மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயரைக் கொண்ட போப் பிரான்சிஸ், நிமோனியா காய்ச்சலால் ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்களன்று தனது 88 வயதில் இறந்தார்.
அவரது மரணத்தை அறிவிக்கும் வகையில் வத்திகானின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மணிகள் ஒலித்ததிலிருந்து, உலகின் பெரும்பகுதியிலுள்ள பெருநிறுவன ஊடகங்களில், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதலாவது போப்பான ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜெசூயிட் (ரோமன் கத்தோலிக்க மத ஒழுங்கான இயேசு சங்கத்தின் உறுப்பினரைக் குறிக்கிறது) மீது மிகைப்படுத்திய புகழ்ச்சி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே கத்தோலிக்கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவில், செய்தி ஊடகங்கள் போப்பின் சிக்கல்களை இடைவிடாமல் ஆராய்கின்றன. இந்த ஈர்ப்பை அரசியல் மற்றும் வர்க்க வழிமுறைகளால் மட்டுமே விளக்க முடியும்.
பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடென் ஆகியோரின் அஞ்சலிகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் சனிக்கிழமை ரோமில் நடைபெறும் போப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக என்று அறிவித்தார்.
பெர்கோக்லியோவை “ஏழைகளின் தந்தை”, “மக்களின் மனிதர்”, “முற்போக்கு போப்” என்று ஊடகங்கள் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கியிருக்கிறது. இது, கத்தோலிக்கச் சபையானது பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி ஆளும் உயரடுக்கினர் பூகோளரீதியாக திரும்புவதற்கு அதன் ஆசியை வழங்கி வருகின்ற நிலையில், கத்தோலிக்கச் சபை தன் மீது “ஜனநாயக” மற்றும் “நவீன” முலாம் பூசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த திங்களன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஈஸ்டர் முட்டை உருட்டல் நிகழ்வில் பேசிய அமெரிக்காவின் வருங்கால ஃபியூரராகக் (நாஜித் தலைவர் - Führer) கருதப்படும் ட்ரம்ப், பெர்கோக்லியோவை “நல்ல மனிதர்” என குறிப்பிட்டார். தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும் கொள்கைக்கெதிரான ஒரு தெளிவான சவாலாக, “நாங்கள் அமெரிக்காவில் மதத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார். அத்துடன், நாடு முழுவதும் அமெரிக்க மற்றும் மாநில கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்ற உத்தரவு வழங்கினார்.
இத்தாலியின் பாசிச பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, “அவரது நட்பு, ஆலோசனைகள் மற்றும் போதனைகள்” போன்றவற்றை அனுபவிக்கும் சிறப்புரிமையைப் பற்றி பாராட்டினார். மெலோனி, பாசிச இயக்கத் தலைவர் முசோலினியின் அரசியல் வாரிசாக திகழ்கிறார். முசோலினியின் கறுப்புச் சட்டைக் கும்பல்கள் கத்தோலிக்க மதகுருமார்களையும் இளைஞர்களையும் தாக்கிய வரலாறு இருந்தாலும், அவர் போப்புடன் நெருங்கிய நட்பைப் பேணினார்.
பிரேசிலின் லூலா டா சில்வா மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்சேஸ் இல் இருந்து பிலிப்பைன்ஸின் பாசிஸ்ட் பேர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வரையில், பெரும் கத்தோலிக்க மக்களைக் கொண்ட பல அரசு தலைவர்கள் தேசிய துக்க நாட்களை அறிவித்தனர்.
முன்னதாக பெர்கோக்லியோவை ஒரு “முட்டாள்” என்று அழைத்த ஆர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி ஜேவியர் மிலேய், வத்திக்கானில் போப் அவரை வரவேற்ற நேரத்தை நினைவு கூர்ந்து ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், பெர்கோக்லியோவின் வேதனையூட்டும் நோய் நிலையையும், போர், சமத்துவமின்மை, பேராசை மற்றும் இனவெறிக்கு எதிராக அவர் எடுத்துள்ள பிரபலமான நிலைப்பாடுகள் பற்றியும் கேட்கும்போது அல்லது படிக்கும்போது இயல்பாகவே உண்மையான அனுதாபங்களை உணருகின்றனர். இந்த உணர்வுகள், வெறுக்கப்படும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வழங்கும் புகழுரைகளால் அல்ல, அவற்றை மீறி உருவாகின்றன.
மிக சமீபத்தில், பெர்கோக்லியோ ட்ரம்பின் பாரிய நாடுகடத்தல் திட்டங்களை மனித கண்ணியத்தை மீறுவதாக கண்டித்ததுடன், குறிப்பாக இந்தக் கொள்கைகள் கத்தோலிக்க கண்ணோட்டங்களுக்கு ஏற்ப இருப்பதாக கூறியதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸையும் சாடினார்.
வான்ஸின் ஈஸ்டர் ஞாயிறு வருகைக்கு பின்பான சில மணி நேரங்களில் உயிரிழந்த போப்பிற்கு, ஒரு தாங்கமுடியாத சுமையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஒருவர் வெளியிட்டால் கூட, அவரை மன்னிக்கத் தக்கதுதான்.
“நீங்கள் நன்றாக உணரவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று வான்ஸ் இறந்து கொண்டிருந்த மனிதரிடம் கூறினார்.
ஆனால் தனது போப்பின் முன்னுரிமைகளில் ஒன்றாக பெர்கோக்லியோ புலம்பெயர்ந்தோர் உரிமைகளை வலியுறுத்தியதும், காலநிலை மாற்றத்தை ஒரு “தார்மீக நெருக்கடி” என சுற்றறிக்கையில் வர்ணித்ததும், LGBTQ என்ற பாலின சமூகத்தினை குற்றமாகச் சித்தரிப்பதை கைவிட அழைப்பு விடுத்ததும், மற்றும் பிற குறைந்தபட்ச “முற்போக்கு” சைகைகளும்—இவைகள் அனைத்தும் கத்தோலிக்கச் சபையின் பிற்போக்குத்தனமான அடிப்படைகளை மாற்றும் நோக்கத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. ஒரே பாலின திருமணம், கருக்கலைப்பு, பாலின அடையாளம் போன்ற முக்கியமான சமூக விடயங்களில், கத்தோலிக்கச் சபையின் உத்தியோகபூர்வ போதனைகள் இன்று வரை மாற்றப்படாமல் அப்படியே உள்ளன.
பணிவை எடுத்துரைத்த பெர்கோக்லியோவின் பல்வேறு அழைப்புகள், கத்தோலிக்கச் சபை அதன் பல நூறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களையும், உலகின் மிகப்பெரிய நிலப்பிரபு என்ற பொருளாதார அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதை எவ்விதத்திலும் தடுக்கவில்லை.
அந்த விடயத்தில், சமத்துவமின்மையை ஒரு “சமூக நோய்” என்று அவர் விவரித்தது, டெஸ்லாவின் எலோன் மஸ்க், அமசனின் ஜெஃப் பெசோஸ், ஆப்பிளின் ரிம் குக் மற்றும் பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட இன்றைய தொழில்நுட்ப மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் அங்கத்தவர்களை மிகவும் நட்பான மற்றும் மிகவும் மெத்தனமான வார்த்தைகளில் விருந்துபசரிப்பதில் இருந்து அவரைத் தடுக்கத் தவறிவிட்டது.
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தெற்கு சூடானிய போர்ப் பிரபுக்களின் கால்களை பிரபலமாக முத்தமிட்ட “சமாதானத்திற்கான” அவரது வேண்டுகோள்கள், ஒபாமா, பைடென் மற்றும் ட்ரம்ப் உட்பட இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிக மோசமான போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பான ஏகாதிபத்திய தலைவர்களின் விசுவாசமான ஆசீர்வாதத்துடன் கைகோர்த்துச் சென்றன.
சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இத்தகைய செயல்திறன் நிலைப்பாடுகள் கத்தோலிக்கச் சபைக்கு ஆதரவாளர்களின் வரலாற்று வீழ்ச்சிக்கு மத்தியில் ஓரளவாவது மக்கள் நம்பகத்தன்மையை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன, ஏனெனில் இளைஞர்களும் தொழிலாளர்களும் பூகோளமயமாக்கல் மற்றும் ஸ்மார்ட்போன்களின் சகாப்தத்தில் கத்தோலிக்கச் சபையின் பிற்போக்குத்தனத்தால் வெறுப்படைந்துள்ளனர். உலகெங்கிலும் வெகுஜன மக்களின் அதிகரித்து வரும் தீவிரமயமாதலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தகவமைவு என்பது கத்தோலிக்கச் சபையின் இருத்தலியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டது.
இப்போது, எல்லா இடங்களிலும் ஆளும் உயரடுக்குகள் “மக்களின் போப்” இன் மரணத்தை, அதன் அத்தனை பின்தங்கிய நிலை மற்றும் அறியாமையுடன் “மதத்திற்கு திரும்புவதை” பிரகடனம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக சுரண்டிக் கொள்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மிக ஆழமான நெருக்கடிக்கு இடையே, இதுபோன்ற முயற்சிகள், உலகின் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்குவதற்கும், பிரபுத்துவ பாசிசவாத பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதன் மூலமாக அதிகரித்து வரும் பாரிய எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் ஒரு மூடிமறைப்பை வழங்குவதற்கு அவசியமானதாக பார்க்கப்படுகின்றன.
கத்தோலிக்கச் சபையில் முன்னைய சீர்திருத்த முயற்சிகளும் இத்தகைய இயல்புடையவையே. அந்த நிறுவனம், இன்க்விசிஷன் (Inquisition) எனப்படும் மத சித்திரவதை விசாரணைகளை நடத்தியதும், காலனித்துவ காலத்தில் பூர்வீக மக்களின் இனப்படுகொலையை மேற்பார்வையிட்டதும் போல, இன்னும் இன்று வரை பிற்போக்குத்தனத்தின் அதே கோட்டையாகவே நிலைத்து இருக்கிறது. [இன்க்விசிஷன் (Inquisition) என்பது மத்திய காலத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட ஒரு சித்திரவதை மூலமான விசாரணை அமைப்பைக் குறிக்கிறது. இது மதவேறுபாடுகள், மதவிரோதக் கருத்துகள் (heresy) அல்லது மதத்திற்கு எதிரான செயல்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது.]
போப் லியோ IX (Pope Leo IX -1049–1054) போன்றவர்கள் மதகுருமார்களின் ஊழல் மற்றும் ஆன்மீக பதவிகளின் விற்பனையை (simony- ஆலய அலுவலகங்கள் அல்லது ஆன்மீக நன்மைகளை வாங்குவது மற்றும் விற்பது, இது மதத்தை ஒரு சந்தையாக மாற்றியது) கண்டித்த போதும், கிராமப்புற ஆலயங்களில் நிலவும் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தன. இது கேத்தரிசம் போன்ற கத்தோலிக்க ஆலயத்தின் அதிகாரத்தை நிராகரித்த ஒரு இடைக்கால கிறிஸ்தவ மதவிரோதக் கொள்கைக்கு பங்களித்தது. ட்ரெண்ட் பேரவை (Council of Trent - 1545-1563) கோட்பாடு மற்றும் ஒழுக்கத்தை மையப்படுத்தினாலும், கத்தோலிக்கச் சபையின் அரசியல் அதிகாரத்துடன் கூடிய கூட்டணியையும் கோட்பாட்டுப் பரிணாமத்திற்கான எதிர்ப்பையும் மேலும் வலுப்படுத்தியது. போப் ஜோன் XXIII (John XXIII) மேற்கொண்ட சீர்திருத்தங்கள் (1962–1965) வழிபாட்டு முறைகளையும் உலகத்தோடு உரையாடலையும் நவீனமயமாக்கின. ஆனால், அவற்றின் நடைமுறைபடுத்தலில் ஏற்பட்ட பிந்தைய மோதல்கள் சபையின் உள்நிலைப் பிளவுகளை ஆழப்படுத்தியதோடு, அமைப்புசார்ந்த மதகுரு ஆதிக்கத்தையும், துஷ்பிரயோக ஊழல்களையும் தீர்க்கத் தவறின.
போப் பிரான்சிசின் சொந்த கடந்த காலம், கத்தோலிக்கச் சபை பாசிசத்துடன் இயல்பான கூட்டணியைப் பிரதிபலிக்கிறது. நாட்டின் “கறைபடிந்த போரின்” போது (1976-1983) ஆர்ஜென்டினா கத்தோலிக்க ஆலயத்தில் ஒரு முன்னணி நபராக, பெர்கோக்லியோ இடதுசாரி கூறுகளை “தூய்மைப்படுத்தும்” முயற்சிகளில் இராணுவ சர்வாதிகாரத்துடன் ஒத்துழைத்ததாக பாதிரியார்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களால் குற்றம் சாட்டப்பட்டார்.
இது வெறுமனே ஒரு தனிப்பட்ட தோல்வி மட்டும் அல்ல; ஆர்ஜென்டினாவின் கத்தோலிக்கச் சபையின் அதிகாரப் படிநிலை ஒட்டுமொத்தமாக இராணுவ ஆட்சியின் சித்திரவதையாளர்கள் மற்றும் படுகொலையாளர்களுக்கு மூடிமறைப்பையும் தார்மீக ஒப்புதலையும் வழங்கி, அவர்கள் “கடவுளின் பணியை” செய்வதாக அவர்களுக்கு உறுதியளித்தது. ஆர்ஜென்டினாவில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் “இடதுசாரிகள்” என்று சந்தேகிக்கப்பட்ட சுமார் 30,000 பேர் “காணாமல் ஆக்கப்பட்டனர்”, சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டனர்.
1976 இல் ஜேசுட் பாதிரியார்களான ஆர்லாண்டோ யோரியோ (Orlando Yorio) மற்றும் பிரான்சிஸ்கோ ஜாலிக்ஸ் (Francisco Jalics) ஆகியோரை கடத்தியதில் பெர்கோக்லியோ உடந்தையாக இருந்தார், அவர்களைப் பாதுகாக்க அவர் தவறிவிட்டார் என்று கூறப்பட்டது, மேலும் அவர், ஆர்ஜென்டினாவின் புவனோஸ் அயர்ஸ் சேரிகளில் அவர்களின் சமூகப் பணிகளுக்கான ஆதரவை நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார் - இது அவர்களை காவலில் வைக்க வழிவகுத்தது.
இராணுவ ஆட்சிக்குழு, சித்திரவதை மையங்களில் பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை திட்டமிட்டு கடத்தி, அவற்றை ஆட்சியுடன் தொடர்புடைய குடும்பங்களிடம் ஒப்படைத்தது. உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான எஸ்டெலா டி லா குவாட்ரா, தனது காணாமல் போன கர்ப்பிணி சகோதரியைப் பற்றி விசாரிக்க 1978 ஆம் ஆண்டு தனது தந்தைக்கு கையால் எழுதப்பட்ட குறிப்பை பெர்கோக்லியோ வழங்கியதாகவும், அந்தக் குழந்தை இராணுவ ஆட்சி மூலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது பின்னர் தெரிய வந்ததாகவும் சாட்சியமளித்தார். குழந்தை கடத்தல்கள் சர்வாதிகார ஆட்சி முடிந்த பிறகே தனக்கு தெரியவந்தது என பெர்கோக்லியோ 2010ல் நீதிமன்றத்தில் கூறியதற்கு இது நேரடியான முரணாக இருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பெர்கோக்லியோ 2010ல் சாட்சியமளித்தார். ஆனால், அவர் தொடக்கத்தில் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததையும், சாட்சியமளித்தபோது தப்பித்துப் பேசுவது போன்ற பதில்களையும் உயிர் தப்பியவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
போப் என்ற முறையில் பிரான்சிஸ் தனது சொந்த ஊரான ஆர்ஜென்டினாவுக்கு திரும்பிச் செல்லவில்லை.
கடந்த ஞாயிறன்று அவரது மனநிலையில் இருந்து சுயாதீனமாக, காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்த வெளிநாட்டு மாணவர்கள் உட்பட, இலத்தீன் அமெரிக்காவின் இராணுவ ஆட்சிக்குழுக்களின் அரசியல் “காணாமல் ஆக்குதல்களை” ட்ரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு செயற்படுவதில், பெர்கோக்லியோவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸுடன் நடைபெற்ற சந்திப்பில் போப் மேற்கொண்டது, அவரது கடைசி முக்கியமான உத்தியோகபூர்வ நடவடிக்கையாகும். அது, அவரது வாழ்நாளின் மிகவும் தாக்கமுள்ள செயல்களில் ஒன்றாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.