ட அமெரிக்காவின் பெரும் படையணியிலும், வெனிசுவேலா கடற் பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் கடற்படையினரின் ஒருங்கிணைந்த படையணியிலும், அவர்கள் இணைந்து கொள்கிறார்கள்.
புவேர்ட்டோ ரிக்கோவில் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட ரூஸ்வெல்ட் வீதி கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள பத்து F-35 போர் விமானங்கள் மற்றும் வெனிசுவேலா கடற் பகுதிக்கு அருகில் தரித்து நிற்கும் ஆத்திரமூட்டும் B-52 குண்டுவீச்சு விமானங்களுடன், இந்த பிரமாண்டமான இராணுவப் படையணி பலப்படுத்தப்பட்டுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோவிலும், பல தசாப்தங்களில் முதல் முறையாக பனாமாவிலும், அமெரிக்கத் துருப்புக்களும் கடற்படையினரும், போர் நடவடிக்கைக்கு தயாராக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் அமெரிக்காவின் வடக்கு முனையில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைப் படையை, 1991 ஆம் ஆண்டு ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடாப் போருக்குப் பிறகு, அணிதிரட்டப்பட்ட மிகப்பெரிய படை என்று அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர். 1989 ஆம் ஆண்டு பனாமா மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய படையணி இதுவாகும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த இராணுவ விரிவாக்கம், கொகோயின் போதைவஸ்து படகுகளை தடை செய்வதற்கான நோக்கத்திற்காக உள்ளது என்ற கூற்று முற்றிலும் அபத்தமானது. ஏகாதிபத்தியம் முழு அளவிலான போருக்குத் தயாராகி வருவது கணிக்க முடியாத விளைவுகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் நெருக்கமான உறவுகளையும், வாஷிங்டனை தளமாகவும் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS), அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் அணிகள் “போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. மாறாக, “வெனிசுவேலாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அது நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டது. மேலும் அது, அமெரிக்கப் படைக் குவிப்பை “அம்பை வில்லில் வைத்திருக்கும் ஒருவருடன்” பின்வருமாறு ஒப்பிட்டது. “நிலைமை நிலையற்றது : ஒன்றில் அம்பை வீச வேண்டும் அல்லது அதை கீழே போட வேண்டும்.”
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மக்களை, பொய்களை அடிப்படையாகக் கொண்ட இன்னுமொரு ஆக்கிரமிப்பு போருக்குள் இழுக்க தயாரிப்பு செய்து வருகிறது என்பது, அதன் கரீபியன் படுகொலை வெறியின் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. வெனிசுவேலா மற்றும் கொலம்பிய மீனவர்களை “எதிரிப் போராளிகள்” மற்றும் “போதைப்பொருள்-பயங்கரவாதிகள்” என்று பெயரிடுவது எந்த வகையிலும், அவர்கள் மீதான படுகொலையை சட்டப்பூர்வமாக்கவில்லை. மேலும், அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது என்ற பாசாங்குத்தனமான கூற்று, அமெரிக்க உளவுத்துறை மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அனைத்து நம்பகமான அறிக்கைகளாலும் பொய்யாக்கப்படுகிறது.
வருங்கால சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் நிதிய தன்னலக்குழுவின் உண்மையான நோக்கங்கள் என்ன?
- வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை கவிழ்த்து, அதன் இடத்தில் ஒரு பாசிச அமெரிக்க கைப்பாவை சர்வாதிகார ஆட்சியை திணிப்பது;
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளான வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள் மீது, அமெரிக்க நிறுவனங்களின் தடையற்ற கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், அவற்றை வாஷிங்டனின் முக்கிய மூலோபாய போட்டியாளரான சீனாவிற்கு கிடைப்பதை மறுப்பதற்கும், உலகப் போருக்குத் தயார் செய்வது;
- அப்பட்டமான சூறையாடல் மூலம் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிய வீழ்ச்சியை தடுப்பது;
- வெனிசுவேலா மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு அரைக்கோளமான அமெரிக்கக் கண்டத்தின் மீதும் அமெரிக்க நவ-காலனித்துவ அடிமைத்தனத்தின் தளைகளைத் திணிப்பது.
கரீபியன் பிராந்தியத்தில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்காவுடன் உளவுத்துறை பகிர்வை நிறுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் விடுத்த உத்தரவுடன், அமெரிக்காவின் இந்தப் போர் விரிவாக்கம் இணைந்து செல்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு செய்தி வெளியானது. லண்டன் இன்னும் அதன் முன்னாள் பேரரசின் சில கரீபியன் தீவுப் பகுதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால், நிராயுதபாணியான பொதுமக்கள் அமெரிக்க ஏவுகணைகளால் கடலில் வைத்து தகர்க்கப்படுவதுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஐக்கிய இராச்சியம் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதாகும். ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொரியாவில் இருந்து பால்கன் நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா வரை முந்தைய குற்றவியல் படுகொலைப் போர்களில் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரிட்டுள்ளது. இந்த முறை அது அவநம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது என்றால், அது ஏகாதிபத்திய நலன்களால் ஏற்பட்டுள்ளதே ஒழிய, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு தார்மீகக் குறைபாட்டாலும் அல்ல என்பதில் சந்தேகமில்லை. ஒருபுறம், வெனிசுலாவின் எந்தவொரு பிரிவிலிருந்தும் விலக்கப்படுவோம் என்று பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. மறுபுறம் இது, உக்ரேன் போரில் தொடங்கி, தொடர்ந்து மாறிவரும் அமெரிக்க சுங்கவரிகள் வரை அனைத்திலும் வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.
போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த செவ்வாயன்று கொலம்பிய அரசாங்கம் வாஷிங்டனுடனான அனைத்து உளவுத்துறை பகிர்வுகளையும் நிறுத்துவதாக விடுத்த அறிவித்தலாகும்.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க புளோரிடாவை தளமாகக் கொண்ட தெற்கு கூட்டு நிறுவன பணிக்குழு (JIATF), பயன்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடிய உளவுத்துறை தகவல்களிலும் 85 சதவீதத்தை கொலம்பியா வழங்கியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவும் ஆரஞ்சு நிற சிறை உடையில் ஒருவருக்கொருவர் அருகருகில் நிற்பதாக சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புகைப்படத்துடன், வெள்ளை மாளிகையில் ஒரு உயர் அமெரிக்க அதிகாரி “கொலம்பியா மற்றும் மேற்கு அரைக்கோளத்திற்கான ட்ரம்ப்பின் கோட்பாடு” என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வைத்திருக்கும் புகைப்படம் தற்செயலாக வெளியானதைத் தொடர்ந்து, கொலம்பியா இந்த உறவுகளை முறித்துக் கொண்டது.
இந்த ஆவணமே, கொலம்பிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பினர்” என்ற பட்டத்தை நீட்டிக்கவும், கொலம்பியாவில் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுக்கு எதிரான படைகளுக்கு ஆதரவளிக்கவும், பெட்ரோ மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மதுரோவைப் போலவே, 50 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை அவரது தலைக்கு வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.
சிறிய படகுகளில் பயணம் செய்த வெனிசுவேலா மக்களையும், பிற இலத்தீன் அமெரிக்கர்களையும் அமெரிக்க இராணுவம் கொன்றதை “படுகொலை” என்று வர்ணித்த பெட்ரோ, இந்த ஆவணம் தொடர்பாக வாஷிங்டன் ஒரு விளக்கத்தை வழங்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதிலாக, வாஷிங்டன் இன்னும் அதிகமான அவதூறுகளுடன் பதிலளித்தது. “கொலம்பிய மக்கள் இத்தகைய மோசமான ஒழுக்கநெறி கொண்ட ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது துயரமானது” என்று அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் கூறினார். “கொலம்பிய மக்கள், தங்களது மிகுந்த அறிவில், துயரத்திற்கும் வெறுப்புக்கும் வழிவகுக்கும் இந்தப் பாதையை நிராகரித்து வேறு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அவர் கூறினார்.
“டோன்ரோ கோட்பாடு”
“ட்ரம்ப் கோட்பாடு” என்றால் என்ன? அல்லது வெள்ளை மாளிகையில் ஏன் “டோன்ரோ கோட்பாடு” என்று சிடுமூஞ்சித்தனமாக குறிப்பிடப்படுகிறது? 1823 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட ஆரம்பகால “மன்ரோ கோட்பாடு”, இலத்தீன் அமெரிக்காவின் புதிய சுதந்திர குடியரசுகளை மீண்டும் காலனித்துவப்படுத்தும் ஐரோப்பாவின் பிற்போக்குத்தனமான முடியாட்சி சக்திகளின் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து ஒரு எச்சரிக்கையாக இருந்தது. எவ்வாறிருப்பினும் இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியுடன், 1898 ஸ்பானிய-அமெரிக்க போரில், ஸ்பெயினின் காலனி நாடுகளுக்கு அமெரிக்கா உரிமை கோரியதுடன், அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு எதிரான, அந்தக் காலனி நாடுகளின் மக்களின் புரட்சிகர முயற்சிகள் குறிப்பாக, கியூபாவில் அடக்கப்பட்டது.
1904 இல், அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், இந்தக் கோட்பாட்டிற்கான “பெரிய தடி” (Big Stick) என்று அழைக்கப்படும் ஒரு கருத்தியலை வெளியிட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, அது அமெரிக்க கண்டத்தில் “தவறான செயல்கள் அல்லது ஆற்றலற்ற தன்மை” என்று உணர்ந்த இடங்களில் “பொலிஸ் அதிகாரத்தை” பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றது. இது சுமார் 50 நேரடி அமெரிக்க இராணுவ தலையீடுகளுக்குத் களம் அமைத்துக் கொடுத்தது.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தக் கோட்பாடு பனிப்போர் மற்றும் ஒரு உலகளாவிய கம்யூனிச-விரோத சிலுவைப் போருடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருந்தது. இது, அமெரிக்க ஆதரவு பெற்ற பாசிச-இராணுவ சர்வாதிகாரங்கள், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும்பகுதி முழுவதும் அதிகாரத்தைக் கைப்பற்றி, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் மற்றும் இராணுவ ஆட்சியின் பிற எதிர்ப்பாளர்களைக் கொன்று, சித்திரவதை செய்து சிறையில் அடைத்தது.
“ட்ரம்ப் கோட்பாடானது” 20 ஆம் நூற்றாண்டில் எழுந்த அனைத்து எதிர்ப்புரட்சிகர அம்சங்களையும் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் இது, வாஷிங்டன் “சுதந்திரம்” மற்றும் “ஜனநாயகத்தின்” உயர்ந்த இலக்குகளைத் பின்தொடர்கிறது என்ற எந்தவொரு நயவஞ்சகமான போலித்தனத்தையும் அகற்றியுள்ளது. இது, வாஷிங்டன் அதன் இராணுவ சக்தி அனுமதிக்கும் அனைத்தையும் கைப்பற்றும் என்ற குண்டர்களின் வலியுறுத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.
வெனிசுவேலா மீதான தாக்குதல் என்பது அப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்கும்.
சில அறிக்கைகளின்படி, 1989 ஆம் ஆண்டு பனாமா மீதான அமெரிக்கப் படையெடுப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்காக மானுவல் நோரிகா அமெரிக்காவிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தென் அமெரிக்காவில் ஒரு போரை நடத்த அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், வெனிசுவேலா பனாமாவை விட 12 மடங்குகள் அதிகமான புவியியல் பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, மேலும் அதன் மக்கள் தொகை 35 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும். அனைத்திற்கும் மேலாக, வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் எதுவும் இல்லை. அதே நேரத்தில், பனாமாவை அமெரிக்கா நடத்தும் பனாமா கால்வாய் மண்டலம் இரண்டாகப் பிரிக்கிறது, இது பல இராணுவத் தளங்களையும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள சுமார் 13,000ம் அமெரிக்க துருப்புக்களையும் கொண்டுள்ளது.
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (CSIS) அறிக்கை, வாஷிங்டனில் போர் வெறி கொண்ட சூழல் குறித்த தெளிவான பார்வையை வழங்குகிறது. அமெரிக்கா “மதுரோ ஆட்சியை முடக்கி ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும் தொடர்ச்சியான தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு நீடித்த வான்வழித் தாக்குதலை” தொடங்க முடியும் என்றாலும், அத்தகைய தாக்குதல்கள் “ஒரு தரைவழித் தாக்குதல் அச்சுறுத்தல் அல்லது யதார்த்தத்துடன் இணைந்தால் மட்டுமே வெற்றி பெறுகின்றன” என்பதை வலியுறுத்துகிறது.
2003 இல் ஈராக்கிற்கு எதிரான “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு” தாக்குதலுக்குப் பிந்தைய விளைவுகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க ஆதரவிலான வலதுசாரி எதிர்க்கட்சி, “அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் நாட்டின் மீது கட்டுப்பாட்டை செலுத்த முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கலாம்” என்றும், ட்ரம்ப் நிர்வாகம் “தவிர்க்க முயன்ற நீடித்த இராணுவ முயற்சியை”, அதாவது, இந்த முறை அதன் “சொந்த கொல்லைப்புறத்தில்” மற்றொரு நிரந்தர போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கை, வேறு வழிகளில், அதன் உள்நாட்டுக் கொள்கையின் நீட்டிப்பாகும். ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நகரங்களில் “உள்ளே இருக்கும் எதிரிக்கு” எதிரான தனது போரை பிரகடனம் செய்கின்ற அதே வேளையில், வாஷிங்டன் வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்கத் தயாராகி வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு இரக்கமற்ற போலீஸ் அரசு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், முரண்பாடாக, சுமார் 600,000 வெனிசுலா மக்களின் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது. இது, வெனிசுலாவில் மிகவும் மதிப்பிழந்த நடவடிக்கையாகும். அதே நேரத்தில், எதிர்ப்பை அடக்குவதற்காக முக்கிய நகர்ப்புறங்களில் அமெரிக்க இராணுவத் துருப்புக்களை இது நிலைநிறுத்த முயல்கிறது.
வாஷிங்டனின் சொந்த மிருகத்தனமான பொருளாதாரத் தடைகள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களால் இயக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் கடத்தலை, மதுரோ அரசாங்கம் திட்டமிட்டு நடத்துவதாக ட்ரம்ப் அபத்தமான கூற்றுக்களுடன் வெனிசுலா மீதான இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்துகிறார். எனவே, அமெரிக்காவிற்குள் இன்னும் கூடுதலான போலீஸ் அரசு அதிகாரங்களைக் கோருவதற்கான சாக்குப்போக்காக, தென் அமெரிக்காவில் ஒரு ஆயுத மோதலை அவர் தவிர்க்க முடியாமல் பற்றிக்கொள்வார்.
அமெரிக்கா மற்றும் பூகோள முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் வேரூன்றியுள்ள தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு, குற்றவியல் வன்முறை மூலம் தீர்வுகளை நாடுவதற்கு வாஷிங்டன் உந்தப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களில் பைத்தியக்காரத்தனம் தெரிகிறது. ஒட்டுமொத்த உலகப் போருக்கு வெளியே, குண்டுகள் மற்றும் ஏவுகணைகளுடன் தென் அமெரிக்காவின் முதன்மையான வர்த்தக பங்காளியாக இருக்கும் சீனாவின் எழுச்சியை அது மாற்றியமைக்க முடியாது. ஆனால், பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலுடன் சேர்ந்து, இது அணிவகுத்துச் செல்லும் பாதையாகும்.
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு, இலத்தீன் அமெரிக்காவில் ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிமருந்து கிடங்கிற்கு தீ வைக்கும். அதேவேளையில், இராணுவவாதம் மற்றும் இன்னுமொரு அமெரிக்க போருடன் இணைந்து வரவிருக்கும் தவிர்க்கவியலாத சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக, அமெரிக்காவில் ஆழமாக வேரூன்றியுள்ள எதிர்ப்பைத் தூண்டும்.
ஜனநாயகக் கட்சி ட்ரம்பிற்கு எதிரானது என்று கூறப்படுவதை நம்பி போரை நிறுத்த முடியாது. வெனிசுவேலாவை “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு அசாதாரண மற்றும் வழமைக்கு மாறான அச்சுறுத்தல்” என்று முத்திரை குத்தி, 2015 இல் முதன்முதலில் தேசிய அவசரகால நிலையை ஒபாமா நிர்வாகம்தான் அறிவித்தது. ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள், வெனிசுவேலாவை பட்டினி போட்டு, அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்கான அடித்தளத்தை அமைத்ததுடன், முடிவில்லா ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கும் அடித்தளம் அமைத்த இந்த ஆணையை புதுப்பித்தன. ரஷ்யாவை நோக்கி மிகவும் போர் வெறிபிடித்த கொள்கையை கோருவதில் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் என்ன வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் கீழிருந்து ஒரு பாரிய மக்கள் எழுச்சியை இட்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.
அதே நேரத்தில், வெனிசுவேலா முதலாளித்துவம் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் பிரிவுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மதுரோ அரசாங்கம், வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு எந்தவொரு உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பு அழைப்பையும் விடுக்க இலாயக்கற்றிருக்கிறது.
ரியோ கிராண்டே நதியின் இரு பக்கங்களிலும் உள்ள தொழிலாளர்கள், ஏகாதிபத்தியத்தின் உண்மையான இலக்கு தாங்கள்தான் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில், தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து கைகோர்த்து, அதன் ஆதாரமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
