மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கொடிய வன்முறையைப் பயன்படுத்தும் அதிகாரத்துடன், ஓரிகான் மாநிலத்திலுள்ள போர்ட்லேண்டிற்கு ட்ரம்ப் படைகளை அனுப்பியிருப்பது, அமெரிக்க மக்கள் மீதான ஒரு குற்றவியல் தாக்குதலாகவும், ஜனநாயக உரிமைகளை அழித்து, ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை, ட்ரூத் சமூகத் தளத்தில் ட்ரம்ப், “உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமின் வேண்டுகோளின் பேரில், போரால் பாதிக்கப்பட்ட போர்ட்லேண்டையும், முற்றுகையிடப்பட்ட நமது குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) வசதிகளையும், பாசிச எதிர்ப்பாளர்கள் மற்றும் பிற உள்நாட்டு பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து துருப்புக்களையும் வழங்குமாறு யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத்துக்கு நான் உத்தரவிடுகிறேன். தேவைப்பட்டால், முழுப் படையையும் பயன்படுத்த நான் அங்கீகாரம் அளிக்கிறேன்” என்று பதிவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பொதுமக்களுக்கு எதிராக கொடிய பலத்தை பயன்படுத்த வெளிப்படையான உத்தரவுடன் இராணுவத்தை ஒரு அமெரிக்க நகரத்திற்குள் நுழைய உத்தரவிட்டுள்ளார். இது அரசியலமைப்பு மற்றும் போஸ் கமிடேட்டஸ் சட்டத்தை (Posse Comitatus Act) முன்னெப்போதும் இல்லாத வகையில் மீறுவதாகும். (போஸ் கமிடேட்டஸ் சட்டமானது, குடிமக்கள் அரசாங்கத்தின் விவகாரங்கள், நீதி நிர்வாகம் அல்லது எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளிலும் இராணுவம் தலையிடுவதைத் தடைசெய்கிறது)
இது அரசிலமைப்பின் முதல் திருத்தத்தில் பொறிக்கப்பட்டவை உட்பட மக்களின் பிரிக்க முடியாத உரிமைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகும், இது “பேச்சு சுதந்திரம் அல்லது பத்திரிகை சுதந்திரத்தை; அல்லது மக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், குறைகளைத் தீர்க்க அரசாங்கத்திடம் மனு கொடுப்பதற்கும் உள்ள உரிமையை” தடை செய்கிறது. “அதிக குற்றங்கள் மற்றும் தவறான செயல்களுக்கு” ஏதேனும் வரையறை இருந்தால், அது இதுதான்.
ஒரு வாரத்திற்கு முன்னர், சோசலிச சமத்துவக் கட்சி செப்டம்பர் 19 அன்று, அதன் அறிக்கையில் எழுதியதைப் போல, “கட்டவிழ்ந்து வருவது இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு உந்துதலைவிட, குறைவான ஒன்றுதான் என்ற அனைத்து சுய-ஏமாற்றும் நம்பிக்கைகளையும் ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியமாகும்.” இந்த எச்சரிக்கை இப்போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சார்லி கிர்க் கொல்லப்பட்டதிலிருந்து நடந்துவரும் அனைத்து நிகழ்வுகளும் முன்கூட்டியே வரையப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளன. ட்ரம்ப் மற்றும் ஸ்டீவன் மில்லர் மற்றும் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள், கடந்த வார இறுதியில் அரிசோனாவில் நடந்த அசிங்கமான நினைவேந்தலை ஒரு பாசிச ஆயுத அழைப்பாக மாற்றி, கிர்க்கை ஒரு தியாகியாக சித்தரித்து இடதுசாரிகளுக்கு எதிரான “யுத்தத்தை” கோரினர்.
அமெரிக்க நகரங்களில் தேசிய காவலர் படை மற்றும் மத்திய கூட்டாட்சி துருப்புக்களை நிலைநிறுத்துவதை நியாயப்படுத்த கிர்க்கின் “கடைசி வார்த்தைகள்” என்று கூறப்படும் வார்த்தைகளை ட்ரம்ப் தானே பயன்படுத்தினார். ட்ரம்ப் போர்ட்லாந்திற்கு இராணுவத்தை அனுப்ப உத்தரவிட்ட அதேவேளையில், இந்த வாரம் மெம்பிஸில் தேசிய காவலர் படையை நிலைநிறுத்துவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் “போர்” செய்வதாக அச்சுறுத்திய சிக்காகோ உட்பட பிற நகரங்களுக்கும் இது தொடரும்.
செவ்வாயன்று நடைபெறும் இரண்டு நிகழ்வுகளுக்கு முன்னதாகவே போர்ட்லேண்ட் மீதான ட்ரம்பின் “யுத்தப்” பிரகடனம் வருகிறது. முதலாவதாக, வாஷிங்டனுக்கு வெளியே “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத் அழைப்பு விடுத்த அசாதாரணக் கூட்டமாகும். இதில், உலகெங்கிலும் உள்ள இராணுவத் தளங்களில் இருந்து திரும்பும்படி கட்டளையிடப்பட்ட நூற்றுக்கணக்கான செயலில் உள்ள இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பு இராணுவத்தின் மீது ட்ரம்பின் நேரடி கட்டுப்பாட்டை வலியுறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதன் அதிகாரிகள் அமெரிக்க மக்களுக்கு எதிராக துருப்புக்களை பயன்படுத்தும்போது, ட்ரம்புக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியை உறுதிப்படுத்துமாறு கூறப்படுவார்கள்.
இரண்டாவதாக, வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டக் காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில் முடிவடைகிறது. ட்ரம்ப், அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தை பயன்படுத்தி மத்திய கூட்டாட்சி தொழிலாளர்களை பாரியளவில் பணிநீக்கம் செய்வதற்கும், விரிவடைந்து வரும் அவரது அரசியலமைப்பு சதிக்கு ஏற்ப, அரசு மீதான பரந்த மறு ஒழுங்கமைப்பை மேற்கொள்வதற்கும் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
செப்டம்பர் 25 அன்று அனைத்து இடதுசாரி எதிர்ப்பையும் “உள்நாட்டு பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தும் ட்ரம்ப்பின் குறிப்பாணையைத் தொடர்ந்து போர்ட்லேண்ட் இலக்கு வைக்கப்படுகிறது. முந்தைய நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து வந்த இந்த ஆவணம், ஒரு பரந்த இடதுசாரி “பயங்கரவாத” வலையமைப்பின் புனை கதையை உருவாக்க தொடர்பில்லாத சம்பவங்களை ஒன்றிணைத்து, “இந்த வன்முறை நடத்தையை உருவாக்கும் பொதுவான இழைகளில், அமெரிக்க எதிர்ப்புவாதம், முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு ஆகியவை அடங்கும்” என்று அறிவிக்கிறது.
பாசிச வலதுசாரிகளுக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளும் குற்றவியல் “உள்நாட்டு பயங்கரவாதம்” என்பதே ட்ரம்ப் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இந்த வரையறை அனைத்து வகையான அரசியல் எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பரந்த அரசியல் ஒடுக்குமுறை வலையமைப்பில் ஜனநாயகக் கட்சியும் அடங்கும்.
கடந்த மாதம், பொக்ஸ் நியூஸில் தோன்றிய ஒரு நிகழ்ச்சியில், வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர், “ஜனநாயகக் கட்சி ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு உள்நாட்டு தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்தார்.
கடந்த புதன்கிழமை CNN தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமிடம், ஜனநாயகக் கட்சியை உள்நாட்டு தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்துவது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருகிறதா என்றும், அது பாரிய அடக்குமுறை தாக்குதலின் இலக்காக மாறக்கூடுமா என்றும் நேரடியாகக் கேட்கப்பட்டது. நோயம் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார், “அவர்களின் கருத்துக்கள் தீவிரமானவை என்று நான் நினைக்கிறேன்” என்று மட்டுமே கூறினார்.
பிரித்தானிய பத்திரிகையான தி இன்டிபென்டன்ட், முழு ஜனநாயகக் கட்சியையும் ஒரு “உள்நாட்டு தீவிரவாத அமைப்பு” என்று குற்றவாளியாகக் கருதலாம் என்ற மில்லரின் பரிந்துரை உண்மையில் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க ஜனநாயகத்தை நடைமுறையில் முடிவுக்குக் கொண்டுவரும் என்று குறிப்பிட்டது. எந்தவொரு பெரிய அமெரிக்க செய்தித் தாள்களும் இந்த விஷயத்தைப் பற்றி பேசவில்லை. மேலும், ஒரு முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் கூட தங்கள் கட்சியை சட்டவிரோதமாக்குவது குறித்து வெள்ளை மாளிகையில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடந்து வருவதையிட்டு எச்சரிக்கவில்லை.
ட்ரம்ப் ஒரு தனிநபராக செயல்படவில்லை, மாறாக பெருநிறுவன-நிதியியல் தன்னலக் குழுக்களின் ஒரு பிரதிநிதியாக செயல்படுகிறார். அது, வெளிநாடுகளில் போரிடுவதன் மூலமும், உள்நாட்டில் அடக்குமுறையின் மூலமும் தனது செல்வத்தை பாதுகாக்கும் ஒரு வாகனமாக அவரைக் காண்கிறது.
ஆளும் உயரடுக்கு சமூக வேலைத்திட்டங்களில் எஞ்சியிருப்பவற்றின் மீது ஒரு பாரிய தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. இந்த தாக்குதலின் மைய இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும். அதன் வாழ்க்கைத் தரங்களும் ஜனநாயக உரிமைகளும் செல்வந்த தன்னலக் குழுக்களின் அருவருப்பான செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க நசுக்கப்பட வேண்டும்.
தனது அரசியலமைப்பு சதியை நடத்துவதில், ட்ரம்ப் நிர்வாகம் ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனம் மற்றும் உடந்தையை நம்பியுள்ளது.
ட்ரம்ப் போர்ட்லேண்டிற்கு துருப்புக்களை அனுப்பியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை திட்டமிட்டு குறைத்து, அவரது தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான அரசியல் எதிர்ப்பைக் குறைக்கும் நோக்கில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். “ஒரிகான்வாசிகள் அமைதியாக இருந்து அழகான இலையுதிர் காலத்தை அனுபவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஓரிகான் ஆளுநர் டினா கோடெக் எழுதினார். மேலும், “இந்த ஆபத்தான அதிகார துஷ்பிரயோகத்தை கைவிட்டு, உண்மையான ஆட்சிப் பணியில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ட்ரம்பிடம் மண்டியிட்டு மாநில ஜனநாயகக் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
தேசிய அளவில், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் ஜனநாயகக் கட்சியை எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடுத்தாத வெற்று வார்த்தை அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். ஒரு அவசரகால கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, அரசியலமைப்பிற்கு விரோதமான உத்தரவுகளை நிராகரிக்க இராணுவம் சட்டப்பூர்வமாக கடமைப்பட்டிருக்கிறது என்ற எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை.
செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், போர்ட்லேண்ட் “போரால் அழிக்கப்படவில்லை, அமெரிக்க துருப்புக்கள் அரசியல் விளையாட்டுப் பொருட்கள் அல்ல, ட்ரம்ப் ஒரு மன்னர் அல்ல, அவரைத் தடுக்க ஜனநாயகக் கட்சியினர் காங்கிரசில் போராடுவார்கள்” என்று ட்வீட் செய்தார்.
செனட்டர் பெர்னி சாண்டர்ஸும் இதேபோல், “திரு ஜனாதிபதி: அரசியலமைப்பைப் படியுங்கள். அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடு போர்ட்லேண்ட், ஓரிகான் அல்ல, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதாகும். இந்த நாட்டில் சட்டத்தை அமல்படுத்த உள்ளூர் மற்றும் மாநில பொலிசார் உள்ளனரே ஒழிய, மத்திய கூட்டாட்சி துருப்புகள் அல்ல. அமெரிக்கர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். சாண்டர்ஸின் இந்த பதிவு, ஒரு அரசியல் கேலிக்கூத்தாகும். ஒரு குடியியல் பாடத்தின் மூலம் தனது சர்வாதிகாரத்திற்கான உந்துதலைக் கைவிட ட்ரம்ப்பை வற்புறுத்த முடியும் என்பது போல, அரசியலமைப்பு சதிகாரரிடம் தனது சதியை நிறுத்துமாறு அவர் மன்றாடுகிறார்.
ட்ரம்ப் சார்பாக ஆட்சி நடத்தும் அதே சிறுபான்மை பில்லியனர் ஆட்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதைக் காட்டிலும், ட்ரம்புக்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்தையிட்டு அதிகம் அஞ்சுகின்றனர். ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட பாசிச உதவியாளர்கள் ஜனநாயகக் கட்சியை முழுவதுமாக குறிவைத்து, நேரடியாக அச்சுறுத்தல்களை விடுத்தபோதிலும், அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
இந்த அறிக்கை எழுதப்படும் வரை, AFL-CIO தொழிற்சங்கம், போர்ட்லேண்டிற்கு துருப்புக்களை அனுப்ப ட்ரம்ப் உத்தரவிட்டதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை. அதன் தலைவர் லிஸ் ஷுலர், வியாழக்கிழமை வரவிருக்கும் அரசாங்கத்தின் பணிநிறுத்தம் குறித்து ஒரு பொது அறிக்கையுடன் கடந்த வார நிகழ்வுகளுக்கு பதிலளித்தார். மேலும் செலவுமிக்க “அரசாங்க பணிநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக நிர்வாகம் உடனடியாக வேலை செய்யத் தொடங்கி ஒரு நிதித் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டுமென” வலியுறுத்தினார்.
ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடத்திலும், பள்ளியிலும் இந்தக் கேள்வி அவசரமாக எழுப்பப்பட வேண்டும்: ட்ரம்பின் சதி எவ்வாறு நிறுத்தப்பட வேண்டும்? இதற்கு காங்கிரஸ், நீதிமன்றங்கள் அல்லது பெருநிறுவன ஊடகங்களிலிருந்து எதிர்ப்பு வராது. எதிர்ப்பு இருக்க வேண்டுமானால், அது தொழிலாள வர்க்கத்தால் வழிநடத்தப்படும் அனைத்து உண்மையான ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களையும் அணிதிரட்டுவதன் மூலம் கீழிருந்து வர வேண்டும்.
வரலாற்று ரீதியாக, சர்வாதிகாரம் மற்றும் ஒடுக்குமுறையின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட போது, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் பொது வேலைநிறுத்தமாக இருந்து வந்துள்ளது. அதாவது, பிற்போக்கு சக்திகளை முடக்குவதற்கு தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு வாரத்திற்கு முன்னர், அரசியலமைப்பை தூக்கியெறிவதற்கு கட்டவிழ்ந்து வரும் சதி குறித்து எச்சரித்த ஒரு அறிக்கையில், “தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தக்கூடிய மற்றும் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிராக அதன் பரந்த தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டக்கூடிய ஒரு புதிய அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு” அழைப்பு விடுத்தது.
அந்த அறிக்கை பின்வருமாறு விளக்கியது:
சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த புதிய அமைப்பு வடிவம் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களைக் கொண்டுள்ளது. ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம், பள்ளி மற்றும் சுற்றுப்புறத்திலும் இவை நிறுவப்பட வேண்டும். இந்தக் குழுக்கள், பாசிச ட்ரம்ப்பின் அரசாங்கம், அதற்கு ஜனநாயகக் கட்சியினரின் உடந்தை, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பரந்த தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும், மாணவர் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தி, தொழில்துறை, தளவாடங்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் துரித உணவகங்கள், சமூக சேவைகள், சட்டப் பாதுகாப்பு, கல்வி, கலை, கலாச்சாரம், பொழுதுபோக்கு, மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவியல், கணினி தொழில்நுட்பம், நிரலாக்கம் மற்றும் பிற உயர்சிறப்பு வாய்ந்த தொழில்கள் ஆகியவற்றை எதிர்ப்பின் மையங்களாக மாற்ற வேண்டும்.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியை முறியடிக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இந்த அதிகாரத்துவங்கள், பெருநிறுவனங்களுக்கான தொழில்துறை பொலிஸாக செயல்பட்டு, எந்தவொரு தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் தடுக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த அதிகாரத்துவ ஒட்டுண்ணிகளின் அதிகாரத்திலிருந்து பட்டறை தளம் மற்றும் வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும். அங்கு மூலோபாயம், கொள்கை மற்றும் நடவடிக்கை போன்ற அனைத்து விஷயங்களிலும் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் முடிவுகளை எடுக்க முடியும்.
அனைத்து வேலையிடங்களிலும் பரவியுள்ள சாமானிய தொழிலாளர் குழுக்கள், நாடெங்கிலும் ஜனநாயகத்தின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட, ஒருங்கிணைந்த சமூக அதிகாரத்தின் புதிய மையங்களை உருவாக்கும். அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கம், நம்பிக்கையை ஊக்குவிக்கவும், போராட்டத்தின் அனைத்து வேறுபட்ட கூறுகளையும் ஒன்றிணைத்து, முதலாளித்துவ தன்னலக்குழுவால் வழிநடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் வெறுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பாரிய சமூக இயக்கமாக மாற முடியும்.
அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். இதன் பொருள், பாரிய நாடுகடத்தல் என்ற குற்றவியல் மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கையை எதிர்ப்பது மற்றும் அரசியலமைப்பில் பொதிந்துள்ள பிறப்புரிமை குடியுரிமை கோட்பாட்டை சமரசம் செய்யாமல் பாதுகாப்பது என்பதாகும். வர்க்க நனவான தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் மட்டுமே சேவை செய்யும் “பூர்வீக” மற்றும் “வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு” இடையிலான பிற்போக்குத்தனமான பிளவை நிராகரிக்கின்றனர்.
ட்ரம்பின் அரசியலமைப்பு சதிக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ தன்னலக்குழு மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்குவதற்கும், இந்தப் போராட்டத்தை வழிநடத்தத் தேவையான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் முயற்சியை ஆதரிக்கவும் அதில் சேரவும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புள்ள அனைவரும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் மூலம் ஆயுதபாணியாகுவதற்கும், இந்தப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு அவசியமான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும், கட்சியில் இணையுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.