மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டிக் செனி இறந்துவிட்டார். அமெரிக்க மக்கள், இப்பொழுது முன்னாள் துணை ஜனாதிபதிக்கு அரசியல் ஸ்தாபனம் மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகங்களிலிருந்து வரும் அஞ்சலிகளின் வெள்ளத்தை எதிர்கொள்வார்கள். டொனால்ட் ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க உதவிய ஒரு போர்க் குற்றவாளி மற்றும் ஜனநாயக உரிமைகளின் எதிரியின் சாதனையை சுத்தப்படுத்த, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
செனியின் கைகளில் இருந்த இரத்தத்தை அதிகாரப்பூர்வமாக வெள்ளையடிப்பதை யாரும் நம்பக்கூடாது. அவர், அமெரிக்க முதலாளித்துவ உயரடுக்கின் பேராசை மற்றும் கொடூரத்தின் உருவகமாக இருந்தவர், வெள்ளை மாளிகையின் தலைமைத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர், எண்ணெய் சேவை நிறுவனமான ஹாலிபர்டனின் தலைமை நிர்வாக அதிகாரி, பின்னர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் துணை ஜனாதிபதி ஆகிய பதவிகளை தொடர்ச்சியாக வகித்து, அங்கு அவர் சிம்மாசனத்தின் பின்னணியில் ஒரு சக்தியாக செயல்பட்டார். 1990-91 இல் ஈராக்கிற்கு எதிராகவும், 2001 முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், 2003 இல் இருந்து மீண்டும் ஈராக்கிற்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட மூன்று முக்கிய ஏகாதிபத்திய போர்களில் செனி முக்கிய பாத்திரம் வகித்தார். இந்தப் போர்களில் மட்டும் இறந்த மக்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாக உள்ளன. 1989 ஆம் ஆண்டு, பனாமா மீதான அமெரிக்காவின் படையெடுப்பு மற்றும் 1992 இல் சோமாலியாவில் மேற்கொண்ட தலையீடு போன்ற “சிறிய” மோதல்களைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
செனி ஒரு அரசியல்வாதி. ஆரம்பத்தில் அவருக்கு வழிகாட்டுதல் மற்றும் பதவி உயர்வு அளித்த மற்றொரு நபரான டொனால்ட் ரம்ஸ்பீல்ட், அவரை ஜனாதிபதி ஃபோர்டு நிர்வாகத்தில் பணியாற்ற வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றார், இறுதியில் அங்கு அவர் தலைமைப் பணியாளராக ஆனார். ஃபோர்ட் மறுதேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், செனி 1978 இல் வயோமிங்கில் ஒரு காங்கிரஸ் இடத்தை வென்றார். ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷால் பென்டகனின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் கட்சித் தலைமையில் இரண்டாவது இடத்திற்கு விரைவாக உயர்ந்தார். அங்கு அவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க இராணுவப் படைகளின் மிகப்பெரிய அணிதிரட்டலாக, கிட்டத்தட்ட 600,000 துருப்புக்களுடன் பாரசீக வளைகுடாப் போரை மேற்பார்வையிட்டார். யுரேனியம் முனை கொண்ட டாங்கிக் குண்டுகள் மற்றும் லேசர் மூலம் இலக்குகளை வழிகாட்டும் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உட்பட அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள், ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேனால் குவைத்திற்கு அனுப்பப்பட்ட, கிட்டத்தட்ட பாதுகாப்பற்ற கட்டாய இராணுவப் படைகளை ஒருதலைப்பட்சமாக படுகொலை செய்தன.
முதலாவது புஷ் மறுதேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், செனி ஹாலிபர்ட்டனின் தலைமை நிர்வாக அதிகாரியானார். அங்கு அவர் கிளிண்டன் நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகளில் 40 மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். 2000 இல், ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷால் அவரது ஜனாதிபதி வேட்பாளராக செனி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு இரக்கமற்ற போர்வெறியர் மற்றும் பெருநிறுவன நிர்வாகி என்ற முறையில் அவரது பதிவு, ஒரு துறையில் இளைய புஷ்ஷின் அனுபவமின்மை மற்றும் மற்றொரு துறையில் வெற்றியின்மை குறித்து சந்தேகம் கொண்ட ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுக்கு உறுதியளித்தது.
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் திருடப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றம் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி புஷ் மற்றும் செனியை ஆட்சியில் அமர்த்த தலையிட்டபோது, துணை ஜனாதிபதி தனது பெருநிறுவன நண்பர்களுக்கு வெகுமதி அளிப்பதில் நேரத்தை வீணாக்கவில்லை. அவர் உடனடியாக ஒரு “எரிசக்தி பணிக்குழுவை” அமைத்தார். அதன் நடவடிக்கைகளும் உறுப்பினர்களும் கூட இரகசியமாக வைக்கப்பட்டனர். அங்கு, எண்ணெய் நிறுவன நிர்வாகிகளும் இராணுவ-உளவுத்துறை செயற்பாட்டாளர்களும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்புக்கான இலக்குகளின் ஒரு தொகுப்பை தயார் செய்தனர். அதாவது, “எண்ணெய்க்கான போர்கள்” என்ற ஒரு தொடர்ச்சியான இலக்குகளை தொடங்குவதற்கு அவசியமான சாக்குப்போக்கு மட்டுமே இவர்களுக்கு தேவைப்பட்டது.
செப்டம்பர் 11, 2001 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் —அமெரிக்க அரசாங்கத்திற்குள் உயர் மட்ட முன் அறிவுடன் நிகழ்த்தப்பட்டது— வெளிநாட்டு ஏகாதிபத்தியப் போர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க மக்களின் சொந்த தேசிய மண்ணில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கும் ஒரு சாக்குப்போக்காக செயல்பட்டன. இந்த இரண்டு குற்றச் செயல்களிலும், செனி ஒரு முன்னணிப் பங்கைக் கொண்டிருந்தார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு —முக்கியமாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த தற்கொலைத் தாக்குதல்காரர்களால்— பதிலளிக்கும் விதமாக, புஷ் நிர்வாகம் உடனடியாக அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் தளமாகக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானை இலக்கு வைத்தது.
இரு கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் ஒரு போர் தீர்மானத்தையும், இன்றுவரை நடைமுறையில் உள்ள “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை”யும் நிறைவேற்றியது. இதேபோல், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஏறத்தாழ ஒருமனதாக தேசபக்த சட்டத்தை அங்கீகரித்தனர், இது, அமெரிக்காவிற்குள் “பயங்கரவாதிகள்” என்று கூறப்படுபவர்களை கண்காணிப்பதற்கும், தடுத்து வைப்பதற்கும் உத்தரவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது.
எவ்வாறெனினும், ஆப்கானிஸ்தான் ஒரு மிகப் பெரிய மற்றும் இரத்தம் தோய்ந்த மோதலுக்கு ஒரு படிக்கல்லாக மட்டுமே இருந்தது: அமெரிக்க படையெடுப்பினால் ஈராக் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெருமளவிலான கனிம வளங்கள் இருந்த போதிலும், அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாத இருந்தன. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்த ஈராக், ஏகாதிபத்திய கொள்ளைக்கு முக்கிய வளம்மிக்க பரிசாக இருந்தது. “பேரழிவுதரும் ஆயுதங்கள்” மற்றும் சதாம் ஹூசேனுக்கும் அல் கொய்தாவிற்கும் இடையிலான தொடர்புகள் என்று கூறப்படுவது பற்றிய பொய்களைப் பரப்புவதில் செனி பிரதான பாத்திரம் வகித்தார். (உண்மையில் இருவரும் கடுமையான எதிரிகள்.) இந்தப் பொய்கள் பெருநிறுவன செய்தி ஊடகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், நியூ யோர்க் டைம்ஸ் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. மேலும், காங்கிரஸால் இந்தப் பொய்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இது, அக்டோபர் 2002ல் இருகட்சி வாக்கெடுப்பின் மூலம் ஈராக் போருக்கு அங்கீகாரத்தையும் அளித்தது. ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அமெரிக்கப் படைகள் சர்வதேச சட்டத்தை முற்றிலுமாக மீறி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் கலந்துகொண்ட பாரிய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி ஈராக் மீது படையெடுத்தன.
பாரிய குற்றங்களை சாத்தியமாக்கிய சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பின் பிரதான சூத்திரதாரியாகவும், வக்காலத்து வாங்குபவராகவும் செனி இருந்தார். அவர் சட்ட விரோதத்தின் கட்டமைப்பை உருவாக்கிப் பாதுகாத்தார். அவை, முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் யுத்தக் கோட்பாடு, “மேம்படுத்தப்பட்ட விசாரணை நுட்பங்கள்” (சித்திரவதை), அசாதாரணமான ஆட்கடத்தல்கள், காலவரையற்ற தடுப்புக்காவல் மற்றும் மக்களை கண்காணிக்கும் அரசு ஆகியவற்றிற்கான சட்ட நியாயப்படுத்தல்களைக் கொண்டிருந்தன. சித்திரவதை அமைப்புகளின் அறிவுசார் மற்றும் அரசியல் மேற்பார்வையாளராக செனி இருந்தார். இந்த துஷ்பிரயோக ஆட்சி, அபு கிரைப் நகரில் அதன் கோரமான உச்சக்கட்டத்தை எட்டியது. மேலும், அதன் முறைகள் இரகசிய சிறைச்சாலைகளிலும், CIAயின் “இருண்ட தளங்களிலும்” நிறுவனமயமாக்கப்பட்டன. அரசின் கொடூரமே அவரது கொள்கையாக இருந்தது.
ஆர்ப்பாட்டங்கள், கருத்துக் கணிப்புக்கள் மற்றும் 2006 இடைக்கால தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரின் தோல்வியில் பிரதிபலித்த, ஈராக் போருக்கு அதிகரித்து வந்த பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்டபோது, செனி “அதற்கு என்ன?” என்ற உறைய வைக்கும் வார்த்தைகளுடன் பதிலளித்தார். அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, செனியின் கருத்து “அமெரிக்க மக்களின் விருப்பத்தின் மீது அவரது முழுமையான அவமதிப்பை வெளிப்படுத்தியது”.
ஜோ வில்சன் விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டபடி, இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுடன் மோதியபோதுதான் செனி கண்டிக்கப்பட்டார். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியான வில்சன், ஈராக் யுரேனியம் கொள்முதல் தொடர்பான ஆதாரங்களைத் தேடி, புஷ் நிர்வாகத்தின் சார்பாக நைஜருக்குப் பயணம் செய்தார், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. வில்சன் பகிரங்கமாக நிர்வாகத்துடன் முறித்துக் கொண்டு போரை விமர்சித்த பின்னர், செனி எதிர்த்தாக்குதலை நடத்தினார். ஒரு இரகசிய CIA முகவர், வில்சனின் மனைவி வலேரி பிளாமின் அடையாளத்தை பத்திரிகைகளுக்கு கசியவிட்டார். அதோடு சேர்ந்து, அவர் தனது கணவருக்கு நன்மை பயக்கும் வகையில் நைஜர் பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறும் ஒரு அவதூறு பிரச்சாரமும் இடம்பெற்றது. காங்கிரசில் இருந்த ஜனநாயகக் கட்சியினரும், உளவுத்துறை அமைப்புகளும் “வெளியேறிய” முகவரை ஆதரிக்க திரண்டன. புஷ் நிர்வாகம் கசிவை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், செனியின் தலைமைப் பணியாளர் லூயிஸ் லிப்பி இறுதியில் ஒரு பெரிய நடுவர் மன்றத்திடம் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் செனியின் தனிப்பட்ட அந்தஸ்தைப் பாதித்த அதேவேளை, அவர் ஊக்குவித்த போர் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தன. ஒபாமா-பைடென் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்களைத் தொடர்ந்ததுடன், எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராகவும், மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஒரே வாடிக்கையாளர் நாடான சிரியாவுக்கு எதிராகவும் புதிய போர்களைத் தொடங்கியது. 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இராணுவப் படையைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
மக்களை கண்காணித்தல் மற்றும் ஒடுக்குமுறையின் ஒட்டுமொத்த உள்நாட்டு எந்திரமும் கேள்விப்படாத அளவிற்கு பெருகியுள்ளது. சி.ஐ.ஏயின் சித்திரவதையாளர்கள் மீதும், அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய செனியைப் போன்றவர்கள் மீதும் வழக்குத் தொடரும் சாத்தியக்கூறுகளை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், ஒபாமா தனது பதவிக் காலத்தை தொடங்கினார். வெள்ளை மாளிகையில் “செவ்வாய்க் கிழமைகளில் பயங்கரவாதத்திற்காக” கொலைப் பட்டியல்கள் வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க குடிமக்கள் உட்பட ட்ரோன்-ஏவுகணை படுகொலைகளை அவர் அங்கீகரித்தார். செல்சியா மானிங் மற்றும் எட்வர்ட் ஸ்னோவ்டன் போன்ற துணிச்சலான தகவல் வெளிப்படுத்துபவர்களால் வெளிப்படுத்தப்பட்டபடி, அமெரிக்க மக்கள் உட்பட உலகின் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய நடவடிக்கைகள் அதிவேகமாக விரிவடைந்தன.
புஷ் மற்றும் செனியின் கீழ் உத்வேகம் அளிக்கப்பட்டு, ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடெனின் கீழ் தொடர்ந்த ஒரு அமெரிக்க போலீஸ் அரசின் வளர்ச்சி, இப்போது இரண்டாவது ட்ரம்ப் பதவிக் காலத்தில் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உண்மைதான், செனி ஒரு முரட்டு அதிகாரி மட்டும் அல்ல, மாறாக முதலாளித்துவக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டையும் கட்டுப்படுத்தும் ஆளும் சமூக அடுக்கு மற்றும் நிதி பிரபுத்துவத்தின் பிரதிநிதி என்பதை நிரூபிக்கிறது. மேலும், இவை தொழிலாள வர்க்கத்திடமிருந்து தமது செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க சர்வாதிகாரத்திற்குத் திரும்பியுள்ளன.
ஜனவரி 2009 இல், செனி பதவியை விட்டு வெளியேறியபோது, அவர் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மிகவும் வெறுக்கப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்தார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுடன் அவரது பெயர் வெகுஜன நனவில் அழிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு தவறான புரிதல் அல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நூரெம்பேர்க் நீதிமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில், நாஜி போர்க் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அதே தண்டனைகள், இதேபோன்ற குற்றங்களைச் செய்யும் எந்தவொரு நாட்டின் தலைவர்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்: அதாவது, ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்குதல், வேண்டுமென்றே பாரிய மரணங்களை ஏற்படுத்துதல் மற்றும் இனப்படுகொலையை நடத்துதல் ஆகியவைகளாகும். 1946 இன் நூரெம்பேர்க் முன்னுதாரணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருந்தால், செனியின் வாழ்க்கை ஒரு சிறை அறையில் அல்லது ஒரு தூக்கு கயிற்றின் முடிவில் முடிவடைந்திருக்கும்.
அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில், செனியும் அவரது மகள் லிஸும் ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக நகர்ந்தனர். 2024 ஆம் ஆண்டில், வயதான செனி, கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பதாக அறிவித்தார். ஊடகங்கள் சித்தரிப்பது போல், இது ஒரு கொள்கை நடவடிக்கை மற்றும் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக “ஜனநாயகத்தின்” பாதுகாப்பாக இருக்கவில்லை. யதார்த்தத்தில், செனியின் உண்மையான உந்துதல், ஜனநாயகக் கட்சியினரின் பிரதான அக்கறையான ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருடன் அவர் அணி சேர்ந்து கொண்டதே ஆகும்.
செனியின் மரணத்திற்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை, அதன் சொந்த முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் ஏகாதிபத்திய-சார்பு குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது. முன்னாள் துணை ஜனாதிபதி கமாலா ஹாரிஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு, “செனி காங்கிரஸ் அரங்குகள் முதல் பல ஜனாதிபதி நிர்வாகங்களில் ஏராளமான தலைமைப் பதவிகள் வரை, அர்ப்பணிப்புள்ள பொது ஊழியராக இருந்தார். ஆழ்ந்த கடமை உணர்வோடு, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர் நேசித்த நாட்டிற்காக அர்ப்பணித்த ஒரு நபரின் இழப்பை அவரது மறைவு குறிக்கிறது” என்று அறிவித்தார்.
இந்த குமட்டல் நிறைந்த அஞ்சலியின் ஒவ்வொரு வார்த்தையும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் போரின் கட்சிகளாக இருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான நலன்களின் அடையாளத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹாரிஸ் மற்றும் அவரது கட்சியைப் பொறுத்தவரை, செனியின் குற்றவியல் வாழ்க்கை - படையெடுப்பு, சித்திரவதை மற்றும் பொய்கள் – கொண்டாடப்படுகிறது. ஏனெனில், அது அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் இரக்கமற்ற பின்தொடர்தலை உள்ளடக்கி இருக்கிறது.
செனிக்கும், ட்ரம்ப்புக்கும் இடையே எத்தகைய தந்திரோபாய மோதல்கள் எழுந்திருந்தாலும், இரண்டு பேர்களும் ஆழமான சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளால் பிணைந்துள்ளனர்: அதாவது அமெரிக்க முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் குற்றவியல் தன்மைக்குள் இறங்கியுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், செனி கட்டவிழ்த்து விட உதவிய குற்றங்களின் நிழலில் வாழ்கிறது.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டு அபிவிருத்தியடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கம், செனியுடனும் அவரைப் போன்றவர்களுடனும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுடனும் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளும்.
