ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை: தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரின் மற்றொரு கட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரால் கடந்த ஞாயிறன்று ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையானது, தொழிலாள வர்க்கத்தின் முதுகில் தொடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகையும் பாதாளத்திற்குள் இழுத்துச் செல்லும் அதிகரித்து வரும் வர்த்தகப் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே பல மாதங்களாக வர்த்தக தகராறு நடந்து வருகிறது. ட்ரம்ப் சமீபத்தில் ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 380 பில்லியன் யூரோ மதிப்பிலான இறக்குமதிகள் மீது 30 சதவீத இறக்குமதி வரிகளைத் திணிக்க அச்சுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியம் 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பண்டங்கள் மீதான எதிர்-வரிவிதிப்புகளின் ஒரு பட்டியலுக்கு உடன்பட்டிருந்தது. ஒரு சுழல் தீவிரப்பாட்டைத் தவிர்ப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தொலைநோக்குடனான சலுகைகளை வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்கள் மீது அமெரிக்கா 15 சதவீத சுங்க வரிகளை விதிக்கும். அதேவேளையில், அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படமாட்டாது. ஐரோப்பிய எஃகு மற்றும் அலுமினியம் மீது இப்போதைய 50 சதவீத அமெரிக்க வரிவிதிப்பு தொடர்ந்து அமுலில் இருக்கும். ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். வொன் டெர் லெயென் கருத்துப்படி, விமானம் மற்றும் விமான பாகங்கள், சில இரசாயனங்கள், பொதுவான மருந்துகள், விவசாய பொருட்கள் மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இந்த உடன்படிக்கையின் உரை வெளியிடப்படாததால், சரியான விவரங்கள் தெளிவாக இல்லை. ஐரோப்பிய ஏற்றுமதிகளில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள மருந்துப் பொருட்கள் 15 சதவீத காப்பு வரிவிதிப்பின் கீழ் உட்படுத்தப்படுமா அல்லது அதிக விகிதத்தில் வசூலிக்கப்படுமா என்பதும் தெளிவாக இல்லை.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 750 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கும், பல நூறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரமோ வழிமுறைகளோ இல்லை. மேலும், அது உறுப்பு நாடுகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களை நம்பியுள்ளது.

ட்ரம்ப் இந்த உடன்படிக்கையை “இதுவரையில் செய்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம்” என்று பாராட்டிய அதேவேளையில், இது ஸ்திரப்பாட்டையும் திட்டமிடல் பாதுகாப்பையும் கொண்டு வரும் என்று வொன் டெர் லெயன் வலியுறுத்தியபோதும், ஐரோப்பிய எதிர்வினைகள் எச்சரிக்கையிலிருந்து கோபம் வரை இருந்தன.

இந்த உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த உதவிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் மரோஸ் செப்கோவிக், “மிகவும் கடினமான சூழ்நிலைகளின் கீழ் நாங்கள் பெறக்கூடிய சிறந்த ஒப்பந்தம்” என்று இதனை விவரித்தார். இது “ஐரோப்பாவுடனான ஒரு வர்த்தகப் போரை விட சிறந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த உடன்பாட்டை வரவேற்ற ஜேர்மன் சான்ஸ்லர் பிரெட்ரிக் மெர்ஸ், இது “ஏற்றுமதி சார்ந்த ஜேர்மன் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கும் ஒரு வர்த்தக மோதலைத் தவிர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது” என்று கூறினார். அவர் குறிப்பாக ஜேர்மன் வாகனத் தொழில்துறையைக் குறிப்பிட்டார். அதற்கான சுங்கவரிகள் தற்போதைய 27.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதத்திற்குக் குறையும். இது ட்ரம்ப்பின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட ஆறு மடங்கு அதிகம் என்றாலும், இது கார் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கிவிடாது.

இருந்தபோதிலும், “இந்த வரிவிதிப்புகளின் விளைவாக ஜேர்மன் பொருளாதாரம் கணிசமான சேதத்தை சந்திக்கும்” என்பதையும் மெர்ஸ் ஒப்புக் கொண்டார். இதன் விளைவுகள் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவுடன் நின்றுவிடாது; “இந்த வர்த்தகக் கொள்கையின் விளைவுகள் அமெரிக்காவிலும் காணப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், ஜேர்மனிய வணிகச் சங்கங்களும் செய்தி ஊடகப் பிரிவுகளும் வெளிப்படையாக இந்த உடன்பாட்டைக் குறைகூறின. ஜேர்மன் தொழில்துறை கூட்டமைப்பு (BDI) இந்த உடன்படிக்கையை, “அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ள பொருளாதாரங்களுக்கு ஒரு மரணகரமான சமிக்ஞையை” அனுப்பும் ஒரு “போதுமான சமரசம்” இல்லாத உடன்படிக்கை என்று விவரித்தது. இரசாயன தொழில்துறை சங்கம் (VCI) ராஜினாமா செய்து பின்வருமாறு கூறியது: “ஒரு சூறாவளியை எதிர்பார்ப்பவர்கள் ஒரு புயலுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.”

“பிரஸ்ஸல்ஸ் தன்னை மிரட்டலுக்கு ஆளாக்கி, டொனால்ட் ட்ரம்பின் தன்னிச்சையான போக்கிற்கு அடிபணிந்துள்ளது” என்று Wirtschaftswoche பத்திரிகை குறை கூறியது. கிரேக்க தளபதி பைரஸை மேற்கோள் காட்டிய இந்தப் பத்திரிகையானது, “இது இன்னொரு வெற்றி, ஆனால் நான் தோற்றுப் போனேன்” என்று குறிப்பிட்டது. இந்த உடன்படிக்கையின் குறுகிய-கால பொருளாதார விளைவுகளை இப்போது சமாளிக்கக் கூடியதாக இருக்கலாம், ஆனால் “இந்த வர்த்தக சமாதானப்படுத்தலின் நிஜமான செலவுகள் பின்னர் உணரப்படும்” என்று அது குறிப்பிட்டது.

இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி இந்த உடன்படிக்கையை சாதகமாக பார்த்தார். ஏனெனில் இது “ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எதிர்பாராத மற்றும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் வர்த்தக அதிகரிப்பைத்” தவிர்க்கிறது. ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸும் “எந்த உற்சாகமும் இல்லாமல்” இந்த வர்த்தக உடன்படிக்கையை ஆதரித்தார்.

மறுபுறம், பிரான்சில் வலதில் இருந்து இடது வரை அனைத்துக் கட்சிகளும் உடன்பாட்டிற்கு எதிராக சீறின.

பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூ ஐரோப்பிய ஒன்றியத்தின் விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “தங்கள் மதிப்புகளை உறுதிப்படுத்தவும் தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்த சுதந்திர மக்களின் ஒரு கூட்டணி, அடிபணிந்து தன்னைத்தானே ராஜினாமா செய்யும் ஒரு இருண்ட நாள் இது” என்று கூறினார்.

பிரான்சின் தீவிர வலதுசாரி தேசிய பேரணிக் கட்சியின் மரின் லு பென் இந்த உடன்படிக்கையை “அரசியல், பொருளாதார மற்றும் தார்மீகத்துக்கு கிடைத்த படுதோல்வி” என்று விவரித்தார்.

போலி-இடதுசாரிக் கட்சியான அடிபணியாத பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோன், “75 ஆண்டுகால இருதரப்பு உறவுகளில் ஸ்தாபிக்கப்பட்ட விளையாட்டின் விதிகளை மாற்றுவதற்கான உரிமையுடன் சேர்ந்து, அனைத்தும் ட்ரம்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று எழுதினார். கிடைக்கக்கூடிய ஒரே மாற்று வழிகள், “பேரரசுக்கு [அமெரிக்கா] கீழ்ப்படியாமல்” இருப்பது மற்றும் “அணிசேராமை” மட்டுமே என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் ஆதரவாளர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக, ட்ரம்ப் மற்றும் வொன் டெர் லெயென் க்கு இடையிலான உடன்படிக்கை அமெரிக்கா உடனான வர்த்தக மோதலின் வேகத்தைக் குறைக்கப் போவதில்லை. இது எந்த நேரத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடிய ஒருவரான ட்ரம்பின் தன்னிச்சையான போக்கினால் மட்டுமல்ல, மாறாக அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியாலும் ஏற்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான ஏகாதிபத்திய சக்திகளின் போராட்டம் மீண்டுமொருமுறை அதிகரித்தளவில் மிரட்டி பணம் பறிக்கும், அழிவுகரமான மற்றும் இராணுவ வடிவங்களை எடுத்து வருகிறது.

இந்த வளர்ச்சியின் விளைவாக ட்ரம்ப் இருக்கிறாரே ஒழிய, மாறாக அவர்தான் காரணம் அல்ல. ரியல் எஸ்டேட் மற்றும் சூதாட்ட தொழில்துறையில் இருந்து அமெரிக்க அரசின் உயர்மட்டத்திற்கு பாசிச சிந்தனை கொண்ட இந்த குண்டர் கும்பலின் எழுச்சியானது, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் அழுகிப்போன தன்மையின் விளைவாக உருவானது. ஆளும் தன்னலக் குழுக்களுக்கும் வெகுஜன மக்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத இடைவெளி, அனைத்து சமூகத் தேவைகளும் ஒரு ஒட்டுண்ணி சிறுபான்மையினரின் இலாப நலன்களுக்கு அடிபணியச் செய்யப்பட்டதன் விளைவாக உள்ளது.

ஐரோப்பா அமெரிக்காவால் பாதிக்கப்பட்டதல்ல — மாறாக இதற்கு நேர்மாறாக உள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்சின் பழைய ஏகாதிபத்திய சக்திகளும், இரண்டு உலகப் போர்களில் ஐரோப்பாவின் ஆட்சியாளராக மாற முயன்ற ஜேர்மனியும், அமெரிக்காவிற்கு இரண்டாவது பிடில் வாசிப்பதுக்கு ஒருபோதும் தங்களைத் தாங்களே விட்டுக்கொடுக்கவில்லை. கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய போர்களில் தொடங்கி காஸா மீதான சமீபத்திய இனப்படுகொலை மற்றும் ஈரான் மீதான தாக்குதல் வரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்தனை குற்றங்களையும் இவை ஆதரித்துள்ளன. இவர்கள் தங்கள் இராணுவ சுதந்திரத்தை மீண்டும் பெற கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அமெரிக்காவுடனான அவமானகரமான வர்த்தக உடன்படிக்கையுடன், ஐரோப்பா உலக வல்லரசாகப் பங்கு வகிக்க வேண்டும் என்ற குரல்களும் சத்தமாக வளர்ந்து வருகின்றன. முன்னாள் பெல்ஜிய பிரதம மந்திரி மார்க் ஐஸ்கென்ஸை மேற்கோளிட்டு F.A.Z. (Frankfurter Allgemeine Zeitung) என்ற பத்திரிகையில் வெளியான ஒரு கருத்துரை, ஐரோப்பாவை ஒரு “பொருளாதார இராட்சதன், அரசியல் குள்ளன், மற்றும் இராணுவப் புழு” என்று விவரித்ததுடன், “புலம்புவதற்குப் பதிலாக, ஐரோப்பா இறுதியாக அதன் பலவீனங்களைச் சமாளிக்க வேண்டும்” என்று கோரியது. இந்த பலவீனங்களில், செழிப்பு என்பது ஏற்கனவே அடக்குமுறையாக இருக்கும் தேசியக் கடனை மேலும் அதிகரிப்பதில் அல்ல, “எல்லாவற்றிற்கும் மேலாக வேலையைச் சார்ந்துள்ளது” என்பதைப் புரிந்து கொள்ளத் தவறியதையும் F.A.Z. கணக்கில் எடுத்துக்கொள்கிறது —இது இன்னும் வேகப்படுத்தல் மற்றும் சமூக வெட்டுக்களுக்கான ஒரு வெளிப்படையான அழைப்பாகும்.

வர்த்தகப் போர் கட்டுப்பாடற்ற முறையில் தீவிரமடைவது குறித்த அச்சங்களுக்கு அப்பாலும், வொன் டெர் லெயென் ட்ரம்புடன் ஒரு உடன்பாட்டிற்கு உடன்பட்டதற்கான ஒரே காரணம், உக்ரேனில் நேட்டோவின் பினாமிப் போரை தொடர்வதற்காகும். சீனாவுடனான மோதலில் அதிக கவனம் செலுத்துவதற்காக ட்ரம்ப் புட்டினுடன் ஒரு உடன்பாட்டை எட்டக்கூடும் என்ற அச்சம் பல மாதங்களாக ஐரோப்பிய சக்திகளை வேட்டையாடி வருகிறது.

“பெய்ஜிங்கைப் போலல்லாமல், நேட்டோவைத் தொடர்ந்து நம்பியுள்ள இராணுவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய ஐரோப்பா, பாதுகாப்பு காரணங்களுக்காக வாஷிங்டனுடன் ஒரு கடினமான வர்த்தக மோதலைத் தாங்க முடியாது” என்று F.A.Z குறிப்பிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இராணுவ வரவு-செலவு திட்டத்தை இரட்டிப்பாக்க அல்லது மும்மடங்காக்க ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த ஐரோப்பிய சக்திகளுக்கு கால அவகாசம் அவசியப்படுகிறது.

வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தப் பிரச்சினை நிச்சயமாக ஒரு பங்கைக் கொண்டிருந்தது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் ட்ரம்ப் தனது பக்கம் இருந்தால், ஐரோப்பிய ஒன்றியம் அதிக சுங்க வரிகளை ஏற்கத் தயாராக இருந்தது. வொன் டெர் லெயென் உடனான உடன்படிக்கைக்கு ஒரு நாளுக்குப் பின்னர், ட்ரம்ப் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரித்து, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்காக புட்டினுக்கு அவர் வழங்கிய கால அவகாசத்தை ஒரு சில நாட்களுக்கு குறைத்தது என்பது தற்செயலான ஒன்றல்ல.

அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் வர்த்தகப் போர்க் கொள்கையை ஆதரிப்பதில் எந்த ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்பிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவிப்பது தொழிலாள வர்க்கத்தின் வேலையும் அல்ல. அவர்கள் சுங்கவரிகள் தொழில்களைப் பாதுகாக்கின்றன என்ற பொய்யின் மீது விழுந்துவிடக் கூடாது. உண்மையில் இதற்கு நேரெதிராக, போர் மற்றும் வர்த்தகப் போரின் செலவுகள் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்படும்.

தொழிற்சங்கங்கள் மூலதனத்தின் கையாட்களாக உருமாறி, மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் வர்த்தகப் போருக்கு ஆதரவளிப்பதை விட சிறப்பாக வேறு எதனையும் செய்ததாக நிரூபிக்கவில்லை. அதிகரித்து வரும் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் தலைவர் மெலன்சோன் மற்றும் பிற போலி இடதுகள் தேசத்தையும் முதலாளித்துவ அரசையும் வெளிப்படையாகப் பாதுகாத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் இவற்றை நிராகரிக்க வேண்டும். “தொழிலாளர்களுக்கு தந்தை நாடு இல்லை” என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கூற்று முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு, சமூக செலவின வெட்டுக்கள், போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக, தமது போராட்டங்களை ஒன்றிணைத்து போராட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்த முன்னோக்கிற்காக போராடி வருகின்றன.

Loading