முன்னோக்கு

எதிர்ப்புரட்சியும் குற்றவியல் தன்மையும் கொண்ட ட்ரம்பின் முதல் 100 நாட்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மரைன் ஒன்னிலிருந்து (ஹெலிகாப்டர்) வருகிறார். ஏப்ரல் 27, 2025 ஞாயிற்றுக்கிழமை. [AP Photo/Manuel Balce Ceneta]

அமெரிக்க ஜனாதிபதியின் முதல் 100 நாட்கள் என்பது, பாரம்பரியமாக ஒரு புதிய நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதன் திசையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக செயல்படுவதை குறிக்கிறது. இந்த நடைமுறை பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டுடன் தொடங்கியது. அவர் 1933ல் நிலவிய பெருமந்த நிலைக்கு மத்தியில், காங்கிரஸை சிறப்புக் கூட்டத்திற்கு அழைத்து புதிய உடன்பாட்டிற்கு (New Deal) அடித்தளம் அமைக்கும் 15 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றினார்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க முதலாளித்துவம் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்தது. புரட்சியின் அபாயத்திற்கு பதிலளித்த அமெரிக்க ஆளும் வர்க்கம், கடுமையான உள் மோதல்கள் இல்லாமல், சமூக சீர்திருத்தக் கொள்கைகளை இயற்றியது. ரூஸ்வெல்ட்டின் முதல் 100 நாட்கள், அவரது சொந்த வார்த்தைகளில் கூறுவதானால், “புதிய ஒப்பந்தத்தின் சக்கரங்களை” இயக்கத் தொடங்கின என்றால், ட்ரம்பின் முதல் 100 நாட்கள் எதிர்ப்புரட்சி மற்றும் குற்றவியல் இயந்திரத்தின் சக்கரங்களை இயக்கத் தொடங்கின.

பதவியேற்ற முதல் நாளில் இருந்தே, ட்ரம்ப், அவரது பாசிச ஆலோசகர்களால் வரையப்பட்ட ஒரு செயல்திட்டத்தைப் பின்பற்றி, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க திட்டமிட்டு வேலை செய்து வருகிறார். ஜனவரி 20 ஆம் தேதி, பேச்சு சுதந்திரத்தைத் தாக்கும், பிறப்புரிமை குடியுரிமை போன்ற அரசியலமைப்பு பாதுகாப்புகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், இராணுவ மற்றும் நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்தும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அரசியல் எதிரிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கும் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டபோது இது அனைத்தும் தொடங்கியது.

​​அடுத்து வந்த வாரங்களில், வெள்ளை மாளிகை இந்த நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த நகர்ந்தது: குறிப்பாக, காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக மாணவர்களைக் கைது செய்தல், அன்னிய எதிரிகள் சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோரை எல் சால்வடோரில் உள்ள சித்திரவதை முகாம்களுக்கு நாடு கடத்துதல், குறைந்தபட்சம் மூன்று அமெரிக்க குடிமக்களின் குழந்தைகளை ஹோண்டுராஸுக்கு நாடு கடத்துதல், மற்றும் கடந்த வாரம் புளோரிடாவில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை கைது செய்தல் போன்ற திட்டங்களை வெள்ளை மாளிகை செயல்படுத்தியுள்ளது. கூட்டாட்சி அரசாங்கமும் மாநிலங்களும் கூட்டாகத் திட்டமிட்டு நடத்திய தொடர்ச்சியான பாரிய சுற்றிவளைப்புகளில் இது முதலாவது ஆகும்.

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க குடிமக்களை - அவர்களை ட்ரம்ப் “உள்நாட்டில் வளர்ந்தவர்கள்” என்று குறிப்பிடுகிறார் – பெருமளவில் நாடு கடத்துவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், மிக சமீபத்தில் நீதிபதி ஹன்னா டுகன் கைது செய்யப்பட்டதன் மூலமாக, நீதித்துறை மீது முன்கண்டிராதளவு ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம், வன்முறை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளுக்கான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில், புகலிட நகரங்கள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு எதிராக “தேவையான அனைத்து சட்டத் தீர்வுகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும்” தொடருமாறு அட்டர்னி ஜெனரல் பாம் பொண்டி மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயெம் ஆகியோர்களுக்கு புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

சமீபத்திய வாரங்களில், பல்கலைக்கழகங்களை நோக்கி அதன் கவனத்தை திருப்பியுள்ள இந்த ஆட்சி, பாடத் திட்டங்களை திருத்தி எழுதவும், நாஜி செயல்முறையின் (Gleichschaltung) அமெரிக்க பதிப்பில் அல்லது ஆசிரியர்களை “வழிக்குக் கொண்டுவருதல்” என்ற பேரில் அவர்களை களையெடுக்கவும் முயல்கிறது. பைடென் நிர்வாகம் அமைத்த முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி, ட்ரம்பின் அதிகாரிகள் (இவர்களில் பலர் பாசிச வணக்கங்களைச் செலுத்தும் ஆர்வத்தை அடக்க முடியாமல் தவிக்கின்றனர்) “யூத-எதிர்ப்புவாதத்தை” எதிர்த்துப் போராடுகிறோம் என்ற சிடுமூஞ்சித்தனமான பதாகையின் கீழ் இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஊடகங்களின் பிரிவுகளும் கூட இப்போது ட்ரம்பின் நடவடிக்கைகளின் நீண்டகால தாக்கங்களை ஒப்புக் கொள்கின்றன. கடந்த திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்கா சர்வாதிகாரத்தின் விளிம்பில் உள்ளது என்ற சட்ட அறிஞர்களின் எச்சரிக்கையை மேற்கோளிட்டுள்ளது. கொலம்பியாவின் டேவிட் போஸன் “சர்வாதிகார அரசியலமைப்புவாதம்” பற்றிப் பேசினார். யேல் பல்கலைக்கழகத்தின் ஜாக் பால்கின் அரசியலமைப்பு “கத்தி முனையில்” இருப்பதாகக் கூறினார். நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின் பர்ட் நியூபோர்ன், நீதித்துறை மீதான ட்ரம்பின் தாக்குதல் “அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தல்” என்று கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகத்தை உருவாக்கிய சமூக மற்றும் வரலாற்று நிலைமைகள் என்ன? அவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்ல, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி விளக்க முடியும்? இதுபோன்ற கேள்விகள் அரிதாகவே கேட்கப்படுகின்றன, தீவிரமாக பதிலளிக்கப்படுகின்றன என்பது ஒருபுறம் இருக்கட்டும் — ஏனென்றால் அவை ட்ரம்பின் தனிப்பட்ட குணாம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டவில்லை, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் குணாம்சத்தையே சுட்டிக்காட்டுகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் பிரசுரித்த ஒரு அறிக்கையில் விளக்கியதைப் போல, வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் திரும்பியிருப்பது, “அமெரிக்காவில் நிலவுகின்ற நிஜமான சமூக உறவுகளுக்கு பொருத்தமாக, அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானம் வன்முறையாக மறுஒழுங்கு அமைக்கப்படுவதை” வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ட்ரம்ப் தன்னலக்குழுக்களின் உருவகமாக, அதன் நாற்றம்கண்ட தன்மையின் உருவகமாக இருக்கிறார். அவர் அதிகாரத்தில் உள்ள அரசியல் பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

$TRUMP மீம் நாணயத்தைச் சுற்றியுள்ள நிதி நடவடிக்கைகள் அரசாங்கத்தை நடத்துபவர்களின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. கடந்த வாரம், ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் கிரிப்டோகரன்சியின் உயர்மட்ட உரிமையாளர் ஜனாதிபதியுடன் ஒரு இரவு விருந்துக்கு வெல்வார் என்று அறிவித்தனர். இதன் மூலம் அதன் சந்தை மூலதனம் 700 மில்லியன் டாலர்கள் உயர்ந்தது. வெறும் 48 மணி நேரங்களில், ட்ரம்ப் உட்பட உள் உயர்மட்ட நபர்கள் வர்த்தக கட்டணமாக கிட்டத்தட்ட 900,000 டாலர்களை பைக்குள் போட்டுக் கொண்டனர்.

இந்த அப்பட்டமான நிதி மோசடி, வோல் ஸ்ட்ரீட் என்று அறியப்படும் கும்பலின் அன்றாட நடவடிக்கைகளில் அளவில்தான் வேறுபடுகிறதே தவிர, பண்பில் வேறுபடவில்லை. அமெரிக்கா கற்பனை செய்து பார்க்க முடியாத செல்வவளத்தை குவித்துள்ள ஒரு குற்றகரமான நிதியியல் பிரபுத்துவத்தால் ஆளப்படுகிறது. பைடென் நிர்வாகத்தின் இறுதி ஆண்டான 2024 ஆம் ஆண்டில், 19 பில்லியனர் குடும்பங்கள் தங்கள் செல்வத்தை 1 டிரில்லியன் டாலர்களுக்கு அதிகரித்தன. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் அவர்களின் கருவியாக செயல்படுகிறது.

இந்த தன்னலக்குழு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பாரிய சமூக எதிர்புரட்சியை நடத்தி வருகிறது. நிர்வாகம் அதன் முதல் 100 நாட்களில், பில்லியனர் எலோன் மஸ்க் மேற்பார்வையில் “அரசு செயல்திறன் துறை” (DOGE) மூலமாக பத்தாயிரக் கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது, பொது முகமைகளைக் கலைத்துள்ளது, பெருநிறுவன மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறைகளைக் குறைத்துள்ளது மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் எஞ்சியிருப்பவற்றில் நூறு பில்லியன் டாலர் வெட்டுக்களுக்கு தயாரிப்பு செய்யத் தொடங்கியுள்ளது.

பொது சுகாதாரத்தில், தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாட்டாளர் ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் தலைமையில், அழிவுகரமான தக்குதலை ட்ரம்ப் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவர் 20,000 க்கும் மேற்பட்ட பொது சுகாதார ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதோடு, தடுப்பூசி திட்டங்களை ஊக்கமிழக்கச் செய்துள்ளார். இது, தட்டம்மை மற்றும் கக்குவான் இருமல் போன்ற நோய்கள் மீண்டும் எழுச்சி பெற வழிவகுத்துள்ளது. கல்வித்துறையில், லிண்டா மக்மஹோன் பொதுக் கல்வியை அகற்றுவதற்கும், தனியார்மயமாக்கத்தைத் திணிப்பதற்கும், அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதலை ஆழப்படுத்துவதற்குமான முயற்சிகளை மேற்பார்வை செய்து வருகிறார். மேலும் திங்களன்று, நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கு, 2028 இல் வெளியிடப்படவுள்ள அடுத்த தேசிய காலநிலை மதிப்பீட்டைத் தயாரிக்கும் பணியிலிருந்து “விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ஆட்சி வடிவங்கள், பாரியளவில் செல்வக் குவிப்புடனோ அல்லது இந்த செல்வவளத்தைப் பேணுவதற்கு அவசியமான கொள்கைகளுடனோ ஒருபோதும் பொருந்திப் போகாது.

அதேபோல், ஜனநாயக வடிவங்கள் உலக மேலாதிக்கத்தைப் பேணுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்படும் முடிவில்லா போர்களுடன் இணக்கமாகவும் போகாது. பனிப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரம்பற்ற மற்றும் அதிகரித்துவரும் போர்கள், பைடென் ஆட்சியின் கீழ் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர், உலகப் போரின் ஆரம்பக் கட்டங்களாக மாறிவிட்டன.

வெளியுறவுக் கொள்கை மற்றும் ட்ரம்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மீது அரசுக்குள் என்னென்ன மோதல்கள் இருந்தாலும், ட்ரம்ப் இந்த அடித்தளத்தின் அடிப்படையில் இருந்தே தனது ஆட்சியை கட்டியெழுப்பி வருகிறார். கிரீன்லாந்தை இணைப்பது, கனடாவைக் கைப்பற்றுவது மற்றும் பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றுவது என்ற அவரது அச்சுறுத்தல்கள், சீனாவுடனான மோதலுக்குத் தயாராக மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. காஸாவில் எலும்புகள் மற்றும் இடிபாடுகளின் மேல் சூதாட்ட விடுதிகளைக் கட்டும் தனது கோரமான கனவை ட்ரம்ப் நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, காஸா இனப்படுகொலையை அவர் ஆழப்படுத்துவது — இப்போது இன அழிப்பு மற்றும் பாரிய பட்டினியின் இறுதிக் கட்டங்களில் உள்ளது — அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி 1930களில் இருந்த சாதாரண மறுநிகழ்வு அல்ல. ஹிட்லரைப் போலன்றி, ட்ரம்புக்கு இன்னும் ஒரு பாரிய அடித்தளம் இல்லை. முழு அரசியல் அமைப்புமுறையின் மீதும் நிலவிய பரந்த வெறுப்பை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவர் ஆழமாக செல்வாக்கிழந்துள்ளார். மேலும் அவர் ஒரு தீவிர நெருக்கடியில் உள்ள அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏபிசி கருத்துக்கணிப்பின்படி, 100 நாட்களில், ட்ரம்பின் ஒப்புதல் மதிப்பீடு வெறும் 39 சதவீதமாக உள்ளது, 55 சதவீதத்தினர் அவரை நிராகரித்துள்ளனர். வரிகள் மற்றும் பணவீக்கம் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், அவரது பொருளாதார ஒப்புதல் மதிப்பீடுகள் 35 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சி.என்.என் தெரிவிக்கிறது. வெறும் 22 சதவீதத்தினர் மட்டுமே அவரது ஜனாதிபதி பதவிக்கு “பலமாக ஒப்புதல் அளித்துள்ளனர்”. அதேவேளையில், அதை விட இரண்டு மடங்கு பேர்கள் அவரை “கடுமையாக நிராகரிக்கின்றனர்.” புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதல் உட்பட அவரது கொள்கைகளின் அனைத்து அம்சங்களுக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. 

அமெரிக்கா எங்கிலும் 1,500 க்கும் அதிகமான பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபற்றிய பாரிய போராட்டங்கள் இன்னும் குறிப்பிடத்தக்கதாகும். ஏப்ரல் 5, 12, 19 மற்றும் அதற்கு அப்பாலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பெருநிறுவன ஊடகங்களால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட போதிலும், எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு சக்திவாய்ந்த அடிநீரோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இருட்டடிப்பு மற்றும் அவர்களை ஒடுக்குவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளுக்கு இடையிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்திற்குள் நகர்ந்து வருகின்றனர்.

இப்போது மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படையான கேள்வி: என்ன செய்ய வேண்டும்?

கடந்த 100 நாட்களில் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஆனால், அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவும் ஒரு முன்னோக்கிய பாதையை அவர்களுக்கு வழங்கவில்லை.

ஜனநாயகக் கட்சி சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கான ஒரு சக்தி அல்ல — அது, அதற்கு அனுசரணையாளராக இருந்து வருகிறது. கடந்த 100 நாட்களில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் வரவு-செலவு திட்டக்கணக்கை நிறைவேற்றியுள்ளனர். அரசாங்க நிதிகளைப் பராமரித்துள்ளனர் மேலும், பாசிச தலைவருடன் “இணைந்து வேலை செய்ய” சூளுரைத்துள்ளனர். ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு அவர்களின் விடையிறுப்பு பலவீனமான அறிக்கைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், ட்ரம்பினது நிகழ்ச்சி நிரலை அது தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது ஜனநாயகக் கட்சி மீதான ஒரு பேரழிவுகரமான குற்றப் பத்திரிகையாகும். அவர் அதிகாரத்திற்கு திரும்பியிருப்பது அவர்களின் திவாலான வரலாற்றின் விளைபொருளாகும்: அதாவது, உயர் நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளுக்கான அடையாள அரசியலில் அவர்கள் உறுதியாக இருப்பது; பணவீக்கத்தின் கீழ் தொழிலாளர்கள் துன்பப்படுவது குறித்த அவர்களின் அலட்சியம்; மற்றும் முடிவில்லா போருக்கு —முதலில் உக்ரேனிலும், இப்போது காஸாவிலும்— அவர்களின் இடைவிடாத ஆதரவு ஆகியற்றுடன், ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்புக்கு சளைக்காத வகையில், ஆளும் செல்வந்த தன்னலக்குழுக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற பிரமுகர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் அழுத்த வால்வுகளாகவும், முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரப்பாட்டைப் பேண முயற்சிக்கும் கருவிகளாகவும் செயல்படுகின்றனர். வாரயிறுதி வாக்கில், சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியுடன் “ஒரே பக்கத்தில்” இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். என்பிசி இன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் “நாங்கள் ஒரு மூன்றாம் கட்சியைத் தொடங்க முயற்சிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு பதிலாக, “நாங்கள் அமெரிக்க ஜனநாயகத்தைப் பலப்படுத்த முயன்று வருகிறோம்,” என்று வலியுறுத்திய அவர், ஜனநாயகக் கட்சியினரிடம் “எதிர்காலம் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை” என்று மட்டுமே புலம்பினார்.

எவ்வாறிருப்பினும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சியுடனும் முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்புடனும் ஒரு ஈவிரக்கமற்ற முறிவை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு “எதிர்காலம்” இல்லை, சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு வெளியே எதிர்காலமும் இல்லை.

இங்கு அடிப்படையான பிரச்சினை முன்னோக்கு பற்றியது. சர்வாதிகாரத்திற்கு எதிராக, போருக்கு எதிராக, சமூக சமத்துவமின்மைக்கு எதிராக, பாரிய போராட்டங்கள் தொடுவானத்தில் உள்ளன. இத்தகைய போராட்டங்களை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னைக்கும் அடிபணிய வைக்க முடியாது. முதலாளித்துவ அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய மூலோபாயத்தால் அவர்கள் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

இத்தகைய போராட்டங்களை வழிநடத்த ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே அவசர பணியாகும். இதுவே, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மைய நோக்கமும் ஆகும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை எதிர்க்கவும் ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. மே 3 அன்று நடைபெறவுள்ள சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கலந்து கொள்ளுமாறும், எங்கள் கட்சியில் இணைந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் ஒரு முன்னோக்கிய பாதையை எதிர்பார்க்கும் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading