இஸ்ரேல் காஸாவில் தனது இனப்படுகொலையை முற்றிலுமாக தீவிரப்படுத்தி, பாதுகாப்பற்ற மக்கள் மீது தினசரி கொலைவெறியைப் புரிகிறது. ஒரு கொடூரம் மற்றொன்றைப் பின்தொடர்கிறது; ஏகாதிபத்திய சக்திகளின் முழுமையான ஆதரவுடன், நெதன்யாகுவின் அரசு, பாலஸ்தீனிய மக்களை பட்டினியால் அழிப்பதற்கும், பயத்தை தூண்டி ஒடுக்குவதற்கும், முழுமையாக அழித்தொழிப்பதற்குமான தன் முயற்சிகளை வேகப்படுத்துகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று, மனிதாபிமான உதவிகளைப் பொறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து இரண்டு தனித்தனி படுகொலைகளில் 92 பேர் உட்பட குறைந்தது 115 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளில் ஒன்றில், வடக்கு காஸாவில் 67 பேர் கொல்லப்பட்டதாக யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. “ஆக்கிரமிப்பு இராணுவம் பொதுமக்கள் தங்கள் கைகளை உயர்த்தி உதவி லாரிகளை அணுகும்படி கட்டளையிட்டது - அது நிர்க்கதியாக்குவதற்கான தெளிவான அறிகுறியாகும் - பின்னர் எந்த ஆத்திரமூட்டலையும் செய்யாத அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது “ என்று கண்காணிப்புக் குழு கூறியது.
“போர்நிறுத்தம்” என்று கூறப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், படுகொலைகள் இடைவிடாது நடக்கின்றன. அவற்றில், கடந்த 10 நாட்களில் பின்வருவன அடங்கும்:
- ஜூலை 10 அன்று, டெய்ர் அல் பாலாவில் உள்ள ப்ராஜெக்ட் ஹோப்பின் சுகாதார நிலையத்திற்கு வெளியே ஒரு பொதுமக்கள் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
- ஜூலை 11 அன்று, காஸாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
- ஜூலை 11 அன்று, வடமேற்கு ரஃபாவில் உணவு விநியோகிக்கும் இடத்திற்கு அருகே 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்; அடுத்த நாள், செஞ்சிலுவைச் சங்க கள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காயமடைந்த 132 பேரில் 31 பேர் காயங்களால் இறந்தனர்.
- ஜூலை 10க்கும் 13க்கும் இடையில், குறைந்தது நான்கு பத்திரிகையாளர்களாவது தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஒருவர் தனது வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இலக்கு வைக்கப்பட்டார்; மற்றொருவர் அவருடைய கர்ப்பிணியான மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான கூடாரத்தில் இலக்கு வைக்கப்பட்டனர்.
- ஜூலை 14 அன்று, தால் அல் ஹவாவில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர், மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
- ஜூலை 16 அன்று, தெற்கு கான் யூனிஸில் உள்ள ஒரு இராணுவமயமாக்கப்பட்ட உதவி விநியோக மையத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர்; அதில் 15 பேர் மூச்சுத்திணறலாலும், நெரிசலாலும் உயிரிழந்தனர்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” எனப்படும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளன. அந்த அமைப்பு “உதவி தாழ்வாரங்கள்” என்றழைக்கப்படும் இடங்களை அமைத்துள்ளது; ஆனால், இவை உண்மையில் கொலைக்களங்களாக இருக்கின்றன. இங்கு, இஸ்ரேலிய டிரோன்கள் மற்றும் ஸ்னைப்பர்களால் கண்காணிக்கப்பட்டு இலக்கு வைக்கப்பட்ட பொறி மண்டலங்களை வேண்டுமென்றே கட்டமைத்தது. மே மாத இறுதியில் இருந்து, சுமார் 1,000 உதவி பெற வந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்; மேலும், 6,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
உதவி கோருவோர் படுகொலை செய்யப்பட்டமையானது வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்டுள்ள பட்டினியால் அழிக்கும் நடவடிக்கையுடன் நேரடியாக தொடர்புடையதாகும். 24 மணி நேரத்திற்குள் 18 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு இஸ்ரேல் முழுமையாக விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, பட்டினி துரிதமாக அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.
வார இறுதியில், இஸ்ரேலும் மத்திய காஸாவில் ஒரு புதிய தரைப்படைத் தாக்குதலை அறிவித்து புதிய வெளியேற்ற உத்தரவுகளையும் வெளியிட்டது. இஸ்ரேலிய அரசாங்கம் காஸா மக்களை ரஃபா இடிபாடுகளுக்கு மேலாக ஒரு பரந்த சித்திரவதை முகாமுக்குள் கட்டாயப்படுத்தும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இது இறுதியில் அவர்களை மற்ற நாடுகளுக்கு வெளியேற்றுவதற்கான தயாரிப்பாகும்.
இஸ்ரேல் அரசு ஒரு குற்றவியல் நிறுவனமாகும் – உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் இது அதிகரித்தளவில் உணரப்படுகிறது. இனப்படுகொலை என்பது சியோனிசத்தின் பிற்போக்கு தர்க்கத்தின் உச்சக்கட்டமாகும். பாலஸ்தீனிய மக்களை இடம்பெயர்ப்பதன் மூலம் ஒரு பிரத்தியேக மத அரசை உருவாக்கும் கோட்பாட்டின் அடிப்படையில், சியோனிசம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: “பாலஸ்தீனிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு.”
காஸாவில் நடந்த இனப்படுகொலை உலகளாவிய எதிர்ப்பின் பெரும் அலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கடந்த 21 மாதங்களில் மில்லியன் கணக்கான மக்கள் வெகுஜன போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். ஆயினும், இந்த ஆர்ப்பாட்டங்கள் —ஆழமான மற்றும் நியாயமான தார்மீக சீற்றத்தை வெளிப்படுத்திய அதேவேளையில்— ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாமல் இருந்தன. இப்போது சில அத்தியாவசியமான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது.
முதலில், இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையை தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக புரிந்து கொள்ள முடியாது. இது உலகளவில் விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போர் மற்றும் முடிவின்றி சிவப்புக் கோடுகளைக் கடந்துகொண்டு இருக்கும் நிலைமையின் ஒரு பகுதியாகும்
மத்திய கிழக்கில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஜூன் மாதத்தில் ஈரான் மீது குண்டுகளை வீசின. கடந்த வாரம், இஸ்ரேல் சிரியாவை நோக்கியும் புதிய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அதே வாரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் உக்ரேனுக்கு பெருமளவு ஆயுத வழங்கலை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்தது; இது ரஷ்யாவுக்கு எதிராக ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அமெரிக்கா-நேட்டோப் போரை மேலும் தீவிரப்படுத்துகிறது. பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மற்ற 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40,000 படையினர், சீனாவுக்கு எதிரான போருக்கான ஒத்திகையாக, ஆஸ்திரேலிய கண்டம் முழுவதும் இதுவரை நடாத்தப்படாத மிகப்பெரிய கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனச்சுத்திகரிப்பு அல்லது பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யை பரப்பி, ஈராக், யூகோஸ்லாவியா மற்றும் பிற நாடுகளில் போர்களைத் தொடக்கிய அதே ஏகாதிபத்திய சக்திகள், இப்போது இஸ்ரேல் காஸாவில் பகிரங்கமாக இனப்படுகொலைவும் இனச்சுத்திகரிப்பும் நடத்தும் செயலை முழுமையாக ஆதரிக்கின்றன.
ஏகாதிபத்தியங்கள் ஒவ்வொரு போர் குற்றத்தையும் நியாயப்படுத்துகிறார்கள், ஏனெனில் அது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது உட்பட, எதிர்காலத்தில் மேலும் பெரிய குற்றங்களுக்கு முன்னுதாரணமாக அமைகிறது. அவர்கள் இனப்படுகொலையை ஆதரிக்கின்றனர், ஏனெனில் அது, உலகளாவிய போருக்கான தங்களது விரிவான திட்டங்களில், மத்திய கிழக்கை ஒரு முக்கிய அரங்காக மாற்றும் அவர்களது மூலோபாயத்தின் மையமாக இருக்கிறது. கடந்த மாதம், ஈரான் மீது நடைபெற்ற குண்டுவீச்சு தொடர்பாக, ஜேர்மனியின் சான்ஸ்லர் பிரெடெரிக் மெர்ஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுபோல், இஸ்ரேல் எங்களுக்கான “இழிந்த வேலைகளை” செய்து வருகிறது.
இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள் நடாத்தும் உலகளாவிய போர், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான போருடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையது. ஊதியங்களைக் குறைத்தல், பொதுச் சேவைகளை வெட்டுதல், சமூக வேலைத்திட்டங்களை அகற்றுதல், பணிநீக்கங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் அலையைத் திணித்தல் என இதே அரசாங்கங்கள் உள்நாட்டில் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது ஒரு மூர்க்கமான தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த சமூகப் எதிர்ப்புரட்சி இப்போது ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் பொதுக் கல்வியை முற்றிலும் அழிக்கவும், மருத்துவக் கவனிப்பு, மருத்துவ உதவி மற்றும் சமூக பாதுகாப்பில் எஞ்சியுள்ளவற்றையும் அழிக்கவும் திட்டமிட்டுக் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ சக்தியும் இதே போக்கினை பின்பற்றி, இந்த அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு பதிலளிக்க, இராணுவவாதம் மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் முழு சுமையையும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கின்றன.
இனப்படுகொலையையும் அதன் பாகமாக இருக்கின்ற பரந்த போரையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தை பாரியளவில் விரிவாக்க வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் என்பது தனது சொந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராக கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மார்க்சிசத்தின் அடிப்படை முன்கூற்றாகும். முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்கு மத்தியில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பெருநிறுவன, தேசியவாத மற்றும் போர்-ஆதரவு தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டில் இருந்து முறித்துக் கொண்டு போராட்டத்திற்குள் நுழைய முனைந்து வருகின்றனர்.
மூன்றாவதாக, போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். காஸா இனப்படுகொலையானது, அனைத்து மனிதத் தேவைகளையும் நிதியத் தன்னலக்குழு தட்டுக்களின் இலாப நலன்களுக்கு அடிபணியச் செய்யும் ஓர் உலக அமைப்புமுறையின் விளைபொருளாகும்.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரட்டலை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய மூலோபாயம் அவசியப்படுகிறது. காஸாவில் பாரிய படுகொலைகளை ஊக்குவித்து வரும் அதே ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கின்றன. அது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத்திற்கான போராட்டமாக இருக்க வேண்டும், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை தூக்கிவீசவும், போருக்கு மூல காரணமான இலாபகர அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராட வேண்டும். அது சகல முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் அரசியல் முகவர்களில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமானதாக இருக்க வேண்டும்.
அது ஏகாதிபத்திய அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களை சர்வதேசரீதியாக, ஐக்கியப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைத்து தொழிலாளர்களையும், இளைஞர்களையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.