பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது

லியோன் ட்ரொட்ஸ்கியின் “பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது?” என்னும் இப்பிரசுரத்தின் தமிழ் இணையப் பதிப்புக்கான அறிமுகம்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் “பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது?” என்ற இப்பிரசுரத்தின் தமிழ் இணையப் பதிப்பானது, உலக வரலாற்றின் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் வெளியாகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கத்தின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்ற 2025 மே மாதம் 1ம் திகதி, தமிழில் வெளியிடப்படும் லியோன் ட்ரொட்ஸ்கியின் இப்பிரசுரம், முதலாளித்துவத்தின் விளைபொருளான பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கான தத்துவார்த்த தெளிவுடன், தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கு முக்கியமான அரசியல் பங்களிப்பை வழங்கும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று உலகம் முழுவதும் தீவிர பொருளாதார நெருக்கடிகள், வேலைவாய்ப்பு இழப்பு, வறுமை, சமத்துவமின்மை, வளர்ச்சியடைந்து வரும் பாசிசம், எதேச்சதிகாரம், மற்றும் மூன்றாம் உலகப் போர் போன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் 1930களில் ட்ரொட்ஸ்கி எச்சரித்த அதே அபாயங்களை மீண்டும் கொண்டுவருகின்றன.

காஸா மீதான இன அழிப்புப் போர், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆதரவிலான உலகளாவிய போர் முனைவுகள், ஜனநாயக உரிமைகளின் சிதைவு ஆகியவை தொழிலாளர் வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச நோக்குடன் ஆயுதபாணியாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ட்ரொட்ஸ்கி, இந்தக் கட்டுரைகளை 1920கள் மற்றும் 1930களில் முசோலினியும் ஹிட்லரும் எழுச்சியடைந்த காலத்தில் எழுதினார். ஒன்பது தசாப்தங்களுக்குப் பிறகு, இதில் உள்ள அரசியல் பகுப்பாய்வுகள் இன்றைய சூழ்நிலைக்கு மிக முக்கியமானவையாகும். பாசிசத்தின் மூலகாரணங்கள், அதன் வர்க்க அடித்தளங்கள் மற்றும் இயக்கவியல் குறித்து ட்ரொட்ஸ்கி வழங்கிய மார்க்சிச பகுப்பாய்வுகள், இன்று மீண்டும் எழும் பாசிசம் மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை புரிந்துகொள்ளவும், எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழி வகுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) ஸ்டாலினிச தலைமை மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் சீர்திருத்தவாத தலைவர்கள் இரண்டுமே ஆற்றிய துரோகப் பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி சளைக்காமல் அம்பலப்படுத்தினார். அதிகரித்து வரும் பாசிசவாத அச்சுறுத்தலுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை —அரசியல் இணைவு அல்ல, கூட்டு தற்காப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில்— இரண்டு வெகுஜன தொழிலாளர் கட்சிகளின் ஒரு ஐக்கிய முன்னணியால் மட்டுமே இதை வெற்றி கொள்ள முடியும் என்று அவர் எச்சரித்தார். ஆனால் ஸ்டாலினிஸ்டுகள், மாஸ்கோவின் உத்தரவுகளின் கீழ், அபத்தமாகச் சமூக ஜனநாயகக் கட்சியை 'சமூக பாசிசவாதமாக' முத்திரை குத்தி, சீர்திருத்தவாதத்தை பாசிசத்துடன் சமன்படுத்தி, எந்தவொரு பொதுவான போராட்டத்தையும் நிராகரித்தனர். அதே நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சித் தலைமை முதலாளித்துவ அரசைப் பின்பற்றிக் கொண்டு, ஹிட்லரின் அதிரடிப்படைகள் தைரியமாக வளர்ச்சியடைந்த நேரத்திலும் கூட, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வைமார் அரசியலமைப்பில் செயலற்ற முறையில் நம்பிக்கை வைத்தது. இந்தக் குற்றகரமான முடக்கமும் குறுங்குழுவாதமும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி விரக்தியடையச் செய்து, அதன் கைகளைகட்டி வைத்து நிராயுதபாணியாக்கி நாஜிக்களின் கரங்களுக்குள் கொண்டு சென்றது. 1933 ஜனவரி 30 அன்று, ஹிட்லருக்கு எந்த எதிர்ப்பின்றி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது—இது தொழிலாள வர்க்க வரலாற்றில் ஈடுஇணையற்ற ஒரு காட்டிக்கொடுப்பாகும். ஸ்டாலினிஸ்டுகள், அவர்களின் அபாயகரமான பாத்திரத்தை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக, பேரழிவுக்கு முகம்கொடுத்தாலும் கூட, அவர்களின் கொள்கை சரியானது என்று அறிவித்தனர். ட்ரொட்ஸ்கியின் தெளிவான பார்வை கொண்ட எச்சரிக்கைகள், நடவடிக்கையில் ஐக்கியத்திற்கான அவரது அழைப்பும், மற்றும் பாசிசம் குறித்த அவரது மார்க்சிச பகுப்பாய்வும் துன்பியலாகவும் முழுமையாகவும் நிரூபிக்கப்பட்டன.

ட்ரொட்ஸ்கி, பாசிசத்தை வெறும் எதேச்சதிகாரம் அல்லது சமூக பிற்போக்குத்தனத்தின் மறுபெயராக அல்லாது, தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வரும் புரட்சிகர அச்சுறுத்தலை எதிர்க்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு திட்டமிட்ட சமூக-அரசியல் பதிலாகவே வரையறுத்தார். பாசிசம், நிதி மூலதனத்தால் தூண்டப்பட்டு, தொழிலாளர் வர்க்க அமைப்புகளை அழிக்க, விரக்தியடைந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும் மற்றும் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தையும் அணிதிரட்டி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் என அவர் தெளிவாக கூறுகிறார். இது முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்து, மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சிகளின் துரோகத்திலிருந்தும் எழுகிறது.

இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அன்றைய காலத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக ஆழ்ந்த நெருக்கடிக்குப் பதிலாக எழுந்தவையாகும். ஸ்டாலினால் நாடுகடத்தப்பட்ட ட்ரொட்ஸ்கி, பாசிச அபாயம் குறித்து உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு, குறிப்பாக ஜேர்மனியிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். அத்தோடு தொழிலாளர் அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கு அவர் அழைப்பு விடுத்ததோடு, பாசிசத்திற்கு எதிரான போராட்டம் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாசிசம் என்பது முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் மிகக் கடுமையான, தீவிரமான வெளிப்பாடாகும். முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, வர்க்கப் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளரும்போது, ஆளும் வர்க்கம் தற்காலிகமாக ஏற்கும் ஆட்சி வடிவம் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

பாசிசத்தின் வெளிப்புற வடிவங்கள் காலப்போக்கில் மாறினாலும், அதன் அடிப்படை பண்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன. இன்றைய பாசிச இயக்கங்கள் பெரும் வெகுஜன இயக்கங்களாக இல்லாவிட்டாலும், பொருளாதார நெருக்கடி, ஆளும் வர்க்கத்தின் அச்சம், சமூக விரக்தி ஆகியவைகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. கடந்த காலத்தைப் போலவே, பாசிசத்தின் வளர்ச்சிக்கு அதன் பலம் அல்ல, மாறாக போலி இடது மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் வர்க்கக் கோழைத்தனமும் துரோகமும்தான் உதவுகிறது.

இந்த உலகளாவிய அபிவிருத்திக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே தெளிவான மார்க்சிச விளக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும், மற்றும் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகள் தான் மோதல்களின் மூலக் காரணங்களாக அமைந்துள்ளன. இந்த முரண்பாடுகள்தான் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக பிற்போக்குத்தனமாக வெடிக்கும் என்று பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தெளிவான முறையில் எச்சரித்து வந்திருக்கிறது.

இன்றைய உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆர்ஜென்டினா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா என பல நாடுகளில் பாசிசம், எதேச்சதிகாரம், மற்றும் வலதுசாரி இயக்கங்கள் மீண்டும் எழுகின்றன. இது தனிப்பட்ட தலைவர்களின் விருப்பம் அல்ல; மாறாக, முதலாளித்துவ வர்க்கம் அதன் நெருக்கடிகளை போரின் மூலமாகவும், பாசிச இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவதற்கும் பயன்படுத்துகிறது.

அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்தமையானது உலக முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றது. ட்ரம்ப் ஒரு தனித்துவமான அமெரிக்க நிகழ்வுப்போக்கு அல்ல, மாறாக உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களால் அதிவலதை நோக்கிய ஒரு வன்முறையான திருப்பத்தின் கூர்மையான வெளிப்பாடாகும்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல், பொலிஸ் இராணுவமயமாக்கல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மற்றும் சர்வாதிகாரத்தை பகிரங்கமாக அரவணைத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ட்ரம்ப்பின் பாசிச வேலைத்திட்டம், ஒரு பிறழ்ச்சி அல்ல, மாறாக அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடியின் ஒரு விளைபொருளாகும். அவரது அரசாங்கமானது, செல்வந்த தட்டின் ஆதரவுடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் முகத்திரைக்கு கீழே இருந்த கொடூரமான வர்க்க யதார்த்தங்களை அம்பலப்படுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஒரு விரிவான பகுப்பாய்வாக பாசிசம், ட்ரம்ப் மற்றும் வரலாற்றின் படிப்பினைகளைக் குறித்து 15 ஏப்ரல் 2025 நேர்காணலின் போது, “பாசிசம் குறித்த விவாதம் இனியும் வெறுமனே வரலாற்று ரீதியானதல்ல, மாறாக குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சமீபத்திய அரசியல் அபிவிருத்திகளின் வெளிச்சத்தில், அது தீவிரமான சமகால பொருத்தத்தைப் பெற்றுள்ளது” என்று வலியுறுத்தினார்.

1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய தொழிலாளர் வர்க்க எழுச்சி மற்றும் அதன் தாக்கங்களைத் தொடர்ந்து பாசிசத்தின் தோற்றுவாய்களை நோர்த் இவ்வாறு விளக்குகிறார்: அதாவது “பாசிசமானது, வரலாற்றில் குட்டி-முதலாளித்துவத்தை ஒழுங்குபடுத்தி, தொழிலாள வர்க்கத்தில் விரக்தியை ஏற்படுத்தி, பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் அமைப்புகளை உடைத்து நசுக்குவதற்காக அமைக்கப்பட்ட வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது.” இத்தாலியில் முசோலினியின் பாசிச இயக்கமும் ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜிச இயக்கமும், தொழிலாளர் வர்க்க எழுச்சியால் உருவான புரட்சிகர அச்சுறுத்தல்களுக்கு நேரடியான பதில்களாக இருந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“மனிதகுலத்தின் தலைவிதி”, இந்த வரலாற்றுக் கட்டத்தில், தொழிலாளர் வர்க்கம் அரசியல் தெளிவுடனும் புரட்சிகரத் தலைமையுடனும் செயல்படுகிறதா இல்லையா என்பதில்தான் முடிவடைகிறது. பாசிசம் என்பது முதலாளித்துவத்தில் இருந்து விலகிச் செல்லும் வழி அல்ல; மாறாக, நெருக்கடியிலிருந்து அது எடுக்கும் இறுதியானதும், மோசமானதுமான வடிவங்களில் ஒன்றாகும். எனவே, பாசிசத்தை உண்மையிலேயே தோற்கடிக்க வேண்டும் என்றால், முதலாளித்துவ அமைப்புமுறையே புரட்சியால் தூக்கியெறியப்பட வேண்டிய தேவை இருப்பதாக டேவிட் நோர்த் தெளிவாக வலியுறுத்துகிறார்.

பாசிஸ்டுகளுக்கு எதிரான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மட்டுமே வர முடியும். பாசிசவாத அச்சுறுத்தல் முதலாளித்துவ அமைப்புமுறையின் முறிவில் இருந்தே எழுகிறது என்ற ஒரு தெளிவான புரிதலால் வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கமே அவசியப்படுகிறது.

இந்தப் போராட்டமானது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான தளமான தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது, அதிகாரத்தைக் கையிலெடுத்து, முதலாளித்துவத்தை ஒழித்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் தயார் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஒரு அரசியல் முன்னோக்கும் தலைமையும் தேவை உள்ளது. இதற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சியும் உலகெங்கிலும் போராடி வருகின்றன. அது போர், மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் சமூக வெட்டுக்களை எதிர்க்க போராடுவதுடன், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட பாரிய எதிர்ப்பை அணிதிரட்ட தொழிற்சாலைகள், வேலையிடங்கள் மற்றும் அண்டை அயல்பகுதிகளில் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களால் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் பாரிய தாக்குதலுக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்தை நடத்த, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான, அமைப்புகளின் ஒருங்கிணைந்த வலையமைப்பை அபிவிருத்தி செய்து வருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் இந்த வளர்ந்து வரும் இயக்கத்தை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் இணைக்க போராடுகின்றன. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது நிதிய தன்னலக்குழு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்த தன்னலக் குழுக்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சமூகத் தேவை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சமூகம் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

பாசிசம், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தேசிய எல்லைகளின் வரம்புகளுக்குள் தொடுக்கப்பட முடியாது. முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய தன்மைக்கு ஒரு சர்வதேச மூலோபாயம் அவசியப்படுகிறது. உலகெங்கிலும், ஆளும் வர்க்கம் பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கி திரும்பி வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில் இருந்து ஜேர்மனி வரை, பிரான்சில் இருந்து இலங்கை வரையில், ஒவ்வொரு நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அதிகரித்து வரும் அலை எழுந்து வருகிறது. தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கமாக இருக்கிறது. ஆகவே அதன் போராட்டங்கள் அனைத்து தேசிய, இனக்குழு, மொழி, நிறம் மற்றும் தேச எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கம் தனது வேலைத்திட்டத்தில் சர்வாதிகாரம், போர் மற்றும் ஒடுக்குமுறையை முன்னெடுப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கெதிராக, தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி, முதலாளித்துவ அமைப்புமுறையை முற்றாக முடிவுக்கு கொண்டு வரவும், உண்மையான ஜனநாயகம், சோசலிசத் திட்டமிடல் மற்றும் ஏகாதிபத்திய போர்களை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்ட வேலைத்திட்டத்துடன் தயாரிப்புச் செய்ய வேண்டும்.

இந்த நிலைமையில், ட்ரொட்ஸ்கியின் இப்பிரசுரமானது தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாசிசத்தின் உண்மையான குணாம்சம், அதன் வர்க்க அடித்தளம் மற்றும் அதனை எதிர்க்க வேண்டிய புரட்சிகர மார்க்சிச வழிமுறைகள் குறித்து தெளிவான புரிதலை வழங்கும். பாசிசத்தை தோற்கடிக்க, முதலாளித்துவ அமைப்புமுறையை புரட்சியால் மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் இப்பிரசுரம், இன்றைய வரலாற்று நெருக்கடியில் மிக முக்கியமான பங்களிப்பாக அமைகிறது.

பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்துக்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டமாகும். 

இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான தலைமையைக் கட்டியெழுப்புவதில்தான் எதிர்காலம் தங்கியுள்ளது.

அந்தத் தலைமையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஆகும்.

*****

பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது

இந்தக் கட்டுரைகளில், ட்ரொட்ஸ்கி பாசிசத்தின் அரசியல் மற்றும் சமூக மூலங்களை ஆய்வு செய்து, இந்தக் கொடிய அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான மூலோபாய மற்றும் தந்திரோபாய முறைகளை விளக்குகிறார்.

ட்ரொட்ஸ்கியின் எழுத்துகளில் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கியமான கோட்பாடுகள், பாசிசத்திற்கெதிராக தொழிலாளர் வர்க்கம் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதும், தற்பாதுகாப்பிற்காக அதனை அரசியல் மற்றும் கொள்கை தெளிவுடன் ஆயுதபாணியாக்குவதுமாகும். மத்தியதர வர்க்கத்தின் ஊசலாட்ட நிலைகளை சோசலிசத்தின் பக்கம் இழுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொழிலாளர் வர்க்கம் தன் புரட்சிகர நோக்குநிலையை உருவாக்க வேண்டிய அவசியத்தை ட்ரொட்ஸ்கி தனது அனைத்து எழுத்துகளிலும் வலியுறுத்தியுள்ளார்.

***

1. பாசிசம் - என்றால் அது என்ன?

நவம்பர் 15, 1931 இல் ஒரு ஆங்கில தோழருக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்

ஜனவரி 16, 1932 இல் தி மிலிட்டண்டில் (The Militant) அச்சிடப்பட்டது

பாசிசம் என்றால் என்ன? இப்பெயர் இத்தாலியில் தோன்றியது. எதிர்ப்-புரட்சி சர்வாதிகாரத்தின் அனைத்து வடிவங்களும் பாசிசமா இல்லையா (அதாவது இத்தாலியில் பாசிசம் வருவதற்கு முன்பு) இருந்தனவா?

ஸ்பெயினில் 1923-30 ல் இருந்த பிரிமோ டி ரிவேராவின் முன்னாள் சர்வாதிகாரம் கோமின்டனால் (கம்யூனிச அகிலம்) பாசிச சர்வாதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இது சரியானதா இல்லையா? அது தவறானது என்று நாங்கள் நம்புகிறோம்.

இத்தாலியில் பாசிச இயக்கம் என்பது பெரும் திரளான வெகுஜனங்களின் ஒரு தன்னெழுச்சியான இயக்கமாக இருந்ததுடன், புதிய தலைவர்கள் சாதாரண உறுப்பினர்களிலிருந்து வந்தார்கள். இது பெரும் முதலாளித்துவ சக்திகளால் வழிநடத்தப்பட்டும் நிதியளிக்கப்பட்டும் உருவான ஒரு இயக்கமாகும்; தோற்றுவாயில் இது ஒரு சாமானியர் இயக்கம் (plebeian movement) எனினும், அது குட்டி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும், சேரிப் பாட்டாளி வர்க்கத்திடமிருந்தும், மேலும் ஒரு வரையறுக்கப்பட்ட அளவு தொழிலாளர் வெகுஜனங்களிடமிருந்தும் ஆதரவு பெற்றதிலிருந்தே உருவெடுத்தது.

பிரிமோ டே ரிவேரா ஒரு உயர்குடிப் பிரபு. அவர் ஒரு உயர் இராணுவ மற்றும் அதிகாரத்துவ பதவியை வகித்தார் மற்றும் கத்தலோனியாவின் தலைமை ஆளுநராக இருந்தார். அரசு மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் அவர் தனது ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டார். ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் சர்வாதிகாரங்கள் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட சர்வாதிகார வடிவங்கள் ஆகும். அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். பழைய இராணுவ நிறுவனங்களை பாசிச ஆயுதக் குழுவினருடன் சமரசம் செய்வதில் முசோலினிக்கு சிரமம் இருந்தது. இந்தப் பிரச்சனை பிரிமோ டே ரிவேராவிற்கு இருக்கவில்லை.

ஜேர்மனியிலுள்ள பாசிச இயக்கம் பெரும்பாலும் இத்தாலிய இயக்கத்திற்கு ஒத்ததாகவே இருந்தது. அது ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது; அதன் தலைவர்கள், அந்த வெகுஜன ஆதரவை ஈர்க்கும் நோக்கில் பெருமளவிலான சோசலிச வாய்வீச்சுகளை பயன்படுத்தினர். வெகுஜன இயக்கம் உருவாக இந்த மாதிரியான வாய்வீச்சு நிச்சயமாக ஒரு தேவையாக இருந்தது.

உண்மையான அடிப்படை (பாசிசத்திற்கு) குட்டி முதலாளித்துவமாகும். இத்தாலியில், அது ஒரு மிகப் பெரிய தளத்தைக் கொண்டுள்ளது - சிற்றூர்கள், நகரங்களின் குட்டி முதலாளித்துவ வர்க்கம், மற்றும் விவசாய வர்க்கம். ஜேர்மனியிலும் இதேபோல் பாசிசத்திற்கு ஒரு பெரிய தளம் உள்ளது….

புதிய மத்தியதர வர்க்கம், அரசின் அதிகாரிகள், தனியார் நிர்வாகிகள் முதலானோர் இத்தகைய அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு உண்மை என்று இதைக் கூறலாம். ஆனால் இது ஒரு புதிய கேள்வி, அது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்….

பாசிசம் தொடர்பாக எதையும் முன்கணிப்பு செய்யும் திறன் இருக்க வேண்டுமானால், அந்தக் கருத்துக்கான ஒரு வரையறையை அது கொண்டிருக்க வேண்டும். பாசிசம் என்றால் என்ன? அதனுடைய அடிப்படை, அதனுடைய வடிவம் மற்றும் அதனுடைய பண்புகள் என்ன? அதனுடைய வளர்ச்சி எப்படி நடக்கும்? ஒரு விஞ்ஞான ரீதியாகவும் மற்றும் மார்க்சிச வழிமுறையிலும் பரிசீலிக்க வேண்டியது அவசியமாக இதற்கு இருக்கிறது.

2. முசோலினி எவ்வாறு வெற்றி பெற்றார்

அடுத்தது என்ன? ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கான முக்கிய கேள்விகள், 1932 - கட்டுரையிலிருந்து

முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் “வழக்கமான” பொலிஸ் மற்றும் இராணுவ சாதனங்கள், அவற்றின் பாராளுமன்ற திரைகளுடன் சேர்ந்து, சமூகத்தை ஒரு சமநிலை நிலையில் வைத்திருக்க இனியும் போதுமானதாக இல்லை என்ற தருணத்தில் பாசிச ஆட்சியின் திருப்பம் வந்து சேர்கிறது. பாசிச முகவாண்மையின் ஊடாக, நிதி மூலதனம் தானே உருவாக்கிய விரக்தியையும் வெறியையும் பயன்படுத்தி, அதே மூலதனம் தான் பைத்தியக்கார குட்டி முதலாளித்துவத்தின் பெருந்திரளையும், வர்க்கமற்ற மற்றும் நெறிபுறழ்விற்கு உட்பட்ட உதிரிப் பாட்டாளி வர்க்க வெகுஜனங்களையும் இயக்குகிறது.

பாசிசத்திடமிருந்து முதலாளித்துவம் ஒரு முழுமையான பணியைக் கோருகிறது; உள்நாட்டுப் போரின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்கியவுடன், அது ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு சமாதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் பாசிச முகவாண்மையானது குட்டி முதலாளித்துவத்தை ஒரு தகர்க்கும் சக்தியைப் போல பயன்படுத்தி, அதனுடைய பாதையில் இருக்கும் அனைத்து தடைகளையும் வெற்றிகொண்டு, ஒரு முழுமையான பணியைச் செய்கிறது. பாசிசம் வெற்றிபெற்ற பிறகு, நிதி மூலதனமானது நேரடியாகவும் உடனடியாகவும் ஒரு எஃகு குறட்டில் இருப்பது போலவே அனைத்து அங்கங்களையும் மற்றும் இறையாண்மையுடைய நிறுவனங்களையும், அரசின் நிர்வாக, நிறைவேற்று மற்றும் கல்வி அதிகாரங்களை அதனுடைய கைகளில் திரட்டிக்கொள்கிறது: அதாவது இராணுவத்துடன் சேர்ந்து முழு அரசு இயந்திரங்களும், நகராட்சிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், பத்திரிகைத் துறைகள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவையாகும். ஒரு அரசு பாசிசமாக மாறுகிறது என்பதற்கான அர்த்தம், முசோலினி வகுத்த மாதிரிகளைப் பின்பற்றி அதன் நிர்வாக வடிவங்களும் செயல்முறைகளும் மாற்றப்படுகின்றன என்பதிலேயே மட்டுப்படுவதில்லை — அந்த மாற்றங்கள், இறுதியில், மிகச் சிறிய பங்கு மட்டுமே வகிக்கின்றன. பாசிசத்தின் உண்மையான சாரம் என்பது, தொழிலாளர் அமைப்புகள் முற்றாக அழித்தொழிக்கப்படுவது; பாட்டாளி வர்க்கம் ஒரு வடிவமற்ற, சிதைந்த நிலையிலாக்கப்படுவது; மேலும் அதன் சுயாதீனமான அரசியல் உருவாக்கத்தைத் தடுக்கும் வகையில், வெகுஜனங்களுக்குள் ஆழமாக ஊடுருவும் நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுவது என்பதிலேயே இருக்கிறது. இதுவே பாசிசத்தின் சாரம்சமாகும்.....

* * *

இத்தாலியப் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை சீர்திருத்தவாதிகள் காட்டிக் கொடுத்ததன் உடனடியான வெளிப்பாடே இத்தாலிய பாசிசம் ஆகும். [முதலாம் உலகப்] போர் முடிவுற்றதிலிருந்து, இத்தாலியில் புரட்சிகர இயக்கத்தில் ஒரு மேல்நோக்கிய போக்கு இருந்தது. மேலும், செப்டம்பர் 1920 இல் அது தொழிலாளர்களால் தொழிற்சாலைகளையும் தொழிற்துறைகளையும் (உற்பத்தித் துறைகளையும்) கைப்பற்ற வழிவகுத்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஒரு உண்மையான யதார்த்தமாக இருந்தது; அதை ஒழுங்கமைத்து, அதிலிருந்து தேவையான அனைத்து முடிவுகளையும் எடுப்பது மட்டுமே குறையாக இருந்தது. சமூக ஜனநாயகம் அச்சமடைந்து மீண்டும் தலைதூக்கியது. அதன் துணிச்சலான மற்றும் வீரமான முயற்சிகளுக்குப் பிறகு, பாட்டாளி வர்க்கம் வெற்றிடத்தை எதிர்கொண்டது. புரட்சிகர இயக்கத்தின் சீர்குலைவு பாசிசத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக மாறியது. செப்டம்பரில், புரட்சிகர முன்னேற்றம் ஸ்தம்பித்தது; நவம்பர் ஏற்கனவே பாசிஸ்டுகளின் முதலாவது பெரும் ஆர்ப்பாட்டத்தைக் (போலோன்யாவைக் கைப்பற்றியது) கண்டது.[1]

செப்டம்பர் பேரழிவின் பின்னரும் கூட, பாட்டாளி வர்க்கம் தற்காப்புச் சமர்களை நடத்தும் திறன் படைத்ததாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால், சமூக ஜனநாயகம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான் கவலை கொண்டிருந்தது: அதாவது ஒன்றன் பின் ஒன்றாக சலுகைகளை கொடுத்து தொழிலாளர்களை சமரில் இருந்து விலக்கிக் கொள்வதாகும். தொழிலாளர்களின் சாந்தமான நடத்தை பாசிசவாதிகளுக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்தின் “பொதுக் கருத்தை” மீட்டெடுக்கும் என்று சமூக ஜனநாயகம் நம்பியது. மேலும், சீர்திருத்தவாதிகள் விக்டர் இம்மானுவல் அரசரின் உதவியைக் கூட வலுவாகக் நம்பினர். கடைசி மணிநேரம் வரை, அவர்கள் முசோலினியின் குண்டர்களுடன் சமரிடுவதிலிருந்து தொழிலாளர்களை வலிமையுடனும் முக்கியத்துடனும் தடுத்தனர். ஆனால், அது அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் மேற்பூச்சுடன், அந்த மகுடம் பாசிசத்தின் பக்கம் சென்றுவிட்டது. கீழ்ப்படிதலால் பாசிசத்தை சோதிக்கக்கூடாது என்று கடைசி நேரத்தில் நம்பிய சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களுக்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்களின் இந்த பிரகடனம் ஒரு படுதோல்வியைச் சந்தித்தது. சீர்திருத்தவாதிகள் வெடித்துவிடும் என்ற பயத்தில் வெடிமருந்து தூளை நீண்ட காலமாக ஈரமாக்கி வைத்திருந்தனர். இறுதியாக நடுங்கும் கையால் அதற்கு ஒரு எரியும் திரியைப் பயன்படுத்தியபோது, வெடிமருந்து ​​தூள் பற்றி எரியவில்லை.

அதன் தொடக்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாசிசம் அதிகாரத்தில் இருந்தது. 1921-22 ஆம் ஆண்டின் மந்தநிலையைத் தொடர்ந்து, அதன் மேலதிகாரத்தின் முதலாவது காலகட்டம் ஒரு சாதகமான பொருளாதார இணைப்போடு ஒருங்கே நேரிட்ட விடயங்களுக்கு அது நன்றி செலுத்தியது. குட்டி முதலாளித்துவத்தின் முன்னோக்கி பாய்ச்சலெடுத்த சக்திகளால் பின்வாங்கும் பாட்டாளி வர்க்கத்தை பாசிஸ்டுகள் நசுக்கினர். ஆனால், இது ஒரே அடியில் அடையப்படவில்லை. முசோலினி ஆட்சியைப் பிடித்த பிறகும், அவர் தனது பாதையை சரியான எச்சரிக்கையுடன் தொடர்ந்தார்: அதாவது அவர் இன்னும் தயாரான மாதிரிகளைக் கூட கொண்டிருக்கவில்லை. முதல் இரண்டு ஆண்டுகளில், அரசியலமைப்பில் மாற்றம் கூட செய்யப்படவில்லை. பாசிச அரசாங்கம் ஒரு கூட்டணியின் பண்பை எடுத்துக் கொண்டது. இதற்கிடையில், பாசிசக் குழுக்களானது கத்திகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் அமைப்புகள் (clubs) உடனும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. இவ்வாறுதான் பாசிச அரசாங்கம் மெதுவாக உருவாக்கப்பட்டது, இதன் பொருள் அனைத்து சுயாதீனமான வெகுஜன அமைப்புகளின் கழுத்தை முழுமையாக நெரிப்பதாகும்.

முசோலினி பாசிசக் கட்சியையே அதிகாரத்துவமயமாக்குவதன் மூலம் இதை அடைந்தார். குட்டி முதலாளித்துவத்தின் முன்னோக்கி பாய்ச்சலெடுத்த சக்திகளைப் பயன்படுத்திய பிறகு பாசிசமானது, முதலாளித்துவ அரசின் பிடியில் அதை நெரித்தது. முசோலினி வேறு விதமாகச் செய்திருக்க முடியாது. அவர் ஒன்றுபடுத்தியிருந்த வெகுஜனங்களின் ஏமாற்றம், முன்னால் இருந்த மிக உடனடி ஆபத்தில் தன்னைத்தானே மூழ்கடித்துக் கொண்டிருந்தது. பாசிசம் அதிகார வர்க்கமாக மாறி, இராணுவ மற்றும் போலீஸ் சர்வாதிகாரத்தின் மற்றய வடிவங்களை மிக நெருக்கமாக அணுகுகிறது. அதன் முன்னாள் சமூக ஆதரவை அது இனி கொண்டிருக்கவில்லை. பாசிசத்தின் பிரதான இருப்பாக குட்டி முதலாளித்துவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று செயலற்றநிலை மட்டுமே பாசிச அரசாங்கத்திற்கு பாட்டாளி வர்க்கத்தை ஒரு சிதறடிக்கப்பட்ட மற்றும் உதவியற்ற நிலையில் வைத்திருக்க இயலச்செய்கிறது…

ஹிட்லரை பொறுத்தவரை அதன் அரசியலில், ஜேர்மன் சமூக ஜனநாயகத்தால் ஒரு வார்த்தையைக் கூட சேர்க்க முடியவில்லை. இத்தாலிய சீர்திருத்தவாதிகள் தங்கள் சொந்த காலத்தில் செய்ததை அதிக மனோபாவத்துடன் இன்னும் சிந்தனையுடன் மீண்டும் செய்கிறார்கள். பிந்தையது பாசிசத்தை ஒரு போருக்குப் பிந்தைய மனநோய் என்று விளக்கியது; ஜேர்மன் சமூக ஜனநாயகம் அதில் ஒரு “வெர்சாய்” அல்லது நெருக்கடி, மனநோயைக் காண்கிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், சீர்திருத்தவாதிகள் முதலாளித்துவத்தின் பொறிவில் இருந்து வளர்ந்து வரும் ஆனால் இரு சந்தர்ப்பங்களிலும், பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் நெருக்கடிக்குள் இருந்து உருவாகும் ஒரு வெகுஜன இயக்கம் என்ற அதன் அடிப்படை வர்க்க சாரத்தைச் சீர்திருத்தவாதிகள் முற்றாக புறக்கணித்தனர். [2]

தொழிலாளர்களின் புரட்சிகர அணிதிரட்டலுக்கு பயந்து, இத்தாலிய சீர்திருத்தவாதிகள் “அரசு” பற்றிய அனைத்து நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர். அவர்களின் முழக்கம், “உதவி! விக்டர் இம்மானுவேல், அழுத்தம் கொடுங்கள்!” ஜேர்மனிய சமூக ஜனநாயகம் அரசியலமைப்பிற்கு விசுவாசமான ஒரு அரசர் போன்ற ஒரு ஜனநாயக அரணைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் ஒரு ஜனாதிபதியிடம் திருப்தியடைய வேண்டும்- “உதவி! ஹிண்டன்பர்க், அழுத்தம் கொடுங்கள்! ”[3]

முசோலினிக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில்—அதாவது, அவரது முன்னிலையில் பின்னடைவதைச் செய்துகொண்டிருக்கும் போதே, “ஒரு கோழையாக இருப்பதற்கு ஒருவருக்கு ஆண்மை இருக்க வேண்டும்” என்ற தனது திகைப்பூட்டும் குறிக்கோளை பிலிப்போ துராட்டி தளர்த்தினார். [4] ஜேர்மன் சீர்திருத்தவாதிகள் தங்கள் முழக்கங்களில் அவ்வளவு துணிச்சலானவர்கள் அல்ல. “செல்வாக்கற்ற தன்மையின் கீழ் தைரியத்தை” (Mut zur Unpopularitaet) அவர்கள் கோருகின்றனர்- இது ஒரே விஷயத்தின் அளவுகள். ஒருவர் எதிரியுடன் சொந்த கோழைத்தனமான தட்டிக்கழித்தலால் தூண்டப்படும் செல்வாக்கற்ற தன்மைக்கு யாரும் அஞ்சக் கூடாது.

ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குகின்றன. நிகழ்வுகளின் அணிவகுப்பு, சமூக-ஜனநாயகக் கட்சித் தலைமையை சார்ந்திருந்தால் ஹிட்லரின் வாழ்க்கை உறுதி செய்யப்படும்.

எவ்வாறாயினும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியானது இத்தாலிய அனுபவத்திலிருந்து சிறிதளவு கற்றுக் கொண்டது என்பதை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பாசிசம் தோன்றிய அதே காலகட்டத்தில் உருவானது. ஆனால், பாசிசவாதிகளை அதிகாரத்திற்கு அழைத்துச் சென்ற அதே புரட்சிகரச் சூழல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க உதவின. பாசிச ஆபத்தின் முழு வீச்சு பற்றி அது ஒரு கணக்கை கொடுக்கவில்லை; அது புரட்சிகர பிரமைகளால் தன்னை தூங்க வைத்துக்கொண்டது; அது ஐக்கிய முன்னணியின் கொள்கைக்கு சமரசமற்ற பகையாக இருந்தது; சுருக்கமாகச் சொன்னால், அது அனைத்து குழந்தைப் பருவ நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. சிறிய அதிசயம்! அதற்கு இரண்டு வயது மட்டும்தான். அதன் பார்வையில், பாசிசம் வெறும் “முதலாளித்துவ பிற்போக்காக” மட்டுமே இருப்பதாக தோன்றியது. பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக குட்டி முதலாளித்துவத்தை அணிதிரட்டியதிலிருந்து உருவாகும் பாசிசத்தின் குறிப்பிட்ட பண்புகளை கம்யூனிஸ்ட் கட்சியால் கண்டுகொள்ள முடியவில்லை. கிராம்சியைத் தவிர, கம்யூனிஸ்ட் கட்சியானது பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறைக் கூட அனுமதிக்காது என்று இத்தாலியத் தோழர்கள் எனக்கு அறிவித்தனர். பாட்டாளி வர்க்க புரட்சி தோல்வியை சந்தித்தவுடன், முதலாளித்துவம் அதன் அடித்தளத்தை நிலைநிறுத்தியதும், எதிர்ப் புரட்சி வெற்றியடைந்தது. இன்னும் எந்தவிதமான எதிர்ப்-புரட்சிகர எழுச்சி இருக்க முடியும்? முதலாளித்துவ வர்க்கம் எப்படி தன்னையே எதிர்த்து எழ முடியும்? இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நோக்குநிலையின் சாரம்சம் இதுதான். மேலும், இத்தாலிய பாசிசம் அப்போது ஒரு புதிய நிகழ்வாக, இப்போதுதான் உருவாகத் தொடங்கிய நிலையில் இருந்தது

என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது; ஒரு அனுபவமிக்க கட்சிக்கு அதன் குறிப்பிட்ட பண்புகளை வேறுபடுத்தி பார்ப்பது கூட எளிதான காரியம் அல்லாததாக இருந்திருக்கும். [5]

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தலைமையானது, இத்தாலிய கம்யூனிஸ்டுகள் தங்கள் தொடக்கப் புள்ளியிலிருந்து எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டை கிட்டத்தட்ட அதே வழியில் மீண்டும் உருவாக்குகிறது; அதாவது பாசிசம் என்பது முதலாளித்துவ பிற்போக்குத்தனமே தவிர வேறு ஒன்றும் இல்லை; பாட்டாளி வர்க்கப் பார்வையில், பல்வேறு வகைப்பட்ட முதலாளித்துவப் பிற்போக்குத்தனங்களுக்கும் இடையிலான வேறுபாடு அர்த்தமற்றது. இந்த கொச்சையான தீவிரவாதம் குறைவான மன்னிப்புக்குரியது, ஏனென்றால் ஜேர்மன் கட்சியானது இத்தாலியருடன் ஒப்பிடத்தக்க காலத்தை விட மிகவும் பழமையானது; கூடுதலாக, மார்க்சிசம் இத்தாலியில் ஏற்பட்ட துன்பகரமான அனுபவத்தால் இப்போது செழுமைப் பெற்றிருக்கிறது. பாசிசம் ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று வலியுறுத்துவது அல்லது அது அதிகாரத்திற்கு வருவதற்கான சாத்தியத்தை மறுப்பது, அரசியல் ரீதியாக ஒரே விஷயத்தை சமனாக்குகிறது. பாசிசத்தின் குறிப்பிட்ட இயல்பைப் புறக்கணிப்பதன் மூலம், அதற்கு எதிராக போராடுவதற்கான விருப்பமானது தவிர்க்க முடியாமல் முடங்கிப் போய் விடுகிறது.

இந்தப் பழியின் சுமையை நிச்சயமாக மூன்றாம் அகிலத்தின் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும். இத்தாலிய கம்யூனிஸ்ட்டுகள் எல்லோருக்கும் மேலாக, தங்கள் குரல்களை எச்சரிக்கையுடன் எழுப்ப வேண்டிய கடமையிலிருந்தார்கள். ஆனால் மனுல்ஸ்கியுடன் (Manuilsky) சேர்ந்து ஸ்டாலின், அவர்களது சொந்த அழிவின் மிக முக்கியமான படிப்பினைகளை நிராகரிக்கும்படி அவர்களை கட்டாயப்படுத்தினார். [6]

எர்கோலி (Ercoli) எப்படியான விடா முயற்சியுடன் சமூக பாசிசத்தின் நிலைக்கு - அதாவது, ஜேர்மனியில் பாசிச வெற்றிக்காக செயலற்ற நிலையில் காத்திருக்கும் நிலைக்கு மாறிவிட்டார் என்பதை நாம் ஏற்கனவே அவதானித்திருக்கிறோம். [7]

விளக்கக் குறிப்புகள்

[1] பாசிச வன்முறை நடவடிக்கை பொலோன்யாவில் (இத்தாலி ) 1920 நவம்பர் 21 இல் தொடங்கியது. நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சமூக-ஜனநாயக கவுன்சிலர்கள், புதிய மேயரை அறிமுகப்படுத்த நகர மண்டபத்திலிருந்து வெளியேவந்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். அதில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 100 பேர் காயமடைந்தனர். “ரெட் லீக்க்குகளின்” (“Red Leagues”) ஒரு கோட்டையைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களுக்கு பாசிஸ்டுகள் “தண்டனை கொடுக்கும் பயணங்களை” (“punitive expeditions”) மேற்கொண்டனர். கறுப்புச் சட்டை (Blackshirt) “நடவடிக்கை குழுக்கள்” பெரிய நிலவுடைமையாளர்களால் வழங்கப்பட்ட வாகனங்களில், கிராமங்களை மின்னல் தாக்குதல்களில் கைப்பற்றி, இடதுசாரி விவசாயிகளையும் தொழிலாளர் தலைவர்களையும் அடித்து, கொலை செய்து, தீவிரமாக இயங்குபவர்களின் தலைமை அலுவலகத்தைத் தாக்கி, மக்களை அச்சுறுத்தினார்கள். அவர்களின் எளிதான வெற்றிகளால் தைரியமடைந்த பாசிஸ்டுகள் பின்னர் பெரிய நகரங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடுத்தனர்.

[2] வேர்சாய் ஒப்பந்தம்: முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனிக்கு கட்டாயமாக விதிக்கப்பட்டது தான் வேர்சாய் ஒப்பந்தம். அதன் மிகவும் வெறுக்கப்பட்ட அம்சம் போர் சேதங்களுக்கும் இழப்புகளுக்கும் “நஷ்டஈட்டின்” வடிவில் வெற்றி பெற்ற நேச நாடுகளுக்கு முடிவில்லா நிவாரணம் செலுத்துவதாகும். மேற்கண்ட பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “நெருக்கடி” என்பது 1929 வோல் ஸ்ட்ரீட் பொறிவிற்குப் பின்னர் முதலாளித்துவ உலகத்தை வீழ்த்திய பொருளாதார மந்தநிலையாகும்.

[3] ஃபீல்ட் மார்ஷல் போல் வான் ஹிண்டன்பர்க் (1847-1934)என்பவர், முதலாம் உலகப் போரில் புகழ் பெற்ற ஜங்கர் ஜெனரலாக இருந்தார், பின்னர் வெய்மர் குடியரசின் ஜனாதிபதியானார். 1932 ஆம் ஆண்டில், சமூக ஜனநாயகவாதிகள் நாஜிக்களை விட ஒரு “குறைவான தீமை” ஆகக் கருதி அவரை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆதரித்தனர். ஆனால், அவர் ஜனவரி 1933 இல் ஹிட்லரை சான்சுலராக நியமித்தார்.

[4] பிலிப்போ துராட்டி (1857-1937), இத்தாலிய சோசலிசக் கட்சியின் முன்னணி சீர்திருத்தவாத கோட்பாட்டாளர்.

[5] அன்டோனியோ கிராம்சி (1891-1937)) இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஆவார். இவர் 1926 இல் முசோலினியால் சிறையிலடைக்கப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து அவர் சிறையில் இறந்தார். இடது எதிர்ப்பு அணிக்கு எதிரான ஸ்டாலினின் அழிப்பு நடவடிக்கையை எதிர்த்து, இத்தாலிய கட்சியின் அரசியல் குழுவின் பெயரில் சிறையில் இருந்து அவர் ஒரு கடிதத்தை அனுப்பினார். அப்போது மாஸ்கோவில் மூன்றாம் அகிலத்தின் இத்தாலிய பிரதிநிதியாக இருந்த தொக்ளியாட்டி (Togliatti) அவர் அந்தக் கடிதத்தை மறைத்துவைத்தார்.

[6] திமித்ரி மானுல்ஸ்கி (1883-1959): 1928 முதல் 1934 வரை மூன்றாம் அகிலத்தின் நிறைவேற்று குழுவிற்கு தலைமை வகித்தார்; அவருடைய பதவி நீக்கம் தீவிர இடதுவாதத்திலிருந்து மக்கள் முன்னணிக் காலத்தின் சந்தர்ப்பவாதத்திற்கு மாறுவதை முன்னறிவித்தது. பின்னர் இராஜதந்திர மேடையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக தோன்றினார்.

[7] எர்கோலி: பால்மிரோ தொக்லியாட்டியின் (1893-1964) கோமின்டன் புனைப் பெயர். கிராம்சி சிறைவாசத்திற்குப் பிறகு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்கினார்.

3. ஜேர்மனியில் பாசிச அபாயம் உருவாகிறது

கம்யூனிஸ்ட் அகிலத்தில் மற்றும் ஜேர்மன் நிலைமையில் திருப்பம், 1930 – கட்டுரையிலிருந்து

ஜேர்மன் தேர்தல் முடிவுகளை [செப்டம்பர் 1930] கம்யூனிசத்தின் ஒரு மகத்தான வெற்றியாக மூன்றாம் அகிலத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகைகள் இப்போது சித்தரிக்கின்றன. இது சோவியத் ஜேர்மனியின் (Soviet Germany) முழக்கத்தை அன்றைய ஒழுங்கில் வைக்கிறது. அதிகாரத்துவ நம்பிக்கையாளர்கள் தேர்தல் புள்ளிவிபரங்களால் வெளிப்படுத்தப்படும் சக்திகளின் உறவுகளின் அர்த்தத்தை பிரதிபலிக்க விரும்பவில்லை. நிலைமையால் உருவாக்கப்பட்ட புரட்சிகர பணிகள் மற்றும் அது ஏற்படுத்திய தடைகள் ஆகியவற்றிலிருந்து சுயாதீனமாக அதிகரித்த கம்யூனிஸ்ட்டுக்களின் வாக்குகளின் எண்ணிக்கையை அவர்கள் ஆராய்கின்றனர். 1928ஆம் ஆண்டில் 3,300,000 வாக்குகளுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, 1930ஆம் ஆண்டில் சுமார் 4,600,000 வாக்குகளைப் பெற்றது. “சாதாரண” பாராளுமன்ற பொறிமுறை கண்ணோட்டத்தில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட, 1,300,000 வாக்குகளின் அதிகரிப்பு கணிசமாக இருக்கிறது. ஆனால், 800,000 வாக்குகளிலிருந்து 6,400,000 வாக்குகளுக்கு பாசிசத்தின் பாய்ச்சலைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி முற்றிலும் மங்கலாக இருந்தது. தேர்தல்களை மதிப்பிடுவதற்கு சமமான முக்கியமான உண்மை என்னவென்றால், சமூக ஜனநாயகக் கட்சி, கணிசமான இழப்புகளை சந்தித்தபோதும், அதன் அடிப்படை உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொண்டதுடன், கம்யூனிஸ்ட் கட்சியை விட கணிசமாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்க வாக்குகளைப் பெற்றது [8,600,000].

இதற்கிடையில், “சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் எந்தக் கலவையானது தொழிலாள வர்க்கத்தை அதிக வேகத்துடன் கம்யூனிசத்தை நோக்கி திருப்ப முடியும்?” என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால், இன்றைய ஜேர்மனியின் நிலைமையை விட அத்தகைய திருப்பத்திற்கு மிகவும் சாதகமான சூழ்நிலைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டை நம்மால் காண முடியவில்லை: அதாவது யங்கின் முட்டுக்கட்டை (Young’s noose) [1], பொருளாதார நெருக்கடி, விதிகளின் சிதைவு, பாராளுமன்றவாதத்தின் நெருக்கடி, அதிகாரத்தில் உள்ள சமூக ஜனநாயகத்தின் பயங்கரமான சுய வெளிப்பாடு. இந்த உறுதியான வரலாற்று சூழ்நிலைகளின் கண்ணோட்டத்தில், 1,300,000 வாக்குகள் பெற்றிருந்தாலும், நாட்டின் சமூக வாழ்க்கையில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிட்ட ஈர்ப்பு விகிதாசார அடிப்படையில் குறைவாகவே உள்ளது.

கம்யூனிசத்தின் நிலைப்பாட்டின் பலவீனம், கம்யூனிச அகிலத்தின் கொள்கையுடனும் ஆட்சியுடனும் பிரிக்கவியலாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய சமூக எடையை, தற்போதைய வரலாற்றுச் சூழ்நிலைகள், அது முன் வைக்கும் உறுதியான மற்றும் ஒத்திவைக்க முடியாத பணிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி ஒரு ஆதாயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தவறுகள் மற்றும் தோல்விகளின் அடிகளின் கீழ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை பெரிய நோக்கங்களுக்கும் முன்னோக்குகளுக்கும் பயன்படுத்தப்படாமல் போய்விட்டது என்பதை இது நிரூபிக்கிறது. நேற்று அது தனது சொந்த சாத்தியங்களை குறைத்து மதிப்பிட்டது என்றால், இன்று அது மீண்டும் சிரமங்களை குறைத்து மதிப்பிடுகிறது. இந்த வழியில், ஒரு ஆபத்து மற்றொரு ஆபத்தால் பெருக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியின் முதல் பண்பு— யதார்த்தத்தை நேரடியாக ஏற்றுக் கொள்ளுவதுதான்.

* * *

சமூக நெருக்கடியானது பாட்டாளி வர்க்கப் புரட்சியைக் கொண்டுவருவதற்கு, மற்ற நிலைமைகளுக்கு மேலதிகமாக, குட்டி முதலாளித்துவ வர்க்கங்களின் ஒரு தீர்க்கமான மாற்றம் பாட்டாளி வர்க்கத்தின் திசையில் ஏற்படுவது அவசியமாகும். இது பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே நாட்டின் தலைவராக முன்னிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

கடந்த தேர்தல் எதிர் திசையில் ஒரு மாற்றத்தை வெளிப்படுத்தியது — இங்குதான் அதன் முக்கிய அறிகுறியின் முக்கியத்துவம் உள்ளது. நெருக்கடியின் தாக்கத்தின் கீழ், குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் திசையில் அல்லாமல், மிகவும் தீவிரமான ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் திசையில் நகர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளை அதன் பின்னால் இழுத்தது.

தேசிய சோசலிசத்தின் (நாஜிசம்) மாபெரும் வளர்ச்சி இரண்டு காரணிகளின் வெளிப்பாடாகும்: ஒன்று, குட்டி முதலாளித்துவ வெகுஜனங்களை சமநிலையிலிருந்து தள்ளிய ஆழமான சமூக நெருக்கடி; மற்றொன்று, மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு புரட்சிகரத் தலைமையின் கீழ் செயல்படும் உண்மையான புரட்சிகரக் கட்சி இல்லாதது. கம்யூனிஸ்ட் கட்சியானது புரட்சிகர நம்பிக்கையின் கட்சி என்றால், பாசிசம், ஒரு வெகுஜன இயக்கமாக, எதிர்-புரட்சிகர விரக்தியின் கட்சியாகும். புரட்சிகர நம்பிக்கை முழு பாட்டாளி வர்க்க வெகுஜனத்தையும் அரவணைக்கும்போது, அது தவிர்க்கவியலாமல் குட்டி முதலாளித்துவத்தின் கணிசமான மற்றும் வளர்ந்து வரும் பிரிவுகளை புரட்சிப் பாதையில் இழுக்கிறது. துல்லியமாக இந்தத் தேர்தல் இதற்கு நேர்மாறான படத்தை வெளிப்படுத்தியது: அதாவது எதிர்ப்புரட்சிகர விரக்தியடைந்த குட்டி முதலாளித்துவ வெகுஜனத்தை மிகவும் சக்தியுடன் பற்றிக் கொண்டுள்ளதால், அது பாட்டாளி வர்க்கத்தின் பல பிரிவுகளை அதன் பின்னால் இழுத்துச் சென்றுள்ளது...

ஜேர்மனியில் பாசிசம் ஒரு உண்மையான ஆபத்தாக மாறியுள்ளது, முதலாளித்துவ ஆட்சியின் உதவியற்ற நிலை, இந்த ஆட்சியில் சமூக ஜனநாயகத்தின் பழமைவாத பாத்திரம் மற்றும் அதை ஒழிப்பதற்கான கம்யூனிஸ்ட் கட்சியில் குவிந்துள்ள சக்தியற்ற தன்மை ஆகியவற்றின் கூர்மையான வெளிப்பாடாக இது உள்ளது. இதை மறுப்பவர் குருடராகவோ அல்லது தற்பெருமை பேசுபவராகவோ இருக்கலாம்...

வளர்ச்சியின் வேகம் குறித்த கேள்வி தொடர்பான ஆபத்து குறிப்பிட்ட தீவிரத்தை பெறுகிறது, இது நம்மை மட்டும் சார்ந்து இல்லை. தேர்தல் வெளிப்படுத்திய அரசியல் வளைவின் மலேரியா தன்மை, தேசிய நெருக்கடியின் வளர்ச்சியின் வேகம் மிக விரைவாக மாறக்கூடும் என்ற உண்மையைப் பேசுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு புறம், ஒரு புரட்சிகர சூழ்நிலையின் முதிர்ச்சிக்கும் மறுபுறம் புரட்சிகர கட்சியின் பலவீனம் மற்றும் மூலோபாய இயலாமைக்கும் இடையிலான பழைய சோகமான முரண்பாடு, ஒரு புதிய வரலாற்று தளத்தில், ஜேர்மனியில் மிக விரைவில் நிகழும் நிகழ்வுகளின் போக்கு மீண்டும் எழக்கூடும். இதை தெளிவாகவும், வெளிப்படையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான நேரத்திலும் சொல்ல வேண்டும்.

* * *

மாஸ்கோவில் இருந்து, நேற்றைய தவறுகளை மூடிமறைத்து, பாதையின் புதிய வெற்றியைப் பற்றி பொய்யான கூக்குரல்கள் மூலம் நாளைய தினத்தை தயார் செய்யும் அதிகாரத்துவ கௌரவக் கொள்கைக்கான சமிக்ஞை ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் வெற்றியை மிகையாக மிகைப்படுத்தி, சிரமங்களை அரக்கத்தனமாக குறைத்து மதிப்பிட்டு, பாசிசத்தின் வெற்றியைக் கூட பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சாதகமான காரணியாக விளக்கிய பிராவ்தா, “கட்சியின் வெற்றிகள் நம்மை மயக்கமடையச் செய்யக் கூடாது” என்று சுருக்கமாக விளக்குகிறது. ஸ்டாலினிச தலைமையின் துரோகக் கொள்கை இங்கும் உண்மையாகவே உள்ளது. நிலைமை பற்றிய பகுப்பாய்வு விமர்சனமற்ற அதிதீவிரவாத உணர்வில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் கட்சி உணர்வுபூர்வமாக சாகசப் பாதையில் தள்ளப்படுகிறது. அதே நேரத்தில், “தலை கிறுகிறுப்பு” என்ற சம்பிரதாய சொற்றொடரின் உதவியுடன் ஸ்டாலின் முன்கூட்டியே தனது வாதத்தை தயார் செய்கிறார். குறுகிய பார்வை கொண்ட, நேர்மையற்ற இந்தக் கொள்கைதான் ஜேர்மனியப் புரட்சியை அழிக்கக்கூடும்.

* * *

சமூக-ஜனநாயக தொழிலாளர்களின் பழமைவாத எதிர்ப்பின் வலிமையை முன்கூட்டியே கணக்கிட முடியுமா? அது முடியாது. கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில், இந்த வலிமை பிரம்மாண்டமாகத் தெரிகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், சமூக ஜனநாயகத்தை ஒன்றிணைக்க எல்லாவற்றிற்கும் மேலாக உதவியது கம்யூனிஸ்ட் கட்சியின் தவறான கொள்கையாகும். இது சமூக பாசிசத்தின் அபத்தமான கோட்பாட்டில் அதன் மிக உயர்ந்த பொதுமைப்படுத்தலைக் கண்டது. சமூக ஜனநாயக அணிகளின் உண்மையான எதிர்ப்பை அளவிடுவதற்கு, வேறு ஒரு அளவீட்டு கருவி தேவைப்படுகிறது. அதாவது, ஒரு சரியான கம்யூனிச தந்திரோபாயம் ஆகும். இந்த நிலைமையுடன் — அது ஒரு சிறிய நிபந்தனை அல்ல — சமூக ஜனநாயகத்தின் உள் ஐக்கியத்தின் அளவை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் வெளிப்படுத்த முடியும்.

வேறு வடிவத்தில், மேலே கூறியது பாசிசத்திற்கும் பொருந்தும்: அதாவது இது மற்றய நிலைமைகளைத் தவிர, சினோவியேவ்-ஸ்டாலின் [2] மூலோபாயத்தின் அதிர்வுகளில் வெளிப்பட்டது. தாக்குதலுக்கான அதன் பலம் என்ன? அதன் ஸ்திரத்தன்மை என்ன? நம்பிக்கையாளர்கள் (மூன்றாம் அகிலம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள்) நமக்கு உத்தரவாதம் அளிப்பது போல, அது அதன் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதா, அல்லது அது ஏணியின் முதல் படியில் மட்டுமே உள்ளதா? இதை இயந்திரத்தனமாக முன்னறிவிக்க முடியாது. அதை செயலால் மட்டுமே தீர்மானிக்க முடியும். வர்க்க எதிரியின் கைகளில் ஒரு சவரக்கத்தியாக இருக்கும் பாசிசத்தைப் பொறுத்தவரை, கம்யூனிச அகிலத்தின் தவறான கொள்கை குறுகிய காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மறுபுறம், ஒரு சரியான கொள்கை —இவ்வளவு குறுகிய காலத்தில் அல்ல, அது உண்மைதான்— பாசிசத்தின் நிலைப்பாடுகளை கீழறுக்க முடியும்...

விதிவிலக்கான சாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், “சமூக பாசிசம்” என்ற சூத்திரத்தின் உதவியுடன் சமூக ஜனநாயகத்தின் கட்டமைப்பை அசைக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக சக்தியற்றது என்று நிரூபிக்கப்பட்டால், உண்மையான பாசிசம் இப்போது இந்த கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இது தீவிரவாதம் என்று அழைக்கப்படும் வார்த்தை சூத்திரங்களால் அல்ல, மாறாக வெடிபொருட்களின் இரசாயன சூத்திரங்களுடன் அச்சுறுத்துகிறது. சமூக ஜனநாயகம், அதன் முழுக் கொள்கையாலும் பாசிசத்தின் மலர்ச்சியைத் தயாரித்தது என்பது எவ்வளவு உண்மையாக இருந்தாலும், பாசிசம் முதன்மையாக அதே சமூக ஜனநாயகத்திற்கு ஒரு கொடிய அச்சுறுத்தலாக முன் வருகிறது என்பது எந்தளவுக்கு உண்மையாக இருந்தாலும், அதன் மகத்துவம் அனைத்தும் நாடாளுமன்ற-ஜனநாயக-அமைதிவாத வடிவங்கள் மற்றும் அரசாங்க முறைகளுடன் பிரிக்கவியலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது...

பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி என்ற கொள்கையானது இந்த நிலைமையில் இருந்து வருகிறது. இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைத் திறக்கிறது. எவ்வாறெனினும், வெற்றிக்கான ஒரு நிபந்தனை “சமூக பாசிசத்தின்” கோட்பாட்டையும் நடைமுறையையும் நிராகரிப்பதாகும். இதன் தீங்கு தற்போதைய சூழ்நிலைகளில் ஒரு நேர்மறையான நடவடிக்கையாக மாறுகிறது.

சமூக நெருக்கடி தவிர்க்கவியலாமல் சமூக ஜனநாயகத்திற்குள் ஆழமான பிளவுகளை உருவாக்கும். வெகுஜனங்களின் தீவிரமயமாக்கல் சமூக ஜனநாயகவாதிகளை பாதிக்கும். பாசிசத்திற்கு எதிரான பல்வேறு சமூக-ஜனநாயக அமைப்புகளுடனும் பிரிவுகளுடனும் நாம் தவிர்க்கவியலாமல் உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டியிருக்கும், இது தொடர்பாக தலைவர்களுக்கு திட்டவட்டமான நிபந்தனைகளை வெகுஜனங்களின் கண்களுக்கு முன் வைக்க வேண்டும். ... ஐக்கிய முன்னணி பற்றிய வெற்று உத்தியோகபூர்வ சொற்றொடரில் இருந்து நாம் ஐக்கிய முன்னணியின் கொள்கைக்கு திரும்ப வேண்டும், ஏனெனில் அது லெனினால் உருவாக்கப்பட்டது மற்றும் 1917 இல் போல்ஷிவிக்குகளால் எப்போதும் பயன்படுத்தப்பட்டது.

விளக்கக் குறிப்புகள்

[1] “யங்ஸ் நூஸ் (Young’s noose)”: யங் திட்டம் பற்றிய ஒரு குறிப்பு. 1920 களில் ஜேர்மன் இழப்பீடுகளுக்கான முகவர் ஜெனரலாக இருந்த அமெரிக்க பெரிய தொழிலதிபரான ஓவன் டி யங். 1929 கோடையில், வேர்சாய்ஸ் உடன்படிக்கையின்படி ஜேர்மனி இழப்பீடுகளை வழங்குவதற்கு “வசதியாக” தோல்வியுற்ற டேவ்ஸ் திட்டத்திற்கு மாற்றாக அவரது திட்டத்தை ஏற்றுக்கொண்ட மாநாட்டின் தலைவராக அவர் இருந்தார்.

[2] “ஜினோவியேவ்-ஸ்டாலின் மூலோபாயம்”: கிரிகோரி வைய். ஜினோவியேவ் (1883-1936), 1919 இல் மூன்றாம் அகிலம் நிறுவப்பட்டதிலிருந்து 1926 இல் ஸ்டாலினால் அகற்றப்படும் வரை அதன் தலைவராக இருந்தார். லெனினின் மரணத்திற்குப் பின்னர், சினோவியேவ் மற்றும் காமனேவ் ஆகியோர் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்டாலினுடன் (முக்கூட்டு) ஒரு அணி அமைத்து சோவியத் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினர். கம்யூனிச அகிலத்தில் சினோவியேவ்-ஸ்டாலின் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடு தொடர்ச்சியான தோல்விகளுக்கும் வாய்ப்புகளை இழந்ததற்கும் வழிவகுத்தது, குறிப்பாக 1923 ஜேர்மன் புரட்சியை கைவிட்டது. ஸ்ராலினுடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர், சினோவியேவ் ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு அணியுடன் தனது பின்தொடர்பை ஐக்கியப்படுத்தினார். ஆனால் 1928 இல், ஐக்கிய எதிர்ப்பாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சினோவியேவ் ஸ்டாலினிடம் சரணடைந்தார். மீண்டும் கட்சியில் சேர்ந்த அவர், 1932ல் மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்து விமர்சனக் கருத்துக்களையும் நிராகரித்த பின்னர், அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார், ஆனால் 1934 ஆம் ஆண்டில், அவர் வெளியேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1936 ஆம் ஆண்டில் மாஸ்கோ விசாரணைகளின் முதல் கட்டத்தில் அவர் “ஒப்புதல் வாக்குமூலம்” பெற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

4. ஒரு ஈசாப் நீதிக்கதை

ஒரு முறை ஒரு கால்நடை வியாபாரி சில காளைகளை இறைச்சிக் கூடத்திற்கு ஓட்டிச் சென்றார். பின்னர் கசாப்புக் கடைக்காரர் தனது கூர்மையான கத்தியுடன் இரவில் வந்தார்.

“நாங்கள் ஒன்றிணைவோம், இந்த கொலைகாரனை எங்கள் கொம்புகளால் குத்துவோம்” என்று காளைகளில் ஒன்று பரிந்துரைத்தது.

மனுயில்ஸ்கியின் நிறுவனத்தில் (மூன்றாம் அகிலம்) அரசியல் கல்வியைப் பெற்ற காளைகள் இவ்வாறு பதிலளித்தன, “நீங்கள் இணங்க விரும்பினால் கூறுங்கள், எங்களை தனது பிரம்புக் கம்புடன் இங்கு அழைத்து வந்த வியாபாரியை விட கசாப்புக்காரர் எந்த வகையில் மோசமானவர்?”.

“ஆனால் அதற்குப் பிறகு வியாபாரியையும் நாங்கள் கவனித்துக் கொள்ள முடியும்!”

“எதுவும் செய்யப் போவதில்லை” என்று தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்த காளைகள், ஆலோசனை கூறிய காளையிடம், “நீங்கள் இடதுபுறத்தில் இருந்து, எங்கள் எதிரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் நீங்களே ஒரு சமூக-கசாப்புக்காரர்” என்று பதிலளித்தன.

அத்தோடு அவைகள் ஒன்றிணைய மறுத்துவிட்டன.

5. ஜேர்மன் போலீசாரும் இராணுவமும்

அடுத்தது என்ன? ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கான முக்கிய கேள்விகள்

உண்மையான ஆபத்து ஏற்பட்டால், சமூக ஜனநாயகம் “இரும்பு முன்னணி” [1] மீது அல்ல, மாறாக பிரஷ்ய பொலிஸை நம்பியிருக்க வேண்டும். அது முன்கூட்டியே அனுமானங்களை உருவாக்குகிறது! பொலிஸ் முதலில் சமூக ஜனநாயக தொழிலாளர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டது என்ற உண்மை முற்றிலும் அபத்தமானது. இந்த சந்தர்ப்பத்தில் கூட நனவானது புறச்சூழலால் தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவ அரசின் சேவையில் ஒரு போலீஸ்காரராக மாறும் தொழிலாளி ஒரு முதலாளித்துவ போலீஸ்காரராக இருக்கிறார். அவர், ஒரு தொழிலாளி அல்ல. சமீப ஆண்டுகளில், இந்தப் போலீஸ்காரர்கள் நாஜி மாணவர்களை விட புரட்சிகர தொழிலாளர்களுடன் அதிகம் சண்டையிட வேண்டியிருந்தது. இத்தகைய பயிற்சி அதன் விளைவுகளை விட்டுவிடத் தவறாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கங்கள் மாறினாலும், பொலிஸ்துறை அப்படியே உள்ளது என்பது ஒவ்வொரு பொலீசாருக்கும் தெரியும்.

சமூக ஜனநாயகத்தின் தத்துவார்த்த அங்கமான Dar Freie Wort ன் (என்ன ஒரு மோசமான செய்தித்தாள்!) புத்தாண்டு இதழில், “சகிப்புத்தன்மை” கொள்கையை அதன் மிக உயர்ந்த அர்த்தத்தில் விளக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையை அச்சிடுகிறது. அதில் ஹிட்லர், பொலிஸ் மற்றும் ஜேர்மன் இராணுவத்தை [Reichswehr] எதிர்த்து ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறுகிறது. இப்போது, அரசியலமைப்பின்படி, ஜேர்மன் இராணுவம் (Reichswehr) குடியரசின் ஜனாதிபதியின் கட்டளையின் கீழ் உள்ளது. எனவே, அரசியலமைப்பிற்கு விசுவாசமான ஒரு ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் வரை பாசிசம் ஆபத்தானது அல்ல என்பது தெளிவாகிறது. ப்ரூனிங்கின் [2]  ஆட்சி ஜனாதிபதி தேர்தல்கள் வரை ஆதரிக்கப்பட வேண்டும், அப்போதுதான் பாராளுமன்ற முதலாளித்துவத்துடனான கூட்டணி மூலம் அரசியலமைப்பு ரீதியான ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட முடியும்; இதன் மூலம் ஹிட்லரின் அதிகாரத்திற்கான பாதை இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு தடுக்கப்படும்... என்று கூறுகிறது.

சீர்திருத்தக் கொள்கைகளுக்காக வாதிடும் அரசியல்வாதிகள், பெரும்பாலும் புத்திசாலித்தனமான சூழ்ச்சியாளர்கள், தந்திரமான சதிகாரர்கள், சுய முன்னேற்றம் காணவிரும்பும் நபர்கள் மற்றும் அமைச்சு சதிகாரர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வழக்கமான அரசியல் சூழலில் இருந்து வெளியேற்றப்பட்டு குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும்போது திறமையற்றவர்கள் என்று விரைவாக அம்பலப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், அதைச் சொல்வதற்கு மென்மையான வழி எதுவும் இல்லை- அவர்கள் ஆழமான திறமையின்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒரு ஜனாதிபதியை நம்புவது என்பது “அரசாங்கத்தை” நம்புவது மட்டுமே! பாட்டாளி வர்க்கத்திற்கும் பாசிச குட்டி முதலாளி வர்க்கத்திற்கும் இடையே வரவிருக்கும் மோதலை — ஜேர்மன் தேசத்தின் நசுக்கும் பெரும்பான்மையை உள்ளடக்கிய இரண்டு முகாம்களை — எதிர்கொள்ளும் நிலையில், வோர்வோர்ட்ஸ்சில் [Vorwärts - பிரதான சமூக-ஜனநாயக செய்தித்தாள்] இருந்து வந்த இந்த மார்க்சிஸ்டுகள், இரவுக் காவலாளி தங்களுக்கு உதவ வருமாறு கூக்குரலிடுகின்றனர். “உதவுங்கள்! அரசாங்கமே, அழுத்தம் கொடுங்கள்!” (Staat, greif zu!)

விளக்கக் குறிப்புகள்

[1] “இரும்பு முன்னணி”: பல பெரிய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “குடியரசு” குழுக்களுக்கு இடையிலான ஒரு அணி. வெகுஜனங்களிடையே குறைந்த அல்லது எந்த பின்தொடர்பையும் கௌரவத்தையும் கொண்டிருக்கவில்லை. இது 1931 ஆம் ஆண்டின் இறுதியில் சமூக ஜனநாயகவாதிகளால் உருவாக்கப்பட்டது. இரும்பு முஷ்டி என்றழைக்கப்படும் போராட்டக் குழுக்கள் தொழிற்சங்கங்களுக்குள் அமைக்கப்பட்டன, தொழிலாளர்களின் விளையாட்டு அமைப்புகள் இரும்பு முன்னணிக்குள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், அதன் முதல் அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் ஹிண்டன்பர்க் மறுதேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.

[2] ஹென்ரிச் புரூனிங் (1885-1970) 1930-32 ஆண்டு வரை சன்சுலராக இருந்தார். ஜேர்மனியில் வழக்கமான நாடாளுமன்ற ஆட்சி மார்ச் 1930 இல் முடிவடைந்தது. புரூனிங், வொன் பாப்பென், வொன் ஷ்லீச்சர், அதாவது சன்சுலர்கள் சாதாரண நாடாளுமன்ற நடைமுறைகளால் அல்லாமல் “அவசரகால” ஆணைகளால் ஆட்சி செய்யும் தொடர்ச்சியான போனபார்ட்டிஸ்ட் ஆட்சிகள் இருந்தன. இந்த போனபார்ட்டிஸ்ட் பிரமுகர்கள் நாட்டை அதன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்குத் தேவையான அரசியல் மீட்பர்களாகவும், இதனால் வர்க்கம் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டனர். அவர்கள் பழைய முதலாளித்துவ ஜனநாயகக் கட்சி முறையைச் சார்ந்திருக்கவில்லை, மாறாக போலிஸ், இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரத்துவத்தின் கட்டளையையே சார்ந்திருந்தனர். இடது (சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள்) மற்றும் வலதுசாரிகள் (பாசிஸ்டுகள்) ஆகிய இரண்டின் ஆபத்துக்களிலிருந்தும் தேசத்தைக் காப்பாற்றுவதற்காக, முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதே அவர்களின் முதன்மை அக்கறையாக இருந்ததால், அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தினர்.

6. முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவம் மற்றும் பாட்டாளி வர்க்கம்

ஜேர்மனிக்கான ஒரே பாதை - என்பதிலிருந்து

அரசியல் நிலைமையைப் பற்றிய எந்தவொரு தீவிரமான பகுப்பாய்வும் முதலாளித்துவ வர்க்கம், குட்டி முதலாளித்துவ வர்க்கம் (விவசாயிகள் உட்பட) மற்றும் பாட்டாளி வர்க்கம் ஆகிய மூன்று வர்க்கங்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை அதன் தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த பெரிய முதலாளித்துவ வர்க்கம், தன்னளவில் தேசத்தின் எல்லையற்ற சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் மேலாதிக்கத்தை செயல்படுத்த, அது குட்டி முதலாளித்துவ வர்க்கத்துடனும், அதன் மத்தியஸ்தத்தின் மூலம், பாட்டாளி வர்க்கத்துடனும் ஒரு திட்டவட்டமான பரஸ்பர உறவை உறுதி செய்ய வேண்டும்.

மூன்று வர்க்கங்களுக்கிடையிலான உறவின் இயங்கியலைப் புரிந்துகொள்ள, நாம் மூன்று முக்கியமான வரலாற்றுக் கட்டங்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்: முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில், அதன் வரலாற்றுப் பணிகளை நிறைவேற்ற, புரட்சிகர வழிமுறைகள் தேவைப்பட்ட முதலாவது கட்டம். முதலாளித்துவ ஆட்சி தனது செழிப்பு மற்றும் முதிர்ச்சி நிலையை அடைந்தபோது, தனது மேலாதிக்கத்தை ஒழுங்கான, அமைதியான, பழமைவாத மற்றும் ஜனநாயக வடிவங்களின் வழியாக உறுதிப்படுத்திய இரண்டாவது கட்டம். இறுதியாக, முதலாளித்துவம் தனது சுரண்டல் உரிமையை பாதுகாக்க பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் முறைமைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிற அதன் வீழ்ச்சியின் மூன்றாவது கட்டம் ஆகும்.

இந்த மூன்று வரலாற்றுக் கட்டங்களுக்கு உரித்தான அரசியல் வேலைத்திட்டங்களான ஜாகோபினிசம்[1] , சீர்திருத்தவாத ஜனநாயகம் (சமூக ஜனநாயகம் உட்பட) மற்றும் பாசிசம் ஆகியவை அடிப்படையில் குட்டி-முதலாளித்துவ நீரோட்டங்களின் வேலைத்திட்டங்களாகும். இந்த ஒரு உண்மை மட்டுமே, மற்ற எந்த விடயத்தையும்விட அதிகமாக, முதலாளித்துவ சமூகவியலின் முழுமையான தலைவிதிக்கு குட்டி-முதலாளித்துவ வெகுஜனங்களின் சுயநிர்ணய உரிமை எவ்வளவு மிகுந்ததொரு முக்கியத்துவம் கொண்டது என்பதையும், மேலும் அது எவ்வளவு தீர்மானமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆயினும்கூட, முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அடிப்படை சமூக ஆதரவான குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் அமைதியான ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கவில்லை. குட்டி முதலாளித்துவ வர்க்கம், அதன் வெகுஜனத்தில், சுரண்டப்பட்ட மற்றும் உரிமை மறுக்கப்பட்ட வர்க்கமாகும். அது முதலாளித்துவ வர்க்கத்தை பொறாமையுடனும், பெரும்பாலும் வெறுப்புடனும் பார்க்கிறது. மறுபுறம், முதலாளித்துவ வர்க்கமானது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவைப் பயன்படுத்தும் அதே வேளையில், அதன் மீது அவநம்பிக்கை கொள்கிறது. ஏனெனில், அதற்குத் மேலிருந்து விதிக்கப்பட்ட தடைகளை உடைக்கும் குட்டி முதலாளித்துவத்தின் போக்கைக் கண்டு சரியாகவே அஞ்சுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜாகோபின்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் கூர்மையான மோதல்களில் இறங்கினர். முதலாளித்துவத்துக்கு எதிரான அவர்களின் விடாப்பிடியான போராட்டம், அதே நேரத்தில், அதற்கே சேவை செய்யும் வடிவத்திலேயே நடந்தது. ஆனால், மூலதனத்தின் மேலாதிக்கம் வரலாற்று ரீதியாக முன்னமே தீர்மானிக்கப்பட்டிருந்ததால், ஜாகோபின்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட வரலாற்றுப் பங்கு நிறைவேறியவுடன் வீழ்ந்துவிட்டனர்.

பல கட்டங்களாக, முதலாளித்துவ வர்க்கம் நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்தின் கீழ் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தியது. அப்போதும், அமைதியாகவும், தாமாக முன்வந்து அதைச் செய்யவில்லை. முதலாளித்துவ வர்க்கம் அனைவருக்கும் வாக்குரிமையைக் கண்டு பயங்கரமாக அஞ்சியது. ஆனால் கடைசி நிகழ்வில், வன்முறை நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள், தனியுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்களின் கலவையின் உதவியுடன், குட்டி முதலாளித்துவ வர்க்கம் மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தையும், புதிய குட்டி முதலாளித்துவத்தின் மூலம் அதாவது தொழிலாளர் பிரபுத்துவத்தின் மூலம், முறையான ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் அடிபணிய வைப்பதில் அது வெற்றி பெற்றது. 1914 ஆகஸ்டில், ஏகாதிபத்திய முதலாளித்துவம் பாராளுமன்ற ஜனநாயகத்தின் வழிமுறைகளுடன் மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் போருக்கு இட்டுச் செல்ல முடிந்தது. [2]

ஆனால், போர் தொடங்கியதிலிருந்தே முதலாளித்துவத்தின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி தொடங்குகிறது; குறிப்பாக அதன் ஜனநாயக வடிவ மேலாதிக்கம் அதற்கும் மேலாக வீழ்ச்சியடைகிறது. இப்போது பிரச்சினை புதிய சீர்திருத்தங்களோ அல்லது நிவாரணங்களோ அல்ல, மாறாக, ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளை குறைக்கும் படியாகவும் முற்றிலும் ஒழிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளாகவே மாறியுள்ளது. இதன் காரணமாக, முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயக அமைப்புகள்—அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்—மட்டுமன்றி, அவை உருவாக்கிய கட்டமைப்பான நாடாளுமன்ற ஜனநாயகத்துடனும் நேரடியாக மோதும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவேதான் ஒருபுறம்”மார்க்சிசத்திற்கு” எதிரான பிரச்சாரமும், மறுபுறம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே எதிரான தாக்குதல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

தங்களின் காலகட்டத்தில் தாராளவாத முதலாளித்துவத்தின் தலைவர்கள், தங்களது சொந்த சக்தியால் மட்டுமே நிலப்பிரபுத்துவம், முடியாட்சி மற்றும் தேவாலய அதிகாரத்தை ஒழிக்க முடியாதது போல, நிதி மூலதனத்தின் அதிபர்களும் தங்களது சொந்த சக்தியால் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை சமாளிக்க இயலாது. இதற்காகவே அவர்களுக்கு குட்டி முதலாளித்துவத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவைப் பெறுவதற்காக, அந்த வர்க்கத்தைத் தட்டி எழுப்ப வேண்டும், அணிதிரட்ட வேண்டும், ஆயுதம் ஏந்தச் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறைபாட்டிற்கே அதற்கான ஆபத்துகள் உள்ளன. பாசிசத்தை பயன்படுத்திக் கொண்டாலும், முதலாளித்துவ வர்க்கம் அதற்கு அஞ்சுகிறது. 1926 ஆம் ஆண்டு மே மாதத்தில், போலந்தின் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, பில்சுட்ஸ்கி[3] முதலாளித்துவ சமூகத்தை “காப்பாற்ற” நிர்பந்திக்கப்பட்டார். போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவரான வார்ஸ்கி[4]ரோசா லக்சம்பேர்கிடம்[5] இருந்து லெனின் பக்கம் அல்ல, ஸ்டாலின் பக்கம் திரும்பியவர்—பில்சுட்ஸ்கியின் ஆட்சிக் கவிழ்ப்பை “புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரத்தின்” பாதையாகக் கருதி, தொழிலாளர்கள் பில்சுட்ஸ்கியை ஆதரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது.

ஜூலை 2, 1926 அன்று கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்று நிர்வாகக் குழுவின் போலந்து ஆணையத்தின் அமர்வில், இந்த வரிகளின் ஆசிரியர் போலந்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து பின்வருமாறு கூறினார்:

“ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், பில்சுட்ஸ்கியை தூக்கியெறிவது என்பது முதலாளித்துவ சமூகத்தின் முழு சிதைவு மற்றும் வீழ்ச்சியில் உள்ள எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு குட்டி முதலாளித்துவ பிளெபியன் வழிமுறையாகும். இங்கே நாம் இத்தாலிய பாசிசத்துடன் நேரடி ஒற்றுமையைக் காண்கிறோம்.

“இந்த இரண்டு போக்குகளும் தவிர்க்கவியலாத பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன: அவை முதலில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து தங்கள் அதிர்ச்சிப் படைகளை சேர்க்கின்றன; பில்சுட்ஸ்கியும் முசோலினியும் நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகளுடன், வெளிப்படையான வன்முறையுடன், உள்நாட்டுப் போர் முறைகளுடன் பணியாற்றினர்; இருவருமே அழிவைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை மாறாக முதலாளித்துவ சமூகத்தைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டிருந்தனர். குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அதன் காலில் நிறுத்திய அதே வேளையில், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் வெளிப்படையாக பெருமுதலாளித்துவ வர்க்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். முதலாளித்துவ வர்க்கத்தின் நிலப்பிரபுத்துவ எதிரிகளுடனான கணக்குகளைத் தீர்ப்பதற்கான ஜனரஞ்சக (பிளெபியன்) வழிமுறையாக ஜாக்கோபினிசத்தைப் பற்றி மார்க்ஸ் வழங்கிய மதிப்பீட்டை நினைவூட்டும் ஒரு வரலாற்று பொதுமைப்படுத்தல் இங்கு அனிச்சையாக வருகிறது. ... அது முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியின் காலத்தின்போது இருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சியின் காலத்தில், முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் ஒரு ஜனரஞ்சக (’பிளெபியன்’) வழிமுறை தேவைப்படுகிறது, அது இனி முற்போக்கானது அல்ல, மாறாக முற்றிலும் பிற்போக்குத்தனமானது என்பதை இன்று கூற வேண்டும். இந்த அர்த்தத்தில், பாசிசம் என்பது ஜேக்கபினிசத்தின் ஒரு கேலிச்சித்திரமாகும்.

“முதலாளித்துவ வர்க்கமானது தன்னால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அரசின் வழிமுறைகளால் தன்னை அதிகாரத்தில் தக்கவைத்துக் கொள்ள இயலாது; குறைந்தபட்சம் முக்கியமான சந்தர்ப்பங்களில் பாசிசம் தற்காப்பு ஆயுதமாக அதற்குத் தேவைப்படுகிறது. ஆயினும்கூட, முதலாளித்துவ வர்க்கம் தனது பணிகளைத் தீர்க்கும் ‘ஜனரஞ்சக’ (’பிளெபியன்’) வழிமுறையை விரும்பவில்லை. முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிக்கான பாதையை அதன் இரத்தத்தால் தெளிவுபடுத்திய ஜாகோபினிசத்திற்கு அது எப்போதும் விரோதமாக இருந்தது. எழுச்சிபெற்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஜாகோபின்கள் இருந்ததை விட, பாசிஸ்டுகள் சீரழிந்த முதலாளித்துவ வர்க்கத்துடன் அளவிட முடியாத அளவிற்கு நெருக்கமாக உள்ளனர். ஆயினும்கூட, நிதானமான முதலாளித்துவ வர்க்கம் தனது பணிகளைத் தீர்ப்பதற்கான பாசிச முறையைக் கூட மிகவும் சாதகமாகப் பார்க்கவில்லை. ஏனெனில் இந்த அதிர்ச்சிகள், முதலாளித்துவ சமூகத்தின் நலன்களுக்காக முன்வைக்கப்பட்டாலும், அதன் ஆபத்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இது, பாசிசத்திற்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையிலான எதிர்ப்பு ஆகும்.

பல் வலியால் வேதனையுறும் ஒருவர், பல் பிடுங்கப்படுவதை எப்படி மனமின்றி, சற்றும் விருப்பமின்றி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாரோ, அதேபோல் பெரும் முதலாளித்துவம் பாசிசத்தை ஏற்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் ‘நிதானமான’ வட்டங்கள் பல் மருத்துவர் பில்சுட்ஸ்கியின் செயல்களை சந்தேகத்துடனும் கவலையுடனும் பின்தொடர்ந்தன. ஆனால் இறுதிப் பகுப்பாய்வில் அவர்கள் தவிர்க்க முடியாதவற்றுடன், அச்சுறுத்தல்களுடன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மற்றும் அனைத்து வகையான பேரங்கள் ஆகியவற்றுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நேற்றைய கதாநாயகன் மூலதனத்தின் போலீஸ்காரராக மாற்றப்படுகிறார்”.

பாசிசத்தின் வரலாற்று இடத்தை சமூக ஜனநாயகத்தின் அரசியல் நிவாரணியாக அடையாளப்படுத்தும் இந்த முயற்சிக்கு, சமூக பாசிசக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. முதலில் இது ஒரு பாசாங்குத்தனமாகவும், உளறலாகவும், ஆனால் பாதிப்பில்லாத முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஸ்டாலினிசக் கோட்பாடு உண்மையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் செல்வாக்கை செலுத்தியது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஜாகோபினிசத்தின், ஜனநாயகத்தின், பாசிசத்தின் வரலாற்றுப் பாத்திரத்திலிருந்து, குட்டி முதலாளித்துவ வர்க்கம் அதன் நாட்களின் இறுதிவரை மூலதனத்தின் கைகளில் ஒரு கருவியாக இருக்கக் கண்டிக்கப்படுகிறதா? அப்படியானால், குட்டி முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் பல நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சாத்தியமற்றதாகிவிடும், அதற்கும் மேலாக, குட்டி முதலாளித்துவ வர்க்கம் ஒரு முக்கியமான சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நாடுகளில் அது மிகவும் கடினமாக்கப்படும். அதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் அப்படி இல்லை. பாரிஸ் கம்யூனின் [6] அனுபவம், அக்டோபர் புரட்சியின் (1917 ரஷ்யப் புரட்சி) அனுபவம் அதற்குப் பிறகு மிகப் பெரிய அளவிலும், ஒப்பிடமுடியாத நீண்ட காலத்திலும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பெருமுதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டணி பிரிக்க முடியாதது அல்ல என்பதைக் காட்டியதைப் போலவே, குறைந்தபட்சம் ஒரு நகரத்தின் எல்லைக்குள் இருப்பதைக் காட்டியது. குட்டி முதலாளித்துவ வர்க்கம் ஒரு சுயாதீனமான கொள்கையைக் கொண்டிருக்க இயலாது என்பதால் (அதனால்தான் குட்டி முதலாளித்துவ “ஜனநாயக சர்வாதிகாரம்” நடைமுறைக்கு வராது), முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான கொள்கையைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.

முதலாளித்துவத்தின் எழுச்சி, வளர்ச்சி மற்றும் மலர்ச்சியின் சகாப்தத்தில், குட்டி முதலாளித்துவ வர்க்கம், கடுமையான அதிருப்தி வெடிப்புகள் இருந்தபோதிலும், பொதுவாக முதலாளித்துவக் கட்டமைப்பில் கீழ்ப்படிதலுடன் அணிவகுத்துச் சென்றது. வேறு எதுவும் அதனால் செய்ய முடியவில்லை. ஆனால் முதலாளித்துவச் சிதைவின் நிலைமைகளின் கீழும், பொருளாதாரச் சூழலில் நிலவும் முட்டுக்கட்டையின் கீழும், குட்டி முதலாளித்துவ வர்க்கம் பழைய எஜமானர்கள் மற்றும் சமூகத்தின் ஆட்சியாளர்களின் தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறது, தேடுகிறது. அது தனது தலைவிதியை பாட்டாளி வர்க்கத்தின் தலைவிதியுடன் இணைக்கும் வல்லமை கொண்டது. அதற்கு, ஒன்றே ஒன்று தேவைப்படுகிறது: அதாவது சமூகத்தை ஒரு புதிய பாதைக்கு இட்டுச்செல்லும் பாட்டாளி வர்க்கத்தின் திறனில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் நம்பிக்கையைப் பெற வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது வலிமையால், அதன் நடவடிக்கைகளின் உறுதியால், எதிரிக்கு எதிரான திறமையான தாக்குதலின் மூலம், அதன் புரட்சிகர கொள்கையின் வெற்றியால் மட்டுமே இந்த நம்பிக்கையை ஊக்குவிக்க முடியும்.

ஆனால், புரட்சிகரக் கட்சி நிலைமையின் உச்சத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தவறினால், அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்! பாட்டாளி வர்க்கத்தின் அன்றாடப் போராட்டம் முதலாளித்துவ சமூகத்தின் நிலையற்ற தன்மையை கூர்மைப்படுத்துகிறது. வேலைநிறுத்தங்களும் அரசியல் குழப்பங்களும் நாட்டின் பொருளாதார நிலைமையை மோசமாக்கின. பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு புதிய பாதைக்கு இட்டுச்செல்லும் நிலையில் உள்ளது என்ற நம்பிக்கை அனுபவத்தின் மூலம் கிடைத்தால், குட்டி முதலாளித்துவ வர்க்கம் தன் மீதான வறுமைச் சுமைகளை தற்காலிகமாக சமரசம் செய்து கொள்ள முடியும். ஆனால், ஒரு வர்க்கப் போராட்டம் இடைவிடாது வலுப்பெற்று வரும் நிலையிலும், புரட்சிகரக் கட்சி, அது பற்றி தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த இயலாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தால், அது தடுமாறினால், குழப்பமடைந்தால், தனக்கு முரண்படுகிறது என்றால், குட்டி முதலாளித்துவ வர்க்கம் பொறுமை இழந்து, புரட்சிகரத் தொழிலாளர்களை தனது சொந்த துன்பங்களுக்குப் பொறுப்பானவர்களாகப் பார்க்கத் தொடங்குகிறது. சமூக ஜனநாயகம் உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் தங்கள் எண்ணங்களை இதே திசையில் திருப்புகின்றன. சமூக நெருக்கடியானது சகிக்க முடியாத உக்கிரத்தை எடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியானது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை ஒரு தீவிர வெறிக்குத் தூண்டிவிட்டு, அதன் வெறுப்பையும் அதன் விரக்தியையும் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக திசை திருப்பும் நேரடி நோக்கத்துடன் களத்தில் தோன்றுகிறது. ஜேர்மனியில், இந்த வரலாற்றுப் பணியை தேசிய சோசலிசம் (நாஜிசம்) நிறைவேற்றுகிறது, இது சிதைந்து விழுந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து அழுகிய நாற்றங்களையும் தன்னுள் கொண்ட ஒரு பரந்த சித்தாந்தமாகும்.

விளக்கக் குறிப்புக்கள்

[1] ஜாகோபின்ஸ்: 1789 ஆம் ஆண்டின் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியில் குட்டி முதலாளித்துவ சக்திகளின் இடது பிரிவு ஆகும்; மிகவும் புரட்சிகரமான கட்டத்தில், ரோபெஸ்பியர் தலைமை தாங்கினார்.

[2] ஆகஸ்ட் 4, 1914: இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி. பாராளுமன்றத்தில் உள்ள ஜேர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஏகாதிபத்திய அரசாங்கத்தின் போர் வரவுசெலவுத் திட்டத்திற்கு வாக்களித்தனர்; அதே நாளில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் பிரதிநிதிகள் சபையில் அவ்வாறே செய்தனர்.

[3] ஜோசப் பில்சுட்ஸ்கி (1876-1935): முதலில் தேசியவாதக் கருத்துக்களைக் கொண்ட ஒரு சோசலிசவாதியாக இருந்தார், 1920 இல் போலந்தில் சோவியத் எதிர்ப்புப் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; 1926ல் ஆட்சிக்கவிழ்ப்புக்கு தலைமை தாங்கி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினார் .

[4] வார்ஸ்கி: ரோசா லக்சம்பேர்க்கின் தோழி. போல்ஷிவிக்குகளுடனான அவரது வேறுபாடுகளை அவர் ஆதரித்தார். கம்யூனிச அகிலம் அதன் “மூன்றாம் காலகட்டத்தின்” கட்டத்தில் இடது பக்கம் திரும்பியபோது, வார்ஸ்கி போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து இறக்கப்பட்டார். ஆனால் வெளியேற்றப்படவில்லை. இவர் 1936-38 ஆம் ஆண்டின் பெரும் களையெடுப்பின் போது சோவியத் ஒன்றியத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்.

[5] ரோசா லக்சம்பேர்க் (1871-1919): மாபெரும் புரட்சிகர கோட்பாட்டாளர் மற்றும் தலைவர். ஆரம்பத்தில் தனது சொந்த நாடான போலந்தின் சோசலிச இயக்கத்தில் தீவிரமாக இருந்த அவர், பின்னர் ஜேர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் இடது பிரிவின் தலைவரானார். அவரும் கார்ல் லீப்னெக்ட்டும் முதலாம் உலகப் போரை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் ஸ்பார்டகுஸ்பண்டை வழிநடத்தினர். இருவரும் 1919 ஆம் ஆண்டின் தோல்வியுற்ற ஜேர்மன் புரட்சியின் போது கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

[6] பாரிஸ் கம்யூன் என்பது உழைக்கும் மக்களின் ஒரு புரட்சிகர அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான முதல் முயற்சியாகும். 1871 மார்ச் 18 முதல் மே 28 வரை பாரிஸ் நகரத் தொழிலாளர்கள் இந்நகரை நிர்வகித்தனர். கம்யூன் எதிர்ப்புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்தால் நசுக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்ட பிரஷ்ய இராணுவத்தின் உதவியுடன். இருபதாயிரம் கம்யூனாட்டுக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

7. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொறிவு

பிரான்ஸ் எங்கே செல்கிறது? 1934

முதலாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா, ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் பின்னர் ஸ்பெயினில் ஒரு தொடர் பிரகாசமான வெற்றிகரமான புரட்சிகள் நிகழ்ந்தன. ஆனாலும் ரஷ்யாவில் மட்டும் தான் பாட்டாளி வர்க்கம் முழு அதிகாரத்தையும் தனது கைகளில் எடுத்தது என்பதோடு, அதன் சுரண்டல்காரர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்தது. அத்துடன் ஒரு தொழிலாளர்’ அரசினை உருவாக்கி நிர்வகிப்பது எப்படி என்பதையும் அறிந்து வைத்திருந்தது. மற்றய எல்லா இடங்களிலுமே பாட்டாளி வர்க்கமானது, வெற்றி பெற்றிருந்த நிலையிலும் கூட, அதன் தலைமையின் தவறினால், பாதிவழியில் நின்று விட்டது. இதன் விளைவாக, அதிகாரம் அதன் கைகளில் இருந்து நழுவி இடதின் பக்கமிருந்து வலதின் பக்கமாய் நகர்ந்து விட்டதோடு, பாசிசத்திற்கும் அது இரையாகிப் போனது. இன்னும் இதர நாடுகள் பலவற்றில் அதிகாரம் இராணுவ சர்வாதிகாரத்தின் கரங்களில் சிக்கியது. எந்தவொரு இடத்திலுமே நாடாளுமன்றங்களுக்கு வர்க்க முரண்பாடுகளைச் சமரசம் செய்து நிகழ்வுகள் அமைதியாக அபிவிருத்தி காண்பதை உறுதியளிப்பது இயலாத ஒன்றாக இருந்தது. கைகளில் ஆயுதங்களுடன்தான் மோதல்கள் தீர்க்கப்பட்டன.

பிரெஞ்சு மக்கள் நீண்ட காலமாக பாசிசத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நினைத்தனர். இறையாண்மை கொண்ட மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையைச் செலுத்துவதன் ஊடாக பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுகின்றதான ஒரு குடியரசு தங்களிடம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் 1934 பிப்ரவரி 6 அன்று, துப்பாக்கிகள், தடிகள் மற்றும் சவரக்கத்திகளின் (razors) துணையுடன் பல்லாயிரக்கணக்கான பாசிஸ்டுகளும் முடியரசுவாதிகளும் நாட்டின் மீது டுமேர்க் (Doumergue) [1] இன் பிற்போக்குத்தன அரசாங்கத்தை திணித்தனர். அவரது அரவணைப்பின் கீழ் பாசிச குழுக்கள் தொடர்ந்து வளர்ந்தும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டும் வருகின்றன. நாளை காத்திருப்பது என்ன?

நிச்சயமாக, பிரான்சில், மற்றய சில ஐரோப்பிய நாடுகளைப் போலவே (இங்கிலாந்து, பெல்ஜியம், ஹாலந்து, சுவிட்சர்லாந்து, ஸ்காண்டிநேவிய நாடுகள்) இன்னும் நாடாளுமன்றங்கள், தேர்தல்கள், ஜனநாயக சுதந்திரங்கள் அல்லது அவற்றின் எச்சங்கள் உள்ளன. ஆனால், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் முன்பு நடந்தது போலவே, இந்த அனைத்து நாடுகளிலும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து வருகிறது. 'பிரான்ஸ் ஜேர்மனியைப் போல அல்ல' என்ற சொற்றொடருடன் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்பவர் நம்பிக்கையற்றவர். அனைத்து நாடுகளிலும் ஒரே வரலாற்று விதிகள் செயல்படுகின்றன, முதலாளித்துவ விதிகள் வீழ்ச்சியடைகின்றன. உற்பத்தி வழிமுறைகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான முதலாளிகளின் கைகளில் இருப்பதால், சமூகத்திற்கு எந்த வழியும் இல்லை. அது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்கும், தேவை நிலையிலிருந்து துயர நிலைக்கும், மோசமானதிலிருந்து இன்னும் மோசமான நிலைக்கு செல்லும். பல்வேறு நாடுகளில் முதலாளித்துவத்தின் சீரழிவு மற்றும் சிதைவு பல்வேறு வடிவங்களிலும் சமமற்ற வேகங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் செயல்முறையின் அடிப்படை அம்சங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவை. முதலாளித்துவ வர்க்கம் தனது சமூகத்தை முழுமையான திவால்நிலைக்கு இட்டுச் செல்கிறது. இது மக்களுக்கு ரொட்டியையோ அமைதியையோ எதையும் உறுதியாக வழங்கும் திறனற்றதாக உள்ளது. இதனால்தான் அது இனி ஜனநாயக ஒழுங்கை பொறுத்துக்கொள்ள முடியாது. உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை நசுக்க வேண்டிய கட்டாயத்தில் அது உள்ளது. எனினும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிருப்தியை காவல்துறையால் மட்டும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. மேலும், மக்களுக்கு எதிராக இராணுவ அணிவகுப்பை நடத்துவது பெரும்பாலும் சாத்தியமற்றது. அது சிதைவடைவதிலிருந்து துவங்கி, சிப்பாய்களின் ஒரு பரந்த பகுதி மக்களின் பக்கம் தங்களை இணைப்பதோடு முடிவடைகிறது. அதனால்தான் நிதி மூலதனம் சிறப்பு ஆயுதக் குழுக்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாய்களின் சில இனங்கள் வேட்டையாடும் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதைப் போலவே பயிற்சி பெற்ற சிறப்பு ஆயுதப்படைகளை உருவாக்குகிறது. முதலாளித்துவவாதிகள் ஜனநாயக இயந்திரத்தின் உதவியுடன் ஆட்சி செய்ய முடியாதபோது, தொழிலாளர் வர்க்கத்தை நசுக்கி, அதன் அமைப்புகளை அழித்து, அரசியல் சுதந்திரங்களை அடக்குவதற்கான வரலாற்றுப் பணியே பாசிசத்தின் முக்கியக் கடமையாகும்.

பாசிசவாதிகள் தங்களுக்கான மனித வளத்தை பெரும்பாலும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து பெறுகின்றனர். இந்த வர்க்கமானது பெரு மூலதனத்தால் முற்றிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சமூக ஒழுங்கில் இதற்கு எந்த வழியும் இல்லை, ஆனால் அதற்கு வேறு வழியும் இல்லை. அதன் அதிருப்தி, கோபம் மற்றும் விரக்தி ஆகியவை பாசிசவாதிகளால் பெரு மூலதனத்திலிருந்து திருப்பி தொழிலாளர்களுக்கு எதிராக திசை திருப்பப்படுகின்றன. பாசிசம் என்பது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அதன் மிகவும் கசப்பான எதிரிகளின் வசம் வைக்கும் செயலாகும் என்று கூறலாம். இந்த வழியில் பெரு மூலதனம் நடுத்தர வர்க்கத்தை அழிக்கிறது, பின்னர் பணியமர்த்தப்பட்ட பாசிச ஜனநாயகவாதிகளின் உதவியுடன் விரக்தியடைந்த குட்டி முதலாளித்துவத்தை தொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டுகிறது. முதலாளித்துவ ஆட்சியை இது போன்ற கொலைகார வழிமுறைகளால் மட்டுமே பாதுகாக்க முடியும். எவ்வளவு காலத்துக்கு? அது பாட்டாளி வர்க்கப் புரட்சியால் தூக்கியெறியப்படும் வரை ஆகும்.

விளக்கக் குறிப்பு

[1] காஸ்டன் டுமேர்க்: பிரான்சின் போனபார்ட்டிஸ்ட் பிரதமர். எட்வார்ட் டாலடியருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். பிப்ரவரி 6, 1934 பாசிசக் கலவரங்களுக்குப் பிறகு டாலடியர் அரசாங்கம் கவிழ்ந்தது.

8. குட்டி முதலாளித்துவம் புரட்சியைக் கண்டு அஞ்சுகிறது என்பது உண்மையா?

பிரான்ஸ் எங்கே செல்கிறது? 1934

மக்களைப் பற்றி சிறந்த நிபுணர்களாகத் தங்களை கருதும் பாராளுமன்ற குழப்பக்கருத்தாளர்கள், “நடுத்தர வர்க்கத்தை புரட்சியால் பயமுறுத்தக்கூடாது; அவர்கள் அதிதீவிரங்களை விரும்புவதில்லை” என்று மீண்டும் மீண்டும் கூற விரும்புகிறார்கள். இந்த வகையான பொது வாதம் முற்றிலும் தவறானது. இயல்பாகவே, ஒரு குட்டி-முதலாளி தனது வியாபாரம் நன்றாக நடைபெறும் வரை மற்றும் நாளை இன்னும் நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கின்ற வரை ஒழுக்கத்தை விரும்புவார்.

ஆனால் இந்த நம்பிக்கை போய் விடும்போது, அவர் எளிதாகக் கொதிப்புற்று மிகத் தீவிரப்பட்ட நடவடிக்கைகளுக்கும் கூட தன்னை அர்ப்பணிக்கத் தயாராகி விடுகிறார். அப்படி இல்லையென்றால், அவரால் ஜனநாயக அரசைத் தூக்கியெறிந்து இத்தாலியிலும் ஜேர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியுமா? விரக்தியடைந்திருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கம் பாசிசத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, பெரு மூலதனத்திற்கு எதிரான ஒரு போரிடும் சக்தியாகக் காண்கிறது. மேலும் வார்த்தைகளில் மட்டுமே செயல்படும் தொழிலாள வர்க்கக் கட்சிகளைப் போலல்லாமல், பாசிசம் அதிக “நீதி” யை நிலைநாட்ட பலத்தைப் பயன்படுத்தும் என்று அது நம்புகிறது. ஒருவர் பலத்தைப் பயன்படுத்துவதை கைவிட முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

“அதிதீவிர நடவடிக்கைகளை” கண்டு அஞ்சுவதால் தான் இன்று குட்டி முதலாளித்துவம் தொழிலாள-வர்க்கக் கட்சிகளிடம் செல்வதில்லை என்று கூறுவது பொய், மும்மடங்கு பொய். உண்மை அதன் நேரெதிரானதாகும். குட்டி முதலாளித்துவத்தின் பாரிய வெகுஜனங்களாக இருக்கும் அதன் கீழடுக்கினர் தொழிலாள-வர்க்கக் கட்சிகளை நாடாளுமன்ற அமைப்புமுறைகளாக மட்டுமே காண்கின்றனர். அவர்களுக்கு அக்கட்சிகளின் வலிமையிலும் நம்பிக்கையில்லை, போராட்டத் திறனிலும் நம்பிக்கையில்லை, அல்லது இம்முறை போராட்டத்தை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு அவை தயாரில்லாமல் இருப்பதாலும் தான் அவை இக்கட்சிகளை நம்பவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்கையில், தீவிரவாதத்தை இடது பக்கத்தில் இருக்கும் அதன் நாடாளுமன்ற சகாவைக் கொண்டு பிரதியீடுசெய்வது பலன் தருமா? இப்படித் தான் பாதி-பறிமுதல் செய்யப்பட்ட, அழிக்கப்பட்ட அத்துடன் அதிருப்தியுடனிருக்கும் உடமையாளர் புரிந்து கொள்கிறார் அல்லது உணர்கிறார். விவசாயிகள், கைவினைஞர்கள், அரச ஊழியர்கள், மற்றும் சிறிய நிர்வாகிகள் மற்றும் இதர பிரிவினரின் இந்த உளவியலைப் புரிந்துகொள்ளாமல் ஒரு சரியான கொள்கையை அபிவிருத்திசெய்வது சாத்தியமில்லாதது. குட்டிமுதலாளித்துவம் பொருளாதாரரீதியில் சார்புடையதாக இருப்பதுடன் அரசியல்ரீதியாக மிகவும் பிளவுபட்டதாக இருக்கின்றது. அதனால் தான் அது ஒரு சுயாதீனமான கொள்கையை முன்னெடுக்க இயலவில்லை. தனக்கு நம்பிக்கை ஊட்டத்தக்க ஒரு “தலைவர்” அதற்குத் தேவையாக இருக்கிறது. இந்த தனிநபர் அல்லது கூட்டுத் தலைமையை அதாவது ஒரு தலைவனது தலைமை அல்லது கட்சியினது தலைமையை அதற்கு பெரு முதலாளித்துவம் அல்லது பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படை வர்க்கங்களில் ஏதேனும் ஒன்று தான் வழங்க முடியும். பாசிசமானது சிதறிக் கிடக்கும் வெகுஜனங்களை ஒன்றுபடுத்தி அவர்களது கைகளில் ஆயுதங்களை வழங்குகிறது. மனிதத் தூசிகளில் இருந்து அது போர்ப் படையணிகளை ஒழுங்கமைக்கிறது. இவ்வாறாக ஒரு சுயாதீனமான சக்தியாகத் திகழும் பிரமையை அது குட்டி முதலாளித்துவத்திற்கு வழங்குகிறது. உண்மையில் தானே அரசை உத்தரவிட்டுக் கொண்டிருப்பதாக அது கற்பனை செய்யத் தொடங்குகிறது. இந்த பிரமைகளும் நம்பிக்கைகளும் தான் குட்டி முதலாளித்துவத்தின் கவனத்தைக் கவர்கின்றன என்பதில் ஆச்சரியமில்லை!

ஆயினும் குட்டி முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்திலும் ஒரு தலைவனைக் காண முடியும். இதுவே ரஷ்யாவிலும், ஓரளவிற்கு ஸ்பெயினிலும் எடுத்துக்காட்டப்பட்டது. இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் குட்டி முதலாளித்துவம் இந்த திசையிலேயே திரட்சி கண்டது. ஆனால் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் தமது வரலாற்றுக் கடமைக்கு எழுச்சி கண்டிருக்கவில்லை.

குட்டி முதலாளித்துவத்தை தன்பக்கம் கொண்டுவர வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கம் அதன் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதற்கு அது தன் சொந்த வலிமை மீது நம்பிக்கை கொண்டிருப்பது அவசியமாகும்.

அதற்கு ஒரு தெளிவான செயல்பாட்டு வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்பதுடன் சாத்தியமான அத்தனை வழிகளிலும் அதிகாரத்திற்காகப் போராட அது தயாராய் இருக்க வேண்டும். ஒரு தீர்மானகரமான மற்றும் தாட்சண்யமற்ற போராட்டத்திற்காக தனது புரட்சிகரக் கட்சியால் புடம்போடப்பட்டிருக்கும் பாட்டாளி வர்க்கமானது விவசாயிகளிடமும் நகர்ப்புற குட்டி முதலாளித்துவத்திடமும் பின்வருமாறு சொல்கிறது: “நாங்கள் அதிகாரத்திற்காகப் போராடுகிறோம். இதோ எங்களது வேலைத்திட்டம். இந்த வேலைத்திட்டத்திலான மாற்றங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பெருமூலதனம் மற்றும் அதன் எடுபிடிகளுக்கு எதிராக மட்டுமே நாங்கள் வன்முறையைப் பிரயோகம் செய்வோம், உழைப்பவர்களாகிய உங்களுடன் கொடுக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு கூட்டணியைக் கொண்டுவருவதே எங்களது விருப்பம்.” இத்தகையதொரு மொழியை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் பாட்டாளி வர்க்கத்திற்கு இருக்கிறது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பது மட்டுமே மீதி விடயம்.

ஆனால் அதற்கு ஐக்கிய முன்னணியில் இருந்து தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள், முடிவெடுக்க இயலாமைகள் மற்றும் அத்தனை வெற்று வார்த்தையாடல்களையும் அகற்றுவது அவசியமாகும். சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை புரட்சிகரப் பாதையில் தீவிரமாக செல்ல வேண்டியது அவசியமாகும்.

9.தொழிலாளர்’ குடிமக்கள்படையும் அதன் எதிர்ப்பாளர்களும்

பிரான்ஸ் எங்கே செல்கிறது?, 1934

போராடுவதற்கு அமைப்புகள், ஊடகங்கள், கூட்டங்கள் மற்றும் இன்ன பிற போராட்ட சாதனங்களையும் கருவிகளையும் பாதுகாத்து வைப்பதும் வலுப்படுத்தி வைப்பதும் அவசியமாகும். பாசிசம் இவை அனைத்தையும் நேரடியாகவும் உடனடியாகவும் அச்சுறுத்துகிறது. அதிகாரத்திற்கு நேரடியாக போராடுவதற்கு அது இன்னமும் மிகப் பலவீனமாகத் தான் இருக்கிறது என்றாலும், தொழிலாள-வர்க்க அமைப்புகளை சிறிது சிறிதாக நசக்க முனைவதற்கும், அதன் தாக்குதல்கள் மூலமாகத் தனது குழுக்களை கட்டுப்படுத்துவதற்கும், அத்துடன் தொழிலாளர்களது அணிகளிடையே குழப்பத்தையும் அவர்களுடைய சக்தியில் நம்பிக்கையின்மையையும் விதைக்குமளவுக்கும் அது போதுமான அளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

“நேரடித் தலையிடல் போராட்டம்” அனுமதிக்கப்படாதது அல்லது நம்பிக்கையற்றது என்று கூறி பாசிசக் காவலரை ஆயுதங்களை கீழே போடச் செய்ய டுமேர்க் இடம் கோரிக்கை வைப்பவர்கள் மூலம் பாசிசம் நனவற்று உதவி செய்பவர்களைக் காண்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு பொய்யான நம்பிக்கைகள் என்கிற இனிப்பு விஷத்தைக் காட்டிலும், அதிலும் குறிப்பாக நடப்பு நிலைமையில், மிக ஆபத்தானது வேறொன்றும் இல்லை. தொழிலாளர்’ அமைப்புகளின் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்ற “நெகிழ்ந்த அமைதிவாத” த்தைக் காட்டிலும் பாசிஸ்டுகளின் ஆணவத்தை அதிகரிப்பது வேறொன்றுமில்லை. இப்போதைக்கு எதையேனும் ஏற்பது, செயல்படாதன்மை, போராட்டத்திற்கு விருப்பமின்றி இருப்பது இவற்றைக் காட்டிலும் நடுத்தர வர்க்கங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது நம்பிக்கையை அழிப்பன வேறெதுவுமில்லை.

Le Populaire மற்றும் குறிப்பாக l’Humanité பத்திரிகைகள் தினந்தோறும் “ஐக்கிய முன்னணி பாசிசத்திற்கு எதிரான ஒரு தடை”, “ஐக்கிய முன்னணி அனுமதிக்காது”; “பாசிஸ்டுகளுக்கு துணிச்சல் வராது” என்றெல்லாம் எழுதுகிறது. இவையெல்லாம் வெற்றுவாக்கியங்கள். தொழிலாளர்கள், சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு விடயத்தை பட்டவர்த்தனமாகச் சொல்வது அவசியம்: கற்பனைவளம் செறிந்த பொறுப்பற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பிரசங்கவாதிகளின் வார்த்தையாடல்களில் சிக்கி தூக்கத்தில் செல்ல உங்களை நீங்கள் அனுமதிக்காதீர்கள். இது நமது தலைகளைக் குறித்ததும் சோசலிசத்தின் வருங்காலம் குறித்ததுமான ஒரு விடயம். நாம் ஐக்கிய முன்னணியின் முக்கியத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமல்ல. இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே அதற்கு எதிராக இருந்த சமயத்தில் நாம் அதைக் கோரினோம். ஐக்கிய முன்னணி எண்ணற்ற சாத்தியக்கூறுகளை திறந்து விட்டாலும் அதற்கு மேல் ஒன்றுமில்லை. தன்னளவில் ஐக்கிய முன்னணி எதனையும் தீர்மானிப்பதில்லை. வெகுஜனங்களின் போராட்டம் தான் தீர்மானிக்கிறது. Le Populaire அல்லது l’Humanité க்கு எதிராக பாசிசப் படைகள் ஏதேனும் தாக்குதல் நடத்தும்போது கம்யூனிஸ்ட் படையணிகள் சோசலிஸ்ட் குழுக்களின் உதவிக்கு வருகிறது அல்லது சோசலிஸ்ட் குழுக்கள் கம்யூனிஸ்ட் குழுக்களின் உதவிக்கு வருகிறது என்ற நிலையில், ஐக்கிய முன்னணி தனது பெருமதிப்பை வெளிப்படுத்தும். ஆனால் அதற்கு, பாட்டாளி வர்க்க போராடும் குழுக்கள் இருக்க வேண்டும், கல்வியூட்டப்பட வேண்டும், பயிற்சியளிக்கப்பட வேண்டும், ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். பாதுகாப்புக்கான அமைப்பு ஒன்று அதாவது தொழிலாளர்’ குடிமக்கள்படை இல்லாத பட்சத்தில், Le Populaire மற்றும் l’Humanité ஆனது, ஐக்கிய முன்னணியின் சர்வவியாபகத்தன்மை குறித்து விரும்பும் எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதலாம், ஆனால் பாசிஸ்டுகள் நன்கு தயாரித்து தொடுக்கக் கூடிய முதல் தாக்குதலிலேயே இந்த இரண்டு பத்திரிகைகளுமே தற்காத்துக் கொள்ள இயலாத நிலையில் தங்களைக் காணும்.

தொழிலாளர்’ குடிமக்கள்படையை எதிர்ப்பவர்கள் இரண்டு தொழிலாள வர்க்கக் கட்சிகளிலுமே ஏராளமாகவும் மிக செல்வாக்குடனும் இருக்கிறார்கள். அவர்களது “வாதங்கள்” மற்றும் “கோட்பாடுகள்” மீதான ஒரு விமர்சனரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

“நமக்குத் தேவை வெகுஜனங்களின் தற்பாதுகாப்பே தவிர குடிமக்கள்படை அல்ல” என்று நம்மிடம் அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் போராடும் அமைப்புகள் இல்லாமல், சிறப்புப் பயிற்சி பெற்ற காரியாளர்கள் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் இந்த “வெகுஜனங்களின் தற்காப்பு” என்பது என்ன? பாசிசத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் விடயத்தை ஒழுங்கமைவற்ற, தயாரிப்பில்லாத வெகுஜனங்கள் தாங்களே கவனித்துக் கொள்ளும்படி விடுவதென்பது பொந்தியு பிலாத்துவின் (Pontius Pilate) பாத்திரத்தை விட ஒப்பிடமுடியாத அளவு கீழான ஒரு பாத்திரத்தை ஆற்றுவதைப் போன்றதாகும். போரிடும் குழுக்களின் பாத்திரத்தை மறுப்பதென்பது முன்னணிப்படையின் பாத்திரத்தை மறுப்பதாகும். பின் எதற்கு ஒரு கட்சி? வெகுஜனங்களின் ஆதரவு இல்லையென்றால், குடிமக்கள்படை என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால் ஒழுங்கமைந்த போரிடும் குழுக்கள் இல்லாமல் போனால், மிகத் தீரமான பரந்த வெகுஜனங்களும் கூட கொஞ்சம் கொஞ்சமாக பாசிசக் கும்பல்களால் தகர்க்கப்பட்டு விடுவார்கள். குடிமக்கள்படையை தற்பாதுகாப்பிற்கு எதிராக நிறுத்துவது என்பது அபத்தமானது. குடிமக்கள்படை என்பதே தற்பாதுகாப்புக்கான ஒரு அமைப்பாகும். [பொந்தியு பிலாத்து (Pontius Pilate) கிபி 26 முதல் 36 வரை யூதேயாவின் ரோம ஆளுநராக பணியாற்றினார். இயேசு கிறிஸ்துவின் விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்பட்டதில் அவரது பங்கிற்காக அவர் மிகவும் பிரபலமானவர். புதிய ஏற்பாட்டின்படி, பிலாத்து விசாரணைக்குத் தலைமை தாங்கினார், இயேசு மீது எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இறுதியில் உள்ளூர் மதத் தலைவர்கள் மற்றும் கூட்டத்தினரின் கோரிக்கைகளுக்கு தலைவணங்கி, அவரது மரணதண்டனைக்கு ஒப்புதல் அளித்தார்.] 

“குடிமக்கள்படையை அமைக்க அழைப்புவிடுவது” சில எதிர்ப்பாளர்களை பொறுத்தவரை - நிச்சயமாகச் சொல்லலாம், அவர்கள் அதிக கவனம் கொள்ளாதவர்கள் மற்றும் குறைந்த நேர்மை கொண்டவர்கள் என்பதை - “ஆத்திரமூட்டலில் ஈடுபடுவதாகும்”. இது ஒரு வாதம் அல்ல, மாறாக ஒரு அவமதிப்பு. தொழிலாளர்’ அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அவசியம் என்பது முழுமையான சூழ்நிலையில் இருந்து பாய்வதாக இருக்கிற பட்சத்தில், தொழிலாளர் குடிமக்கள்படையை உருவாக்குவதற்கு ஒருவர் எப்படி அழைக்காமல் இருக்க முடியும்? ஒரு குடிமக்கள்படை உருவாக்கம் என்பது பாசிசத் தாக்குதல்களுக்கும் அரசாங்க ஒடுக்குமுறைக்குமாய் ”ஆத்திரமூட்டி விடுகிறது” என்பதே அநேகமாக அவர்கள் கூற வருவதாக இருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட, இது முழுமையாக ஒரு பிற்போக்குத்தனமான வாதமாகவே இருக்கிறது. தொழிலாளர்கள் தங்களது வர்க்கப் போராட்டத்தின் மூலமாக எதிர்வினைக்கு “ஆத்திரமூட்டுகிறார்கள்” என்பதையே தாராளவாதம் எப்போதும் கூறிவந்திருக்கிறது.

இதே குற்றச்சாட்டைத் தான் சீர்திருத்தவாதிகள் எப்போதும் மார்க்சிஸ்டுகளை நோக்கியும், மென்ஷிவிக்குகள் எப்போதும் போல்ஷிவிக்குகளை நோக்கியும் கூறி வந்திருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம், இறுதி பகுப்பாய்வில், ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் ஒடுக்குபவர்கள் அவர்களை ஏன் தாக்கப் போகிறார்கள் என்ற ஆழ்ந்த சிந்தனையாகவே சென்று முடிகிறது. இது தான் டால்ஸ்டாய் மற்றும் காந்தியின் தத்துவம் ஆகும், ஆனால் மார்க்ஸ் மற்றும் லெனினின் தத்துவமாக ஒருபோதும் இது இருந்தது கிடையாது. இனி ”தீமையை வன்முறை கொண்டு எதிர்ப்பதில்லை” என்கிற தத்துவத்தை l’Humanité பத்திரிகை அபிவிருத்தி செய்ய விரும்புமாயின், அது தனது அடையாளச் சின்னமாக இருக்கும் அக்டோபர் புரட்சியின் சின்னமான சுத்தியல் அரிவாளை எடுத்து விட்டு காந்திக்கு பாலை வழங்கும் பக்திப்பரவசமான ஆட்டையே தனது சின்னமாக அது எடுத்துக்கொள்ள வேண்டும்.

“ஆனால், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதற்கு ஒரு புரட்சிகர சூழ்நிலை மட்டுமே சரியான சந்தர்ப்பமாக இருக்கும், அந்த சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை அல்லவா.” இந்த ஆழமான வாதத்தின் அர்த்தம் சூழ்நிலை புரட்சிகரமாக ஆகின்ற வரைக்கும் தொழிலாளர்கள் தாங்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. நேற்று “மூன்றாவது காலகட்டத்தை” உபதேசித்தவர்கள் இப்போது அவர்கள் கண்முன்பாக நடந்து கொண்டிருப்பதைக் காண விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். “அமைதியான”, “இயல்பான”, “ஜனநாயகவயமான” சூழ்நிலை அகன்று ஒரு சூறாவளியான, அதிமுக்கியமான, மற்றும் ஸ்திரமற்ற சூழ்நிலை வந்து சேர்ந்திருக்கிறது, அது தன்னை ஒரு புரட்சிகர சூழ்நிலையாகவோ அல்லது எதிர்-புரட்சிகர சூழ்நிலையாகவோ உருமாற்றிக் கொள்ள முடியும் என்பதால் தானே ஆயுதங்கள் குறித்த பிரச்சினையே முன்னால் வந்திருக்கிறது.

முன்னேறிய தொழிலாளர்கள் தங்கள் மீது தண்டனை பயமின்றி தாக்குதல் தொடுக்கப்படுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் தோற்கடிக்கப்படுவதையும் அனுமதிப்பார்களா அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் தைரியத்தை தட்டியெழுப்பி அவர்களைத் தமது பதாகையைச் சுற்றி ஐக்கியப்படுத்தி ஒவ்வொரு அடிக்கும் தமது சொந்த பதிலடியைக் கொடுப்பார்களா என்பதைப் பொறுத்தே எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாற்றீடு அமைந்திருக்கும். ஒரு புரட்சிகர சூழ்நிலையானது வானத்தில் இருந்து குதிப்பதில்லை. புரட்சிகர வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் செயலூக்கத்துடனான பங்கேற்பைக் கொண்டு அது வடிவமெடுக்கிறது.

குடிமக்கள்படை ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை தோல்வியில் இருந்து பாதுகாத்து விடவில்லை என்று பிரெஞ்சு ஸ்டாலினிஸ்டுகள் இப்போது வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுத் தான் அவர்கள் ஜேர்மனியில் தோல்வி எதனையும் காணவில்லை என்று முற்றிலுமாய் மறுத்ததோடு ஜேர்மன் ஸ்டாலினிஸ்டுகளின் கொள்கையானது, ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சரியாகத் தான் இருந்தது என்று திட்டவட்டமாகக் கூறிவந்தார்கள். இன்றோ அவர்கள் ஜேர்மன் தொழிலாளர்களது குடிமக்கள்படையில் (workers’ militia - Rote Front)[2] தான் ஒட்டுமொத்த தீமையும் இருப்பதாகக் காண்கிறார்கள். இவ்வாறாக ஒரு பிழையில் இருந்து அதற்குக் கொஞ்சமும் சளைப்பில்லாத எதிர்முனையில் இருக்கும் இன்னொரு பிழைக்காய் அவர்கள் தாவுகிறார்கள். குடிமக்கள்படை மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடுவதில்லை. சரியான கொள்கையும் அவசியம். இதனிடையே ஜேர்மனியில் ஸ்டாலினிசத்தின் கொள்கை (”சமூக பாசிசமே பிரதான எதிரி”, தொழிற்சங்கங்களின் பிளவு, தேசியவாதத்துடனும், சதிக்கவிழ்ப்புவாதத்துடனுமான நெருக்கம்) தான் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை தனிமைப்படுவதற்கும் அது உடைந்து நொருங்குவதற்கும் மரணகரமாக அழைத்துச் சென்றது. முற்றிலும் பிரயோசனமில்லாத ஒரு மூலோபாயத்தைக் கொண்டு எந்த குடிமக்கள்படையும் நிலைமையை பாதுகாத்துக்கொள்ள முடியாது.

குடிமக்கள்படையின் அமைப்பு என்றாலே அது சாகசங்களுக்கு இட்டுச் செல்வது தான், எதிரியை ஆத்திரமூட்டுவது தான், அரசியல் போராட்டத்தை உடலியல்ரீதியான போராட்டத்தைக் கொண்டு பதிலீடு செய்வது தான் என்று கூறுவதெல்லாம் அபத்தமானது. இந்த அத்தனை மூன்று கூற்றுகளிலுமே அரசியல் கோழைத்தனத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.

உண்மையில், முன்னணிப் படையின் வலிமையான அமைப்பாக, குடிமக்கள்படைதான், சாகசங்களுக்கு எதிராக, தனிநபர் பயங்கரவாதத்திற்கு எதிராக, இரத்தம் தோய்ந்த தன்னிச்சையான வெடிப்புகளுக்கு எதிரான உறுதிபட்ட பாதுகாப்பாக அமைகிறது.

அதேநேரத்தில், பாசிசம் பாட்டாளி வர்க்கத்தின் மீது திணிக்கின்ற உள்நாட்டுப் போரை ஆகக் குறைந்தபட்சமாகக் குறைப்பதற்கான ஒரே உகந்த வழி குடிமக்கள்படை மட்டுமே. “புரட்சிகர சூழ்நிலை” இல்லாத ஒரு சூழ்நிலையிலும் கூட தொழிலாளர்களை அவ்வப்போது “அப்பாவின் பிள்ளை” தேசபக்திவாதிகளை அவர்களது சொந்த வழியில் திருத்துவதற்கு விட்டுப் பார்ப்போம், அப்போது புதிய பாசிசக் குழுக்களுக்கு ஆள் சேர்ப்பது ஒப்பிடமுடியாத அளவுக்கு மிகக் கடினமானதாக ஆகிவிடும்.

ஆனால், இங்கேயும் மூலோபாயவாதிகள், தமது சொந்த தர்க்க அறிவில் சிக்கிக் கொண்டு, நமக்கு எதிராக இன்னும் மதிகெட்ட வாதங்களை வைக்கிறார்கள்:

“பாசிஸ்டுகளின் துப்பாக்கிக்கு நமது துப்பாக்கியைக் கொண்டு நாம் பதிலளிப்போமேயானால்” அக்டோபர் 23 (1934) அன்று l’Humanité எழுதுகிறது, “பாசிசம் என்பது முதலாளித்துவ ஆட்சியின் விளைபொருள் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் நாம் முகம்கொடுக்கும் ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கு எதிராக போராடுவது என்ற உண்மையை நாம் காணத் தவறுகிறோம்.”

அதிகமான பிழைகளது மாபெரும் குழப்பத்தை ஒரு சில வரிகளில் திரட்டுவது என்பது எத்தனை சிரமமாக இருக்கிறது. பாசிஸ்டுகள் “முதலாளித்துவ ஆட்சியின் விளைபொருள்” என்ற காரணத்தால் அவர்களுக்கு எதிராக ஒருவர் தன்னையே காத்துக் கொள்வது சாத்தியமில்லையாம். அதாவது சமகால சமூகக் கொடுமைகள் அத்தனையுமே “முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைபொருட்கள்” என்பதால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் நாம் கைதுறந்து விட வேண்டும் போலும்.

பாசிஸ்டுகள் ஒரு புரட்சிகரவாதியைக் கொல்லும்போதோ அல்லது ஒரு பாட்டாளி வர்க்க செய்தித்தாளை கொளுத்தும்போதோ, தொழிலாளர்கள் தத்துவார்த்தரீதியாக இப்படி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்: அதாவது “அடடா! கொலைகளும் தீவைப்புகளும் முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைபொருட்கள் அல்லவா”, அதன்பின் மன உளைச்சல் குறைந்து வீடு சென்று சேரலாம். வர்க்க எதிரிக்கு ஒட்டுமொத்த அனுகூலத்தையும் வழங்கும் விதமாக, மார்க்ஸின் போர்க்குணத் தத்துவத்தை விதிவசவாத மண்டியிடலைக் கொண்டு இடம்பெயர்க்கிறார்கள். குட்டி முதலாளித்துவத்தின் சீரழிவு என்பது முதலாளித்துவத்தின் விளைபொருள் என்பதை யாரும் மறுக்கவில்லை. பாசிசக் குழுக்களின் வளர்ச்சி என்பது, குட்டி முதலாளித்துவத்தின் சீரழிவின் விளைபொருளே. ஆனால் இன்னொரு பக்கத்தில், பாட்டாளி வர்க்கத்தின் துயரமும் கலகமும் அதிகரித்திருப்பதும் கூட வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்திருப்பதன் விளைபொருள் தான். பின்னர் ஏன், l’Humanité இன் “மார்க்சிஸ்டுகளுக்கு” பாசிசக் குழுக்கள் எல்லாம் முதலாளித்துவத்தின் நியாயமான விளைபொருளாகவும் தொழிலாளர்களது குடிமக்கள்படை மட்டும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முறை தவறிய விளைபொருளாகவும் தெரிகிறது? இதில் பூவா தலையா பார்ப்பது சாத்தியமில்லாதது.

“ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது” என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. எப்படி? மனிதத் தலைகளின் மீதா? பல்வேறு நாடுகளின் பாசிஸ்டுகளும் தமது துப்பாக்கிகளுடன் தொடங்கி தொழிலாளர்களது அமைப்புகளின் ஒட்டுமொத்த “அமைப்புமுறை’யை அழிப்பதில் தான் வந்து முடிந்தார்கள். ஆயுதந்தாங்கி தாக்குதல் தொடுக்கும் எதிரியை, முறையான ஆயுதம் தாங்கிய தற்காப்பின் மூலமாக அல்லாமல், நமது முறையின் போது, தாக்குதலுக்கு செல்லாமலும் வேறு எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?

l’Humanité ஆனது தற்காப்பு என்பதை வார்த்தைகளில் ஒப்புக் கொள்கிறது, ஆனால் “வெகுஜன தற்பாதுகாப்பு” என்ற வடிவத்தில் மட்டுமே. குடிமக்கள்படை தீங்கானதாம், ஏனென்றால் அது போரிடும் குழுக்களை வெகுஜனங்களில் இருந்து பிளவுபடுத்தி விடுகிறதாம். அப்படியானால் பாசிஸ்டுகளிடையே இருக்கும் சுயாதீனமான ஆயுதமேந்திய குழுக்கள் எல்லாரும் பிற்போக்குத்தனமான வெகுஜனங்களில் இருந்து துண்டிக்கப்படுவதில்லையே, அதற்கு நேர்மாறாக, தமது நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் மூலமாக வெகுஜனங்களின் துணிவை தட்டியெழுப்பவும் அவர்களை உறுதிப்படுத்தவும் முடிகிறதே, அது எப்படி? ஒருவேளை பரந்துபட்ட பாட்டாளி வர்க்கம் போராடும் தரத்தில் சீரழிந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாக இருக்கிறார்களா?

நம்பிக்கையற்ற வகையில் சிக்கிக் கொண்ட l’Humanité இறுதியாக தயங்கத் தொடங்குகிறது: வெகுஜனத் தற்பாதுகாப்புக்கு சிறப்பு “தற்காப்புக் குழுக்களை” உருவாக்குவது அவசியமாகவே தோன்றுகிறது. குடிமக்கள்படையை நிராகரித்து விட்டு சிறப்புக் குழுக்கள் அல்லது படையணிகளுக்கு ஆலோசனையளிக்கப்படுகிறது. பெயரில் தானே வித்தியாசம் என்பது போல் முதல் பார்வையில் தோன்றக் கூடும். நிச்சயமாக l’Humanité பரிந்துரைக்கிற பெயர் அர்த்தம் எதுவுமற்றது. ஒருவர் “வெகுஜனத் தற்காப்பு” குறித்து கூட பேசலாம், ஆனால் “சுய பாதுகாப்புக் குழுக்கள்” பற்றிப் பேசுவது சாத்தியமில்லாதது. ஏனென்றால், குழுக்களுக்கான நோக்கம் அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியதல்ல மாறாக தொழிலாளர்’ அமைப்புகளைப் பாதுகாப்பது பற்றியதாகும். எப்படியிருந்தாலும், இது பெயர் குறித்த பிரச்சினை அல்ல. “ஆட்சிக்கவிழ்ப்புவாத” த்திற்குள் விழுந்து விடாமல் இருக்கும் பொருட்டு “சுய பாதுகாப்புக் குழுக்கள்” ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கைதுறந்து விட வேண்டும் என்று l’Humanité சொல்கிறது. இந்தச் சாமியார்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு கத்தியைக் கூட அதன் கையில் கொடுக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதனை ஒரு குழந்தை போல் நடத்துகிறார்கள். இன்னும் தவிர, இந்தக் கத்திகள், நமக்குத் தெரியும், Camelots du Roi களின் [3] ஏகபோகமாக இருக்கின்றன, முறைப்படியான “முதலாளித்துவ விளைபொருளான” இவர்கள் கத்திகளின் துணைகொண்டு ஜனநாயக ”அமைப்புமுறை”யை தூக்கிவீசியிருக்கிறார்கள். எது எவ்வாறாயினும், பாசிச கைத்துப்பாக்கிகளுக்கு எதிராக “தற்காப்புக் குழுக்கள்” எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போகின்றன? “கருத்தியல் ரீதியாக”, நிச்சயமாக. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: அதாவது அவர்கள் ஒளிந்து கொள்ள மட்டுமே முடியும். கைகளில் அவர்களுக்குத் தேவையானது இல்லை என்பதால், கால்களால் ஓட்டம் பிடித்துத் தான் அவர்கள் “சுய பாதுகாப்பு” தேடிக் கொள்ள முடியும். இதனிடையே பாசிஸ்டுகள் எந்தவித தண்டனைக்குள்ளாகும் பயமும் இல்லாமல் தொழிலாளர் அமைப்புகளை அகற்றுவார்கள். ஆனால், பாட்டாளி வர்க்கம் ஒரு படுபயங்கர தோல்வியைக் கண்டால், எப்படியிருந்தாலும் அது “ஆட்சிக்கவிழ்ப்புவாத” குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட வேண்டியிருக்காது. “போல்ஷிவிச” பதாகையின் கீழ் நிற்கும் இந்த மோசடியான வார்த்தை விளையாட்டு வெறுப்பையும் கோபத்தையும் தான் தூண்டி விடுகிறது.

பசுமையாய் நினைவிலிருக்கும் “மூன்றாம் காலகட்டத்தின்”[1] போது, l’Humanité இன் மூலோபாயவாதிகள் எல்லாம் முற்றுகைப் பித்து பிடித்து, அன்றாடம் வீதிகளை “கைப்பற்றி” தமது படோடாப செயல்களைப் பகிர்ந்து கொள்ளாத அனைவரையும் “சமூக பாசிஸ்ட்டுக்கள்” என்று முத்திரை குத்திய சமயத்திலேயே நாம் இவ்வாறு முன்கணித்தோம்: “இந்த கண்ணியவான்கள் எல்லோரும் இலேசாகத் தங்கள் விரல் நுனிகளைச் சுட்டுக் கொள்ளட்டும், அந்தக் கணமே ஆக மோசமான சந்தர்ப்பவாதிகளாக எப்படி மாறுகிறார்கள் என்பதை நாம் காணப் போகிறோம்”. அந்தக் கணிப்பு இப்போது முழுமையாக ஊர்ஜிதமாகி இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சிக்குள் குடிமக்கள்படையை ஆதரிக்கும் இயக்கம் வளர்ச்சி அடைந்து வலுப்பெறும் நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்படும் அமைப்பின் தலைவர்கள், முன்னணி தொழிலாளர்கள் தங்களை போராட்ட அணிகளாக அமைத்துக் கொள்ளும் ஆர்வத்தைத் தணிக்க, தண்ணீர் குழாயை நோக்கி ஓடுகின்றனர். இதைவிட மன உறுதியை சீர்குலைப்பதற்கான அல்லது மேலும் கண்டிக்கத்தக்க வேலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியுமா?


சோசலிஸ்ட் கட்சியின் அணிகளில் சில நேரங்களில் இந்த ஆட்சேபனை கேட்க முடிகிறது: அதாவது 'ஒரு குடிமக்கள்படை உருவாக்கப்பட வேண்டும், ஆனால் அதைப் பற்றி கூச்சலிட வேண்டியது அவசியமில்லை.'


இவ்விடயத்தின் நடைமுறை அம்சங்களை ஆர்வக்கோளாறுமிக்க கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் பாதுகாக்க விரும்புவதற்காக தோழர்களைப் பாராட்டுவது சிறந்ததே. ஆனால் நான்கு சுவர்களுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இரகசியமாக ஒரு குடிமக்கள்படையை உருவாக்க முடியும் என்று நினைப்பது மிகவும் அப்பாவித்தனமானது. நமக்கு பல ஆயிரக்கணக்கான போராளிகள் தேவையாகும். குடிமக்கள்படையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு, உற்சாகமான அக்கறையும் செயலூக்கமான ஆதரவும் கொண்ட சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே இந்தப் போராளிகளைச் சுற்றி மில்லியன்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள், விவசாயிகள் அவர்களுக்குப் பின்னால் வருவார்கள். சதிகார இரகசியத்தன்மையானது, இச்செயலின் தொழில்நுட்ப அம்சத்தையே மட்டுமே மறைத்துக்கொள்ள முடியும்—மறைத்துக்கொள்ள வேண்டியதும் அதுவே ஆகும். அரசியல் பிரச்சாரம் பகிரங்கமாகவே நடைபெற வேண்டும்: அதாவது கூட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும், வீதிகளிலும், பொது சதுக்கங்களிலும் அது வெளிப்படையாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.


தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடிமக்கள்படையின் அடித்தள உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களின் தொழில் இடங்களிற்கு தக்கபடி ஒழுங்காக குழுக்கள் ஆக்கப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாகவும், மிக உயர்ந்த நிர்வாக அதிகாரிகளை விட எதிரியின் சதி முயற்சிகளுக்கு எதிரான வகையில் தங்களின் போர்ப் படையணிகளைப் பாதுகாக்கும் திறனுடையவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜனங்களை வெளிப்படையாக எழுச்சி செய்யாமல் சதிகாரத் தலைமைகளாக அமைக்கப்படும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் அவை செயலற்றவையாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு தொழிலாள வர்க்க அமைப்பும் இந்தப் பணியில் உடனடியாக குதிக்க வேண்டும். இக்கேள்வியில் தொழிலாள வர்க்கக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் எந்த எல்லைக் கோடுகளும் இருக்கக் கூடாது. கைகோர்த்து, அவர்கள் வெகுஜனங்களை ஆக்கப்பூர்வமாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குடிமக்கள்படையின் வெற்றி முழுமையாக உறுதி செய்யப்படும். 


'ஆனால் தொழிலாளர்கள் ஆயுதங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்?' என்று பயமுற்ற அற்பவாதிகள் போல நடிக்கும் 'நிதானமான யதார்த்தவாதிகள்' ஆட்சேபிக்கின்றனர். 'எதிரிகளிடம் துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், கண்ணீர்புகை மற்றும் விமானங்கள் உள்ளன. தொழிலாளர்களிடம் இருப்பது சில நூறு கைத்துப்பாக்கிகளும் சட்டைப்பை கத்திகளும் தானே இருக்கின்றன” என்கின்றனர்.


இந்த ஆட்சேபனையில், தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக அனைத்தும் குவிந்து கிடக்கின்றன. ஒருபுறம், 'அறிவுஞானி' நபர்கள், பாசிஸ்டுகளின் ஆயுதங்களை அரசின் ஆயுதங்களுடன் அடையாளப்படுத்துகிறார்கள். மறுபுறம், அவர்கள் அரசை நோக்கித் திரும்பி, பாசிஸ்ட்டுக்களின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று கோருகின்றனர். பிரமாதமான தர்க்கம் தான்! உண்மையில், இரண்டு நிகழ்வுகளிலும் அவர்களின் நிலைப்பாடு தவறானதாகும். பிரான்சில், பாசிஸ்டுகள் இன்னும் அரசைக் கட்டுப்படுத்துவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர். பிப்ரவரி 6 அன்று, அவர்கள் அரச போலீசாருடன் ஆயுதமேந்திய மோதலில் இறங்கினர். எனவேதான் பாசிஸ்டுகளுக்கு எதிரான உடனடி ஆயுதமேந்திய போராட்டம் என்று வரும்போது பீரங்கிகளையும் டாங்கிகளையும் பற்றிப் பேசுவது தவறானது. பாசிஸ்டுகள் நம்மை விட பணக்காரர்கள்தான். அவர்களுக்கு ஆயுதங்கள் வாங்குவது எளிது. ஆனால் தொழிலாளர்கள் ஒரு உறுதியான புரட்சிகரத் தலைமையைக் குறித்து நனவுடன் இருக்கும்போது, அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும், அதிக தீர்மானகரமானவர்களாகவும், அதிக அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள், ஏனைய வளங்களைத் தவிர, திட்டமிட்ட முறையில் பாசிஸ்ட்டுக்களின் ஆயுதங்களைக் களையச் செய்து, அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதன் மூலம் தங்களை ஆயுதம் ஏந்தும் படையாக உருவாக்கிக்கொள்ள முடியும்.


இதுதான் இப்போது பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான, தீவிரமான வடிவங்களில் ஒன்றாகும். பாசிசவாதிகளின் ஆயுதக் கிடங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் ஆயுதக் களஞ்சியங்கள் நிரம்பத் தொடங்கும் போது, வங்கிகளும் டிரஸ்ட்களும் தங்களது கொலைப்படைகளுக்கு ஆயுதங்களுக்கு நிதியளிப்பதில் மேலும் எச்சரிக்கையுடன் நடப்பார்கள். இந்த விடயத்தில் –இந்த விடயத்தில் மட்டும் தான்–தொழிலாளர்களுக்காக மேலும் ஒரு ஆயுத வளமாக மாறுவதைத் தடுக்க, அதிகாரிகள் பாசிசவாதிகளின் ஆயுதமயமாக்கலை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கூட உள்ளது. ஒரு புரட்சிகர தந்திரோபாயம் மட்டுமே அரசாங்கத்திடமிருந்து 'சீர்திருத்தங்கள்' அல்லது சலுகைகள் போன்ற இரண்டாம் நிலை விளைவுகளை உருவாக்கும் என்பதை நாம் நீண்ட காலமாகவே அறிந்திருக்கிறோம்.

ஆனால் பாசிஸ்டுகளது ஆயுதங்களை எப்படிப் பறிமுதல் செய்வது? இயல்பாகவே, வெறும் செய்தித்தாள் கட்டுரைகள் மூலமாக இதைச் செய்வது சாத்தியமல்ல. போரிடும் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு உளவுத்துறை சேவை அமைக்கப்பட வேண்டும். நம்மால் இந்த முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக அனைவரும் உணரும்போது, ஆயிரக்கணக்கான தகவல்கள் கொடுப்பவர்களும் நட்புடன் உதவுபவர்களும் எல்லா திசைகளில் இருந்தும் தன்னார்வமாக நம்முடன் வந்து சேர்வார்கள். இதற்குத் தேவைப்படுவது பாட்டாளி வர்க்க நடவடிக்கைக்கான ஒரு உறுதிப்பாடுதான்.


ஆனாலும் பாசிஸ்டுகளின் ஆயுதங்களே ஒரே ஆதாரவளமாக இருக்க முடியாது. பிரான்சில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இது பொதுவாகப் பார்க்கும் போது குறைவாகத் தோன்றலாம். ஆனால் தொழிலாளர் குடிமக்கள்படையை உருவாக்க ஆரம்பிக்க அது முழுமையாகவே போதுமானது. கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தங்கள் உறுப்பினர்களில் பத்தில் ஒருவருக்கே ஆயுதம் வழங்கினால், அது ஏற்கனவே 100,000 போராளிகளை உள்ளடக்கிய ஒரு படைச் சக்தியாக அமையும். தொழிலாளர் குடிமக்கள்படைக்கு “ஐக்கிய முன்னணி” அழைப்பு விடுக்கப்பட்டால், தன்னார்வமாக முன்வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை எளிதில் அதிகரித்துவிடும் என்பது உறுதி. கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் நன்கொடைகள், சந்தாக்கள் மற்றும் பங்களிப்புகளின் மூலம், ஓரிரு மாதங்களில் 100,000 முதல் 200,000 வரை தொழிலாள போராளிகளை ஆயுதபாணியாக்குவது சாத்தியமாகும். பாசிஸ்டு கும்பல்கள் உடனே வாலை கால்களுக்கு நடுவே சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கும். இந்த சூழ்நிலையில், வளர்ச்சியின் முழுமையான முன்னோக்கும் ஒப்பிடமுடியாத அளவுக்கு சாதகமானதாக மாறும்.

இதுவரை தொழிலாளர் குடிமக்கள்படையை உருவாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமைக்கான விளக்கமாக, ஆயுதங்களின் இன்மை அல்லது ஏதேனும் புறநிலையான காரணங்களையோ முன்வைப்பது, அது தன்னையும் முட்டாளாக்கி அடுத்தவர்களையும் முட்டாளாக்கும் வேலையாகும். பிரதான முட்டுக்கட்டை என்பது -ஒரே முட்டுக்கட்டை என்றும் கூட சொல்லலாம். தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்களின் பழமைவாதமும் செயலற்ற போக்கும்தான். ஐயுறவுவாதத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சக்தியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். கீழே குமுறும் சக்திகளுக்கு புரட்சிகர வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, மேலிருந்து வரும் அற்புதங்களை எதிர்பார்த்து தவறான நம்பிக்கையில் அவர்கள் வாழ்கின்றனர். சோசலிசக் கட்சித் தொழிலாளர்கள் தங்கள் தலைவர்களை உடனடியாக தொழிலாளர் குடிமக்கள்படையை உருவாக்கத் தூண்ட வேண்டும், இல்லையெனில் அவர்கள் இளம் மற்றும் புத்துணர்ச்சி மிக்க சக்திகளுக்குப் வழியை விட வேண்டும்.


பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி இல்லாமல் ஒரு வேலைநிறுத்தம் என்பது சிந்தித்துப் பார்க்க முடியாதது. இதேபோல், மறியல் போராட்டங்கள் இல்லாமல் வேலைநிறுத்தம் என்பது சாத்தியமில்லை. அவர்கள் முதலில் சமாதானமாக இணங்க வைக்க முயல்கிறார்கள்; ஆனால் தேவைப்பட்டால், கட்டாயமாகும் போது, பலத்தைப் பயன்படுத்தத் தயங்குவதுமில்லை. வேலைநிறுத்தம் என்பது எப்போதும் சித்தாந்தத்துடன் நேரடித் தலையிடல் (physical) வழிமுறைகள் ஒன்றிணைந்திருக்கும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை வடிவம் ஆகும். அடிப்படையாக எப்படி வேலைநிறுத்தத்திற்கு மறியல் அவசியமாக இருக்கிறதோ அதேபோல பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அதற்கு ஒரு குடிமக்கள்படை அவசியமாகும். அடிப்படையில் மறியல் என்பது தொழிலாளர்’ குடிமக்கள்படையின் மையக்கரு ஆகும். நேரடித் தலையீட்டுப் போராட்டத்தை கைவிடுவது குறித்து சிந்திக்கும் ஒருவர் அனைத்து போராட்டங்களையும் கைவிடவேண்டும், ஏனெனில் ஆன்மா உயிரின்றி வாழ முடியாது.


மாபெரும் இராணுவத் தத்துவாசிரியரான கிளாஸ்விட்ஸ் (Clausewitz) இன் அற்புதமான வாக்கியத்தின் வழி சொல்வதாக இருந்தால், போர் என்பது பிறிதொரு வழியில் அரசியலின் தொடர்ச்சியே. இந்த வரையறை உள்நாட்டுப் போருக்கும் முழுமையாக பொருந்துகிறது. இதில் ஒன்றை இன்னொன்றுக்கு எதிராக நிறுத்துவதென்பது அனுமதிக்க முடியாதது, ஏனென்றால் அரசியல் போராட்டம் உள் உந்துதலின் விசையால் நேரடித் தலையிடல் போராட்டமாக தன்னை மாற்றிக் கொள்கின்ற போது அதன் உறுதிப்பாட்டை தடுத்து நிறுத்தி விடுவது சாத்தியமில்லாதது.


ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை என்னவெனில், அரசியலானது பகிரங்க ஆயுத மோதலாக மாற்றமடைவது தவிர்க்கமுடியாததென முன்கூட்டியே கணித்து, அந்த தருணத்திற்காக தனது அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி, ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு தயாராகின்றனவோ அதேபோன்று தயாரிப்பு செய்திருக்க வேண்டும்.


பாசிசத்திற்கு எதிரான பாதுகாப்பிற்கான குடிமக்கள்படை அணிகள் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கான பாதையில் முதல் படியே தவிர, கடைசிப் படி அல்ல. நமது முழக்கம் பின்வருமாறு:


'பாட்டாளி வர்க்கத்தையும் புரட்சிகர விவசாயிகளையும் ஆயுதபாணியாக்குவோம்!'

தொழிலாளர் குடிமக்கள்படையானது, இறுதியாய்வில், அனைத்து உழைக்கும் மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியம். உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அத்துடன் அதன் தொடர்ச்சியாய் அழிவு சாதனங்கள் அனைத்தும், அதாவது ஆயுதங்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் அனைத்தும், தொழிலாளர்களின் கரங்களில் வந்து சேர்கின்ற ஒரு தொழிலாளர்’ அரசில் மட்டுமே இந்த வேலைத்திட்டம் முழுமையடைவது என்பது சாத்தியமாக முடியும்.

ஆயினும், வெறும் கைகளைக் கொண்டு தொழிலாளர் அரசைப் பெற்று விடலாம் என்பது சாத்தியமமில்லாது. சோசலிசத்துக்கான அமைதியான அரசியலமைப்புப் பாதையைப் பற்றி பேசக்கூடியவர்கள், ருனோடெல் [4] போன்ற அரசியல் ஊனமுற்றவர்களே. பாசிசக் குழுக்கள் கொண்டிருக்கும் அகழிகளால் அரசியலமைப்புப் பாதை துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறது. நமக்கு முன்னால் இருக்கும் அகழிகள் கொஞ்சமல்ல. பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டு போலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இன்னும் டசின் கணக்கான ஆட்சிக் கவிழ்ப்புகளில் இறங்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கம் தயங்காது.


ஒரு வெற்றிகரமான புரட்சியின் மூலமாக மட்டுமே ஒரு தொழிலாளர்’ சோசலிச அரசு உருவாக்கப்பட முடியும்.

ஒவ்வொரு புரட்சியும் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியின் அணிவகுப்பினால் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அதன் முடிவை தீர்மானிக்கும் வகையில், அது எப்போதும் பகைமை கொண்ட வர்க்கங்களுக்கு இடையிலான ஆயுதமேந்திய பகிரங்க மோதல்களில் தான் அது எப்போதும் தீர்மானிக்கப்படுவதாய் இருக்கிறது. ஒரு நெடிய அரசியல் கிளர்ச்சி, நீண்டதொரு காலகட்டத்திற்கு பரந்த வெகுஜனங்களுக்கு கல்வியூட்டல் மற்றும் ஒழுங்கமைத்தல் இவற்றின் விளைவாக மட்டுமே ஒரு புரட்சிகர வெற்றி என்பது சாத்தியமாக முடியும்.


ஆனால் ஆயுதமேந்திய மோதலும் கூட இதேபோல நெடுங்காலத்திற்கு முன்பே நன்கு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 


மிகுந்த வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள், அவர்கள் ஒரு வாழ்வா-சாவாப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தங்களுடைய விடுதலைக்கான ஒரு உத்தரவாதமாக, அவர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.

விளக்கக் குறிப்புக்கள்

[1] “மூன்றாம் காலகட்டம்”: ஸ்டாலினிச திட்டத்தின்படி, இது “முதலாளித்துவத்தின் இறுதிக் காலம்”, அதன் உடனடியாக வரவிருக்கும் அழிவு மற்றும் சோவியத்துகளால் மாற்றப்பட்ட காலம். இக்காலகட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர-இடது மற்றும் சாகச தந்திரோபாயங்களுக்கு, குறிப்பாக சமூக-பாசிச கருத்தாக்கத்திற்கு குறிப்பிடத்தக்கது.

[2] Rote Front:  1929 ஆம் ஆண்டு பேர்லின் மே தின கலவரங்களுக்குப் பிறகு சமூக ஜனநாயக அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தும் போராளிகள்.

[3] Camelots du Roi: பிரெஞ்சு முடியாட்சிவாதிகள் சார்லஸ் முராவின் செய்தித்தாளான Action Francaise சுற்றி அணிதிரண்டனர், இது வன்முறையான ஜனநாயக விரோதமான குழுவாகும்.

[4] Pierre Renaudel (1871-1935): ருனோடெல், முதலாம் உலகப் போருக்கு முன்னர், சோசலிசத் தலைவர் Jean Jaures இன் வலதுகரமாகவும் L’Humanite பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். போரின் போது, ஒரு வலதுசாரி சமூக தேசபக்தர். 1930 களில், அவரும் மார்செல் டேட்டும் (Marcel Déat) திருத்தல்வாத “நவ-சோசலிச” போக்கை வழிநடத்தினர், இது 1933 இல் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தது. பெப்ரவரி 6, 1934 பாசிசக் கலவரங்களுக்குப் பின்னர், அவர் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பிரதான கட்சியான ராடிகல் கட்சியில் சேர்ந்தார்.

10. அமெரிக்காவில் முன்னோக்கு

அமெரிக்கப் பிரச்சினைகள் குறித்த சில கேள்விகள், நான்காம் அகிலத்திலிருந்து

அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலை என்பது ஒப்பீட்டளவில் ஒரு சொல் மட்டுமே. மிக முக்கியமான பல விஷயங்களில், தொழில்நுட்ப ரீதியாகவும் அதன் வாழ்க்கைத் தரத்திலும் அது உலகின் மிகவும் முற்போக்கான தொழிலாள வர்க்கமாகும்...

வேலைநிறுத்தங்களின் போது நாம் பார்த்தது போல், அமெரிக்க தொழிலாளர்கள் மிகவும் போராடும் மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் உலகிலேயே மிகவும் கிளர்ச்சிகரமான வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர். ஒட்டுமொத்த சமூகத்திலும் தனது வர்க்க நிலைப்பாட்டை பொதுமைப்படுத்தும் அல்லது பகுப்பாய்வு செய்யும் உணர்வை அமெரிக்க தொழிலாளி தவறவிடுகிறார். இந்த சமூக சிந்தனையின் பற்றாக்குறை நாட்டின் முழு வரலாற்றிலும் அதன் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ...

பாசிசம் குறித்து: பாசிசம் வெற்றி பெற்ற அனைத்துத் தருணங்களிலும், அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முன்பாகவே, தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், விவசாயிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கம் உள்ளிட்ட வெகுஜனங்களில் ஒரு புரட்சிகர அலை எழுந்தது. இத்தாலியில், போருக்குப் பின்னரும் 1922க்கு முன்பும், மிகப் பெரிய பரிமாணங்களைக் கொண்ட ஒரு புரட்சிகர அலை இருந்தது; அரசு முடங்கிப் போனது, காவல்துறை இல்லை, தொழிற்சங்கங்களால் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடிந்தது - ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு கட்சியும் இல்லை. ஒரு எதிர்வினையாக பாசிசம் வந்தது.

ஜேர்மனியிலும் இதே நிலைதான். 1918ல் நாம் ஒரு புரட்சிகர சூழ்நிலையைக் கொண்டிருந்தோம்; முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் பங்கேற்கக் கூட கேட்கவில்லை. சமூக ஜனநாயகவாதிகள் புரட்சியை முடக்கினர். பின்னர் தொழிலாளர்கள் 1922-23-24 இல் மீண்டும் முயன்றனர். இது கம்யூனிஸ்ட் கட்சியின் திவால்நிலைக் காலமாகும்-இவை அனைத்திற்கும் நாம் முன்பே சென்று விட்டோம். பின்னர் 1929-30-31 இல் ஜேர்மனிய தொழிலாளர்கள் மீண்டும் ஒரு புதிய புரட்சிகர அலையைத் தொடங்கினர். கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கங்களில் ஒரு மகத்தான சக்தி இருந்தது, ஆனால் பின்னர் சமூக பாசிசத்தின் புகழ்பெற்ற கொள்கை (ஸ்டாலினிச இயக்கத்தின் தரப்பில்) வந்தது, இது தொழிலாள வர்க்கத்தை முடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொள்கையாகும். இந்த மூன்று பிரம்மாண்ட அலைகளுக்குப் பிறகுதான் பாசிசம் ஒரு பெரிய இயக்கமாக மாறியது. இந்த விதிக்கு எந்த விதிவிலக்கும் இல்லை-தொழிலாள வர்க்கம் சமூகத்தின் தலைவிதியை தனது கைகளில் எடுக்க முழுமையான இயலாமையைக் காட்டும்போது மட்டுமே பாசிசம் வருகிறது.

அமெரிக்காவிலுள்ள உங்களுக்கும் இதே நிலைதான் இருக்கும். ஏற்கனவே, பாசிச கூறுகள் உள்ளன, நிச்சயமாக, இத்தாலி மற்றும் ஜேர்மனியின் உதாரணங்கள் உள்ளன. எனவே, அவைகள் மிகவும் விரைவான வேகத்தில் செயல்படும். ஆனால் மற்ற நாடுகளின் உதாரணங்களும் உங்களிடம் உள்ளன. அமெரிக்காவில் அடுத்த வரலாற்று அலை வெகுஜனங்களின் தீவிரவாதத்தின் அலையாக இருக்கும், பாசிசமாக அல்ல. நிச்சயமாக, போர் தீவிரமயமாக்கலை சிறிது காலத்திற்குத் தடுக்கலாம், ஆனால் பின்னர் அது தீவிரமயமாக்கலுக்கு இன்னும் மிகப்பெரிய வேகத்தையும் ஊசலாட்டத்தையும் கொடுக்கும்.

நாம் போர் சர்வாதிகாரத்தை —இராணுவ இயந்திரத்தின், ஊழியர்களின், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை— ஒரு பாசிச சர்வாதிகாரத்துடன் அடையாளப்படுத்தக் கூடாது. பாசிச சர்வாதிகாரம் உருவாக, முதலில் மக்கள் பெரும்பான்மையின் ஆழ்ந்த விரக்தி உணர்வு தேவைப்படுகிறது. புரட்சிகரக் கட்சிகள் அவர்களைக் காட்டிக்கொடுக்கும் போது, தொழிலாளர்களின் முன்னணிப் படை மக்களை வெற்றியை நோக்கி இட்டுச்செல்லும் இயலாமையைக் காட்டும்போது- விவசாயிகள், சிறு வணிகர்கள், வேலையற்றவர்கள், சிப்பாய்கள் போன்றவர்கள் ஒரு பாசிச இயக்கத்தை ஆதரிக்கும் திறனைப் பெறுகிறார்கள், ஆனால் அந்த நேரத்தில் மட்டுமே.

ஒரு இராணுவ சர்வாதிகாரம் என்பது முற்றிலும் ஒரு அதிகாரத்துவ நிறுவனமாகும். இது இராணுவ இயந்திரத்தால் வலுப்படுத்தப்பட்டு, மக்களின் திசைதிருப்பல் மற்றும் அதற்கு அவர்கள் அடிபணிவதை அடிப்படையாகக் கொண்டது. சிறிது காலத்திற்குப் பிறகு அவர்களின் உணர்வுகள் மாறக்கூடும், மேலும் அவர்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக கலகக்காரர்களாக மாறக்கூடும்.

11. புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புங்கள்!”

போனபார்டிசம், பாசிசம் மற்றும் போர் என்பதிலிருந்து

அரசியல் தலைப்புகள் பற்றிய ஒவ்வொரு விவாதத்திலும் கேள்வி எப்போதும் எழுகிறது:

நெருக்கடி வரும் தருணத்தில் வலுவான கட்சியை உருவாக்குவதில் நாம் வெற்றி பெறுவோமா? பாசிசம் நம்மை எதிர்பார்க்காதா? பாசிச வளர்ச்சி நிலை தவிர்க்க முடியாதது அல்லவா?

பாசிசம் பெற்ற வெற்றிகள், மக்கள் தங்கள் பார்வையை இழந்து, பாசிசம் வலுப்பெறும் சூழ்நிலைகள் என்னவென்று மறந்துவிடும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. ஆயினும் இந்த நிலைமைகளைப் பற்றிய தெளிவான புரிதல் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் அதை ஒரு வரலாற்று விதியாக வைக்கலாம்: அதாவது பழமைவாத தொழிலாளர் கட்சிகள், பாட்டாளி வர்க்கம் புரட்சிகர சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்த நாடுகளில் மட்டுமே பாசிசத்தால் வெல்ல முடிந்தது. ஜேர்மனியில் இரண்டு புரட்சிகர சூழ்நிலைகள் சம்பந்தப்பட்டிருந்தன: 1918-1919 மற்றும் 1923-1924.1929-ல் கூட பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டம் இன்னும் சாத்தியமாக இருந்தது. இந்த மூன்று நிகழ்வுகளிலும், சமூக ஜனநாயகமும் கம்யூனிஸ்டுகளும் [ஸ்டாலினிஸ்டுகள்] அதிகாரத்தை கைப்பற்றுவதை குற்றவியல் ரீதியாகவும் கொடூரமாகவும் சீர்குலைத்து, அதன் மூலம் சமூகத்தை ஒரு முட்டுக்கட்டைக்குள் வைத்தன. இந்தச் சூழ்நிலையில்தான் பாசிசத்தின் சூறாவளி எழுச்சியும், அதன் அதிகாரத்தைப் பெறுவதும் சாத்தியமானது என்பதும் நிரூபணமானது.

* * *

பாட்டாளி வர்க்கம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அதிகாரத்தை வெல்ல இயலாது என்பதை நிரூபிக்கும் அளவிற்கு, ஏகாதிபத்தியம் அதன் சொந்த முறைகளால் பொருளாதார வாழ்க்கையை ஒழுங்குபடுத்தத் தொடங்குகிறது; அரசு அதிகாரமாக மாறும் பாசிசக் கட்சியே அரசியல் பொறிமுறையாகும். உற்பத்தி சக்திகள் தனியார் சொத்துக்களுடன் மட்டுமல்லாமல் தேசிய அரச எல்லைகளுடனும் சமரசமற்ற முரண்பாடுகளில் உள்ளன. ஏகாதிபத்தியம் இந்த முரண்பாட்டின் வெளிப்பாடாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவம் இந்த முரண்பாட்டை எல்லைகளை விரிவுபடுத்துதல், புதிய பிரதேசங்களை கைப்பற்றுதல் மற்றும் பலவற்றின் மூலம் தீர்க்க முயல்கிறது. பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மூலதனத்திற்கு நிதியளிப்பதற்கு உட்படுத்தும் சர்வாதிகார அரசு, ஒரு அதி தேசியவாத அரசு, ஒரு ஏகாதிபத்திய பேரரசு, கண்டங்கள் மீதான ஆட்சி, முழு உலகத்தின் மீதான ஆட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கான கருவியாகும்.

ஒவ்வொன்றும் தானாகவே மற்றும் அவை அனைத்தும் அவற்றின் ஒட்டுமொத்தத்தில், அவை வெளிப்படும் அளவிற்கு அல்லது முன்னணியில் வந்த அளவிற்கு சுதந்திரத்தின் இந்த பண்புகள் அனைத்தையும் நாம் பகுப்பாய்வு செய்துள்ளோம்.

கோட்பாட்டு பகுப்பாய்வு மற்றும் கடந்த கால் நூற்றாண்டின் வளமான வரலாற்று அனுபவம் இரண்டும், பாசிசம் ஒவ்வொரு முறையும் பின்வருவனவற்றைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அரசியல் சுழற்சியின் இறுதி இணைப்பு என்பதை சம பலத்துடன் நிரூபித்துள்ளன: அதாவது முதலாளித்துவ சமூகத்தின் மிக மோசமான நெருக்கடி; தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலின் வளர்ச்சி; தொழிலாள வர்க்கத்தின் மீதான அனுதாபத்தின் வளர்ச்சி, மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குட்டி முதலாளி வர்க்கத்தின் மாற்றத்திற்கான ஏக்கம்; பெருமுதலாளி வர்க்கத்தின் அதீத குழப்பம்; புரட்சிகர உச்சக்கட்டத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் கோழைத்தனமான மற்றும் நயவஞ்சக சூழ்ச்சிகள்; பாட்டாளி வர்க்கத்தின் சோர்வு; வளர்ந்து வரும் குழப்பம் மற்றும் அலட்சியம்; சமூக நெருக்கடியின் தீவிரம்; குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் விரக்தி, மாற்றத்திற்கான ஏக்கம்; குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான கவலை, அற்புதங்களை நம்புவதற்கு அதன் தயார்நிலை, வன்முறை நடவடிக்கைகளுக்கு அதன் தயார்நிலை; பாட்டாளி வர்க்கத்தின் மீதான விரோதத்தின் வளர்ச்சியானது, அதன் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியுள்ளது. ஒரு பாசிசக் கட்சி விரைவாக உருவாவதற்கும் அதன் வெற்றிக்கும் இவைதான் அடிப்படையாக இருக்கின்றன.

அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கல் அதன் ஆரம்ப கட்டங்களை மட்டுமே கடந்துள்ளது, கிட்டத்தட்ட பிரத்தியேகமாக, தொழிற்சங்க இயக்கத்தின் (CIO) வட்டத்திலாகும். போருக்கு முந்தைய காலகட்டமும், பின்னர் போரும் கூட, குறிப்பாக கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் போர்த் தொழிற்துறையில் உள்வாங்கப்பட்டால், இந்த தீவிரமயமாக்கல் செயல்முறையை தற்காலிகமாக குறுக்கிடக்கூடும். ஆனால் தீவிரமயமாக்கல் செயல்முறையின் இந்த குறுக்கீடு நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது. தீவிரமயமாக்கலின் இரண்டாம் கட்டம் மிகவும் கூர்மையான வெளிப்பாட்டுத் தன்மையைப் பெறும். ஒரு சுயாதீனமான தொழிலாளர் கட்சியை உருவாக்கும் பிரச்சினையே இன்றைய காலத்தின் அவசியமாகும். எமது இடைமருவல் கோரிக்கைகள் பெரும் புகழைப் பெறும். மறுபுறம், பாசிச, பிற்போக்குத்தனமான போக்குகள் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்து, மிகவும் சாதகமான தருணத்திற்காக காத்திருக்கும் பின்னணியில் பின்வாங்கும். இதுதான் மிக நெருக்கமான முன்னோக்காகும். ஒரு சக்திவாய்ந்த புரட்சிகரத் தலைமைக் கட்சியை உருவாக்குவதில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்று ஊகிப்பதை விட, முற்றிலும் தகுதியற்ற வேலை வேறு எதுவும் இல்லை. புரட்சிகர செயல்பாட்டிற்கான அனைத்து ஆதாரங்களையும் வழங்கும் ஒரு சாதகமான முன்னோக்கு முன்னால் உள்ளது. திறந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading