மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நியூ யோர்க் நகர மேயர் தேர்தலில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் (DSA) கட்சி உறுப்பினரும், அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதி மூலதனத்தின் மையமான வோல் ஸ்ட்ரீட்டின் தாயகத்தில் “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவருமான சோஹ்ரான் மம்தானியின் வெற்றி, தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இந்தத் தேர்தல், பல தசாப்தங்களாக கம்யூனிச எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பு ஆகியவற்றுக்கு உட்பட்ட ஒரு மக்களுக்கு, முதலாளித்துவத்திற்கு மாற்றீடாக வழி எதுவுமில்லை என்ற கட்டுக் கதையை தகர்த்து எறிந்துள்ளது. யதார்த்தத்தில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளின் இயக்கம் இடது பக்கமாக உள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிரான போக்கு அதிகரித்து வருவதுடன், சோசலிசத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. மம்தானிக்கான வாக்களிப்பு தற்போதுள்ள அரசியல் ஸ்தாபனத்தின் மீதான ஏமாற்றத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக ஒரு சிறிய உயரடுக்கின் கைகளில் பரந்த அளவில் செல்வம் குவிந்திருப்பது, வாழ்க்கைச் செலவு நசுக்கப்படுவது மற்றும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் சீரழிந்து வருவது ஆகியவற்றின் மீதான சீற்றத்தை வெளிப்படுத்துகிறது.
பல தசாப்தங்களில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மம்தானிக்கு வாக்களித்தனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகின. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இரு மடங்கு மற்றும் 1969 க்குப் பிறகு அதிகபட்சமாக கிடைத்த வாக்குகளாகும். தனது முதன்மைத் தேர்தலில், பிரச்சாரத்தைத் தொடங்கியபோது 1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த மம்தானி, தனது நெருங்கிய போட்டியாளரான ஜனநாயக கட்சியின் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை 9 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மும்முனைப் போட்டியில் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றார்.
நியூ யோர்க் நகரத்தின் ஐந்து பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான தொழிலாள வர்க்கப் பகுதிகளை கைப்பற்றிய மம்தானி, சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் ஹார்லெமில் 45 புள்ளிகளாலும், ஜமைக்காவில் (குயின்ஸ்) 28 புள்ளிகளாலும், கிழக்கு நியூ யோர்க்கில் (புரூக்ளின்) 28 புள்ளிகளாலும், நகரத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் இன ரீதியாக வேறுபட்ட சுற்றுப் புறங்களான பார்க்செஸ்டர், பிராங்க்ஸில் 27 புள்ளிகளாலும் கியூமோவை தோற்கடித்தார்.
CNN நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 45 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் 70 சதவீதம் பேர் மம்தானியை ஆதரித்தனர், ஆனால் கியூமோவுக்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். தங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை “பின்தங்கிய நிலையில்” இருப்பதாக விவரித்தவர்களிடமும், ட்ரம்பையும் அவரது பாசிச நிகழ்ச்சி நிரலையும் கடுமையாக எதிர்த்தவர்களிடமும் அவர் பெருமளவில் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தல், கியூமோவை ஆதரித்து அவரது பிரச்சாரத்திற்கு 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான கறுப்பு பணத்தை கொட்டிய அதிவலது குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சி எந்திரம் ஆகிய இரண்டு அரசியல் ஸ்தாபகத்துக்கும் கிடைத்த தெளிவான நிராகரிப்பாக இருந்தது. வீட்டு வாடகை, குழந்தை பராமரிப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் உட்பட அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக மம்தானியின் கவனம் எதிரொலித்தது போலவே, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் மேலாதிக்கம் செலுத்தும் மற்றும் ட்ரம்பின் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தின் பின்னால், அணிதிரண்டு வரும் தன்னலக்குழுக்கள் மீதான அவரது வாய்வீச்சுக் கண்டனங்களும் இருந்தது.
சந்தேகத்திற்கு இடமின்றி, மம்தானியின் தேர்தல் அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ஊழலில் மூழ்கிப்போன ஜனநாயகக் கட்சி ஸ்தாபனத்தின் வாரிசான ஆண்ட்ரூ கியூமோவிற்கும், ஒடுக்கப்பட்டவர்களின் வீரராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மம்தானிக்கும் இடையிலான வேறுபாடு, ஒரு அடிப்படை மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்ற உற்சாகத்தை ஊக்குவிக்கும். ஆயினும்கூட, மாயைகளுக்கு ஏற்ப அல்ல, மாறாக அரசியல் மற்றும் சமூக யதார்த்தத்தின் தர்க்கத்திலிருந்து தொடரும் சில அடிப்படை உண்மைகளைக் கூறுவது அவசியமானது.
முதலாவதாக, மம்தானி தன்னை ஒரு “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று காட்டிக் கொண்டாலும், அவர் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவரது முன்மொழிவுகள், குறிப்பாக மில்லியனர்கள் மீதான சிறிய வரி அதிகரிப்பு, மட்டுப்படுத்தப்பட்ட வீட்டு வாடகை பாதுகாப்புகள் மற்றும் பொதுச் சேவைகளின் இலேசான விரிவாக்கங்கள் என்பன, முந்தைய காலகட்டத்தின் தாராளவாத சீர்திருத்தவாதத்தின் எளிமையான மறுமலர்ச்சியை தவிர வேறொன்றும் கிடையாது.
எவ்வாறிருப்பினும், மிகவும் எளிமையான முன்மொழிவுகள் கூட, வழக்குகள், அரசியல் ஆத்திரமூட்டல்கள் அல்லது நேரடி நடவடிக்கைகளின் வடிவத்தில், வோல் ஸ்ட்ரீட், பெருநிறுவன-நிதிய தன்னலக்குழு மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசு எந்திரத்தின் மூர்க்கமான எதிர்ப்பை எதிர்கொள்ளும். நிதிய பிரபுத்துவம் எதையும் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அதன் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீதான சிறிதளவு அத்துமீறலைக் கூட, அது அனைத்து வழிகளிலும் எதிர்க்கும்.
நிதிய தன்னலக்குழுவின் அரசியல் பிரதிநிதியாக செயல்படும் ட்ரம்ப் நிர்வாகம், ஏற்கனவே மம்தானியின் வெற்றிக்கு அதன் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துவதன் மூலமும், நியூ யோர்க் நகரத்தில் நேரடியாக தலையிட தயாராக இருப்பதை சமிக்ஞை செய்வதன் மூலமும் விடையிறுத்துள்ளது. மம்தானியின் வெற்றி உரையில் ட்ரம்பிற்கு எதிராக “கடுமையான நிலைப்பாட்டை எடுக்க” அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து Fox நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி, “அது அவரிடமிருந்து வரும் மிகவும் ஆபத்தான அறிக்கை. நீங்கள் ஆபத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் - அது அவரிடமிருந்து வரும் மிகவும் ஆபத்தான அறிக்கை என்று நான் நினைக்கிறேன். அவர் வாஷிங்டனுக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும்” என்று எச்சரித்தார்.
ட்ரம்பின் பாசிச ஆலோசகர் ஸ்டீவ் பானனும் இதேபோல் பொலிடிகோவிடம் மம்தானியின் தேர்தல் “ஒரு விழித்தெழும் அழைப்பாக இருக்க வேண்டும்” என்றும், “எல்லா இடங்களிலும் சிவப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்” என்றும் கூறினார். உகாண்டாவில் பிறந்த ஒரு அமெரிக்க குடிமகனான மம்தானியை நாடு கடத்த வேண்டும் என்று கோருவதற்கு முன்னர், “இவர்கள் மிகவும் தீவிரமான நபர்கள், இவர்களை தீவிரமாக கவனிக்க வேண்டும்” என்று பானன் அறிவித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி இவற்றையும், நியூ யோர்க் நகரத்திற்கு தேசிய காவல்படை அல்லது பிற இராணுவப் படைகளை அனுப்புவது உட்பட மற்ற அனைத்து தாக்குதல்களையும் எதிர்க்கும். இருப்பினும், நாங்கள் எங்கள் அரசியலை மம்தானி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்ய மாட்டோம்.
மம்தானி அங்கத்தவராக இருக்கும் ஜனநாயகக் கட்சியே நிதிய உயரடுக்கின் செல்வம் மற்றும் மேலாதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு சவாலையும் முற்றிலும் எதிர்க்கிறது. முக்கிய ஜனநாயகக் கட்சியினர், மம்தானியுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ள ஒரு பிரிவினருக்கும், பரந்த வாக்காளர்களை அணிதிரட்டும் திறன் கொண்ட ஒரு வேட்பாளரின் கட்சியின் தேவையை அங்கீகரிக்கும் ஒரு பிரிவினருக்கும், மற்றும் ஸ்தாபனத்திற்கு எதிரான உணர்வுகளை வளர்ப்பது அதன் கட்டுப்பாட்டிலிருந்து விரைவாக வெளியேறக்கூடும் என்று அஞ்சுகின்ற ஒரு பிரிவினருக்கும் இடையில் பிளவுபட்டுள்ளனர்.
செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் உட்பட பல முன்னணி ஜனநாயகக் கட்சியினர், மம்தானியின் முதன்மை வெற்றிக்குப் பின்னரும்கூட அவரை ஆதரிக்க மறுத்துவிட்டனர். ஜனநாயகக் கட்சியின் செய்தி ஊடக ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ், கடந்த புதனன்று புதிய மேயருக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டும் ஒரு நீண்ட தலையங்க கட்டுரையை வெளியிட்டது. மம்தானி தனது பிரச்சார வாக்குறுதிகளைக் கைவிட்டு, பில்லியனரும் முன்னாள் மேயருமான மைக்கேல் புளூம்பேர்க்கின் வழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்று டைம்ஸ் ஆசிரியர்கள் திறம்பட கோரினர்.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறைக்கு ஏற்புடைய ஒரு மந்திரி சபையை மம்தானி அமைக்க வேண்டியதன் அவசியத்தை அந்த கட்டுரை வலியுறுத்தியது. இந்த உத்தரவை மம்தானி விரைவில் ஏற்றுக்கொண்டார். கடந்த புதன்கிழமை, மைக்கேல் ப்ளூம்பெர்க், பில் டி பிளாசியோ மற்றும் எரிக் ஆடம்ஸ் ஆகிய கடைசி மூன்று மேயர்களின் நிர்வாகங்களில் இருந்து மூத்த ஜனநாயகக் கட்சியினரைக் கொண்ட ஒரு இடைக்கால குழுவை அவர் அறிவித்தார்.
ஆளும் வர்க்கத்திற்குள்ளிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மம்தானியின் விடையிறுப்பு, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் அரசியலை வெளிப்படுத்துகிறது. அவரது ஒட்டுமொத்த முன்னோக்கும், முற்றிலும் எதிர் வர்க்க நலன்களை சமரசம் செய்வது சாத்தியம் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் உண்மையான சமூக மாற்றத்தை அடைய முடியும் என்பதாகும். மேலும் இது, ஜனநாயகக் கட்சியின் ஆதரவின் கீழ் நிறைவேற்றப்படலாம் என்ற கூற்றை அடிப்படையாகக் கொண்டது. இது அரசியல் அல்லது சமூக யதார்த்தத்தில் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு மாயையாகும்.
கடந்த புதன்கிழமை நடந்த அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில் மம்தானி, ட்ரம்ப் மற்றும் வோல் ஸ்ட்ரீட் இருவருடனும் “இணைந்து பணியாற்ற” தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவர், ட்ரம்பை அரசியல் ரீதியாக எதிர்த்த அதேவேளையில், “நியூ யோர்க்கர்களுக்கு சேவை செய்ய நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்புடன் ஒரு உரையாடலை நடத்த ஆர்வமாக இருப்பதாக அவர் அறிவித்தார்.” மேலும், அது நகரத்திற்கு ஆதாயமளிக்கும் பட்சத்தில் “யாருடனும் பேச தயாராக இருக்கிறார்” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மற்றும் “எங்கள் நகரத்தின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்ட எவரையும்” சந்திக்க ஆவலுடன் இருப்பதாக மம்தானி அறிவித்தார். நியூ யோர்க்கின் “உயிர்வாழ்வில் முதலீடு செய்துள்ள” டிமோன் மற்றும் பிற பில்லியனர்களை மம்தானி பாராட்டினார். இவை ஒரு சோசலிஸ்ட்டின் வார்த்தைகள் அல்ல, மாறாக நிதிய உயரடுக்கின் செல்வம், அதிகாரம் மற்றும் சலுகைகள் மீது கைவைக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கும் ஒரு அரசியல்வாதியின் வார்த்தைகள் ஆகும்.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற முதன்மைத் தேர்தல்களின் போது உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல, “தேர்தல் சொற்பொழிவின் அழுத்தத்தின் கீழ் வோல் ஸ்ட்ரீட்டின் கோட்டை அரண்கள் நொறுங்கப் போவதில்லை.” மம்தானியின் தேர்தலுக்கு சந்தைகளின் பிரதிபலிப்பு இந்தக் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, நிதிய தன்னலக்குழு இந்த முடிவை சமநிலையுடன் வரவேற்றது. வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள முக்கிய குறியீடுகள் அனைத்தும் புதன்கிழமை உயர்ந்தன.
மம்தானி தனது வெற்றி உரையில், மாபெரும் அமெரிக்க சோசலிஸ்ட் யூஜின் வி. டெப்ஸின் பெயரைப் பயன்படுத்திப் பேசினார். ஆயினும்கூட, “தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் கருணையால் ஒருபோதும் விடுதலை பெற மாட்டது, மாறாக அந்த வர்க்கத்தை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும்” என்ற டெப்ஸின் அத்தியாவசிய முடிவை அவர் புறக்கணித்தார்.
கடந்த தசாப்தத்தின் அனுபவம், அரசியல் ஸ்தாபகத்துடன் ஒரு தீவிர முறிவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் உதாரணங்களால் நிரம்பியுள்ளது. கிரேக்கத்தில், தீவிர இடதுசாரிகளின் கூட்டணி (சிரீசா) 2015ல் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைப்படி மிகக் கொடூரமான சமூக வெட்டுக்களை திணித்தது. ஜேர்மனியில், இடது கட்சி (Die Linke) அகதிகளை நாடுகடத்தும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் மாநில அரசாங்கங்களில் பங்கேற்றுள்ளது. பிரிட்டனில், தொழிற் கட்சியினுள் உள்ள கோர்பின் இயக்கம், வலதுசாரி ஸ்தாபனத்திற்கு சரணடைந்து, வெளிப்படையாக பிற்போக்குத்தனத்தின் மீள்வருகைக்கு வழிவகுத்தது.
வர்க்க அடிப்படையில், இந்தப் போக்குகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்ல, சமூகத்தின் அடிப்படை மறுஒழுங்கமைப்பை அல்ல, மாறாக தங்களுக்கு மிகவும் வசதியான நிலையை நாடும் ஒரு சலுகை பெற்ற சமூக அடுக்கான உயர்-நடுத்தர வர்க்கத்தின் நலன்களையே வெளிப்படுத்துகின்றன.
ஒரு சோசலிஸ்ட்டுக்கு வாக்களித்த பல தொழிலாளர்கள், மம்தானியின் தேர்தலை நடவடிக்கை எடுப்பதற்கும் தங்கள் சொந்த கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு சமிக்ஞையாக பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கும்போது மம்தானி என்ன செய்வார்? தவிர்க்கவியலாமல், வர்க்க நலன்களின் தர்க்கம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும். நிதி மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் கோரிக்கைகளுக்கு மம்தானி அடிபணிவார். அவர் என்ன கூறினாலும், அவரது பிரச்சாரத்தின் இறுதி நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்துவதாகும்.
நியூ யோர்க்கிலும் மற்றும் நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னோக்கிய பாதை, ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதிலோ அல்லது மம்தானியின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைப்பதிலோ இல்லை, மாறாக போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதில்தான் தங்கியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பணியிடத்திலும், சுற்றுப்புறத்திலும், மற்றும் பள்ளியிலும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும், ஒருங்கிணைக்கவும், தீவிரப்படுத்தவும் ஒரு வழிமுறையாகச் செயல்பட வேண்டும். அதாவது, தற்போதுள்ள ஒழுங்கிலிருந்து சீர்திருத்தங்களுக்காக மன்றாடுவது அல்ல, மாறாக அவர்களின் சொந்த வேலைத்திட்டத்தை வெளிப்படுத்தி போராட வேண்டும். மேலும், வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாத்தல், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டம் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் போராடவும் இந்த சாமானியக் குழுக்கள் சேவை செய்ய வேண்டும்.
ஆளும் வர்க்கத்தின் செல்வ வளத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தாமல் எதையும் சாதிக்க முடியாது. வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏகபோகங்களின் கட்டுப்பாட்டில் வேரூன்றிய பில்லியனர்களின் செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும் அவர்களின் ஏகபோகங்கள் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்களுக்கு சொந்தமான பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும்.
இதற்கு ஒரு தலைமையும் முன்னோக்கும்தான் முக்கியமான கேள்வியாகும். இந்த நிகழ்வுகளிலிருந்து புரட்சிகர முடிவுகளை எடுக்கும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து கொள்ளவும், பெருகிவரும் சமூக கோபத்தை சோசலிசத்திற்கான நனவான போராட்டமாக மாற்றுவதற்குத் தேவையான தலைமையைக் கட்டியெழுப்ப உதவுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
