இஸ்ரேல் டசின் கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகளை பட்டினிக்கு உட்படுத்திக் கொன்றுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வடக்கு காஸா பகுதியிலுள்ள காஸா நகரில் உள்ள ஒரு சமூக சமையலறையில் நன்கொடை உணவைப் பெற பாலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள். ஜூலை 26, 2025 சனிக்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

அக்டோபர் 2023 முதல், காஸாவில் இருந்து வரும் அறிக்கைகளும் காட்சிகளும், அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதகுலத்திற்கு எதிரான தொடர்ச்சியான இனப்படுகொலை குற்றங்களை, பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான யதார்த்தத்தை சித்தரிக்கின்றன.

காஸா மீதான இடைவிடாத 20 மாத கால முற்றுகை மற்றும் குண்டுவீச்சுக்கு இடையே, இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகுவின் பாசிச அரசாங்கம் திட்டமிட்டு குழந்தைகளையும், பிள்ளைகளையும் பட்டினி போட்டுக் கொன்று குவித்து வருகிறது. முற்றுகையிடப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் துயரத்தில் உள்ள குடும்பங்களின் அறிக்கைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து வேண்டுமென்றே உணவுப் பற்றாக்குறை திணிக்கப்படுவதை சித்தரிக்கின்றன.

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான காரணங்களால் காஸாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 25 நிலவரப்படி, அக்டோபர் 2023 முதல் 81 பிள்ளைகள் உட்பட குறைந்தது 113 பட்டினி தொடர்பான இறப்புகளை காஸா அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த வாரம் ஒரே நாளில், பிள்ளைகள் உட்பட மேலும் 15 பாலஸ்தீனியர்கள் உணவு இல்லாததால் இறந்துள்ளனர். காஸாவில் இன்றுவரை 28,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் உள்கட்டமைப்பு வீழ்ச்சி மற்றும் தகவல்தொடர்பு துண்டிப்பு காரணமாக பல நோயாளிகள் பதிவு செய்யப்படாமல் உள்ள நிலையில், ஏற்கனவே சாத்தியமில்லாத நிலைமைகளின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

நினைத்துப் பார்க்க முடியாத, ஆனால் உண்மையான சூழ்நிலையை மருத்துவர்கள் விவரிக்கின்றனர். யுனிசெஃப் பிராந்திய இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர் சமீபத்தில் கூறுகையில், “காஸா பகுதியில் உள்ள பிள்ளைகள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமான பொருட்கள் காஸாவிற்குள் நுழையும் வேகத்தை விட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.

காஸாவில் செயல்படும் சில மருத்துவமனை வசதிகளில் ஒன்றான நாசர் மருத்துவமனையிலுள்ள டாக்டர் அஹ்மத் அல்-ஃபர்ரா, “காஸாவில் நான் உட்பட, யாரும் பஞ்சத்தின் அச்சுறுத்தலுக்கு வெளியே இல்லை. நான் ஒரு சுகாதார அதிகாரியாக உங்களிடம் பேசுகிறேன், ஆனால் நானும் எனது குடும்பத்திற்கு உணவளிக்க மாவை தேடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

பசியால் அவதிப்படுபவர்களில் ஐந்து மாத பெண் குழந்தையான ஜைனப் அபு ஹாலிப்பின் விஷயமும் ஒன்று. அசோசியேட்டட் பிரஸ் நடத்திய விசாரணையில், ஆரோக்கியமாக பிறந்த ஜைனப் 3 கிலோவுக்கு மேல் எடையுடன் இருந்தாள். ஆனால் அவள் இறந்த பிறகு, அவளது எடை 2 கிலோவுக்கும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜைனப்பிற்கு ஒரு சிறப்பு பால்மா கொடுக்கப்பட்டதாகவும், முற்றுகையிடப்பட்ட காஸாவிலுள்ள சந்தைகளில் அது கிடைக்கவில்லை என்றும் அவரது தந்தை அகமது அபு ஹாலிப் விளக்கினார்.

பசி மற்றும் நீரிழப்பு காரணமாக பலவீனமடைந்த அந்தக் குழந்தையின் தாயாரால், தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.

விரக்தியில், அவர்கள் தற்காலிக வலையமைப்புகள் மூலம் கடத்தல் பால்மாவை வாங்க பணத்தை கடன் வாங்கினர். ஆனால், பொருட்கள் சீரற்றதாக இருந்தன. ஜைனாப் எல்லாவற்றையும் வாந்தி எடுக்கத் தொடங்கினாள், அக்குழந்தையின் எலும்பு அமைப்பு மேலும் மோசமடைந்தது.

“அவள் பசியால் இரவு முழுவதும் அழுதாள்” என்றும், “அவளுக்குக் கொடுப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை. ஒண்ணுமில்லை” என்றும் அக்குழந்தையின் தாயார் கூறினார். நாசர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், அக்குழந்தையின் உடல் ஊட்டச் சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதை நிறுத்திவிட்டது என்று குறிப்பிட்டார். “அவள் வருவதற்குள், மிகவும் தாமதமாகிவிட்டது. நாங்கள் முயற்சித்தோம், ஆனால் அவளுடைய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவளது நோயெதிர்ப்பு சக்தி இனி வேலை செய்யாது” என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டார்.

அக்குழந்தையின் இறுதிச் சடங்கில், அவளுடைய தந்தைக்கு பேசவே முடியவில்லை. “என் மகளின் மரணத்துடன், பலர் பின்தொடர்வார்கள், நாங்கள் இப்போது வெறும் எண்கள், எங்கள் குழந்தைகள் எண்களாகிவிட்டார்கள் “ என்று அக்குழந்தையின் தாயார் கூறினார்.

பசியும் துயரமும் காஸா முழுவதிலும் உள்ள தாய்மார்களை, குறிப்பாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சிப்பவர்களை துன்புறுத்தி வருகின்றன. பொதுவாக தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உயிரியல் உயிர்நாடியான தாய்ப்பால் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது.

ஒரு பத்திரிகையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவலைத் தெரிவித்த நடா என்ற ஒரு பெண், “உப்பு நீர் அரிதாகவே உள்ளது. பசி மற்றும் நீரிழப்பால் நான் சரிந்து வருகிறேன், என் மகனுக்கு பால் உற்பத்தி செய்ய என்னால் முடியவில்லை... அவன் இறந்துவிடுவான் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஐந்து மாத குழந்தை ராமாவின் தாயான நக்லா வலீத் அபூ ஐயா, தனது மகள் பிறந்ததிலிருந்து எடை அதிகரிக்கவில்லை என்பதை விளக்கினார்.

“எனக்கு உணவு இல்லாததால் என்னால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. என் குழந்தை பசியால் வாடுகிறது” என்று குறிப்பிட்ட ரமாவின் கண்கள் கலங்கின. அவளது தோல் எலும்புகளில் தளர்வாக தொங்குகிறது. அவளது மெலிந்த உடலைப் பிடித்திருந்த செவிலியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆறுதலைத் தவிர, அவளுக்கு கொடுப்பதுக்கு எதுவும் இல்லை.

இந்த வாரம் அல் ஜசீரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 15 பேர் பட்டினியால் இறந்ததாக தெரிவித்துள்ளது. இதனால் காஸாவில் பசியால் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. “பஞ்சம் இப்போது எங்களுக்கு யதார்த்தமாகிவிட்டது” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “உலகம் ஒன்றும் செய்யாது. இஸ்ரேலிய அரசாங்கம், அமெரிக்க நிர்வாகம் மற்றும் இதற்கு உடந்தையாக இருக்கும் பிற நாடுகள் இந்த வரலாற்று இனப்படுகொலைக்கு முழு பொறுப்பாகும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று, வாஷிங்டன் போஸ்ட் காஸாவில் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடியை விவரித்தது. இது மனித உடலுக்கு, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது. போஸ்ட்டின் அறிக்கையின்படி, வெற்று கண்கள், துருத்திக்கொண்டிருக்கும் விலா எலும்புகள், மெலிந்த கை கால்கள் மற்றும் கடுமையான சோர்வின் அறிகுறிகளைக் காட்டும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்து இருப்பதால், பிள்ளைகளின் உடல்கள் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல் போவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது நோயெதிர்ப்பு மண்டல சரிவு, உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மிகவும் மேம்பட்ட சந்தர்ப்பங்களில், நீரிழப்பு மற்றும் ஆரோக்கியமான உடல் பொதுவாக தாங்கக்கூடிய தொற்றுகள் போன்ற சிக்கல்களால் மரணம் ஏற்படுகிறது.

பட்டினியால் ஏற்படும் நிகழ்ச்சிப்போக்கு கட்டகட்டங்களாக உடலை பலவீனப்படுத்துகிறது என்று போஸ்ட் குறிப்பிடுகிறது: ஆரம்ப எடை இழப்பு மற்றும் சோர்வு தசை சிதைவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது, இதனால் சிறிய நோய்கள் கூட உயிராபத்தை ஏற்படுத்தும்.

காஸாவிலுள்ள குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால், மோசமான அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று உதவி அமைப்புக்கள் எச்சரிக்கின்றன. இதில் பலமிழந்த தோல், புரதக் குறைபாட்டினால் எற்பட்டுள்ள வீக்கம் (குவாஷியோர்கோர்) மற்றும் தோலடியில் உள்ள கொழுப்பின் மொத்த இழப்பு ஆகியவற்றால், கைகால்கள் குச்சிகளைப் போல் தோற்றமளிக்கின்றன.

பசி பரவலாகவும் தொடர்ந்தும் அதிகரிக்கும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களான கைக்குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளிடையே இறப்புகளில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பங்களால் உணவு வழங்க இயலாமை மற்றும் குழந்தைகள் அழவோ அல்லது விளையாடவோ முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதால், உடல் மற்றும் உளவியல் பாதிப்பு தெளிவாகத் தெரிகிறது.

காஸாவில் இருந்து இப்போது வெளிவரும் காட்சிகள் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குவதுடன், வரலாற்றின் மிக மோசமான குற்றங்களையும் நினைவூட்டுகின்றன. குண்டுவீச்சுக்கு உள்ளான கூடாரங்களில் அல்லது மருத்துவமனைத் தளங்களில் அழக் கூடுமளவுக்கு பலவீனமாக கிடக்கும் மெலிந்த பாலஸ்தீனிய குழந்தைகளின் புகைப்படங்கள், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் சித்திரவதை முகாம்களில் பட்டினி கிடந்த யூதர்களின் இழிபுகழ்பெற்ற படங்களுடன் மறுக்கவியலாத ஒற்றுமையைக் கொண்டுள்ளன. பட்டினி, குழிவிழுந்த கண்கள், செயற்பட முடியாத உடல்கள் அனைத்தும் அவுஸ்விட்ஸ், டக்காவ் மற்றும் பேர்கன்-பெல்சன் கொடும் வதை முகாம்களை நினைவூட்டுகின்றன.

ஹிட்லரின் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பலரின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய மக்கள், நாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு ஆட்சியால் இப்போது ஆளப்படுகிறார்கள் என்பது ஒரு குரூரமான முரண் நகையாகும். சியோனிசமானது, இடம்பெயர்வு மற்றும் பட்டினியால் வாடச் செய்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்து, ஒட்டுமொத்த மக்களையும் குறிவைத்து படுகொலை செய்து வருகிறது.

எவ்வாறிருப்பினும், இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் மரண முகாம்கள் விடுவிக்கப்பட்ட பின்னரே நாஜிக்களின் குற்றங்களின் முழு வீச்சைக் குறித்து உலகம் அறிந்திருந்ததைப் போலல்லாமல், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை என்பது, இன்று உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் கண்களுக்கு முன்னால் நிஜத்தில் கட்டவிழ்ந்து வருகிறது.

வலைத் தளங்கள், சமூக ஊடகங்கள், ஸ்மார்ட்போன் பதிவுகள் மற்றும் உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பு மூலம், காஸாவில் என்ன நடக்கிறது என்பதற்கான உண்மையை எவ்வளவு பெரிய பொய்கள் அல்லது நியாயப்படுத்தல்கள் மூலம் மறைக்க முடியாது. இஸ்ரேலால் வேண்டுமென்றே பிள்ளைகளை பட்டினி போடுவது, பகிரங்கமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசாங்கங்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

அதே நேரத்தில், மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர் நெதன்யாகு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதில் இருந்து இஸ்ரேலின் மரணகரமான தாக்குதல்கள் மோசமான முறையில் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சில பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல்களை “இடைநிறுத்தி”, உதவிகள் கடந்து செல்ல அனுமதிக்கப் போவதாக இராணுவம் கூறிய சிறிது நேரத்திலேயே, காஸா முழுவதும் இஸ்ரேலிய படைகள் குறைந்தது 63 பேர்களை படுகொலை செய்தன.

“மனிதாபிமான இடைநிறுத்தங்கள்” என்றழைக்கப்பட்ட முதல் நாளில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின. “பாதுகாப்பான பகுதியாக அறிவித்து, இஸ்ரேலிய படைகள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதாக கூறிய பகுதிகளில் ஒன்றான, காஸா நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக” அல் ஜசீராவின் ஹிந்த் கௌதாரி டெய்ர் எல்-பலாவிலிருந்து செய்தி வெளியிட்டார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய துருப்புக்கள் இலக்கு வைத்து கொலை செய்தல், வீடுகளை இடித்தல் மற்றும் குடியேறிகளை வன்முறையில் ஈடுபடுத்தி வன்முறையில் ஈடுபடுதல் போன்ற தாக்குதல்களை தொடர்ந்தன. இந்த வார தொடக்கத்தில் பெத்லஹேம் அருகே உள்ள அல்-காதரில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாலஸ்தீனிய சிறார்கள் கொல்லப்பட்டனர். இது ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. 9,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் எந்தவித குற்றச்சாட்டும் இன்றி காலவரையின்றி நிர்வாக தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய கைதுகளும் வீடுகளில் தேடுதல் வேட்டைகளும் இரவிலும் தொடர்கின்றன.

பாலஸ்தீனியர்களை பட்டினியால் வாட்ட முயற்சிக்கும் அதே வேளையில், காஸாவிற்கு உதவிகள் செல்வதைத் தடுக்கும் முயற்சிகளையும் இஸ்ரேலிய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று, காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான பொருட்களை வழங்க முயன்றபோது, சுதந்திர புளோட்டிலா கூட்டணியால் இயக்கப்படும் காஸா செல்லும் உதவிக் கப்பலான ஹண்டாலாவை இஸ்ரேலிய இராணுவம் இடைமறித்தது.

காஸாவிலிருந்து சுமார் 40 முதல் 70 கடல் மைல்கள் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய கடற்படையினரால் இந்தக் கப்பல் ஏற்றப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய துறைமுகமான அஷ்டோடுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சர்வதேச ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கப்பலில் இருந்த 21 பேரும் தடுத்து வைக்கப்பட்டனர், மேலும் கப்பலில் இருந்து தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஆயுதமேந்திய இஸ்ரேலிய சிப்பாய்கள் கப்பலில் ஏறுவதையும், ஆர்வலர்கள் சரணடைவதற்காக தங்கள் கைகளை உயர்த்துவதையும் காட்டின. ஹன்டாலா கப்பல், குழந்தைகளுக்கான பால்மா, உணவு மற்றும் மருந்து போன்ற உயிர்காக்கும் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், தற்போதைய முற்றுகையின் கீழ் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவும் சுதந்திர புளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த பறிமுதல் சர்வதேச கடல்சார் சட்டத்தை மீறுவதாகவும், “சட்டவிரோத முற்றுகை” என்று அவர்கள் விவரித்ததை உடைப்பதற்கான அமைதியான, பொதுமக்கள் தலைமையிலான முயற்சிக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்றும் அந்த அமைப்பு வகைப்படுத்தி கூறியுள்ளது. இந்த இடைமறிப்பு முயற்சியை நியாயப்படுத்தும் வகையில் இந்த முயற்சி ஆபத்தானது, சட்டவிரோதமானது, நடந்து கொண்டிருக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர். கப்பல் இஸ்ரேல் விதித்த கடல்சார் கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக மீற முயற்சிப்பதாகவும் அது வலியுறுத்தியது.

ஜூன் மாதம் Madleen சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சமீபத்திய மாதங்களில் இஸ்ரேலால் காஸாவை அடைவதில் இருந்து தடுக்கப்பட்ட இரண்டாவது உதவிக் கப்பல் ஹண்டலா ஆகும். இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோத இடைமறிப்பாகும் என்று கூறிய மனித உரிமை குழுக்கள், கப்பல் ஒருபோதும் இஸ்ரேலிய கடல் எல்லைக்குள் நுழையவில்லை என்று குறிப்பிட்டு, கப்பல் கைப்பற்றப்பட்ட பகுதியில் இஸ்ரேலுக்கு அதிகார வரம்பு இல்லை என்று வாதிட்டன. இக்கட்டுரை எழுதப்படும் வரை, கப்பலில் இருந்த ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Loading