சர்வதேச நாணயச் சந்தைகளில் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, சரிவாக மாறி வருவதோடு, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய சாதனை உச்சங்களை எட்டுகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பொருளாதாரப் போர் முழு உலக நிதி அமைப்பிலும் வளர்ந்து வரும் நெருக்கடியை தீவிரப்படுத்துவதால், வோல் ஸ்ட்ரீட்டில் மேலும் சரிவு ஏற்படுகிறது.
அமெரிக்க பங்குச் சந்தையின் சமீபத்திய சரிவுக்கும், திங்கட்கிழமை ( ஏப்ரல் 21 ) ஆதாயங்கள் அதிகரித்த பத்திரச் சந்தையின் பின்னடைவுக்கும் உடனடிக் காரணம், பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் மீது ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதும், அவரைப் பணிநீக்கம் செய்வதாக அச்சுறுத்தியதும் ஆகும்.
வெளிப்படையாக வோல் ஸ்ட்ரீட்டை ஊக்குவிப்பதும், அதிகரித்து வரும் பணிநீக்கங்களுக்கு மத்தியில், மோசமடைந்து வரும் அமெரிக்க மந்தநிலைக்கு ஒரு பலிகடாவைக் கண்டுபிடிப்பதும் உடனடி நோக்கமாக இருப்பதால், பவல் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார். இதனால், தனது சுங்கவரிப் போர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற ட்ரம்பின் வாதங்களை தகர்த்தெறிகிறது.
தனது முதல் பதவிக்காலத்தில் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட பவல், சில காலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குனர் கெவின் ஹாசெட், முந்தைய நாள் பவலை பதவி நீக்கம் செய்ய ட்ரம்ப்புக்கு உரிமை உண்டு என்றும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் “தொடர்ந்து ஆய்வு செய்வார்” என்றும் கூறியபோது, இந்த தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது.
ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “நான் அவரை வெளியேற்ற விரும்பினால், அவர் விரைவாக அங்கிருந்து வெளியேறுவார் - என்னை நம்புங்கள்” என்று கூறினார்.
சந்தைகள் திறந்த சிறிது நேரத்திலேயே திங்கட்கிழமை காலை தனது சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அவர் மீண்டும் தனது கருத்தைத் தெரிவித்தார். பணவீக்கம் குறைந்து வருவதாக கூறிய அவர், “ஆனால் மிஸ்டர் டூ லேட், ஒரு பெரிய நஷ்டம், வட்டி விகிதங்களை இப்போது குறைக்காவிட்டால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும்” என்று கூறினார்.
பவலுக்கு எதிரான நடவடிக்கை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நிதி வட்டாரங்களில் அதிகரித்து வரும் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. ஏனெனில், இது பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும். அவர்களைப் பொறுத்தவரை, பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகளின் முதன்மை நோக்கம் அவர்களின் வட்டி விகிதக் கொள்கைகள் மூலம் அதிகரித்து வரும் பணவீக்கம் அதிகரிப்பதை தடுப்பதாகும். மேலும் பவல் நீக்கப்பட்டால் இந்தப் பணி கைவிடப்படும்.
பவலை நீக்குவதற்கான ட்ரம்பின் அழுத்தம் நிர்வாகத்தின் உள்மோதல்கள் மற்றும் முரண்பாடான நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - இது ஆழமடைந்து வரும் நிதி நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
ஒருபுறம், ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் பிற உறுப்பினர்கள் டாலரின் மதிப்பு அதிகமாக மதிப்பிடப்படுவதாகக் கூறுகின்றனர். இது அமெரிக்க தயாரிப்புகளை உலக சந்தைகளில் இருந்து விலக்கி, அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை மோசமாக்குகிறது.
மறுபுறம், டாலரை உலகின் இருப்பு நாணயமாகப் பராமரிக்க அவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த நிலைதான் அமெரிக்கா தனது வேகமாக வளர்ந்து வரும் அரசாங்கக் கடனுக்கு நிதியளிக்க அனுமதிக்கிறது,. இப்போது அமெரிக்காவின் அரசாங்கக் கடன் வேறு எந்த நாட்டையும் விட $36 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.
உலகளாவிய கையிருப்பு நிலையின் முக்கியத்துவத்தை ட்ரம்ப் ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது அடிக்கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் அதை இழப்பது ஒரு போரில் தோற்பதற்கு சமம் என்று கூறினார்.
ஆனால், அவர் கோரும் வட்டி விகிதக் குறைப்பு சர்வதேச சந்தைகளில் டாலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும், அதன் இருப்பு நிலையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், மேலும் பவலை நீக்குவதன் மூலம் அது அடையப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும்.
இருப்பு நாணயமாக டாலரின் பாத்திரத்திற்கு பங்களிக்கும் காரணிகளில் ஒன்று அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்று அழைக்கப்படுபவற்றில் சர்வதேச நம்பிக்கை ஆகும். பெடரல் சேர்மன் எந்த சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று வலியுறுத்திய ஒரு கொள்கை முடிவுக்காக பவல் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அது மற்ற அனைத்து துறைகளிலும் நிர்வாகத்தை பண்பிட்டுக் காட்டும் சட்ட ஒழுங்கின்மை, நிதிய அமைப்பிற்குள்ளும் விரிவடைந்துள்ளது என்பதற்கான சமிக்கையாக இருக்கும்.
இந்த நெருக்கடி அமெரிக்காவிலும் உலகளவில் உள்ள அனைத்து நிதிச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது போல்: “‘அமெரிக்காவை விற்கும்’ வர்த்தகம் திங்களன்று தீவிரமடைந்தது.”
டோவ் ஜோன்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் சரிந்து, 2.5 சதவீதம் இழந்தது. 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் மோசமான ஏப்ரல் மாதத்தை நோக்கிச் செல்கிறது.
S&P 500 குறியீட்டெண் 2.4 சதவீதம் சரிந்தது, அதன் 10 பங்குகளில் ஒன்பதுக்கும் மேற்பட்டவை எதிர்மறையான நிலையில் இருந்தன, மேலும் NASDAQ 2.6 சதவீதம் சரிந்தது.
கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் Magnificent Seven உயர்-தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றழைக்கப்படுபவற்றின் உறுப்பினர்களும் அடங்குவர்; இவை கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தையின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா 4.5 சதவீதமும், அமேசான் 3.1 சதவீதமும் இழந்தன. டெஸ்லா இன்னும் 5.8 சதவிகிதம் சரிந்து, இந்த ஆண்டிற்கான அதன் மொத்த இழப்பை 44 சதவிகிதத்திற்கு கொண்டு வந்தது.
டாலரின் மதிப்பின் வீழ்ச்சி தொடர்ந்து இடம்பெறுகிறது. நேற்று முக்கிய நாணயங்களின் அலகுக்கு எதிராக அது 1.5 சதவிகித மதிப்பை இழந்தது. யூரோ, யென்னின் மதிப்பு உயர்ந்தது.
பத்திரச் சந்தையும் சரிந்தது, கருவூலக் கடனின் மீதான வருமானம், விலைகளுக்கு நேர்மாறாக நகர்ந்து, 0.08 சதவீதம் அதிகரித்து 4.41 சதவீதமாக உயர்ந்தது.
தங்கம் விலையானது நேற்று அவுன்ஸூக்கு 3,430 டாலர்களை தொட்டு வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன் விரைவான ஏற்றம், அமெரிக்க டாலரின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட் 1971 முதல், டாலர் ஒரு காகித நாணயமாக செயல்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தங்கத்தைப் போல உண்மையான மதிப்பில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் அமெரிக்க அரசின் பொருளாதார மற்றும் நிதி சக்தியில் அது தங்கியுள்ளது.
ஆனால், 2008 நிதியியல் நெருக்கடி, 2020 மார்ச்சின் கருவூல பத்திர சந்தை முடக்கம், மற்றும் மார்ச் 2023 இல் மூன்று குறிப்பிடத்தக்க வங்கிகளின் பொறிவு ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக இருக்கும் அமெரிக்க நிதியியல் அமைப்புமுறை அதிகரித்த அழுத்தத்தின் கீழ் இயங்கி வருகின்ற நிலையில், அதன் நீண்டகால ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
அது வேறெந்த நாடாக இருந்திருந்தால், அதன் கடன்களுக்கான வட்டி ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலராக உயர்ந்து, அரசாங்க வரவு-செலவு திட்டக்கணக்கில் மிகப் பெரிய பொருளாக ஆகின்ற நிலையில், அது ஏற்கனவே திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
இந்த அடித்தளத்தில் இருக்கும் நிகழ்ச்சிப்போக்குகள் தற்போதைய எழுச்சியில் பிரதிபலிக்கின்றன. இது, நிதியச் சந்தைகளின் செயல்பாட்டில் ஒரு கணிசமான மாற்றத்தைக் கண்டுள்ளது.
முந்தைய சந்தர்ப்பங்களில், சந்தைக் கொந்தளிப்பு அமெரிக்க கருவூலப் பத்திரங்களுக்குள் ஒரு நகர்வுடன் இணைந்திருந்தது. ஏனெனில் நிதி மூலதனம் உலகின் மிகவும் பாதுகாப்பான நிதிச் சொத்தாகக் கூறப்படும் இடத்தில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுகிறது. இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு புதிய திருப்பத்திலும் இயக்கம் எதிர் திசையில் செல்கிறது.
இது இப்போது நிதி வட்டாரங்களில் அதன் தாக்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
சரிவுகளின் பரந்த தன்மை குறித்து கனேடிய வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனமான BMO பிரைவேட் வெல்த்தின் தலைமை சந்தை மூலோபாய நிபுணர் கரோல் ஷ்லீஃப் ஜேர்னலிடம் கூறியதாவது:
இது கவலையளிக்கிறது. நாங்கள் மதிப்பிட முயற்சிக்கும் மிக முக்கியமான கேள்வி: அமெரிக்க விதிவிலக்கின் எழுச்சி உண்மையிலேயே குறுகிய காலமா, அல்லது அது இடைநிலை முதல் நீண்ட கால காரணியாக இருக்கப் போகிறதா?
தற்போதைய சரிவு ஏப்ரல் 2 அன்று “பரஸ்பர வரிவிதிப்புகள்” குறித்த ட்ரம்பின் அறிவிப்பால் தூண்டப்பட்டது. சுங்க வரி உயர்வுகள் 145 சதவீதமாக இருக்கும் சீனாவைத் தவிர, பேச்சுவார்த்தைகளை அனுமதிக்க இந்த சுங்க வரிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் விற்பனை குறைந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகள் அல்லது ஒப்பந்தங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.
Stifel & KBW நிறுவனத்தின் உலகளாவிய பங்கு வர்த்தகத்தின் தலைவர் ஆர்.ஜே.கிராண்ட் ஜேர்னலிடம் கூறியதாவது:
நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம், ஆனால் எந்த ஒப்பந்தங்களும் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ... அது எவ்வளவு காலம் இழுத்தடிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக சந்தைகளில் சில ஆழ்ந்த கவலைகளும் பதட்டமும் இருக்கும்.
ஆனால், ஆழ்ந்த கவலை மற்றும் பதட்டத்திற்கு மேலான பல காரணிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இவை வெறுமனே 2ம் உலகப் போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் நிதியியல் ஒழுங்கமைப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்ற உண்மையின் ஆரம்ப வெளிப்பாடுகள் மட்டுமே. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆழமாக்குவதன் மூலமும், பாசிச மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களைத் திணிப்பதன் மூலமும், வர்த்தகப் போரின், அதாவது இராணுவ மோதலின் புறநிலை தர்க்கத்திற்கு ஏற்ப தங்களை மறுஆயுதபாணியாக்கிக் கொள்வதன் மூலமும், ஆளும் வர்க்கங்கள் ஏற்கனவே வரலாற்றுரீதியில் அவை எப்போதும் செய்திராத விதத்தில் இந்த பொறிவுக்கு விடையிறுத்து வருகின்றன.
அதாவது, உலக முதலாளித்துவ அமைப்புமுறையைப் பீடித்துள்ள ஆழமடைந்து வரும் நெருக்கடியில் இருந்து முன்னோக்கி செல்லக்கூடிய ஒரே நம்பகமான மற்றும் வரலாற்றுரீதியில் முற்போக்கான பாதையான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான நனவான போராட்டத்தை மேற்கொள்வதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் மீண்டும் ஆயுதபாணியாக வேண்டும்.