மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) பாதுகாப்பற்ற பாலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலை வன்முறை பற்றிய புதிய செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவருகின்றன. காஸாவிற்கான உணவு விநியோகம் சொட்டு சொட்டாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் டசின் கணக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். உதவி விநியோக மையங்களை அடைய முயன்றபோது 1,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலால் தாக்கப்பட்ட டெய்ர் அல்-பலாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் பேரழிவுக் காட்சிகளை எதிர்கொண்டனர் — ஒரு குடியிருப்பாளர் CNN க்கு கருத்துரைத்ததைப் போல, “முழுமையான அழிவு”. “வாழ்க்கையின் ஆதாரத்தைக் குறிக்கும் எதுவும் இல்லை.”
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், காஸா மக்கள் “பாரிய பட்டினியை எதிர்கொள்கிறார்கள் ... காஸாவின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று புதன்கிழமை கூறினார்.
இஸ்ரேலிய அரசாங்கம் இந்த அட்டூழியங்களை நடத்துகையில், அமெரிக்காவும் முக்கிய ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் நேரடியாக இதற்கு உடந்தையாக உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, காஸாவில் இனப்படுகொலையைச் செய்துவரும் இஸ்ரேலுக்கு இவை ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை அளித்து, படுகொலைக்கு எதிரான எதிர்ப்புக்களை குற்றமாக்கி வருகின்றன. மேலும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் இழைத்த அட்டூழியங்களுக்கு இணையாக வரிசையில் நிற்கின்ற இந்த வரலாற்றுக் குற்றத்தை, இவை அரசியல்ரீதியாக நியாயப்படுத்தியும் வருகின்றன.
ஐரோப்பிய சக்திகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இதர நெருக்கமான நட்பு நாடுகளின் கூட்டணிகள், கடந்த திங்களன்று ஒரு சிடுமூஞ்சித்தனமான அறிக்கையை வெளியிட்டு, இதற்கான பொறுப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயன்றன.
இந்த அறிக்கையில், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை பல சிறிய சக்திகளுடன் சேர்ந்து இப்பொழுது இஸ்ரேல் மறுக்கவியலாத பாரிய படுகொலையில் இறங்கியிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளன. அப்படியிருந்தும் அவர்கள் சியோனிச ஆட்சிக்கான தங்கள் ஆதரவில் உறுதியாக உள்ளனர். இவர்கள், காஸாவில் இடம்பெற்றுவரும் போரை ஒரு இனப்படுகொலை என்று அழைக்க மறுத்து, தெளிவற்ற இடக்கரடக்கல் சொற்களை மட்டுமே கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்களை பேர்லினுடன் சேர்ந்து வழங்கிவரும் வாஷிங்டனின் கொள்கைகளை முழுமையாக ஆதரித்து வருகின்றனர்.
“இஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவி விநியோக மாதிரி ஆபத்தானது, ஸ்திரமின்மையைத் தூண்டுகிறது மற்றும் காஸா மக்களின் மனித கண்ணியத்தை இழக்கச் செய்கிறது. தங்கள் அடிப்படைத் தேவைகளான தண்ணீர் மற்றும் உணவைப் பூர்த்தி செய்ய முயன்று வரும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொல்வதையும், உதவிகளை சொட்டு சொட்டாகக் கொடுப்பதையும் நாங்கள் கண்டிக்கிறோம். உதவி தேடும் போது 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது.” அத்தோடு, “நிரந்தர போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் அவர்கள், “அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எங்கள் முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்... இதை அடைவதற்கு” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், காஸாவிற்கு உதவி வழங்குவதில் இஸ்ரேல் குவிப்புக் காட்டுவதைப் போலவே, வாஷிங்டனும் சமாதானத்தை நாடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், மருத்துவர்கள் மற்றும் பட்டினியால் வாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேலால் பயன்படுத்தப்படும் குண்டுகள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் இனப்படுகொலை நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்து, பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று அழைத்ததோடு, “அமலேக்கின் விதை”யை அழிக்க பைபிளின் கட்டளையை வலியுறுத்தினர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, வாஷிங்டன் காஸாவை “கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்” என்றும், பாலஸ்தீனியர்களை அங்கிருந்து வெளியேற்றி “அதை சமநிலைப்படுத்தும்” என்றும், அதை ஒரு கடற்கரை விடுமுறை நகராக, “மத்திய கிழக்கின் உல்லாசபுரியாக” மாற்றும் என்றும் ட்ரம்ப் சூளுரைத்தார். இப்போது, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நகர்கின்றனர். இது, ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கொள்கையை அடித்தளமாக கொண்டுள்ளது. கடந்த செவ்வாயன்று, இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பாசிச இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், “காஸாவை கைப்பற்றி குடியமர்த்த” இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்தார், “காஸாவை ஒரு வளமான பிராந்தியமாக, குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய ஒரு கடலோர நகரமாக மாற்ற ஜனாதிபதி ட்ரம்பிடம் இருந்து எங்களுக்கு பலமான ஆதரவு உள்ளது,” என்று அவர் அறிவித்தார்.
ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அறிக்கை, இஸ்ரேலிய போரை ஒரு இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு என்று முத்திரையிடுவதை தவிர்க்கிறது. ஆனால், இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். உண்மையில், அவர்களின் அறிக்கை, “பாலஸ்தீனிய மக்களை ஒரு ‘மனிதாபிமான நகரத்திற்கு’ அகற்றுவதற்கான முன்மொழிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நிரந்தர கட்டாய இடப்பெயர்வு என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்” என்று அறிவிக்கிறது. ஆயினும்கூட, அவர்கள் சிடுமூஞ்சித்தனமாக சமாதானம் என்ற பதாகையின் கீழ் அமெரிக்க கொள்கையை தழுவிக் கொள்கின்றனர்.
ஏகாதிபத்திய சக்திகள் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கின்றன. ஏனென்றால், அது அவற்றின் புவிசார் அரசியல் நலன்களுடன் ஒத்துப்போகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் அந்த நலன்களுடன் முரண்படுமானால், அவை உடனடியாக நிறுத்தப்படும். ஜேர்மன் சான்ஸ்லர் பிரெடெரிக் மெர்ஸ் அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளபடி, “இஸ்ரேல் நம் அனைவருக்காகவும் இழிவான வேலையைச் செய்து வருகிறது.” அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆதரவுடனும் ஆயுதமேந்திய இந்த சியோனிச ஆட்சி, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான ஒரு பினாமியாக செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் குற்றங்களுக்கு உலகளவில் பாரிய மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், ஒரு தெளிவான வேலைத்திட்டமும் முன்னோக்கும் இங்கு பற்றாக்குறையாக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும், இனப்படுகொலையை முன்னெடுக்கும் மற்றும் அதற்கு வழிவகை செய்யும் அதே முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்த முடியாது என்று வலியுறுத்தி வருகின்றன. அவசரமானதும், இன்னும் நடக்காததும் என்னவென்றால், அரசியல் களத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான எழுச்சியாகும்.
உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் திட்டவட்டமான கோரிக்கைகளை எழுப்ப வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம், அவற்றில் பின்வருவன அடங்கும்:
இஸ்ரேலுக்கு அனைத்து ஆயுதங்களையும் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் பிற உதவிகளையும் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களின் வீடுகள் மீது வீசப்பட்ட குண்டுகளில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் வழங்கப்பட்டவையாகும்.
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும். இனப்படுகொலையை நடத்தும் இஸ்ரேலிய அரசின் திறன் அதன் பொருளாதார அடித்தளங்களை முடக்குவதன் மூலம் நிறுத்தப்பட வேண்டும். அக்டோபர் 2023 முதல், இஸ்ரேலின் பங்குச் சந்தை “உலகிலேயே சிறப்பாகச் செயல்பட்டு” வருவதாகவும், வெளிநாட்டு மூலதனத்தின் வருகை ஆளும் உயரடுக்கின் செல்வத்தைத் தூண்டுவதாகவும், பாலஸ்தீனியர்களைக் கொல்ல சியோனிச ஆட்சியின் திறனுக்கு இவை நிதியளிப்பதாகவும் பைனான்சியல் டைம்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது.
இனப்படுகொலையை நடத்த இஸ்ரேலுக்கு உதவி வரும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பெருநிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும். சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம் இஸ்ரேலை மக்களின் முதுகுக்குப் பின்னால் ஆயுதபாணியாக்கி, இஸ்ரேலிய இராணுவத்துக்கு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலமாக பாரிய இலாபங்களை அறுவடை செய்து வருகிறது. அதேபோல், ஐஜி ஃபார்பென் (IG Farben) போன்ற பெருநிறுவனங்கள் நாஜிக்கள் யூதர்களைக் கொல்லப் பயன்படுத்திய விஷவாயு அறைகளுக்கு ஜைக்லான் பி விஷவாயுவை தயாரிப்பதன் மூலம் இலாபம் அடைந்தன. ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் இந்த “இனப்படுகொலை பொருளாதாரத்தை” கண்டனம் செய்ததற்கு எதிராக வாஷிங்டன் அவரது விசாவை ரத்து செய்து அவரது வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம் பதிலடி கொடுத்தது.
போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகளை கைது செய்தல். பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு உட்பட பல இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக ஏற்கனவே சர்வதேச கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆணைகள் ஏகாதிபத்திய சக்திகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் உள்ளனர். அவர்கள் இனப்படுகொலைக்கு எந்த வகையிலும் பங்களிப்பு செய்தனர் என்று கண்டறியப்பட்டால், கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும். இந்த வார அறிக்கையில் கையெழுத்திட்டவை உட்பட, முதலாளித்துவ அரசாங்கங்கள், இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை இடைவிடாது குற்றமாக்கி வருகின்றன. அவர்கள் அதை விமர்சிக்கும் அமைப்புகளுக்கு எதிராக பாரிய கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காஸா-ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மீது இரத்தந்தோய்ந்த போலிஸ் தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும் காஸாவைப் பாதுகாப்பவர்கள் மீது போலி பயங்கரவாதம் அல்லது யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். காஸாவைப் பாதுகாக்க முன்வருபவர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படவும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட வேண்டும்.
இனப்படுகொலைக்குப் பொறுப்பான அரசாங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் முறையீடு செய்வதன் மூலம் இந்தக் கோரிக்கைகளை அடைய முடியாது. இதற்கு வேலைநிறுத்தங்கள், வெளிநடப்புகள் மற்றும் ஏனைய சுயாதீனமான நடவடிக்கைகளின் ஊடாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு அவசியமாகும். இதன் பொருள், காஸாவில் படுகொலைகளைத் தடுக்க ஒவ்வொரு நாட்டிலும் எதுவும் செய்யாத தொழிற்சங்க எந்திரத்தின் கழுத்துப் பிடியிலிருந்து வெளியே சுயாதீனமான நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கம் ஒழுங்கமைக்க வேண்டும்.
இந்தப் போராட்டமானது ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் பாலஸ்தீனிய, இஸ்ரேலிய, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அதற்கு அப்பாலும் அனைத்து எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும். இதில், சியோனிச ஆட்சியையும் அதன் குற்றங்களையும் நிராகரித்துவரும் இஸ்ரேலிய தொழிலாளர்களும் உள்ளடங்க வேண்டும். இஸ்ரேலிய மக்களில் கணிசமான அடுக்குகள் தங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பீதியடைந்துள்ளன. முந்தைய தசாப்தங்களில், இஸ்ரேலிய அரசு நாஜிக்களை எதிர்த்த யூதரல்லாதவர்களை “தேசங்களிடையே நீதிமான்கள்” என்று கௌரவித்தது. இன்று, இனப்படுகொலையின் குற்றவியல் தன்மையை உணர்ந்துள்ள இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, விரிவடைந்து வரும் உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும். இனப்படுகொலையானது அதில் ஒரு பாகமாக உள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவது ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான அவர்களின் பரந்த போர் திட்டங்களிலிருந்து பிரிக்கவியலாததாகும்.
உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் ஒரு புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக காஸா இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கின்றன. இந்த இயக்கம் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை ஒழிப்பதே அதன் இலக்காக இருக்க வேண்டும்.