மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம், ட்ரம்ப் நிர்வாகத்திடம் கொலம்பியா பல்கலைக்கழகம் சரணடைந்தமையானது, பிரதான அமெரிக்க நிறுவனங்கள் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்ட ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனத்தையும், அதன் உடந்தையையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், எதேச்சதிகாரத்திற்கு முன்னால் சரணடைவதே அதன் வழிகாட்டும் கோட்பாடாகவும் உள்ளது.
கடந்த புதன்கிழமை இறுதி செய்யப்பட்ட இந்த உடன்பாடு, கொலம்பியாவிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 220 மில்லியன் டாலர்கள் தொகை கொடுப்பனவிற்கும் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற போலி சாக்குப்போக்கின் கீழ் கல்வித்துறை சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கிறது.
இது நடைமுறையளவில் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டை ஒரு பாசிஸ்டுக்களின் தலைமையிலான அரசாங்கத்திடம் ஒப்படைத்து, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மீதான எந்தவொரு விமர்சனமும், அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான எந்தவொரு எதிர்ப்பும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது பணிநீக்கம் செய்வதில் போய் முடியக் கூடிய நிலைமைகளை உருவாக்குகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சரணடைவுக்குப் பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் இதர உயர்மட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்தும் இதே போன்ற நிபந்தனைகளை விதிக்கத் தயாராகி வருகிறது. இந்த வாரம், நியூ யோர்க் டைம்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு தீர்வுக்குத் தயாராக இருப்பதாகவும், கூட்டாட்சி அரசின் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவர 500 மில்லியன் டாலர்கள் வரை —கொலம்பியா பல்கலைக்கழகம் வழங்கிய தொகையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக— வழங்குவதாகவும் செய்தி வெளியிட்டது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை காத்திருக்கவில்லை. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முந்தைய நாட்களில், மே மாதம் இனப்படுகொலையை எதிர்த்துப் போராடுவது குறித்த கற்பித்தலில் பங்கேற்றதற்காக கிட்டத்தட்ட 80 மாணவர்களை பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது. இப்போது அது “அனைத்து மாணவர்களையும் வளாக விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு இன்னும் பரந்தளவில் சமூகமயமாக்குவதற்கான பயிற்சி பொருட்களை” பயன்படுத்தி ஒரு போதனை திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த உடன்பாட்டின் கீழ், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பாடநெறி உள்ளடக்கத்தை கண்காணிக்கவும், பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் பணியமர்த்தலை மேற்பார்வையிடவும் அதிகாரம் இருக்கும். சர்வதேச இனப்படுகொலை நினைவு சங்கத்தின் யூத எதிர்ப்புவாதம் பற்றிய வரையறையை ஏற்கவும் கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இது சியோனிசம் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்து அரசியல் எதிர்ப்பையும் யூத எதிர்ப்புடன் சமப்படுத்துகிறது.
இதற்குப் ஈடாக, ட்ரம்ப் நிர்வாகம் மார்ச் முதல் அது பிணைத்தொகையாக வைத்திருந்த 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஆராய்ச்சி மானியங்களில் பெரும்பாலானவற்றை திருப்பித் தர ஒப்புக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சிக்காகவே காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட நிதியை நிர்வாகக் கிளை நிறுத்தி வைத்தது. இது, முன்னெப்போதும் இல்லாதது மற்றும் அரசியலமைப்பின் அதிகாரப் பிரிவை மீறுகிறது. இந்த ஒப்பந்தம் நியாயமான விசாரணையை உறுதி செய்யும் கூட்டாட்சி சிவில் உரிமைகள் விசாரணைகளுக்கான வழக்கமான நடைமுறைகளை மீறுகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகம் ஜனநாயகக் கட்சியுடன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. அதன் அறங்காவலர் குழுவில் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் முன்னணி பிரமுகர்களும், ஒபாமாவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜெஹ் ஜோன்சன் போன்ற முன்னாள் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி அதிகாரிகளும் உள்ளடங்கி உள்ளனர். தீர்வுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஒருமனதாக இருந்தது.
பில் கிளிண்டனின் கீழ் நிதி அமைச்சராக இருந்தவரும் ஹார்வார்டின் முன்னாள் தலைவருமான லாரி சம்மர்ஸ், இந்த “ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளை, கடந்த ஆண்டில் உயர்கல்வி பெற்ற சிறந்த நாளாக” அறிவிக்கும் அளவுக்குச் சென்றார். அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை ரத்து செய்வது பற்றி அவர் என்ன சொல்வார் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும் - ஒருவேளை “அமெரிக்க ஜனநாயகத்திற்கான ஒரு கொடி நாளாக” இருக்கலாம்.
மற்றொரு முன்னாள் ஜனநாயகக் கட்சி அமைச்சரவை செயலாளரான டோனா ஷலாலா தனது அரசியல் கூட்டாளிகளின் தற்போதைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். “ட்ரம்பைப் பொறுத்தவரை, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதும் வெற்றி பெறுவதையும் தவிர விவரங்கள் முக்கியமில்லை. எனவே, ஒரு பேச்சுவார்த்தையில், வெற்றி பெறுவதை விட சித்தாந்தத்திற்கு முன்னுரிமை குறைவாக இருப்பதை நீங்கள் அறிந்தால், இரு தரப்பினரும் வெற்றி பெறலாம்” என்று அவர் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்பிடம் சரணடைவதை “பரஸ்பர வெற்றி” என்று அறிவிப்பதாகும்.
சம்மர்ஸ் மற்றும் ஷலாலா போன்ற ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சில வழிமுறைகளை ஆட்சேபிக்கலாம் என்றாலும், அவர்கள் அதே அடிப்படை அரசியல் நோக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பைடென் நிர்வாகத்தின் கீழ், ஜனநாயகக் கட்சியினர் பாசிச குடியரசுக் கட்சியினருடன் கைகோர்த்து யூத எதிர்ப்பை, இஸ்ரேல் மற்றும் காஸா மீதான அதன் இனப்படுகொலை தாக்குதலுடன் சமப்படுத்துவதன் மூலம் அதை ஆயுதமாக்கினர்.
இந்த இருகட்சி தாக்குதல்களில், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை போதுமான பலத்துடன் அடக்கத் தவறியதாகக் கூறப்படும் கொலம்பியா மற்றும் பிற வளாகங்கள் மீது காங்கிரஸ் விசாரணைகள் மற்றும் கூட்டாட்சி அரசின் விசாரணைகள் ஆகியவையும் அடங்கும். நியூ யோர்க் நகரத்தின் ஜனநாயகக் கட்சி மேயர் எரிக் ஆடம்ஸ், நூற்றுக்கணக்கான மாணவர்களை வன்முறையாக கைது செய்யவும், பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வளாக முகாம்களை அகற்றவும் பொலிஸுக்கு உத்தரவிட்ட பின்பு இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தது.
முக்கிய பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் சமூக அடுக்கு ஜனநாயக உரிமைகள் மீதான உண்மையான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கவில்லை. இது சலுகை பெற்ற உயர்-நடுத்தர வர்க்க அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இந்த சமூக அடுக்கு, தொழிலாள வர்க்கத்தின் மீதான பல தசாப்த கால தாக்குதல்களால் அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஊழல் பீடித்துள்ள, நிதிய ஒட்டுண்ணித்தனம் மற்றும் பெருநிறுவன குற்றங்களால் தூண்டப்பட்ட, செழிப்பான பங்குச் சந்தையுடன் தனிப்பட்ட செழிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா பல்பலைக்கழக ஒப்பந்தம், கல்வித்துறையின் ஒரு பெரிய வலதுசாரி மாற்றத்திற்கான ஒரு வரைபடமாக கருதப்படுகிறது. உலக மல்யுத்த பொழுதுபோக்கின் ஒரு முன்னாள் தலைமை செயலதிகாரியின் அனைத்து புத்திஜீவித நேர்மையையும் கொண்டுள்ள கல்வித்துறை செயலர் லிண்டா மக்மஹோன், பல்கலைக்கழகத்தின் சரணடைதலை ஒரு தேசிய முன்மாதிரியாக பாராட்டினார்.
“பல தசாப்தங்களாக, நமது உயரடுக்கு வளாகங்கள் மேற்கத்திய எதிர்ப்பு போதனைகளாலும் இடதுசாரி குழுக்களின் சிந்தனையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க பொதுமக்கள் திகிலுடன் பார்த்து வருகின்றனர்” என்று மக்மஹோன் அறிவித்தார். இந்த ஒப்பந்தம், “உயர்கல்வித் துறை முழுவதும் எதிரொலிக்கும் மற்றும் வரும் ஆண்டுகளில் வளாக கலாச்சாரத்தின் போக்கை மாற்றும் ஒரு சாலை வரைபடம்” என்று அவர் கூறினார்.
கொலம்பியா பல்பலைக்கழகம் சரணடைந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் உயர்கல்வி மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹார்வர்டில் எதிர்பார்க்கப்பட்ட தீர்வுக்கு கூடுதலாக, இந்த வாரம் பல முக்கிய பல்கலைக்கழகங்களை இலக்கு வைத்து கூட்டாட்சி அரச நிறுவனங்கள் புதிய அலை விசாரணைகளைத் தொடங்கின.
கடந்த திங்கட்கிழமை, டியூக் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் அல்லாதவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாகவும், டியூக் சுகாதார நிறுவனத்திற்கான நிதியைக் குறைப்பதாக அச்சுறுத்தியதாகவும் கூறி கல்வி, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகள் விசாரணையைத் தொடங்கின. அதே நாளில், ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் DEI திட்டங்களுக்கு அதன் ஆசிரிய செனட்டின் ஆதரவு தொடர்பாக, நீதித்துறை விசாரணையைத் தொடங்கியது.
கடந்த செவ்வாயன்று, காஸா இனப்படுகொலை தொடங்கிய பின்னர் யூத மாணவர்களை யூத எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க லொஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA) தவறிவிட்டதாக நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவு குற்றம் சாட்டியது. அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, இதற்கு பல்கலைக்கழகம் “பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று சூளுரைத்தார். மேலும், இதர கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகங்கள் மீதான விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறினார். கார்னெல், வடமேற்கு மற்றும் பிரவுன் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மண்டியிட வைக்கும் முயற்சிகள், இதர துறைகளிலும் ட்ரம்பின் நடவடிக்கைளிடம் பிரதிபலிக்கின்றன. கல்வித்துறையில் என்ன வரவிருக்கிறது என்பதற்கான ஒரு முன்னறிவிப்பாக, அரசியல் எதிரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய “குற்றத்திற்காக”, ட்ரம்ப் குறைந்தது ஒன்பது உயர் சட்ட நிறுவனங்களிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் சார்பு வேலைகளைப் பெற்று மிரட்டி பணம் பறித்தார். கலாச்சாரத் துறையில், CBS-ஐ சொந்தமாகக் கொண்ட ஊடகக் குழுமமான Paramount, ட்ரம்பிற்கு 16 மில்லியன் டாலர் இழப்பீ வழங்க ஒப்புக்கொண்டதுடன், கடந்த வாரம் ட்ரம்ப்பின் விமர்சகரான ஸ்டீபன் கோல்பர்ட்டுடன் நள்ளிரவு பேச்சு நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அது அறிவித்தது.
இதற்கிடையே, அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையின் யதார்த்தத்தை பொய்களின் குவியலின் கீழ் மூடிமறைப்பதற்கான முயற்சிகள் பொறிந்து கொண்டிருக்கிறது. காஸாவில் பட்டினியால் வாடும் குழந்தைகள் மற்றும் நம்பிக்கையிழந்த பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வது போன்ற காட்சிகள், படுகொலையின் வரலாற்று அளவை அம்பலப்படுத்துகின்றன. இரண்டு முக்கிய இஸ்ரேலிய மனித உரிமை அமைப்புக்களான B’Tselem மற்றும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்-இஸ்ரேல் ஆகியவை இந்த வாரம் இஸ்ரேலுக்குள்ளேயே உத்தியோகபூர்வ தடையை உடைத்து நடப்பதை ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன.
காஸாவில் நடந்தவரும் இனப்படுகொலை மட்டும் பரவலான எதிர்ப்பைத் தூண்டிவிடவில்லை மாறாக, புலம்பெயர்ந்தவர்கள் மீதான மூர்க்கமான ஒடுக்குமுறையில் இருந்து, மருத்துவ உதவி திட்டத்தை அம்பலப்படுத்துவது வரையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டுக் கொள்கைகளும் பரவலான எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளன.
அமெரிக்காவின் சீரழிந்து வரும் பொருளாதார நிலை, அதன் பாரிய கடன்நிலை, டாலருக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல், மற்றும் தாக்குப்பிடிக்க முடியாத சமூக சமத்துவமின்மை மட்டங்கள் ஆகியவற்றை ட்ரம்ப் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தீவிரமடைந்து வரும் இந்த அரசியல் நெருக்கடி, பல தசாப்தங்களாக இல்லாவிட்டாலும், பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் நிறுவன விதிமுறைகளை அகற்றுவதற்கான ட்ரம்பின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துகிறது.
கல்வித்துறை மற்றும் கலாச்சார வாழ்வின் மீது முழுமையான கட்டுப்பாட்டை திட்டவட்டம் செய்வதற்கான ட்ரம்பின் முயற்சிகள், முட்டுச்சந்தை எட்டியுள்ள ஒரு ஆளும் வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது. அது அறிவியல், கலாச்சாரம் மற்றும் அனைத்து முற்போக்கு சிந்தனைகளுடனும் போரில் ஈடுபட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, அது தொழிலாள வர்க்கத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகத்தின் சரணாகதி மிகப்பெரும்பாலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அவர்களில் பலர், தங்கள் கல்வி வாழ்க்கையையும் தனிப்பட்ட பாதுகாப்பையும் பணயம் வைத்து சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக தைரியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
ஆனால் ஜனநாயக உரிமைகள் மீதான பாதுகாப்பு என்பது பல்கலைக்கழக நிர்வாகிகளிடமோ அல்லது சர்வாதிகாரத்தின் வளர்ச்சிக்கு எந்த எதிர்ப்பையும் காட்டாத ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவிடமோ ஒப்படைக்கப்பட முடியாது. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயக உரிமைகள், அரசியல் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் போராட்டத்தில் சமூகத்தின் பரந்த அடுக்குகளை ஐக்கியப்படுத்தும் திறன் கொண்ட ஒரேயொரு சமூக சக்தியாகும்.