பிரெஞ்சு பிரதம மந்திரி பேய்ரூ வர்க்கப் போர் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூ அடுத்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் 44 பில்லியன் யூரோ வரி அதிகரிப்புகள் மற்றும் சமூக வெட்டுக்களுக்கான திட்டங்களை முன் வைத்தார். இந்த வர்க்கப் போர் வரவு-செலவு திட்டமானது, நடந்து வரும் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போருக்காக பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை விடுவிப்பதற்காக முக்கிய சமூக திட்டங்களில் பெரும் வெட்டுக்களைத் திணிக்கும்.

இது, கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கு ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணி (NFP) போன்ற சக்திகள் அளித்த ஆதரவை அம்பலப்படுத்துகிறது. தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சி (RN) ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காகவும், 2023 இல் சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவ-போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான பெரும் எதிர்ப்பையும், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பொலிஸ் கொலைகளுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் கலவரங்களையும் மக்ரோன் கேட்கும்படி கட்டாயப்படுத்துவதற்காகவும் NFP மக்ரோனுடன் கூட்டணி வைத்தது. NFP தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், மக்ரோன் வலதுசாரி பிரதம மந்திரிகளை அதிகாரத்திற்கு நியமித்தார்—முதலில் மிஷேல் பார்னியே, இப்போது பேய்ரூ இருக்கிறார்.

இவ்வாறு NFP உதவிய அரசாங்கம் இப்போது தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியுள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் மறு ஆயுதபாணியாவதற்காக சமூக செலவினங்களை வெட்டிக் குறைக்கின்ற நிலையில், இத்தகைய கொள்கைகளினால் இவை பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்பிற்கு முகம் கொடுக்கின்றன. எவ்வாறிருப்பினும், NFP யின் திவால்நிலையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மக்களின் விருப்பத்தை நசுக்குகின்ற ஒரு நிதியியல் பிரபுத்துவத்தின் கரங்களில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், சாமானிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நேரடியாக ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் மட்டுமே இந்த வெட்டுக்களை தடுத்து நிறுத்த முடியும்.

பிரெஞ்சு மக்களில் 91 சதவீதத்தினர் மக்ரோனின் 2023 ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்த நிலையில், பேய்ரூ சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதுடன், கூடுதலாக 4 பில்லியன் யூரோவை இராணுவ செலவினங்களுக்குத் திருப்பி விடுகிறார். அடுத்த ஆண்டு ஓய்வூதியங்கள் மற்றும் பொதுத்துறை சம்பளங்களை முடக்குவதன் மூலமாக குறைந்தபட்சம் 7 பில்லியன் யூரோ வெட்டுகளுக்கும், சுகாதாரப் பராமரிப்பு செலவின வெட்டுக்களில் 5 பில்லியன் யூரோக்களுக்கும், மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டில் ஒரு கடுமையான “சீர்திருத்தத்தில்” இருந்து இன்னும் பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களுக்கும் பேய்ரூ அழைப்புவிடுத்தார். பொதுத்துறையில் பாரிய வேலை வெட்டுக்கள் மற்றும் தீவிர பிராந்திய அரசாங்கச் செலவுக் குறைப்புக்களையும் அவர் அறிவித்தார்.

தனது ஜனநாயக விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்த பேய்ரூ இரண்டு பொய்யான வாதங்களை முன்வைத்தார். முதலாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரான்சின் இறையாண்மை கடன் 114 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆதலால், வங்கிகளுக்கு அதன் கடனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் யூரோக்களை செலவழிப்பதற்கு தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரண்டாவதாக, ரஷ்யா தலைமையிலான வன்முறையான வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து, பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற வாதமாகும்.

இந்த விஷயத்தில், பேய்ரூ பின்வருமாறு கூறினார்:

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் கடந்து வந்த முக்கிய மாற்றம் என்னவென்றால், வன்முறை ஒரு உலகளாவிய சட்டமாக மாறியுள்ளது. புட்டினின் ரஷ்யாவின் படைகள் உக்ரேன் மீது மேற்கொண்ட படையெடுப்பால் தொடங்கிய இந்த மாற்றம், அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, காஸாவில் நடந்த நாடகத்துடன், உலகம் வெடிக்கத் தயாராக உள்ளது என்பதை உலகம் வேறு வழிகளில் காட்டியுள்ளது. மேலும் சீனாவைச் சுற்றியுள்ள கடல்களில் இதேபோன்ற இயக்கங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மேலும், துரதிர்ஷ்டவசமாக, நமது கிரகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், இது இப்போது ஒரு பொதுவான சட்டமாக மாறி வருவதை இஸ்ரேல்-ஈரான் மோதலில் சமீபத்தில் கண்டோம்.

இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான பேய்ரூவின் வாதத்தை ஒரு உண்மை பொய்யாக்குகிறது: அதாவது, பிரான்சும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய கூட்டாளிகளும் இந்த மோதல்களில் அப்பாவியாக வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல. மாறாக, இந்த சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக இவற்றை தூண்டிவிடுகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ தளமாக பயன்படுத்த நேட்டோ சக்திகள் உக்ரேனை பற்கள் வரை ஆயுதபாணியாக்கிய பின்னர் 2022 இல் ரஷ்ய படைகள் உக்ரேன் மீது படையெடுத்தன. காஸா இனப்படுகொலை மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன. ஏனெனில் பிரான்ஸ் உட்பட, வாஷிங்டன் தலைமையிலான நேட்டோ நாடுகள், இஸ்ரேலுக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இப்பொழுது நேட்டோ சக்திகள் இந்த மோதல்களைத் தூண்டிவிட்டுள்ள நிலையில், சீனக் கப்பல் பாதைகளை அச்சுறுத்த உலகெங்கிலும் போர்க்கப்பல்களை இவை அனுப்பியதும் இதில் அடங்கும். வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவதற்காக தொழிலாளர்களை வறியவர்களாக்குவதைத் தவிர பிரான்சுக்கு வேறு வழியில்லை என்று பேய்ரூ இழிந்த முறையில் வாதிடுகிறார். தொழிலாளர்களின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நேட்டோ மேற்கொண்டுவரும் போர்களை எதிர்ப்பது அவசியமாகும் என்பதை மட்டுமே இந்தப் பொய்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கடன் குறித்த பேய்ரூவின் வாதம் அதே அளவு பொய்யானது. பிரெஞ்சு தொழிலாளர்கள் சோம்பேறிகளாகி, தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசை நம்பியிருப்பதால், பிரான்ஸ் ஒரு கடன் மரணப் பொறியை எதிர்கொள்கிறது என்று அவர் ஆணவத்துடன் தொழிலாளர்களை குற்றம் சாட்டினார்: “பொதுச் செலவுகளுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். சுகாதாரம், காலநிலை, எரிசக்தி அல்லது குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக நமது நாடு எதிர்கொண்டுவரும் எந்தப் பிரச்சினையோ, மாற்றமோ, தடையோ எதுவும் இல்லை, அதற்கு அரசு அதிகாரிகளும் குடிமக்களும் வாயில் ஒரு பதிலைக் கூடக் கூறவில்லை: அரசின் பக்கமே திரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.

இது எப்படி நடந்தது என்பதை விளக்க பேய்ரூ மறுத்துவிட்டார். 1940 ஆம் ஆண்டு, நாஜி படையெடுப்பின் மத்தியில் பிரெஞ்சு பொது ஊழியர்களின் நிலைப்பாடு குறித்து வரலாற்றாசிரியரும் எதிர்ப்புப் போராளியுமான மார்க் ப்ளோச்சின் புகழ்பெற்ற படைப்பான விசித்திரமான தோல்வியைக் குறிப்பிட்டு, பின்வருமாறு பேய்ரூ கூறினார்:

“மார்க் ப்ளோச் மற்றொரு சகாப்தத்தில் கூறியதைப் போல, பொது நிதி மற்றும் இந்த விசித்திரமான தோல்வியின் நீண்ட வரலாறு குறித்த கேள்விக்கு நான் மீண்டும் செல்லப் போவதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் நாடு, எந்த அரசியல் போக்கு ஆட்சியில் இருந்தாலும், ஒரு சமநிலையான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. … குன்றின் விளிம்பிற்கு முன்னால் மற்றும் கடனால் நசுக்கப்படுவதற்கு முந்தைய கடைசி நிறுத்தம் இது என்று நான் நம்புகிறேன்”.

யதார்த்தத்தில், பிரான்சின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்திடம் இல்லை. மாறாக முதலாளித்துவ வர்க்கத்திடம்தான் உள்ளது. 2008 பொருளாதார பொறிவு மற்றும் 2020 கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில் பிரான்சின் கடன் அதிகரித்தது. ஐரோப்பிய மத்திய வங்கி ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் பொதுப் பணத்தை அச்சடித்து ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு கடனாக வழங்கியது, அவை அதை பெரும் செல்வந்தர்களுக்கான வங்கி பிணையெடுப்பு வடிவில் பெருவாரியாக செலவிட்டன.

இது, ஒருபுறம், 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கொண்ட பேர்னார்ட் ஆர்னோல்ட் அல்லது பிரான்சுவா பினோ போன்ற பிரமுகர்களின் தலைமையில், கொடூரமான செல்வம் படைத்த பிரெஞ்சு முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் ஒருங்கிணைப்புக்கும், மறுபுறம், பாரிய அரசு கடன் நிலைமைக்கும் தொழிலாளர்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கும் இட்டுச் சென்றது.

இந்த ஆளும் வர்க்கம் இப்பொழுது அதன் செல்வத்தைக் காப்பாற்றுவதற்கு மக்களின் விருப்பத்தை மீறி கடுமையான சிக்கன நடவடிக்கைகள் அவசியப்படுவதாகக் கூறுகையில், அது வரலாற்றுரீதியில் கண்டனத்திற்குரியது, ஆட்சி செய்வதற்கு தகுதியற்றது என்பதைத்தான் காட்டுகிறது. பொது நிதிகளைக் கொள்ளையடிப்பதன் மூலமாக திரட்டப்பட்ட அதன் செல்வ வளம், மக்களின் நல்வாழ்வுக்கும் அவசியமான சமூக திட்டங்களுக்கும் பொருந்தாது என்றால், அது பறிமுதல் செய்யப்பட வேண்டும். இந்த பிணையெடுப்புகளில் இருந்து ஆதாயமடைந்த பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான நிறுவனங்கள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நடைமுறையளவில் ஏற்கனவே பொதுக் கருவூலத்தில் இருந்து இவற்றுக்கு நிதியளிக்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் தொழில்துறை கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களின் அதிகாரத்தை நோக்கிய பாதையைத் திறந்து சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் திறன் கொண்ட அத்தகைய ஆட்சி, நிதி பிரபுத்துவத்தின் சமூகக் கொள்ளையடிப்புக்கு ஒரே நடைமுறை மாற்றாக மேலும் மேலும் நேரடியாக வெளிப்பட்டு வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பேய்ரூ தன்னுடைய உரையின் கணிசமான பகுதியில், தன்னுடைய கொள்கைக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்றும் வங்கிகளின் ஆணைக்கு அனைத்து எதிர்ப்பும் பயனற்றது என்றும் வலியுறுத்தினார்.

NFP இன் கிரேக்க கூட்டாளிகளான போலி-இடது சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கம் 2015 இல் சரணடைந்ததை பேய்ரூ மேற்கோளிட்டார். கிரேக்க பொதுக் கடன் குறித்த வங்கி ஊகங்களுக்கு SYRIZA சரணடைந்தது. அரசு கடனில் இருந்தால் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதைக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார்:

கிரேக்கத்தின் உதாரணத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சிறிது காலத்திற்கு முன்பு அலெக்சிஸ் சிப்ராஸ் என்று அழைக்கப்பட்ட பிரதமர், இடது மற்றும் தீவிர இடதுசாரிகளின் சிரிசா என்ற கூட்டணிக்கு தலைமை தாங்கினார். கடன் தடையைத் தவிர்க்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF கோரிய பட்ஜெட் வெட்டுக்களை அதிகாரப்பூர்வமாக வேண்டாம் என்று கூறவும் நிராகரிக்கவும் கிரேக்க மக்களின் வாக்கெடுப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அலெக்சிஸ் சிப்ராஸ் இந்த “வேண்டாம்” வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை, அவர் தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்திலும் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

உண்மையில், கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு, தொழிலாளர்கள் போராட இயலாமையால் அல்ல, மாறாக சிரிசா மற்றும் அதன் கூட்டணியில் இருந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டது. மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான 2023 பாரிய வேலைநிறுத்தங்களின் போது பிரெஞ்சு NFP ஐ உருவாக்கிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே, முதலாளித்துவ தன்னலக்குழுவிலிருந்து அதிகாரத்தைப் பறிக்க தங்கள் நாட்டிலும் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அழைப்பை அவர்கள் நிராகரித்தனர்.

இறுதி ஆய்வில், ஒரு சோசலிசப் புரட்சி மட்டுமே சாத்தியமான கொள்கையாகும். மேலும், முக்கியமான கேள்வி ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதற்குத் தயாராகவும், இறுதியில் அதை செயல்படுத்தவும் கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இதன் பொருள் பிரான்சிலும், ஐரோப்பா முழுவதும், சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சுயாதீனமான, அடித்தளத்திலிருந்து போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதும், சிரிசா மற்றும் NFP போன்ற சக்திகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகும்.

.

Loading