முன்னோக்கு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை விரிவுபடுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஏப்ரல் 2024 நடுப்பகுதியில் போக்டன் சிரோட்டியுக்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கின் வழக்கை ஏற்றுக்கொள்வதற்கான ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் (ECHR) முடிவு, அவரது விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான போக்டன், “அரச துரோகம்” என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 2024 இல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. உக்ரேனில் இடம்பெற்றுவரும் பினாமிப் போரை எதிர்த்து வந்ததே போக்டன் மேற்கொண்ட ஒரே “குற்றமாகும்”. போக்டன் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சர்வதேச மே தின பேரணியில் வழங்க உத்தேசித்திருந்த ஒரு அறிக்கையில், அவர் பின்வருமாறு அறிவித்தார்:

சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமை தினமான இந்த நாளில், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் உக்ரேனிய கிளையின் உறுப்பினர்களான நாங்கள் மற்றும் ஒட்டுமொத்த YGBL உறுப்பினர்கள், உக்ரேனிய மற்றும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறோம்!

முதலாளித்துவ புட்டின் ஆட்சியின் உக்ரேன் மீதான படையெடுப்பை எதிர்க்கும் அதே வேளையில், போக்டனும் YGBL உம், கியேவ் ஆட்சி அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை என்று வலியுறுத்தி வந்துள்ளன. உக்ரேனிய சுய-நிர்ணயத்தைப் பாதுகாப்பதாக மோசடியாக கூறிக்கொண்டு, ஜெலென்ஸ்கி அரசாங்கம், ரஷ்யாவை பலவீனப்படுத்தவும் மற்றும் இறுதியில் அது துண்டாடப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கவும் நேட்டோவால் தூண்டிவிடப்பட்ட ஒரு பினாமிப் போரை நடத்தி வருகிறது. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, உக்ரேனில் இராணுவச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மே 2024 இல், ஜனாதிபதியின் சட்டப்பூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் ஜெலென்ஸ்கி, உக்ரேனிய அரசியலமைப்பை மீறி ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்கிறார்.

போரைத் தொடர்வதற்காக, தெருக்களில் இருந்து ஆட்களைக் கடத்துவதன் மூலம் தொடர்ச்சியான “ஆட்சேர்ப்பு” நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. நவ-நாஜி அமைப்புகள் ஆயுதப் படைகளுக்குள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதுடன், உக்ரேனிய அரசாங்கம் மற்றும் அரசு எந்திரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இவை ஊடுருவி உள்ளன.

இந்தப் போருக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் நியாயப்படுத்தல்கள் அனைத்திலும் பாசாங்குத்தனமும் பொய்களின் துர்நாற்றமும் வீசுகின்றன. போரைத் தூண்டிய அனைத்து நேட்டோ சக்திகளும் ஒரே நேரத்தில் காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலை ஆதரிக்கின்றன.

முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டுள்ள போக்டனும் YGBL னரும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே போரை நிறுத்த முடியும் என்று வலியுறுத்தி, புட்டின் மற்றும் ஜெலென்ஸ்கி ஆட்சிகள் இரண்டையும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.

போக்டனின் வழக்கறிஞர்கள், அவரது கைது சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தனர். தற்போது 26 வயதாகும் போக்டன், தனது அரசியல் கருத்துக்களுக்காக மட்டுமே தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது அவரது பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்திற்கான உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும்.

ஆனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நெறிமுறை மீறல்கள் இத்தோடு முடிந்துவிடவில்லை. நீதிமன்ற தீர்ப்புகள், நீதிமன்றம் உக்ரேனிய ரகசிய சேவையின் (SBU) மொழியை வெறுமனே நகலெடுப்பதன் மூலம், வழக்குத் தொடுக்கும் உக்ரேனிய ரகசிய சேவைக்கு ஆதரவாக முறையாக தீர்ப்பளித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பல வழக்கறிஞர்களுக்கு மிரட்டல்கள் விடுப்பதன் மூலம் போக்டனின் சட்ட பாதுகாப்பிற்கான உரிமை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு நீதிமன்ற அமர்வுகளில் மட்டும், அவரது வழக்கறிஞர்களில் ஒருவர் அரசாங்க தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் உரிமையை கிட்டத்தட்ட இழந்தார். மேலும், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான போக்டனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாசிசத்தை எதிர்த்ததற்காக போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜெலென்ஸ்கியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாக்சிம் கோல்டார்ப் தலைமையிலான “ஒரு புதிய சோசலிசத்திற்கான” கட்சி போன்ற போரை எதிர்க்கும் ஒரு டசினுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டு, அவற்றின் அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர்.

போருக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் போக்டன் கைது செய்யப்பட்டார். சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, 70 சதவீத உக்ரேனியர்கள் தங்கள் தலைவர்கள் போரைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட பாதிப் பேர், அதாவது 47 சதவீதத்தினர், இப்போதிலிருந்து 10 ஆண்டுகளில் “உக்ரேன் ஒரு பாழடைந்த பொருளாதாரத்துடன் கூடிய மக்கள்தொகை குறைந்த நாடாக இருக்கும்” என்று நம்புவதாகக் கூறினர்.

ரஷ்யாவிலும் போருக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. தன்னலக்குழுவின் புட்டின் ஆட்சி, தணிக்கையை விரிவுபடுத்துவதன் மூலமும், போரை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதன் மூலமும், முன்பினும் அதிக மூர்க்கமான மாபெரும் ரஷ்ய பேரினவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலமும் பதிலளித்துள்ளது.

உக்ரேனிய அரசாங்கத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய சட்ட நிறுவனமான மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சிறிய அளவிலான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. எவ்வாறிருப்பினும், ஏறத்தாழ அனைத்திலும் அது ஐரோப்பிய மனித உரிமைகள் நெறிமுறை மீறல்களைக் கண்டறிந்துள்ளது. ECHR இப்போது அந்த வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளது என்ற உண்மையானது, போக்டனின் உரிமைகள் மீறப்பட்டதன் படுமோசமான தன்மையையும், அவரை விடுதலை செய்வதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடங்கிய பிரச்சாரத்தின் செயல்திறனையும் காட்டுகிறது.

போக்டனின் வழக்கை ECHR ஒப்புக் கொண்டது ஒரு முக்கியமான ஆரம்ப வெற்றியாகும். ஆனால், அது போக்டனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் கூட இந்த வழிவகை பல ஆண்டுகள் ஆகலாம். போக்டனுக்கு இல்லாத நேரம் இது. அவர் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார், மேலும் சிறையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை மோசமாகவும் தாமதமாகவும் வழங்கப்படுகிறது.

தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களிடையே சாத்தியமான பரந்த ஆதரவை உறுதியாக அணிதிரட்டுவதில்தான் போக்டானின் தலைவிதி தங்கியுள்ளது. பணயத்தில் இருப்பது போக்டானின் வாழ்க்கை மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் மிக முக்கியமான நலன்களும் ஆபத்தில் உள்ளன.

போக்டன் கைது செய்யப்பட்டதற்குப் பிந்தைய 15 மாதங்களில், ஏகாதிபத்திய சக்திகளைப் பொறுத்த வரையில், உக்ரேனிய போர் ஒட்டுமொத்த உலகையும் ஏகாதிபத்திய மறுபங்கீடு செய்வதற்கான ஒரு தொடக்க அடியாக இருந்தது என்பது முன்னெப்போதிலும் பார்க்க தெளிவாகி உள்ளது. மத்திய கிழக்கில், பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர்கள் நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். ஜூன் மாதம், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசின. சீனாவுடன் இன்னும் பெரிய மோதலுக்கு பரபரப்பான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. உக்ரேனில் இடம்பெற்றுவரும் பாரிய படுகொலைகளும் காஸாவில் இனப்படுகொலையும் ஏகாதிபத்தியம் எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க தயாரிப்பு செய்து வரும் கொடூரங்களுக்கான சோதனைக் களங்களாக உள்ளன.

மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய ஆட்சிகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் இராணுவ செலவினங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு ரஷ்யாவுடனான உடனடி போருக்கான தயாரிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறுகின்றன.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, போக்டனின் கைதானது அதன் பொறுப்பற்ற இராணுவவாதத்தின் ஒரு அங்கமாகவும், வளர்ந்து வரும் எதிர்ப்பை அரசியல் ரீதியாக ஒடுக்குவதன் ஒரு பகுதியாகவும் உள்ளது. தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், போக்டானை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாசிசத்தை எதிர்ப்பதற்குமான போராட்டத்தின் ஒரு இன்றியமையாத கூறுபாடாக இருக்கிறது.

எனவே உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், ஜனநாயக உரிமைகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் போக்டானை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை விரிவுபடுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

  • அறிக்கைகளைச் சமர்ப்பித்து பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள்!
  • அவரது விடுதலைக்கான பிரச்சாரத்திற்கு கணிசமான நன்கொடை வழங்குங்கள்!
  • ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுங்கள்!
Loading