காஸாவுக்குச் செல்லும் மூன்றாவது மனிதாபிமான சுதந்திரம்/சுமுத் படகுகள் அணி மீது இஸ்ரேல் தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவிற்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் சுமுத் குளோபல் படகுகள் அணி, இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இது, ஐரோப்பிய சக்திகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

44 நாடுகளைச் சேர்ந்த 500 தன்னார்வலர்களை ஏற்றிச் செல்லும் பல்வேறு அமைப்புகளின் (சுதந்திர படகுகளின் கூட்டணி, காஸாவுக்கு உலகளாவிய அணிவகுப்பு, காஸாவுக்கு ஆயிரம் மட்லீன்கள்) 50க்கும் மேற்பட்ட படகுகள் தற்போது கிரீட் கடற்கரையில் தரித்து நிற்கின்றன. பிரதான படகுகள் அணி ஆகஸ்ட் 31 அன்று ஸ்பெயின் பார்சிலோனாவிலிருந்து புறப்பட்டது, பின்னர் துனிசியாவில் உள்ள பிசர்ட்டே மற்றும் சிசிலியின் ஆகஸ்ட் பகுதிகளில் இருந்து மேலும் கப்பல்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன.

குளோபல் சுமுத் படகுகள் ட்ரோன்களால் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி காட்சி [Photo: Global Movement To Gaza UK/X]

காஸா மீதான சட்டவிரோத முற்றுகை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் பஞ்சம் குறித்து கவனத்தை ஈர்ப்பதே இவர்களின் நோக்கமாகும்.

இந்த மாத தொடக்கத்தில், இரண்டு நாட்களில் நடந்த இரண்டு தாக்குதல்கள்களில், துனிசியாவில் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டு வெவ்வேறு படகுகள் மீது —குடும்ப படகு மற்றும் முதன்மையான அல்மா— தீப்பிடிக்கும் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த வாரம், “பல ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத பொருட்கள் விழுந்தன, தகவல் தொடர்புகள் தடைபட்டன மற்றும் பல படகுகளில் இருந்து வெடிச் சத்தங்கள் கேட்டன. இந்த உளவியல் செயல்பாடுகளை நாங்கள் இப்போது நேரடியாகக் காண்கிறோம், ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று படகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர் யாசெமின் அகார் “15 முதல் 16 ட்ரோன்களை பார்த்ததாக” தெரிவித்தார். அவருக்கு பின்பகுதியில் ஒரு வெடிச்சத்தம் கேட்கப்படுவதற்கு முன்னர் நான்கு படகுகள் ட்ரோன்களால் இலக்கு வைக்கப்பட்டதை தியாகோ அவிலா என்பவர் ஒரு வீடியோவில் விவரித்தார். படகுகள் மீது இரசாயனப் பொருட்கள் தெளிக்கப்பட்டன என்று அவர் பின்னர் கூறினார். இந்தப் படகுகள் அணிவகுப்பின் அதிகாரப்பூர்வ தகவலிலிருந்து பதிவு செய்யப்பட்ட குண்டுவெடிப்பின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இஸ்ரேலிய அரசாங்கம், இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அதே நேரத்தில், படகுகள் அணிவகுப்பை தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகிறது. செவ்வாயன்று, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் படகுகளின் “வன்முறை நடவடிக்கை தொடர்கின்றன” என்றும், அவற்றின் பணி “ஹமாஸால் ஒழுங்கமைக்கப்பட்டது” என்றும், இவை “ஹமாஸுக்கு சேவை செய்யும் நோக்கத்தை” கொண்டிருக்கின்றன என்றும் கூறியது.

இந்த ஆண்டு கடல் வழியாக, காஸாவிற்கு உதவிகளை வழங்குவதற்கான முந்தைய இரண்டு முயற்சிகள் இஸ்ரேலிய ஆயுதப் படைகளால் தடுக்கப்பட்டன. கடந்த ஜூன் மாதத்தில், மட்லீன் படகு சோதனை செய்யப்பட்டு அதன் குழுவினர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். கடந்த மே மாதத்தில், மால்டா கடற்கரையில் மனசாட்சி என்ற ஒரு படகு ட்ரோன்களால் தாக்கப்பட்டு, மீட்கப்பட வேண்டியிருந்தது.

இந்த முறை படகுகள் அணிவகுப்பு மிகப் பெரியதாக இருப்பதுடன், பல ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களின் பல உறுப்பினர்களை ஏற்றிச் செல்கிறது. இத்தாலியில் இருந்து நான்கு பிரதிநிதிகள் உள்ளனர்: ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஆர்டுரோ ஸ்காட்டோ, M5S இத்தாலிய செனட்டர் மார்கோ குரோட்டி, பசுமைக் கட்சி மற்றும் இடது கூட்டணியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெனடெட்டா ஸ்குடெரி, மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அன்னாலிசா கொராடோ ஆகியோர் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

அயர்லாந்தில் இருந்து வந்திருப்பவர்களில் சின் ஃபெயின் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் லின் பாய்லன், செனட்டர் கிறிஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் லாபத்திற்கு முன் மக்கள் TD பால் மர்பி ஆகியோர் அடங்குவர். பிரான்சின் அடிபணியா பிரான்ஸ் கட்சியின் பிரெஞ்சு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்மா ஃபோர்ரோ மற்றும் போர்த்துகீசிய இடது முகாம் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா மோர்டகுவாவும் இதில் அடங்குவர்.

டெல் அவிவில் உள்ள பாசிச நெதன்யாகு ஆட்சிக்கு —குறிப்பாக ஐரோப்பா மீதான தனது வெறுப்பை மிகப் பெரிய அளவில் தெளிவுபடுத்தியுள்ள ட்ரம்ப் நிர்வாகத்தால்— வழங்கப்பட்ட உரிமம் என்னவென்றால், படகில் செல்பவர்களைக் கொல்லும் அபாயத்தை அது எடுக்கத் தயாராக உள்ளது என்பதாகும்.

ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, இத்தாலியும் ஸ்பெயினும் அணிவகுத்து செல்லும் படகுகளுக்கு தமது போர்க் கப்பல்களை அனுப்பி வருகின்றன. அவை படகில் உள்ள தங்கள் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க அவசியம் என்று கூறுகின்றன.

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ இந்த தாக்குதலுக்கு “கடுமையான கண்டனத்தை” வெளியிட்டார். மேலும் முன்னர் கிரீட்டின் வடக்கே பயணித்த பல்நோக்கு போர்க்கப்பல் ஃபசான் “சாத்தியமான மீட்பு நடவடிக்கைகளுக்காக” “ஏற்கனவே பயணிக்கிறது” என்று அமைச்சர் கூறினார். இத்தாலிய அதிகாரி ஒருவர், இது முக்கியமாக படகுகளில் உள்ள இத்தாலியர்களுக்கு உதவுகிறது என்று தெரிவித்தார். மேலும் “தேவைப்பட்டால், எங்கள் போர்க்கப்பல் நன்கு வசதிகளைக் கொண்ட மருத்துவமனையைக் கொண்டுள்ளது” மற்றும் இது இராணுவ நடவடிக்கையை உள்ளடக்காது என்று அவர் கூறினார்.

படகுகள் மீதான தாக்குதலின் சூத்திரதாரி யார் என்று தெரியவில்லை என்று வலியுறுத்திய குரோசெட்டோ, “இவர்கள் அடையாளம் தெரியாத குற்றவாளிகள்” என்று குறிப்பிட்டார்.

இரண்டாவது கப்பல் வியாழக்கிழமை அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன் தாக்குதலை உத்தியோகபூர்வமாக கண்டித்த அதேவேளையில், இத்தாலிய பிரதம மந்திரி ஜோர்ஜியா மெலோனி, இந்த மனிதாபிமான பணி, “தேவையற்ற, ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று கண்டனம் செய்தார். மேலும் தனது அரசாங்கத்திற்கு சிக்கல்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

உதவிப் படகுகள் காஸாவை அடைந்து உதவிகளை வழங்க அனுமதிப்பதற்கு பதிலாக, சைப்ரஸில் உள்ள ஜெருசலேமின் லத்தீன் தேசபக்தர்களிடம் உதவிப் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்கள் கடற்படை மூலம் அதை வழங்குவார்கள் என்றும் மெலோனி கூறினார்.

ஐ.நா. பொதுச் சபைக்கு முன்பு புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மெலோனி, “இந்த முன்மொழிவுக்கு சைப்ரஸ் அரசாங்கம், இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் நிச்சயமாக இத்தாலிய அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிகிறது. படகுகள் அணிவகுப்பினரின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உதவிப் படகுகளின் இறுதிப் பகுதி பயணத்தில் கடற்படையின் நிழலில் பயணிக்கும் என்று அறிவித்தார். மனிதாபிமானப் பணியில் பங்கேற்கும் 45 நாடுகளின் குடிமக்கள் மத்தியதரைக் கடலில் தடையின்றி பயணிக்க முழு உரிமையும் உள்ளதாக ஐ.நா. அமர்வின் போது அவர் அறிவித்தார். “நாளை, படகுகளுக்கு உதவவும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் அவசியமானால், தேவையான அனைத்து வளங்களுடனும் கார்டஜீனாவிலிருந்து ஒரு போர்க்கப்பலை நாம் அனுப்புவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாயன்று ஐ.நா பொதுச் சபையில் ஸ்பெயின் மன்னர் பிலிப், “படுகொலையை நிறுத்தவும்”, காஸாவில் அதன் “வெறுக்கத்தக்க செயல்களை” நிறுத்தவும், இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சான்செஸின் தலையீடு வந்தது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் ஆட்சியின் பல போர்க் குற்றங்கள், “பொதுமக்களிடையே பல இறப்புகள்”, “பஞ்சம் மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்தது” உட்பட, இது ஒரு இனப்படுகொலை என்று கூற அவர் மறுத்துவிட்டார்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் காரணமாக இத்தாலிய மற்றும் ஸ்பானிய அரசாங்கங்கள் ஏதோவொரு வடிவிலான வெளிப்படையான நடவடிக்கையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான இத்தாலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராக 80 மா நகரங்கள் மற்றும் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர், செவ்வாய் மற்றும் புதன்கிழமை படகுகள் மீது டிரோன் தாக்குதல்கள் நடந்தன.

பத்து நாட்களுக்கு முன்பு, 100,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்ரிட்டில் தெருக்களில் இறங்கி, இஸ்ரேலின் பிரதான தொழில்நுட்ப சைக்கிள் ஓட்டுநர் குழு பங்கேற்றதால், ஸ்பானிய வூல்டா சைக்கிள் ஓட்டுதல் போட்டியின் இறுதி கட்டத்தை தடுத்தனர். செப்டம்பர் 18 அன்று ஸ்பெயின் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இதர ஐரோப்பிய அரசாங்கங்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லை. படகு அணியில் மொத்தம் 13 பிரிட்டன் பிரஜைகள் உள்ளனர். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ட்ரோன்களால் தாக்கப்பட்ட இரண்டு படகுகள் உட்பட குறைந்தது மூன்று படகுகள் பிரிட்டனின் கொடியின் கீழ் பயணிக்கின்றன. ஆனால், இங்கிலாந்தில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கம், இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு தனது கழுத்து வரை ஆதரவு அளித்து, அதன் குடிமக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் ஈவா ஹ்ர்ன்சிரோவா, “இந்த வகையான படகுகள் அணிகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. ஏனெனில், இது நிலைமையை மோசமாக்கி அதன் பங்கேற்பாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று அறிவித்தார்.

காஸாவில் பஞ்சத்திற்குக் காரணமானவர்களுடன் இணைந்து பணியாற்றுவதே உதவி வழங்குவதற்கான “சிறந்த வழி”, அதனால்தான் “இஸ்ரேலுடனான வழிகளை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம், மேலும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேசுகிறோம்” என்று அவர் கூறினார்.

சுமுட் படகுகள் அணி மீதான ட்ரோன் தாக்குதல்கள் குறித்து ஐரோப்பாவில் பொதுவான மௌனம் நிலவுகிறது. இதற்கு நேர்மாறாக, கடந்த திங்களன்று, கோபன்ஹேகன் மற்றும் ஒஸ்லோ விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் காணப்பட்டதால் அவை மூடப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. நேட்டோ சக்திகள் இதற்கு ரஷ்யாவை நோக்கி விரைவாகக் குற்றம் சாட்டி, நிலைமையை “சீர்குலைத்து அமைதியின்மையை உருவாக்கும்” அதன் முயற்சிகளை மிகவும் வலுவான சொற்களில் கண்டனம் செய்வதில் நேரத்தை வீணடிக்கவில்லை.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகமான ட்ரோன்கள் காணப்பட்டதால் டென்மார்க்கின் ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகிய இடங்களில் உள்ள இதர விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டன. வரலாற்றில் முதல் முறையாக நேட்டோவின் பிரிவு 4 ஐ செயல்படுத்துவது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருவதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லுண்ட் பவுல்சன் கூறினார். “பிரிவு 4 க்கு கூடுதலாக, நேட்டோ மூலம் செய்யக்கூடிய பிற நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று பவுல்சன் மேலும் கூறினார்.

ட்ரோன் “தடுப்பு சுவர்” திட்டம் குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு ஆணையர் ஆண்ட்ரியஸ் குபிலியஸ் தோராயமாக இதற்கு “ஒரு வருட” காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.

நேட்டோவின் வான்வெளியில் ரஷ்யா ஊடுருவியதாக முன்னர் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள், நேட்டோ கூட்டணியின் கிழக்கு புறத்தில் கூடுதல் போர் விமானங்களையும் விமானிகளையும் நிறுத்தி, ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவது உட்பட எதையும் செய்ய தயாராக இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்தன.

Loading