முன்னோக்கு

ஹெக்சேத் ஏன் இராணுவத் தளபதிகளை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டனில் உள்ள யூனியன் நிலையத்தில் தேசிய காவல் படையினருடன் வெள்ளை மாளிகை துணைத் தலைமைத் தளபதி ஸ்டீபன் மில்லர், யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் நிற்கின்றனர், ஆகஸ்ட் 20, 2025 புதன்கிழமை. [AP Photo/Al Drago]

யுத்த அமைச்சர் பீட் ஹெக்சேத், நூற்றுக்கணக்கான அமெரிக்க தளபதிகள் மற்றும் அட்மிரல்களை அடுத்த வார தொடக்கத்தில் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள குவாண்டிகோ கடற்படை தளத்தில் இடம்பெறவுள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள உத்தரவிட்டுள்ளார். அசாதாரணமான குறுகிய அறிவிப்பு மற்றும் எந்தக் காரணமோ அல்லது நிகழ்ச்சி நிரலோ அறிவிக்கப்படாமல் இடம்பெறும் இந்தக் கூட்டம், வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்டால் அறிவிக்கப்பட்டு, பின்னர் பென்டகன் செய்தி அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து ஹெக்செத்தும் பென்டகனும் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. “சமீபத்திய தசாப்தங்களில் உலகெங்கிலும் இருந்து தளபதிகள் ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல் இல்லாமல், மிகக் குறுகியகால அறிவிப்புடன் வரவழைக்கப்பட்ட மற்றொரு சம்பவத்தை தங்களால் நினைவுகூர முடியவில்லை என்று மூத்த அதிகாரிகள் கூறியதாக” போஸ்ட் குறிப்பிட்டது. ஒரு பெயரிடப்படாத அதிகாரி இந்த நடவடிக்கையை “மிகவும் அசாதாரணமானது, முன்னெப்போதும் இல்லாதது” என்று விவரித்தார்.

பாரசீக வளைகுடா மற்றும் கரீபியன் கடல் போன்ற யுத்த மண்டலங்களில் உள்ள தளபதிகளும், எகிப்து, ஜப்பான் மற்றும் போர்ட்டோ ரிக்கோவில் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை நடத்துபவர்களும், குறுகியகால அறிவிப்பில் தங்கள் கட்டகளையகத்தை விட்டு வாஷிங்டனுக்கு பறக்க வேண்டியிருந்தது. இது, இந்த நிகழ்வு குறித்த “அச்ச உணர்வை” மேலும் அதிகரித்துள்ளது என்று இராணுவம் தொடர்பான ஒரு வெளியீடு கூறியது.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வெள்ளை மளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த கூட்டத்தில் வெளிநாட்டு இராணுவங்களிலிருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அல்ல, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. ஆனால், அடுத்த வார உயர் அதிகாரிகளின் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அது நடைபெறும் அரசியல் சூழலிலிருந்து காண முடியும்.

இந்தக் கூட்டமானது, கடந்த திங்களன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ட்ரம்ப் பேசிய பாசிசக் கருத்துக்களைத் தொடர்ந்து வருகிறது. அங்கு அவர் இஸ்ரேலின் காஸா மீதான இனச்சுத்திகரிப்பை ஆதரித்தார், “வெனிசுவேலாவை காணாமல் போகச் செய்வேன்” என்று அச்சுறுத்தினார், மேலும், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் குறித்து பெருமையடித்துக் கொண்டார். அமெரிக்க இராணுவ வலிமை முன்னெப்போதிலும் பார்க்க இவ்வளவு பெரியதாக இருந்ததில்லை என்று கூறிய அவர், அமெரிக்க பொருளாதார சக்தி பற்றி அதே கூற்றை முன்வைக்கிறார், இருப்பினும் இது வெளிப்படையாக தவறானது.

எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் மற்றும் ஹெக்சேத் ஆகியோர் உலகெங்கிலும் புதிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு, ஒட்டுமொத்த உயர்மட்ட படை அதிகாரிகளை வாஷிங்டனுக்கு வரவழைக்க வேண்டியிருக்க அவசியல்லை. அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது முன்னொருபோதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்காவிற்குள்ளேயே நடவடிக்கைகளுக்குத் தயாராகும் வகையில், ட்ரம்ப் நிர்வாகம் இராணுவத்தை மறுஒழுங்கமைக்க முனைந்து வருகிறது என்பதுதான் மிகவும் சாத்தியமுள்ளதாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது.

உள்நாட்டில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப்பின் தீவிர முயற்சிகளின் பின்னணியில் இராணுவ ஜெனரல்களை வரவழைப்பதை மதிப்பிட வேண்டும். ஆகஸ்ட் 11 அன்று, அமெரிக்க தலைநகரில் இடம்பெறாத “குற்ற அலை” தொடர்பாக ட்ரம்ப் அவசரகால நிலையை அறிவித்ததைத் தொடர்ந்து, தேசிய காவல்படை துருப்புக்கள் ஏற்கனவே வாஷிங்டன் டி.சி.யை ஆக்கிரமித்துள்ளன.

கடந்த வார இறுதியில், ட்ரம்பும் அவரது உள் வட்டத்தினரும் அரிசோனாவில் பாசிச கிளர்ச்சியாளர் சார்லி கிர்க்கிற்கு ஒரு கோரமான நினைவு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி (ஹிட்லரின்) ஒரு நூரம்பேர்க் பாணி பேரணியாக மாறியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹெக்சேத், அமெரிக்கா ஒரு “ஆன்மீகப் போருக்கு” மத்தியில் இருப்பதாக அறிவித்தார். அதேவேளையில் ட்ரம்ப் அமெரிக்க நகரங்களுக்கு எதிராக தேசிய காவல் படையினரை கட்டவிழ்த்து விடுவதாக சூளுரைத்தார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த கருத்துக்களில், “பாசிச எதிர்ப்பாளர்கள்” மற்றும் “தீவிர இடதுசாரிகளை” “உள்நாட்டு பயங்கரவாதிகள்” என்று குறிவைத்து ஜனாதிபதி குறிப்பாணையில் கையெழுத்திட்ட பிறகு, ட்ரம்ப் மத்திய கூட்டாட்சி முகவர்கள் மற்றும் தேசிய காவல்படை துருப்புக்களை சிக்காகோ மற்றும் மெம்பிஸுக்கு அனுப்பும் தனது திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார். அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு கொலைகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொண்ட போர்ட்லேண்ட், ஓரிகானில் அதையே செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொய்க்குப் பிறகு பொய்யை கூறினார். ஒரு அமைப்பாக கூட இல்லாத “பாசிச எதிர்ப்பினரின்” பிடியில் இந்த நகரம் இருப்பதாக அவர் சித்தரித்தார். ஆனால், நகர்ப்புற அமெரிக்காவை இராணுவ-பொலிஸ் கையகப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக, ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்களால் முடிவில்லாமல் இது மேற்கோள் காட்டப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை பரந்த அளவில் மேற்கொள்வதற்கு பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையுடன் சேர்ந்து துருப்புக்களையும் நிலைநிறுத்த வேண்டியிருக்கும். மே 2020 இல், ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பாரிய போராட்டங்களின் போது இராணுவச் சட்டத்தை அறிவிக்கும் ட்ரம்பினது திட்டங்களை பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகள் அப்போது எதிர்த்தனர். மேலும், ட்ரம்ப் அதை ஒருபோதும் மன்னிக்கவோ அல்லது மறக்கவோ இல்லை. ஜனவரி 6, 2021 அன்று, அவரது வன்முறை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வி கண்டதிலிருந்து ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் கற்றுக்கொண்ட பிரதான பாடம், இராணுவத்தை அவரது நேரடி தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டிய அவசியத்தையாகும்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையை மீட்டெடுத்ததிலிருந்து, சர்வாதிகாரத்திற்கான தனது உந்துதலுடன் ஆயுதப்படைகள் இணைந்திருப்பதை உறுதிசெய்ய இடைவிடாமல் நகர்ந்து வந்துள்ளார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில், அடையாளம் காணப்பட்ட Fox News பத்திரிகையின் பாசிச வர்ணனையாளராக இருந்த ஹெக்செத்தை அவர் தேர்ந்தெடுத்தது, இதேபோன்ற குற்றங்களை பரந்த அளவில் செய்வதற்கு ஒரு பச்சை விளக்காக அமைந்தது.

பென்டகனுக்கு புதிதாக வந்த இந்த முதலாளி, கூட்டுப் படைகளின் தளபதி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பெண்கள் அல்லது ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனால் பதவி உயர்வு பெற்றவர்களை குறிவைத்தார். இரத்தத்தையும் மண்ணையும் நேசிக்கும் தேசியவாதம் மற்றும் கிறிஸ்தவத்துடன் தொடர்புடைய “போர் வெறியர்களின் நெறிமுறைகளை” அவர் பகிரங்கமாக தழுவியுள்ளார்.

மேலும் அவர், புலம்பெயர்ந்த சமூகங்கள் மீதான கொடூரமான குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையினரின் (ICE) தாக்குதல்களை ஆதரித்து, ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில் கடற்படையினரை லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். மிக சமீபத்தில், பென்டகன் நிருபர்கள் “அங்கீகரிக்கப்படாத” தகவல்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழிகளில் கையெழுத்திட வேண்டியிருந்தது — இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இராணுவ கட்டளைக்கான சுருக்கெழுத்தாளர்களாக அவர்கள் மாற வேண்டும் என்பதாகும்.

எனவே வாஷிங்டனுக்கு கிட்டத்தட்ட முழு மூத்த தளபதிகளையும் திரும்ப அழைக்கும் ஹெக்செத்தின் அசாதாரண உத்தரவை ஒரு விசுவாச சோதனை, ஒரு எச்சரிக்கை மற்றும் நம்பமுடியாததாகக் கருதப்படும் எந்தவொரு நபர்களையும் சுத்திகரிப்பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட வேண்டும்.

இராணுவக் கூட்டம் நடைபெறவுள்ள நேரம், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுக்கான செப்டம்பர் 30 ஆம் திகதி வரவிருக்கும் காலக்கெடுவுடன் ஒத்திருக்கிறது. ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும், அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி மத்திய கூட்டாட்சி ஊழியர்களை பாரியளவில் பணிநீக்கம் செய்வதற்கும், அரசை ஒட்டுமொத்தமாக மறு ஒழுங்கமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளனர். ஒரு பணிநிறுத்தம், இந்த செயல்முறையை துரிதப்படுத்தும், மத்திய கூட்டாட்சி தொழிலாளர்களை அகற்றும், சமூக வேலைத் திட்டங்களை உடைக்கும், மற்றும் பொது சுகாதாரத்தின் கடைசி எச்சங்களை அகற்றும், அதே நேரத்தில் இராணுவமானது முழுமையாக நிதியளிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டு அடக்குமுறைக்கு தயாராக இருக்கும் ஒரு துறையாக இருப்பதை உறுதி செய்யும்.

முன்னொருபோதும் இல்லாத இந்த அபிவிருத்திகளுக்கு மத்தியில், அரசியல் ஸ்தாபகத்திற்குள் உண்மையான எதிர்ப்பின் ஒரு தடயமும் இல்லை. ஜனநாயகக் கட்சியினர், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மெளனமாக இருப்பதன் மூலம் இதற்கு உடந்தையாக உள்ளன. ட்ரம்ப்பும் அவரது பாசிச கூட்டாளிகளும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதில் முன்னேறும்போது, இவர்கள் மக்களின் எதிர்ப்பை குழப்பவும் அடக்கவும் தமது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை காலை, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, தனது இணையத் தளத்தில் பிரகாசமாக காண்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்களுக்கு குவாண்டிகோவிற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. வியாழக்கிழமை மாலை, எந்த ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சியினரும் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. பாராளுமன்ற சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், வரவிருக்கும் கூட்டாட்சி அரசாங்க முடக்கம் குறித்து கவனம் செலுத்தும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால், அவர் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு உடனடி அச்சுறுத்தல் குறித்து எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை.

பைடென் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமான உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடரவும், தீவிரப்படுத்தவும் ட்ரம்புடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதே ஜனநாயகக் கட்சியினரின் பிரதான அக்கறையாகும். ஐ.நா.வில் அவரது கருத்துக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, ட்ரம்ப் அந்த திசையில் நகர்ந்தால், ஜனநாயகக் கட்சி சமூக செலவினங்களை வெட்டித் தள்ளுவதற்கும், அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை (பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, மத சுதந்திரம், மற்றும் மனு செய்யும் உரிமை தொடர்பான சுதந்திரங்களை உத்தரவாதம் செய்கிறது) ஒரு இறந்த கடிதமாக மாற்றுவதற்கும் எடுக்கும் முயற்சிகள் குறித்து தகராறு செய்யாது.

ஜனநாயகக் கட்சியினரின் மௌனம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறியாட்டத்திற்கு உழைக்கும் மக்களிடையேயும், பரந்தபட்ட மக்கள் பிரிவினரிடையேயும் அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதற்கான எதிர்ப்புகள், நனவுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மேலும், ட்ரம்பின் நடந்து கொண்டிருக்கும் மற்றும் அதிகரித்து வரும் சதிகளுக்கு முன் ஜனநாயகக் கட்சியினர் மண்டியிடுவது, தொழிலாள வர்க்கம் அரசியல் நெருக்கடியில் சுயாதீனமாக தலையிட்டு, பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள இரு கட்சி முறையிலிருந்து உடைத்துக் கொண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading