2024 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவச் செலவு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இராணுவ தந்திரோபாய ஏவுகணை (ATACMS) [AP Photo/John Hamilton/U.S. Army]

ஸ்டாக்ஹோல்ம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி பயிலகம் (Stockholm International Peace Research Institute – SIPRI) கடந்த வாரம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க இராணுவச் செலவுகள் 2024 இல் 997 பில்லியன் டாலர்களுக்கு உயர்ந்துள்ளது. இது, உலக வரலாற்றில் வேறெந்த நாட்டையும் விட மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையாகும்.

வருடாந்திர அமெரிக்க இராணுவ செலவினம் 2023 ஆம் ஆண்டில் 81 பில்லியன் டாலர்களாகவும், கடந்த பத்தாண்டுகளில் 344 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் வாஷிங்டனின் அதிகரித்து வரும் ஈடுபாடும், மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து விரிவடைவதும் இந்த உயர்வுக்குக் காரணமாகும்.

அமெரிக்கா அதன் இராணுவத்திற்காக அடுத்த பத்து பெரிய இராணுவங்களை விட அதிகமாக செலவிடுகிறது. அதன் இராணுவச் செலவு, அதற்கு நெருங்கிய போட்டியாளராக இருக்கும் சீனாவை விட மூன்று மடங்கு அதிகமாகும். வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் அமெரிக்காவை விட சீனாவின் பொருளாதாரம் கணிசமாக பெரியது.

அமெரிக்க இராணுவ செலவினங்களில் ஏற்பட்ட இந்த பாரிய அதிகரிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் 100,000 க்கும் மேற்பட்ட கூட்டாட்சி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி சலுகைகளில் மேற்கொள்ளப்படும் கடுமையான வெட்டுக்களுடன் சேர்ந்து போகிறது.

டாலர் மதிப்பில், அமெரிக்க இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு மற்ற அனைத்து நாடுகளின் கூடுதல் செலவினங்களையும் சிறியதாக்குகிறது. மேலும், அமெரிக்க இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பானது, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவச் செலவினங்கள் அதிகரிப்புக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. அவை 2024 ஆம் ஆண்டில் தங்கள் இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரித்துள்ளன

பனிப்போருக்குப் பின்னர், உலகம் இப்போது மிக வேகமான விகிதத்தில் மீண்டும் ஆயுதபாணியாகி வருகிறது என்றும், உலகெங்கிலும் இராணுவச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள 9.4 சதவிகித அதிகரிப்பு, 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைக்கும் புள்ளிவிவரங்களில் மிக உயர்ந்த விகிதம் என்றும் SIPRI தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, உலகளாவிய இராணுவ செலவுகள் 2.7 ட்ரில்லியன் டாலர்களை எட்டின. இது, கடந்த ஆண்டை விட 9.4 சதவீத அதிகமாகும். உலக இராணுவ செலவினங்கள் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளன என்று SIPRI தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து காஸாவில் ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகின்ற இஸ்ரேல், அதன் இராணுவச் செலவுகளை மலைப்பூட்டும் வகையில் 65 சதவீதம் அதிகரித்து, 46.5 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ செலவினங்களின் அதிகரிப்பு அதன் மூலோபாயத்தால் உந்தப்பட்டது என்றும், இது சீனாவை மையமாகக் கொண்டுள்ளது என்றும், 2022 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத் துறை இதனை கோடிட்டுக் காட்டியுள்ளது என்றும் SIPRI குறிப்பிட்டுள்ளது. “சண்டைக்கு தகுந்த மரபுசார்ந்த படைகள் மற்றும் அணு ஆயுதங்களுக்கான” செலவு 246 பில்லியன் டாலர்கள் என்று SIPRI தனது அறிக்கையில் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதில் அணு ஆயுத நவீனமயமாக்கலுக்காக 37.7 பில்லியன் டாலர்களும், ஏவுகணை பாதுகாப்புக்காக 29.8 பில்லியன் டாலர்களும் அடங்கும். தனது வான் மற்றும் கடல் சக்தியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா 2024 ஆம் ஆண்டில் தனது F-35 போர் விமானங்களுக்கான ஆயுத அமைப்புகளுக்காக 61.1 பில்லியன் டாலர்களையும், புதிய கடற்படை கப்பல்களுக்கு 48.1 பில்லியன் டாலர்களையும் செலவிட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் துணைச் செலவுகளில் உக்ரேன் போருக்கான 48.4 பில்லியன் டாலர்களும், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான போர்களுக்கு நிதியளிக்க 10.6 பில்லியன் டாலர்களும் இதில் உள்ளடங்கும்.

டாலர்களின் மதிப்பில், இவை அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது சிறியவையாக இருந்தபோதிலும், சதவீத அடிப்படையில் மிகப் பெரிய அதிகரிப்புகள் ஜேர்மனி மற்றும் ஜப்பானிடம் இருந்து வந்தன. இந்த நாடுகளின் இராணுவ விரிவாக்க நோக்கங்கள் இரண்டாம் உலகப் போரின் மையத் தூண்டுதலாக இருந்தன. மேலும், இந்த நாடுகள் போரின் போது உலக வரலாற்றில் மிகப் பெரிய போர்க் குற்றங்களையும் இழைத்தன.

ஜேர்மனியின் இராணுவ செலவுகள் 2024 இல் 88.5 பில்லியன் டாலர்களுக்கு உயர்த்தி, அதை உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவ செலவினமாகவும், ஐரோப்பாவில் மிக அதிகமாக செலவழிக்கும் இராணுவமாகவும் ஆக்கியது. ஜேர்மனியின் இராணுவ செலவுகள் 2023 இல் இருந்து 28 சதவீதமும், 2015 இல் இருந்து 89 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் ஜப்பான் தனது இராணுவச் செலவினங்களை 21 சதவீதம் அதிகரித்து, 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் தேசிய செலவினங்களில் மிகப்பெரிய பங்கை இராணுவத்திற்கு அர்ப்பணித்துள்ளது.

போலந்து தனது இராணுவச் செலவினங்களை 31 சதவீதம் அதிகரித்து 38.0 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. இது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவீதத்தைக் குறிக்கிறது – இது ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்தது.

2024 இல் நேட்டோவில் உத்தியோகபூர்வமாக இணைந்த சுவீடன், அதன் பாதுகாப்பு செலவின அதிகரிப்பை 34 சதவீதம் அதிகரித்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத நேட்டோவின் செலவின இலக்கை எட்டியது.

ஒட்டுமொத்தமாக ஐரோப்பா அதன் இராணுவச் செலவுகளை 2024 இல் 17 சதவீதம் அதிகரித்து, 693 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகள் 2024 இல் தங்கள் இராணுவச் செலவினங்களை உயர்த்தியுள்ளன. அரசாங்கங்கள் பெருகிய முறையில் இராணுவ பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதால், பெரும்பாலும் இதர வரவு செலவுத் துறைகளின் இழப்பில், பொருளாதார மற்றும் சமூக சமரசங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில், சமூகங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று SIPRI ஆராய்ச்சியாளர் சியாவோ லியாங் கூறினார்.

ரஷ்யாவின் இராணுவ செலவினம் 2024 இல் 149 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது, 2023 ஐ விட 38 சதவீதம் அதிகமாகும். சீனா தனது இராணுவ செலவினங்களை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க இராணுவ செலவினங்களிலான அதிகரிப்பு இன்னும் தீவிரமடைய மட்டுமே செய்யும். கடந்த டிசம்பரில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய வருடாந்தர இராணுவ செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இது, உலகளாவிய போர் மற்றும் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சிய விரிவாக்கத்திற்காக கூடுதலாக 895 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கியது.

இந்த மசோதா, B-52 குண்டுவீச்சு விமானத்தின் அணுஆயுத திறனை மீட்டெடுக்கவும், அணு ஆயுதங்களை நீண்ட தூரத்துக்கு வீசுவதற்கான அதன் திறன்களை விரிவுபடுத்தவும் விமானப்படைக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் தகவல்படி, இது, “நிலைகொண்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் எண்ணிக்கையை 400 க்கும் குறைவாக குறைப்பதையும்” தடை செய்கிறது. இந்த மசோதா, 92 புதிய போர் விமானங்களைக் உருவாக்குவதுடன், 33.5 பில்லியன் டாலர்களில் கப்பல் கட்டுமான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வழிகாட்டும் ஏவுகணைகளை கொண்டிருக்கும் நாசகாரி கப்பல்களை கட்டுவதற்கான அங்கீகாரத்தையும் அளிக்கிறது.

கடந்த மாதம், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் 2026 இற்கான 1 ட்ரில்லியன் டாலர்கள் பெயரளவிலான வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு சூளுரைத்தார். இதன் அர்த்தம் நிஜமான இராணுவ செலவுகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதாகும். “விரைவில்: @DeptofDefense-க்கான முதல் பட்ஜெட் 1 டிரில்லியன் டாலர்கள்” என்று ஹெக்செத் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். “(பிற் குறிப்பு: ஒவ்வொரு வரி செலுத்துவோரின் டாலரையும் புத்திசாலித்தனமாக, ஆபத்தான சூழ்நிலையிலும், தயார்நிலையிலும் செலவிட நாங்கள் விரும்புகிறோம்)” என்று அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

யாரும் இதைப் போல எதையும் பார்த்ததில்லை... நாம் எமது இராணுவத்தை கட்டியெழுப்ப வேண்டும், நாம் மிகவும் செலவு உணர்வுடன் இருக்கிறோம், ஆனால் இராணுவம் என்பது நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒன்று. நாம் வலுவாக இருக்க வேண்டும், ஏனென்றால் இப்போது உங்களிடம் நிறைய தீய சக்திகள் உள்ளன.

Loading