இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பும் அக்டோபர் 4 சனிக்கிழமை மாலை 7:00 மணிக்கு பகிரங்க இணையவழி கூட்டமொன்றை நடத்துகின்றன. இலங்கை மின்சார சபையின் (இ.மி.ச.) மறுசீரமைப்பை நிறுத்துவதற்கும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான வேலைத்திட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கலந்துரையாட, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு கேட்டுக்கிறோம்.
செப்டம்பர் 21 அன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, இந்த இன்றியமையாத அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு எதிராக, இ.மி.ச. ஊழியர்கள் நான்கு வார காலமாக முன்னெடுத்த ஒத்துழையாமை போராட்டம் மற்றும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்துவதைத் தடைசெய்து அத்தியாவசிய சேவை உத்தரவுகளை விதித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, இ.மி.ச.யை செப்டம்பர் தொடக்கத்தில் மறுசீரமைக்கத் தொடங்கியது. இ.மி.ச.யை அரசாங்கத்திற்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களாக உடைக்க திட்டமிட்டுள்ளமை, இறுதியில் அதை தனியார்மயமாக்குவதற்கு வழி வகுத்து, தொழிலாளர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் முன்னர் போராடி வென்ற வேலை நிலைமைகள் மற்றும் உரிமைகளை பறிக்கவும் அச்சுறுத்துகிறது. தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிப்பதற்காக தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இ.மி.ச. நிர்வாகமும் அரசாங்கமும் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ளன.
இ.மி.ச. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கும் போராட்டம், திசாநாயக அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை தோற்கடிக்கும் போராட்டத்தில் ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது. மறுசீரமைப்பைத் தீவிரப்படுத்தவும், பின்னர் ஏனைய நூற்றுக்கணக்கான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி, அந்த நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் பிற உரிமைகளை அழிக்கும் நோக்கிலேயே, மின்சார ஊழியர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சி விரும்புகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கும் அனைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், இ.மி.ச.யை மறுசீரமைப்பு பொறியில் சிக்க வைப்பதற்கு பொறுப்பாகும். ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கத் தலைவர்கள், இ.மி.ச. தொழிலாளர்களின் எதிர்ப்பை வெளிப்படையாகக் கண்டித்து, இது எதிர் பாராளுமன்றக் கட்சிகளின் 'சதி' என்று இழிவாக முத்திரை குத்துகின்றன.
ஆனால் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி உட்பட தமிழ் மற்றும் முஸ்லிம் குழுக்கள் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. எதிர்க்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவர்களின் கோபத்தைக் கலைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
இ.மி.ச. தொழிலாளர்கள் போராடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ள நிலையில், போர்க்குணத்தால் மட்டுமே அரசாங்க தாக்குதல்களை தோற்கடிக்க முடியாது. கொழும்பின் சிக்கன நடவடிக்கைகளால் தங்கள் வாழ்க்கை சீரழிந்துள்ள ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் காட்டிக்கொடுப்புகளை நிராகரித்து, போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சனிக்கிழமை எமது சூம் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த இன்றியமையாத பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட வருமாறு அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்
கூட்டம் நடக்கும் நாள் மற்றும் நேரம்: சனிக்கிழமை, அக்டோபர் 4, மாலை 7:00 மணி.
தயவுசெய்து கூட்டத்தில் இணைய இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்: https://us06web.zoom.us/meeting/register/BEO9NOTVTwq6E6ft7gP8Yg
மேலும் படிக்க
- எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்துப் போராட இ.மி.ச. நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!
- இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் அச்சுறுத்தல்களிலிருந்து மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடு!
- இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்குகின்றன