மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரையில், சர்வதேச சட்டத்தையும் மீறி, பாரிய படுகொலை மற்றும் பயங்கரவாதம் பற்றி பெருமிதத்துடன் பீற்றிக் கொண்டதோடு, உலக மக்களின் பொதுக் கருத்தையும் மீறி காஸா இனப்படுகொலையை தொடரப்போவதாக சூளுரைத்தார்.
உலகின் மிக மோசமான பஞ்சத்திற்கு காஸா மக்களை வேண்டுமென்றே உட்படுத்தி, பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடித்து, காஸா நகரத்தின் மீதான தாக்குதலின் போது ஒவ்வொரு நாளும் டசின் கணக்கான மக்களைக் கொன்று குவித்து வந்த நிலையில், நெதன்யாகு அமெரிக்காவிற்கு பயணம் செய்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது ஆணையில் தேடப்பட்டுவரும் நெதன்யாகு பறந்த விமானம், கிட்டத்தட்ட கடலுக்கு மேலாலேயே அமெரிக்காவிற்கு பயணத்தை மேற்கொண்டது. கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் வான்வெளியை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். ஏனெனில், அங்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான அபாயத்தை எதிர்கொண்டார். அமெரிக்க வான்வெளியில் நுழைந்தவுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையையும் மீறி, நெதன்யாகுவின் முழுப் பாதுகாப்புக்கும் ட்ரம்ப் நிர்வாகம் உறுதியளித்தது.
ஐக்கிய நாடுகள் சபை, இந்த பாசிச பாரிய படுகொலையாளியை தனது கட்டிடத்திற்குள் அனுமதித்தது மற்றும் பொதுச் சபையில் உரையாற்ற அவருக்கு மேடை கொடுத்தது என்ற உண்மை, இந்த அமைப்பின் சக்தியற்ற தன்மைக்கும், அதன் உடந்தைக்குமான ஒரு குற்றச்சாட்டாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடியாக இருந்த தேசங்களின் கழகத்தை லெனின் துல்லியமாக “திருடர்களின் சமையலறை” என்று அழைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கான மக்கள் நெதன்யாகுவின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மண்டபத்தின் உள்ளே, பெரும்பான்மையான பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால், நெதன்யாகு கிட்டத்தட்ட காலியான அறையிலிருந்து உரையாற்றினார்.
ஆனால், அமெரிக்காவின் பிரதிநிதிகள், நெதன்யாகு கொலை செய்த மக்களைப் பற்றியும், மேலும் கொலை செய்வேன் என்ற அவரது சபதங்கள் மற்றும் அவரது பெருமைகளைப் பற்றியும் கூறி, உரத்த கரகோஷம் மற்றும் கைதட்டி ஆரவாரம் செய்ததன் மூலம் பிரதிநிதிகளின் வெளிநடப்பை ஈடுசெய்ய முயன்றனர்.
நெதன்யாகுவின் உரை பெரும்பாலும் அவருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க் குற்றக் குற்றச்சாட்டுகளுக்கும், இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருவதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தால் கண்டறியப்பட்டதற்கும் பதிலளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கவோ அல்லது எதிர்க்கவோ நெதன்யாகு தனது உரையின் மூலம் முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக, நெதன்யாகுவின் 45 நிமிட ஆவேசப் பேச்சு, “நான் போர்க் குற்றங்களில் குற்றவாளி, மேலும் பல குற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதைப் பற்றி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கருப்பொருளின் மாறுபாடாக இருந்தது.
நெதன்யாகு கொலை செய்த அரசியல் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார். “யேமனில் பாதி ஹவுத்தியின் தலைமை - போய்விட்டது. காஸாவில் யஹ்யா சின்வார் - போய்விட்டார். லெபனானில் ஹசன் நஸ்ரல்லா - போய்விட்டார். சிரியாவில் அசாத் ஆட்சி - போய்விட்டது... ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் அதன் உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை... சரி, அவர்களும் போய்விட்டார்கள்” என்று சூளுரைத்தார்.
செப்டம்பர் 2024 இல், லெபனானில் வெடி பொருட்கள் பொருத்திய தொலைத்தொடர்பு கருவிகளான பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகளைப் பயன்படுத்தி 4,000 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய பயங்கரவாத தாக்குதலுக்கான சூத்திரதாரி தான் என்றும் நெதன்யாகு பெருமை பீற்றிக்கொண்டார். “நீங்கள் அந்த பேஜர்களை நினைவில் கொள்கிறீர்களா? நாங்கள் ஹிஸ்பொல்லாவை எச்சரித்தோம், என்னை நம்புங்கள், அவர்களுக்கு செய்தி கிடைத்தது. ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள்… தரையில் விழுந்தனர்”
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு நெதன்யாகு, “இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு, தாங்கள் குறி வைத்துள்ள பொதுமக்களிடம், தீங்கு விளைவிக்காதவாறு வேண்டுகோள் விடுக்குமா? நாம் இனப்படுகொலை செய்ய முயன்றால் அவர்களை வெளியேறுமாறு சொல்வோமா?” என்று பதிலளித்தார்.
நெதன்யாகுவின் அபத்தமான வாதம் என்னவென்றால், “நாங்கள் இனச் சுத்திகரிப்பைச் செய்கிறோம் என்பதால் நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை” என்பதாகும்.
திமிர்த்தனமும் அபத்தமும் இன்னும் அதிக உச்சத்தை எட்டியது. அவர் அடால்ஃப் ஹிட்லரைப் போன்றவர் அல்ல என்று எதிர்ப்புத் தெரிவித்த நெதன்யாகு, “நாங்கள் அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறோம்... நாஜிக்கள் யூதர்களை வெளியேறச் சொன்னார்களா?” என்று அறிவித்தார்.
இந்த கேள்விக்கான பதில் “ஆம்” என்பதாகும். 1941 ஆம் ஆண்டில் நாஜிக்களின் “இறுதித் தீர்வு” நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், ஜேர்மனியில் இருந்து யூதர்களை வெளியேற்ற ஊக்குவிப்பது ஜேர்மன் நாஜிக் கட்சியின் உத்தியோகபூர்வ கொள்கையாக இருந்தது. உண்மையில், ஜேர்மனியின் யூதர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்னரே ஜேர்மனியில் இருந்து வெளியேறினர். ஏனெனில், யூத மக்களை தப்பி ஓட கட்டாயப்படுத்தும் நோக்கில் நாஜிக் கொள்கைகள் இருந்தன.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இனச் சுத்திகரிப்பும், இனப்படுகொலையும் நாஜி ஜேர்மனியில் கைகோர்த்துச் சென்றன. அது காஸா வழியாக இஸ்ரேலின் கொலை வெறியாட்டத்தில் தற்போது கைகோர்த்து செல்கிறது.
இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினதும், ஐ.நா விசாரணை ஆணையத்தினதும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நெதன்யாகு, “காஸா மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் வேண்டுமென்றே காஸா மக்களுக்கு உணவளிக்கிறது” என்று அறிவித்தார்.
காஸாவில் பஞ்சம் என்பது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மக்கள்தொகையின் உணவுப் பாதுகாப்பில் ஏற்பட்ட மிக விரைவான வீழ்ச்சி மற்றும் ஆபிரிக்க கண்டத்திற்கு வெளியே ஏற்பட்டுள்ள முதல் நவீன காலத்தின் பஞ்சமாகும். இது ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேலால் எல்லைகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. காஸாவின் எல்லைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டன் கணக்கான உணவு வாகனங்கள், காஸாவிற்கு உள்ளே செல்வதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றன.
நெதன்யாகுவின் அறிக்கைகளில் உள்ள வழிமுறை என்னவென்றால், இஸ்ரேல் வெளிப்படையாகச் செய்து வரும் போர்க் குற்றத்தை உலகத்தின் கண்களுக்கு முன்பாக எடுத்துரைத்து, அதற்கு நேர்மாறாக வலியுறுத்துவதாகும்: அது, பாலஸ்தீனியர்களைப் பட்டினி போடுவதற்குப் பதிலாக, இஸ்ரேல் அவர்களுக்கு உணவளிக்கிறது என்பதாகும்.
இது அடால்ஃப் ஹிட்லரின் “பெரிய பொய்” கோட்பாட்டின் ஒரு மாறுபாடாகும். இது ஹிட்லர் வலியுறுத்தியது. ஏனென்றால், “மற்றவர்கள் உண்மையை இவ்வளவு இழிவான முறையில் சிதைக்கும் துணிச்சல் கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று பார்வையாளர்கள் நம்ப மாட்டார்கள் என்பதாகும். ஆனால், நெதன்யாகுவின் விஷயத்தில், யாரும் பொய்யை நம்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கு எஞ்சியிருப்பது அயோக்கியத்தனம் மட்டுமே.
எவ்வாறாயினும், நெதன்யாகுவின் உரையின் ஒரு பகுதியில் அவர் உண்மையைச் சொன்னார். ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களை நோக்கி நெதன்யாகு, “இஸ்ரேல் உங்கள் போராட்டத்தை நடத்துகிறது என்பதை நீங்கள் ஆழமாக அறிவீர்கள்” என்று அறிவித்தார். மேலும், “கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியபோது, ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார். இஸ்ரேல் நம் அனைவருக்கும் மோசமான வேலையைச் செய்கிறது” என்று மெர்ஸ் குறிப்பிட்டார்.
இங்கே, நெத்தன்யாகு ஏகாதிபத்திய தலைவர்களை சரியான முறையில் பிடித்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளும் காஸாவில் இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்து ஆயுதங்களை வழங்கியுள்ளன. மேலும் இஸ்ரேலின் சட்டவிரோத அழிப்புப் போரை பகிரங்கமாகப் இவை பாதுகாத்து வந்துள்ளன. இஸ்ரேல் மீதான இவர்களின் தந்திரோபாய விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் நெதன்யாகு செய்துவரும் பிரமாண்டமான குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர். இன்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்த அல்லது அந்த நடவடிக்கையை அவர்கள் விமர்சித்தால், அது இந்த அடிப்படை உண்மையை மூடிமறைப்பதற்காகவே இருக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் காஸா இனப்படுகொலைக்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரிய எதிர்ப்பின் ஒரு பகுதி வெளிப்பாடு மட்டுமே. இது, இறப்பு எண்ணிக்கையுடன் வளர்ந்து வருகிறது.
காஸாவில் இரண்டு வருட பாரிய படுகொலைகளை நாம் வேகமாக நெருங்கி வருகின்றபோது, மேலும் சில படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
முதலாவதும் மிக முக்கியமானதும், இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு முறையிடுவது முற்றிலும் பயனற்றதாகும். அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களும் காஸாவில் இரத்தக் குளியலில் ஈடுபட்டுள்ளன. இந்தப் படுகொலைகள், உலகையே அடிமைப்படுத்த ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும். இந்த உலகளாவிய போரின் இலக்குகள் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கியும் உள்ளன.
காஸா இனப்படுகொலைக்கு ஆதரவளிக்கும் அதே அரசாங்கங்கள்தான் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி வருகின்றன. சர்வதேச அளவில் ட்ரம்ப் ஆதரவளிக்கும் காஸா இனப்படுகொலையின் குற்றவியல் தன்மைக்கும், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ வெள்ளை மாளிகையின் முயற்சிகளுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய தொடர்பு உள்ளது.
ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மற்றும் சர்வாதிகாரத்தின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பொதுவான முயற்சியில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன், போருக்கு எதிரான இயக்கம் இணைக்கப்பட வேண்டும்.